Tuesday, May 07, 2013

MBA - மூன்றெழுத்து மந்திரம்

MBA - மூன்றெழுத்து மந்திரம்
வெளிநாட்டு எம்.பி.ஏ.!

எம்.பி.ஏ. படிப்பு பற்றி நம் மனங்களில் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன. நம் டாப் 11 பட்டியலில் முதல், இரண்டாம் இடத்தில் இருக்கும் ஸ்டான்ஃபோர்டு, ஹார்வர்டு பற்றிய சில விவரங்களை இங்கே சொல்கிறேன். பிற எம்.பி.ஏ. ஸ்கூல்கள் பற்றிய ஐடியா கிடைக்க இந்த விவரங்கள் உதவும். 


ஸ்டான்ஃபோர்டு எம்.பி.ஏ. படிப்பில் சேர ஜிமேட் (GMAT - Graduate Management Admission Test)எழுதவேண்டும். இது ஆன்லைன் டெஸ்ட். இந்தியாவில் இருந்தும் எழுதலாம். இந்த வருடம் ஸ்டான்ஃபோர்டு எம்.பி.ஏ.  படிப்புக்கு அப்ளை செய்தவர்கள் உலகின் பல நாடுகளிலிருந்தும் மொத்தமாக 6,716 பேர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 398. அதாவது, விண்ணப்பித்தவர்களில் நூற்றில் 6 பேருக்கு அட்மிஷன் கிடைக்கிறது. 398 பேரில், 139 பேர் பெண்கள்; அமெரிக்கர்கள் தவிர்த்த வெளிநாட்டு ஆண்கள், பெண்கள் 167 பேர். இவர்கள் 53 நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

ஹார்வர்டு எம்.பி.ஏ. படிப்பில் சேரவும் ஜிமேட்  எழுதவேண்டும். இங்கு மாணவச் சேர்க்கை ஸ்டான்ஃபோர்டைவிட அதிகம். இந்த வருடம் தேர்ந் தெடுக்கப்பட்டவர்கள் 919. இந்த இடங்களுக்குப் போட்டி யிட்டவர்கள் மொத்தம் 8,963. அதாவது, விண்ணப்பித்தவர்களில் சுமார் நூற்றில் 10 பேருக்கு அட்மிஷன் கிடைக்கிறது. 910 பேரில், 371 பேர் பெண்கள்; அமெரிக்கர்கள் தவிர்த்த வெளிநாட்டு ஆண்கள், பெண்கள் 315 பேர். இவர்கள் 68 நாடுகளிலிருந்து வந்தவர்கள்.

இந்திய எம்.பி.ஏ. கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், அமெரிக்க எம்.பி.ஏ. மாணவர்களுக்குமிடையே இரண்டு முக்கிய வித்தியாசம் இருக்கிறது. அமெரிக்காவில் எம்.பி.ஏ. படிக்கவேண்டும் எனில், குறைந்தபட்சம் இரண்டு வருட வேலை அனுபவம் கட்டாயமாக வேண்டும். இந்தியாவில் வேலை அனுபவமே இல்லாமல் எம்.பி.ஏ. சேர முடியும். இந்த வருட ஸ்டான்ஃபோர்டு மாணவர்களின் சராசரி முன் அனுபவம் 4 வருடம் 2 மாதங்கள்: ஹார்வர்டில் 3 வருடம் 8 மாதங்கள்.   

  


இன்னொரு முக்கிய வித்தியாசம், மாணவர் களின் படிப்புப் பின்புலம். அமெரிக்காவில் சுமார் 40 சதவிகித மாணவ, மாணவிகள் பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (இளங்கலை), அரசியல், பொருளாதாரம், இலக்கியம் ஆகியவைப் படித்தவர்கள். இன்ஜினீயர்கள் சுமார் 35 சதவிகிதம். இந்தியாவிலோ, இன்ஜினீயர்களின் 'ஆக்கிரமிப்புதான்’ அதிகம் - சுமார் 80 சதவிகித மாணவர்கள் இன்ஜினீயர்கள்.

     
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு, ஹார்வர்டு பல்கலைக்கழகங்களில் இரண்டு வருட எம்.பி.ஏ. படிக்க மொத்தம் இரண்டு லட்சம் டாலர்; அதாவது, சுமார் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய்!

எம்.பி.ஏ. படிப்புக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு. ஆகவே, உங்கள் சேமிப்பு அல்லது வங்கிக் கடன் ஆகியவற்றை மட்டுமே நம்பி நீங்கள் அமெரிக்க யுனிவர்சிட்டிகளில் படிப்பதைத் தீர்மானிக்கவேண்டும்.
ஒரு கோடி ரூபாய் செலவழிப்பது புத்திசாலித் தனமான காரியமா? இன்றைய நிலவரப்படி, படிப்பை முடித்தவுடன், 1,20,000 டாலர்
(ஆண்டுக்கு) சம்பளம் கிடைக்கிறது. அதாவது, இரண்டு வருடங்களுக்குள், படிப்புச் செலவை வசூல் செய்துவிடலாம். 

