அசோக் பில்லருக்கு அருகில் தேவயானி ஸ்டுடியோ.
கோபமாக இருந்தார் 'சோலார் ஸ்டார்’
ராஜகுமாரன். ''விகடன்ல ஏங்க 'திருமதி தமிழ்’ படத்துக்கு விமர்சனம்
எழுதலை?'' என்றார் சீரியஸாக. ''அது வந்து சார்... பொதுநலன் கருதி அப்படி
ஏதாவது ஒரு முடிவு எடுத்திருப்பாங்க... விசாரிச்சுட்டுச் சொல்றேன் சார்!''
என்று நான் ஜகா வாங்க, என்னை மேலும் கீழும் பார்த்தார்.
''எனக்கு முன்னாடி,
பின்னாடி வந்த பல படங்களுக்கு விமர்சனம் எழுதிட்டீங்க. என் திருமதி
தமிழுக்கு அந்தத் தகுதி இல்லைனு நினைக்கிறீங்களா?'' கோபக் குரலில்
பேசிக்கொண்டே புரொஜெக்டரை இயக்கி 'திருமதி தமிழ்’ டிரெய்லரை ப்ளே
செய்துவிட்டு, ''கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. வர்றேன்!'' என்று
சென்றுவிட்டார்.
'திருமதி தமிழ்’ டிரெய்லர், பாடல்கள், சண்டைக்
காட்சிகள் என்று ஸ்க்ரீனில் விரிய விரிய, அந்த ஏ.சி. அறையிலும் எனக்கு
வியர்வை பெருக்கெடுத்தது. வாழ்க்கையில் அந்த 20 நிமிடங்களை என்னால் மறக்கவே
முடியாது. என்னா அடி!
மிகச் சரியாக வீடியோ ஓடி முடிந்ததும் மீண்டும் என்ட்ரி
கொடுத்தார் ராஜகுமாரன். ''பேட்டியை ஆரம்பிக்கலாமா?'' என்றபடி, அருகில் ஒரு
டி.வி-யை வைத்து அதிலும் அதே சண்டைக் காட்சிகள், பாடல்கள், டிரெய்லர்களை
ஓடவிட்டார். (ஓ காட்... மறுபடியுமா?)
''நான் ஒரு பெர்சன்ட்கூட ஜாலியான ஆள் கிடையாதுங்க.
ரொம்ப சீரியஸாத்தான் பேசுவேன். அதனால ஜாலி பேட்டி, காமெடிப் பேட்டினு
எதுவும் டிரை பண்ணாதீங்க!'' என்றார் கறாராக.
''இத்தனை வருஷம் கழிச்சு மறுபடியும் இயக்கம், தயாரிப்பு, நடிப்புனு ஏன் சார் இறங்கினீங்க?''
''நான் 26 வருஷமா சினிமாவில் இருக்கேன். அந்த ஒரு
காரணம் போதுமே! ஆனாலும், 'ஏன் நடிக்கிற... ஏன் இயக்குற... ஏன் சண்டை
போடுற..?’னு கேட்டா, சினிமா என் தொழில், என் சுவாசம், என் மூச்சு சார்!''
''ஆனா, நீங்க என்ன சொன்னாலும் சோலார் ஸ்டார்னு உங்களுக்கு நீங்களே பட்டம் வெச்சுக்கிட்டது டூமச் சார்...''
''எல்லாரும் சொன்னாங்க... வெச்சுக்கிட்டேன். அதுக்கு
என்ன அர்த்தம்னா, கரன்ட் இல்லைன்னாலும் பவர் இருக்கும்ல... அதுக்காகத்தான்
அந்தப் பேர். மத்தபடி எனக்குப் பட்டம்கூட விடத் தெரியாது. எனக்கு எதுக்கு
சார் பப்ளிசிட்டிப் பட்டம்?''
''தேசிய விருதெல்லாம் எப்ப சார் வாங்குவீங்க?''
