Sunday, May 05, 2013

ராமதாஸ்.கைது -போர்க்களமான வட மாவட்டங்கள்!

சித்திரை முழுநிலவுப் பெருவிழா, சித்ரவதைப் பெருவிழாவாக மாறி மரக்காணத்தில் மரண கானம் கேட்டது. சட்டசபையில் ஜெயலலிதா பாய்ச்சல், அரசியல் தலைவர்களுடன் திருமாவளவன் சந்திப்பு, ராமதாஸ் கைது, மீண்டும் வன்முறை... என வடமாவட்டங்கள் பதற்றத்தில் கிடக்கின்றன. ஒவ்வொரு ஸ்பாட்டிலும் நடந்த கொந்தளிப்புகள் பற்றிய கொதிநிலை ரிப்போர்ட் இங்கே... 


சட்டமன்றம் 


''சுய லாபத்துக்காக அப்பாவிப் பொதுமக்களை சாதி மதரீதியாகத் தூண்டிவிட்டு சட்டம்-ஒழுங்குக்கு ஊறு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது எந்தவிதக் கருணையும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்'' - மரக்காணம் கலவரம் குறித்து நடத்தப்பட்ட சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்போது இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருந்தார் முதல்வர் ஜெயலலிதா. விளைவு? காவல் துறையினரின் தடையை மீறி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ம.க. நிறுவனர் ராமதாஸை, போலீஸ் கைதுசெய்து திருச்சி சிறையில் அடைத்தது.  


தைலாபுரம் தோட்டம் 


தைலாபுரம் தோட்டத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ''மரக்காணத்தில் ஏற்பட்ட கலவரத்தில் ஒருதலைப்பட்சமாக செயல்பட்ட காவல் துறையைக் கண்டித்தும் உண்மையான குற்றவாளிகளைக் கைதுசெய்யக் கோரியும் விழுப்புரத்தில் ஏப்ரல் 30-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்'' என அறிவித்திருந்தார் ராமதாஸ்.



 அன்று இரவே விழுப்புரம் மாவட்ட எஸ்.பி-யான மனோகரன், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதியையும் தந்தார். ஆனால், சட்டசபையில் ஜெயலலிதாவின் காரசாரப் பேச்சை அடுத்து, பா.ம.க-வின் ஆர்ப்பாட்டத்துக்கு அவசர அவசரமாக தடை விதிக்கும் வேலையில் இறங்கியது விழுப்புரம் காவல் துறை. 29-ம் தேதி இரவு 10 மணிக்கு ஆர்ப்பாட்டத்துக்குத் தடை விதித்த நோட்டீஸ், விழுப்புரம் பா.ம.க. அலுவலகத்தில் ஒட்டப்பட்டது. இது, பா.ம.க. தொண்டர்களை மேலும் கொதிப்படையச்செய்தது.


விழுப்புரம்   


மறுநாள் காலை 7 மணியில் இருந்தே விழுப்புரம் ரயில் நிலையம் அருகே தொண்டர்கள் திரள ஆரம்பித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள விழுப்புரம் நகர எல்லைக்கு ராமதாஸ் வந்ததும், அவரை காவல் துறையினர் தடுத்துக் கைதுசெய்ய முற்பட்டனர். 'ஆர்ப்பாட்டம் நடத்தும்போது கைதுசெய்யுங்கள்’ என்று கூறிவிட்டு, ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு விரைந்தார். காரில் இருந்து இறங்கிய சில நிமிடங்களிலேயே, தயாராக இருந்த காவல் துறையினர் அவரைக் கைதுசெய்தனர்.


 மாலையே விட்டுவிடுவார்கள் என்று, மிகுந்த உற்சாகத்தோடு கைதாகினர் தொண்டர்கள். காவல் துறை வழக்குப் பதியப்போகிறது என்ற செய்தி மதியம் போல் தொண்டர்களிடம் காட்டுத் தீயாகப் பரவ, 100-க்கும் மேற்பட்டோர் மண்டபத்தின் மதில் சுவற்றில் ஏறிக்குதித்து தப்பி ஓடத் தொடங்கினர்.


இரவு 7 மணிக்கு, விழுப்புரம் மாவட்டக் குற்றவியல் நீதிபதி முகிலாம்பிகை முன்பு ஒவ்வொருவராக ஆஜர்படுத்தப்பட்டனர். சட்ட விரோதமாக ஒன்றுகூடுதல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், வன்முறையைத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளில் 384 பேர் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு 15 நாள் சிறைக் காவலில் திருச்சி சிறைக்கு அனுப்பப்பட்டனர். 'ராமதாஸுக்கு முதுகு வலி இருப்பதால், அவர் போலீஸ் வாகனத்தில் வர முடியாது. சொந்த வாகனத்தில் வர அனுமதிக்க வேண்டும்’ என்று அனுமதி கேட்டனர். சொந்த வாகனத்தில் காவல் துறை பாதுகாப்போடு திருச்சிக்குச் செல்ல நீதிபதி அனுமதியளித்தார்.