ஸ்டான்ஃபோர்டிலும், ஹார்வர்டிலும் அப்படி என்ன சொல்லிக்கொடுக்கிறார்கள்?
முதலில் ஸ்டான்ஃபோர்டு பார்ப்போம். முதல் வருடம் கிட்டத்தட்ட 20 துறைகள் பற்றி படிக்க வேண்டும். அந்தத் துறைகள் இதோ:
1. Critical Analytical Thinking, 2. Ethics in Management, 3.Financial Accounting, 4. Leadership Labs, 5.Managerial Skills, 6.Managing in the Global Context, 7.Managing Groups and Teams, 8.Organizational Behavior, 9.Strategic Leadership, 10. Corporate Finance, 11. Data Analysis and Decision Making, 12. Human Resource Management, 13. Information Management, 14. Managerial Accounting, 15. Managerial Finance, 16. Marketing, 17. Microeconomics, 18. Operations, 19. Optimization & Simulation Modeling, 20. Strategy Beyond Markets.
இரண்டாம் வருடம் கிட்டத்தட்ட 14 துறைகள். அந்தத் துறைகள் இதோ:
1. Accounting, 2. Entrepreneurship, 3 Finance, 4. Global Management, 5.Human Resources, 6. Information Technology, 7. Leadership, 8. Managerial Economics, 9. Marketing, 10. Operations, 11. Organizational Behavior, 12. Political Economics, 13. Public Management, 14. Strategic Management
முதல் வருட கோர்ஸ் அனைத்து எம்.பி.ஏ. கல்லூரிகளிலும் ஒன்றாகத்தான் இருக்கும். இரண்டாம் வருடம், தாங்கள் வழங்கும் பாடங்களில் தனித்துவம் காட்டுவார்கள். ஹார்வர்டில், இரண்டாம் வருடத்தில், கீழ்க்கண்ட துறைகளில்  ஸ்பெஷலைஸ் செய்யமுடியும்.
1. Business, Government & the International Economy, 2. Entrepreneurial Management 3. Finance, 4. Marketing, 5. Negotiation, Organizations & Markets, 6. General Management, 7. Organisational Behavior, 8. Strategy, 9. Technology & Operations Management
இவை ஒவ்வொன்றின் கீழும் எக்கச்சக்கமான சப்ஜெக்ட்ஸ். உதாரணமாக,
Entrepreneurship என்னும் தொழில்முனைவர் துறையில் ஸ்பெஷலைஸ் செய்ய விரும்புகிறீர்களா?
Building and Sustaining a Successful Enterprise, Management of the Family Business, Launching global ventures, Entrepreneurship in Healthcare IT and Services, Introduction to Innovation & Entrepreneurship, Venture Capital and Private Equity என்பவைபோல்  வகைவகையாய் 32 சப்ஜெக்ட்கள்.

லெக்சர்கள், கேஸ் ஸ்டடிகள், அனுபவப் பயிற்சிகள் எனப் பல முறைகளில் பாடங்கள் போதிக்கப்படுகின்றன. இவற்றுள், கேஸ் ஸ்டடி  முறைதான் அதிகப் பயன் தருகிறது. மேனேஜ்மென்ட் கொள்கைகளை மாணவர்கள் எளிதாக உள்வாங்கிக்கொள்ளவும், கார்ப்பரேட் உலகில் பின்பற்றவும் உதவுகிறது என்று பெரும் பாலானோர் ஒப்புக்கொண்டுள்ளார்கள். கேஸ் ஸ்டடி முறை நமக்குத் தெரிந்த, பரிட்சயமான படிப்பு முறைகளிலிருந்து முழுக்க முழுக்க வித்தியாசமானது. 


சாதாரணமாக வகுப்புகள் எப்படி நடக்கும்? ஆசிரியர் வருவார். பாடப் புத்தகத்தில் (Text Book) இருக்கும் பாடத் திட்டப்படி (Syllabus) வகுப்புகள் எடுப்பார். ஆசிரியர்தான் அதிகம் பேசுவார். யாரிடமாவது கேள்விகள் கேட்பார். மாணவர்கள் சந்தேகங்கள் கேட்கலாம். பரீட்சை வரும். உருப்போட்டுக்கொண்டுபோன விடைகளைக் கக்கவேண்டும். மார்க் கொட்டும். 

எம்.பி.ஏ. படிப்பவன் வெறும் தியரியையே படித்துக்கொண்டிருந்தால் மட்டும் போதாது. வெளி உலகத்தில், கம்பெனிகளில் நடக்கிற உண்மை நிகழ்ச்சிகள், நிஜ அனுபவங்கள் அவனுக்குத் தெரியவேண்டும். கம்பெனி மேனேஜர்கள் அவற்றை எப்படி எதிர்கொண்டார்கள் என்கிற தகவல்கள் அவனுக்குக் கிடைக்க வேண்டும். அப்போதுதான், அவனுடைய கண்ணோட்டத்தில், அவர்கள் எடுத்த யுக்திகளில் எவை சரியானவை, எவை தவறானவை என்று அவனால் எடைபோட முடியும்.   