''என் எல்லா படங்களும் மாநில அரசு விருது
வாங்கியிருக்கு. ஆனா, தேசிய விருது பத்தி நான் என்ன சொல்ல? பார்க்கலாம்...
என் அடுத்த படத்துலயே அதுக்கான வாய்ப்பு அமையலாம்!''
''எந்தத் தைரியத்துல சார் நீங்களே ஹீரோவா நடிக்கணும்னு முடிவுபண்ணீங்க?''
''இப்பவும் நடிக்கணும்னு எனக்கு ஆசையோ, லட்சியமோ இல்லை.
ஆனா, 'திருமதி தமிழ்’ பட ஹீரோ கேரக்டரின் கனத்தைத் தாங்கக்கூடிய அளவுக்கு
இங்கே யாரும் இல்லை. எல்லாரும் சொதப்பிடுவாங்க. அதான் என் படத்துல நானே
நடிக்க வேண்டிய நிலைமை. நடிச்சுட்டேன்!''
''ஆனா, சி.என்.என்-ஐ.பி.என். வெளியிட்டிருக்கும் தலைசிறந்த 100 படங்களில் 'திருமதி தமிழ்’ இடம் பிடிக்கலையே?''
''அதுக்கு இரண்டு காரணம். ஒண்ணு, எனக்கு சி.என்.என்...
அப்படின்னா என்னன்னுகூடத் தெரியாது. ரெண்டு, அதே மாதிரி அவங்களுக்கும்
என்னைப் பத்தித் தெரியாம இருந்திருக்கலாம். 'திருமதி தமிழ்’ங்கிறது 20,000
ஆண்டுகள் பழமையான தமிழ் மொழியில் இதுவரை சொல்லப்படாத ஒரு வார்த்தை.
செந்தமிழ், நற்றமிழ், பிள்ளைத் தமிழ், கன்னித் தமிழ், இயல்தமிழ், இசைத்
தமிழ்னு எவ்வளவோ பேர் சொல்றோம். ஆனா, ஏன் தமிழுக்குத் திலகமிட்டு 'திருமதி
தமிழ்’னு சொல்லக் கூடாது? என்னைக் கேட்டால், இந்த டைட்டிலுக்கே தேசிய
விருது கொடுக்கலாம்!''
''பக்கம் பக்கமா வசனம் பேசுறதெல்லாம் ஓல்டு ஃபேஷன். இப்போ ஃபேஷன் பஞ்ச்தான். நச்சுனு மூணு பஞ்ச் சொல்லுங்க சார்?''
''நச், இச், கச்... போதுமா?''
''ஒரு தயாரிப்பாளரா 'திருமதி தமிழ்’ படம் பார்த்துட்டு தேவயானி என்ன சொன்னாங்க?''
''அவங்களுக்குப் படம் ரொம்பப் பிடிச்சிருக்கு. 'ரொம்ப
நல்ல படம்... இந்தப் படத்தை எடுத்ததுக்காக நாம பெருமைப்படணும்’னு
சொன்னாங்க. என் நண்பர்களும் உறவினர்களும், 'எதுக்கு இப்படி சோஷியல்
சப்ஜெக்ட் எடுத்தீங்க? உங்களுக்கு ஆக்ஷன் நல்லா வருதே. முழு நீள ஆக்ஷன்
படமே எடுத்திருக்கலாமே?’னு கேட்டாங்க. அதையும் மைண்ட்ல வெச்சிருக்கேன்.
என்
ரெண்டு குழந்தைகளுக்கும் படம் ரொம்பப் பிடிச்சிருந்தது. தினமும் படத்தை
வீட்டுல போட்டுப் பார்த்துட்டே இருக்காங்க. இப்படி நம்மளைச் சுத்தி
இருக்கிறவங்களைச் சந்தோஷப்படுத்துற மாதிரி ஒரு மிகச் சிறந்த
படம் பண்ணினதுக்காக நான் பெருமைப்படுறேன் சார்!''