ராமதாஸ் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, செஞ்சியில் ஐந்து பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்துக் கணக்கை ஆரம்பித்தனர். அடுத்தடுத்து திண்டிவனத்தில் சாலை மறியல், முகையூரில் மரங்கள் வெட்டிச் சாய்த்தல் என வன்முறை காட்டுத் தீயாகப் பரவியதைத் தொடர்ந்து, மாவட்டம் முழுக்க 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார் மாவட்ட ஆட்சியர் சம்பத். 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் காவலில் ஈடுபட்டபோதும், இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் 36 பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன. விழுப்புரம் அருகே வாணியம்பாளையத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் அலுவலகம் அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.  


திருவண்ணாமலை 


திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் எட்டு இடங்களில் பா.ம.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். வந்தவாசி, ஆரணி, போளூர், கீழ்பென்னாத்தூர், சேத்பட் ஆகிய இடங்களில் அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளைப் பதம் பார்த்தனர். மாவட்டம் முழுக்கக் கிட்டத்தட்ட 30 இடங்களில் மரங்களை வெட்டிப் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச்செய்தனர். இரண்டு நாட்களில் மட்டும் மொத்தம் 13 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அய்யம்பாளையம் அருகே ஹீரோ ஹோண்டா வண்டிகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி மீது சமூக விரோதிகள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். 90 சதவிகிதத் தீக்காயங்களுடன் லாரி ஓட்டுனர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மரம் வெட்டியது, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியது என 167 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


கடலூர் 


பா.ம.க-வின் கோட்டையாகத் திகழ்ந்த கடலூரில் பெரியளவில் போராட்டங்கள் வெடிக்கவில்லை. காரணம், அது வேல்முருகன் வசம் வந்துவிட்டதுதானாம். ராமதாஸ் விழுப்புரத்தில் கைதுசெய்யப்பட்ட நேரத்தில், 'மாலை 5 மணிக்குள் ஐயா விடுதலை செய்யப்படாவிட்டால், கடலூர் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், சாலைமறியல் நடத்த வேண்டும்’ என்ற தீர்மானத்தை கடலூர் பா.ம.க-வினர் நிறைவேற்​றினர். அதனால், மாவட்டம் முழுவதும் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, வடலூர், சேத்தியாதோப்பு, நெய்வேலி போன்ற பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டு 300 தொண்டர்கள் கைதானார்கள். கடலூர் மாவட்டம் முழுக்க 20 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைத்து சுக்குநூறாக்கப்பட்டன.


புதுச்சேரி 

ராமதாஸை உடனடியாக விடுவிக்கக் கோரி புதுச்​சேரியில் பூரணாங்குப்பம், அரியூர், திருபு​வனை மற்றும் மதகடிப்பட்டு ஆகிய இடங்களில் பா.ம.க-வினர் சாலைமறியல் நடத்தினர். மறியல் போராட்டத்தின்போது நான்கு பேருந்துகள், இரண்டு வேன்களின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன. போராட்டம் காரணமாக சில மணி நேரங்களுக்கு அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தி​வைக்கப்பட்டன.

வேலூர் 

30-ம் தேதி மாலை முதலே வேலூரில் பா.ம.க-வினர் அரசு மற்றும் தனியார் பேருந்துகளைத் தாக்கத் தொடங்கினர். திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதில், 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேதம் அடைந்தன. இருவருக்கு மண்டை உடைந்தது. திருப்பத்தூரில் இருந்து சேலம் சென்ற அரசுப் பேருந்தை திப்பம்பட்டி என்ற இடத்தில் வழிமறித்த பா.ம.க-வினர், பயணிகள் அனைவரையும் இறக்கிவிட்டு தீயிட்டுக் கொளுத்தினர். சென்னையில் இருந்து வேலூருக்கு வந்த அரசுப் பேருந்து, வாலாஜா அருகே தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் 

இரவு 10 மணிக்கு செங்கல்பட்டு டு திருக்கழுக்குன்றம் சாலை வழியாகச் சென்ற  ஐந்து அரசுப் பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. கூடம் என்ற பகுதியில் 15 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசி டவுன் பஸ்ஸை எரித்தனர். காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் சென்ற பயணிகள் பேருந்தை தாமல் பகுதியில் மடக்கி, இரவு 10.45 மணிக்கு மர்ம நபர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். திருப்பதிக்கு செல்லும் பேருந்து ஒன்றும் கொளுத்தப்பட்டது. பென்னேரிக்கரை என்ற பகுதியில் தனியார் பேருந்தின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 33 பேருந்துகளின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்ட பா.ம.க-வினர் கைதுசெய்யப்பட்டனர்.
வடக்கு மாவட்டங்களில் மேலும் வன்முறைகள் பரவாமல் தடுக்க வேண்டிய தலையாய கடமை காவல் துறைக்கு இருக்கிறது.