சில சக மாணவர்கள் அவனோடு ஒத்துப்போக லாம்; சிலர் அவனோடு மாறுபடலாம். இப்படி மாறுபடும் கருத்துகளை விவாதிக்கும்போது, அவன் பிறர் கருத்தைக் கேட்கப் பழகுகிறான். அவன் சிந்தனைத் தெளிவாகிறது.
எம்.பி.ஏ. படிப்பில் மாணவர்கள் நூற்றுக் கணக்கான கேஸ்களை விவாதிக்கிறார்கள். இதனால், வருங்காலத்தில், வேலையில் சிக்கல் களைச் சந்திக்கும்போது, அவை அவர்களுக்குப் புதியவையாக இருப்பதில்லை, அவர்களைப் பயமுறுத்துவதில்லை.   

கேஸ் ஸ்டடி என்றால், கம்பெனிகளின் நிஜ அனுபவங்கள். உதாரணத்துக்குச் சில:
1970. ஸர்ஃப் சோப் பவுடர்தான் ராஜா. கஸன்பாய் பட்டேல் நிர்மா சோப்புத் தூள் தயாரிக்கிறார். மிகக் குறைந்த விலையில் விற்கிறார். இன்று நிர்மா 1,000 கோடி மதிப்புள்ள கம்பெனி. எப்படி நடந்தது இது?

கோயம்புத்தூரில் இருக்கும் பம்ப் கம்பெனித் தொழிலாளிகளிடம் கட்டுப்பாடே இல்லை. ஐம்பது சதவிகித உற்பத்திதான் தருகிறார்கள். என்ன செய்யலாம்?
டாடா ஸ்டீல் நிறுவனம் இங்கிலாந்து, ஹாலந்து நாடுகளின் கூட்டு முயற்சி நிறுவனமான கோரஸ் (Corus) குழுமத்தை 24,000 கோடி ரூபாய்க்கு வாங்கினார்கள். டாடா ஸ்டீல் கொடுத்த விலை சரியா, தவறா?

இந்த விவரங்களை முன்னாடியே தந்து விடுவார்கள். மாணவர்கள் தனியாகப் படிப்பதைவிட, குழுவாகச் சேர்ந்து படிப்பதையும், விவாதிப்பதையும் பேராசிரியர்கள் ஊக்கப்படுத்து வார்கள். வகுப்பில், விவாதத்தில் நீங்கள் பங்கேற்க வேண்டும். இது வகுப்புப் பங்கேற்பு (Class Participation)என்று அழைக்கப்படுகிறது. உங்கள் பங்கேற்புக்கு ஏற்றபடி, பேராசிரியர்கள் மார்க் போடுவார்கள்.     

கேஸ் ஸ்டடி படிப்பு முறையை எம்.பி.ஏ. படிப்பில் அறிமுகம் செய்தவர்கள்  ஹார்வர்டு. இன்று கேஸ் ஸ்டடி, ஏகதேசம் அத்தனை பிஸினஸ் ஸ்கூல்களும் பின்பற்றும் படிப்பு முறையாகிவிட்டது.  
எம்.பி.ஏ. படிப்பிற்கு அதி திறமைசாலி மாணவர்களே தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆசிரியரும் மாணவர்களும் சம அந்தஸ்தில் விவாதிக்கும் படிப்புமுறை என்பதால் ஆசிரியரின் பொறுப்பை அதிகமாக்குகிறது. ஆசிரியர், அறிவு, திறமை, அனுபவம், ஆகியவற்றில் தலை சிறந்தவராக இருக்கவேண்டிய கட்டாயம்.

ஸ்டான்ஃபோர்டு பிஸினஸ் ஸ்கூலில் 800 மாணவர்கள், 170 பேராசிரியர்கள். அதாவது, சுமாராக 5 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர். இந்த விகிதாசாரத்தால், பேராசிரியர் மாணவர் களுக்குத் தனிக் கவனம் தர முடிகிறது.   

170 பேராசிரியர்களில் பெரும்பாலானோர் டாக்டர்கள். 3 பேர் நோபல் பரிசு வாங்கியவர்கள். அற்புதமான ஆசிரியர்கள், அட்டகாசமான கேஸ் ஸ்டடி படிப்புமுறை. எனவேதான், அங்கே படித்த எம்.பி.ஏ. மாணவர்கள் பட்டை தீட்டிய வைரங்களாகக் கார்ப்பரேட் உலகில் ஜொலிக்கிறார்கள். 
(கற்போம்)

2 comments:

jsksathiya said...

Really nice post....

S.Selvamurugan. said...

Sir, appadiye MCA paththi eluthuna useful-a irukkum.