''சண்டையில்
எவ்வளவோ ஸ்டைல், டிரெண்டெல்லாம் வந்திருச்சு. ஆனா, இன்னமும் உள்பனியன்
போட்டுக்கிட்டு உருட்டுக்கட்டையோட சண்டை போடுறீங்களே... ஏன் சார்?''
''போன வாரம்தான் விஜய் உருட்டுக் கட்டையைக் கீழே
போட்டார். இப்போ நான் அதைக் கையில் எடுத்திருக்கேன். உள்பனியன் கலாசாரம்
நூறு வருஷம் ஆனாலும் மாறாது. ஹாலிவுட்லயே டாம் க்ரூஸ், ப்ரூஸ் வில்லிஸ்லாம்
இன்னும் உள்பனியன் போட்டுக்கிட்டுதான் சண்டை போடுறாங்க. அதே மாதிரி
கோலிவுட்ல இன்னும் 500 வருஷத்துக்கு உருட்டுக்கட்டையை யாராலும் அழிக்க
முடியாது!''
''அடுத்த பட வேலை எல்லாம் ஆரம்பிச்சுட்டீங்களா?'' (ஒரு ஃபார்மாலிட்டிக்கு கேட்ட எனக்குக் காத்திருந்தது மெகா வோல்டேஜ் அதிர்ச்சி!)
''ஜோரா! 'உலக நாயகி’... இதுதான் டைட்டில். இது ஒரு
உச்சகட்டக் காதல் படம். இதுக்கு மேல காதலே இருக்க முடியாதுங்கிற அளவுக்குத்
தீவிரக் காதல் இருக்கும். அதுக்கு அடுத்தது 'ராவனேஷ்வரி ஐ.பி.எஸ்’னு
பவர்ஃபுல் கேரக்டர்ல தேவயானி நடிக்கிற செம ஆக்ஷன் படம். இரண்டு
படத்துக்கான வேலைகளும் நடந்துட்டு இருக்கு!''
''சூப்பர் சார்... ரஜினியை வெச்சு நீங்க படம் இயக்க ஒரு வாய்ப்பு வருதுனு வெச்சுக்குவோம். அந்தப் படத்தோட ஒன் லைன் சொல்லுங்க?''
''சூப்பர் ஸ்டாரும் சோலார் ஸ்டாரும் ஒண்ணா இணைஞ்சா...
அது உலகளாவிய எதிர்பார்ப்பா இருக்குமே! வேண்டாங்க... எனக்கு இந்த மாதிரி
சின்னச் சின்னதாப் படம் பண்றதே போதும். இருந்தாலும், நீங்க கேட்டதுக்காக
ஒன்லைன் சொல்றேன்... சூரியன் பூமிக்கு வந்தா எப்படி இருக்கும்? அப்படி
இருக்கும் படம்!''
அதற்கு மேல் என்ன பேசுவது?
''பேட்டியை முடிச்சுக்குவோம் சார்!'' என்றதும்,
''அவ்வளவுதானா?'' என அதிர்ச்சி அடைந்தார். ''இன்னும் நிறையக் கேட்பீங்கனு
எதிர்பார்த்தேன்!'' என்று முகம் சுளித்தார். ''சரி சார்... நீங்களே
ஏதாச்சும் சொல்லுங்க?'' என்றேன்.
''என்கிட்ட கேக்க உங்ககிட்ட எதுவும் இல்லைன்னா,
அப்புறம் நான் சொல்ல என்ன இருக்கு? ஆனா, ஒண்ணு... நான் காமெடி பார்ட்டியோ
ஜாலி பேர்வழியோ இல்லை. நான் ரொம்ப ரொம்ப சீரியஸானவன்!''
ரொம்ப நன்றி சார்!
நன்றி - விகடன்
1 comments:
செந்தில்....சோலார் ஸ்டார் உங்க நண்பரா?
உங்க ஊரா? சரி! சரி! (எங்க மூதாதையர் ஊரும் அதன்)
Post a Comment