- ஜூ.வி. டீம் 


      ''ஆட்சி அமைக்க 18 தொகுதிகள்தான் தேவை!''


தடாலடி ராமதாஸ்

விழுப்புரத்தில் கைதுசெய்யப்பட்ட ராமதாஸ், திருச்சி சிறைக்கு கொண்டுசெல்லப்படுவதற்கு முன் நமக்கு கொடுத்த பேட்டி.


''உங்கள் மீது போடப்பட்ட வழக்குகள் பற்றி..?'' 

(சிரித்துக்கொண்டே) ''ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இதுகுறித்து ஜெ.ஜெ. அவர்களைத்தான் கேட்க வேண்டும்.''

''கடந்த முறையைவிட இந்த முறை சித்திரை திருவிழாவுக்கு ஏன் அதிக கெடுபிடிகள்?'' 

''அங்கே திரண்ட கூட்டத்தைப் பார்த்து பயந்துவிட்டனர். அதனால், அரசியல்ரீதியாகப் பழிவாங்க வேண்டும் என்ற வெறிதான்.''


''மற்ற கட்சிகள் அனைத்தும் பா.ம.க-வைத் தனிமைப்படுத்துவதாக நினைக்கிறீர்களா?'' 

''தேசியக் கட்சிகளோடு கூட்டணி கிடையாது; திராவிடக் கட்சிகளோடு கூட்டணி கிடையாது என்று அனைத்துக் கட்சிகளையும் நாங்கள் தனிமைப்படுத்திவிட்டோம். எங்களை யார் தனிமைப்படுத்த முடியும்? எந்தக் கட்சி எங்களை வருந்தி வருந்திக் கூப்பிட்டாலும், கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதித்தாலும், யாருடனும் கூட்டணி சேர மாட்டோம். கார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும், பார் உள்ளளவும், பைந்தமிழ் உள்ளளவும் என்ற கலைஞர் வசனம்போல (சிரிக்கிறார்) எங்களுடைய முடிவில் மாற்றம் கிடையாது. அதனால்தான் எல்லா அரசியல் கட்சிகளும், தி.க. போன்ற சில அமைப்புகளும் எங்களுக்கு எதிராக இருக்கின்றனர். எங்கள் தரப்பில் எவ்வளவோ நியாயம் இருந்தாலும் எங்களுக்கு விரோதமாகச் செயல்படுகின்றனர்.''


''சித்திரைத் திருவிழாவின்போது தொல்பொருள் சின்னமான மாமல்லபுரம் கோயில் மீது தொண்டர்கள் ஏறி சேதப்படுத்தினார்களே?''
'

'லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுகூடும்போது, அதை யாராலும், ஏன் எங்களால்கூட கட்டுப்படுத்த முடியாது.''

''2016-ல் உங்கள் மகன் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்பது எந்த அளவுக்கு சாத்தியம்?'' 

''என் மகன் தலைமையில் அல்ல. பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் 2016-ல் நிச்சயமாக தமிழகத்தில் ஆட்சி அமையும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. சட்டமன்றத் தேர்தலில் 100 தொகுதிகளில் சுலபமாக நாங்கள் வெற்றிபெறுவோம். அதன் பிறகு எங்களுக்குத் தேவையானது 18 இடங்கள். தெற்கே அல்லது மேற்கே தேசியக் கட்சிகளோடு, திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இல்லாதவர்கள் ஒருங்கிணைத்து சுலபமாக ஆட்சி அமைப்போம்.''


''வரும் நாடாளுமன்றத் தேர்தலில்?'' 

''10 இடங்களில் வெற்றி பெறுவோம் என்பது நம்பிக்கை. உறுதியாக ஆறு இடங்களில் வெற்றிபெறுவோம்.''



''உங்கள் தலைமையில் கூட்டணி அமைப்பீர்களா?'' 

''தி.மு.க. மற்றும் அ.தி.மு.க-வுக்கு மாற்றாக, 46 ஆண்டு காலமாக தமிழக மக்கள் எதிர்பார்த்த ஒரு கூட்டணியை பா.ம.க. அமைக்கும். இதுவரை மாற்றுக் கட்சிகள் வந்தது இல்லை. கிட்டத்தட்ட 46 ஆண்டு காலமாக திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டைச் சீரழித்து சின்னாபின்னப்படுத்திவிட்டன. அதை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் கிட்டத்தட்ட 55 சதவிகித வாக்காளர்களுக்கு வந்துவிட்ட நிலையில், அதைப் பூர்த்திசெய்கிற ஒரே கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும்.''

''சட்டசபையில் ஜெயலலிதா, உங்கள் கோரிக்கையை ஏற்று வழக்கு போட்டுள்ளோம் என்றாரே?'' 

''மரக்காணத்தில் நடைபெற்ற சம்பவங்களை காவல் துறையினர் அப்பட்டமாக மறைத்து, அவர்கள் எழுதிக் கொடுத்த அறிக்கையைத்தான் முதல்வர் படித்துள்ளார்.''



 குரு கைதானது பழைய கேஸ்! 

ராமதாஸ் கைதுசெய்யப்பட்ட அன்றைய தினமே, எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் இருந்த காடுவெட்டி குருவும் கைதுசெய்யப்பட்டார். மாலை 6.30 மணிக்கு இரண்டு சுமோ மற்றும் ஒரு டெம்போ டிராவலர் சகிதம் வந்த மாமல்லபுரம் போலீஸார், எம்.எல்.ஏ. ஹாஸ்டலுக்குள் நுழைந்து காடுவெட்டி குருவை கைதுசெய்தனர். கடந்த 2012 ஆகஸ்ட் மாதம் கேளம்பாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதற்காக இப்போது கைதுசெய்யப்பட்டிருக்கிறார் குரு.

 அமுக்கப்பட்ட ஆறுமுகம்! 

 காடுவெட்டி கைதான அதேவேளையில், பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகத்தைக் கைதுசெய்தனர் மாமல்லபுரம் போலீஸார். இரவு 7 மணிக்கு பாலூர் காவல் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டார். சித்திரை விழாவுக்குக் காவல் துறையால் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறியதற்காக அவர் மீது வழக்கு. 10 மணியைக் கடந்து விழா நடத்தியது, புரதான சின்னங்களைச் சேதப்படுத்தியது, சுற்றுசூழல் மாசுபடுத்தியதை சுத்தம் செய்யாதது, திறந்த வகை வாகனங்களில் ஆட்களை கொண்டுவந்தது ஆகியவை குற்றச்சாட்டுகள். திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை,  வரும் 14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சிவா உத்தரவிட்டார். இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

 மரக்காணத்தைத் தொடர்ந்து வந்தவாசி... 

 மரக்காணம் கலவரம் நடந்து இரண்டு தினங்கள் கழித்து... கடந்த 27-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள அத்திப்பாக்கம் காலனியைச் சேர்ந்த சிலம்பரசன், கார்த்திக் என்ற இருவர் மர்மக் கும்பலால், கத்தி மற்றும் தடிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இதில் கடுமையாகத் தாக்கப்பட்ட சிலம்பரசன், சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். இதனால், வந்தவாசியில் கடந்த ஒரு வாரமாக பதற்றம் நீடிக்கிறது.

''மரக்காணத்தில் நீங்க அடிச்சீங்களே... இப்போ நீங்க வாங்கிக்கங்க'' என்ற வார்த்தைகளைத் தாக்குதலின்போது குறிப்பிட்டதாக, சிலம்பரசன் தரப்பு கூறினர். இதனால், விசாரணைக்குப் பின் வழக்குப் பதிவதாக காவல் நிலையத்தில் கூறப்பட்டது. இதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள், இந்தியக் குடியரசு கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட  பல்வேறு தலித் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. அப்போது, வந்தவாசி காவல் நிலையம் முற்றுகையிடப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட எஸ்.பி. முத்தரசி, போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து கார்த்திக், சிலம்பரசனைத் தாக்கியதாக செம்பூரைச் சேர்ந்த குப்பன், குமார் என்ற இருவர் கைதுசெய்யப்பட்டனர். இதைக் கண்டித்து சென்னாவரம், மாம்பட்டு, செம்பூர் பாதிரி உள்ளிட்ட இடங்களில் பா.ம.க-வினர் போராட்டம் நடத்தினர். அம்பேத்கர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், இந்த வழக்கில் தொடர் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வலியுறுத்தி, வந்தவாசியில் உண்ணாவிரதம் இருந்தனர். இதனால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.
வன்னியர், தலித் ஆகிய இரு சமூகத்தினரும் கணிசமாக வாழும் வந்தவாசியில் நடந்த இந்தச் சம்பவம், நடுநிலையாளர்களைக் கவலையடையச் செய்துள்ளது.

THANX - JU VI 

0 comments: