Saturday, May 11, 2013

மாமியார் வீட்டில் இருந்து வந்த டாக்டர் ராம்தாஸ் அதிரடி பேட்டி

ராமதாஸ் ஜாமீனில் விடுவிப்பு; ஜெயலலிதா, திருமா மீது சாடல்! ( படங்கள் ) 

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று காலை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். முன்னதாக, அவருக்கு வள்ளியூர் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.


வன்முறைச் சம்பவங்கள் மற்றும் காவல்துறையின் கைது நடவடிக்கை தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதாவையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனையும் ராமதாஸ் கடுமையாக சாடினார். 



மரக்காணம் கலவரம் தொடர்பாக விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த வழக்கில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி உள்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


இந்நிலையில் கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கு, ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்ட வழக்கு உள்பட 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள  ராமதாஸுக்கு ஏற்கனவே நான்கு வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.


இதைத் தொடர்ந்து நேற்று மற்றொரு வழக்கிலும் நெல்லை மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் இன்று காலை திருச்சி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.


பா.ம.க.வினரை கைது செய்யாமல் இருந்திருந்தால் வன்முறைகள் நடந்திருக்காது: ராமதாஸ்

பா.ம.க.வினரை கைது செய்யாமல் இருந்திருந்தால் இந்த வன்முறைகள் எதுவும் நடந்திருக்காது என திருச்சி சிறையிலிருந்து இன்று விடுவிக்கப்பட்ட பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

மரக்காணம் கலவரத்தை தொடர்ந்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய ராமதாஸ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து அவர் மீது மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில் அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து, இன்று திருச்சி சிறையிலிருந்து விடுதலையான ராமதாஸ், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது," பா.ம.க.வினரை கைது செய்யாமல் இருந்திருந்தால் இந்த வன்முறைகள் எதுவும் நடந்திருக்காது. விடுதலை சிறுத்தைகள் திட்டமிட்டு வன்முறைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்," வரும் நாடாளுமன்ற தேர்தலில், தலித் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக முதல்வர் ஜெயலலிதா இந்த அடக்குமுறையை எங்கள் மீது ஏவி இருக்கிறார்

மாமல்லபுரத்தில் முறையான அனுமதி பெற்று விழாவை நடத்தினோம். ஆனால் விடுதலை சிறுத்தை கட்சியினர் குண்டர்கள் ஆதரவோடு திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தினர். விழாவிற்கு வந்த 4 ஆயிரம் வாகனங்களை திருப்பி அனுப்பினர். 100-க்கும் மேற்பட்ட வாகனங்களை கல்வீசி தாக்கினர். இதற்கு போலீசும் உடந்தை. பா.ம.க.வினருக்கோ, வன்னியர்களுக்கோ இதில் எந்தவித சம்மந்தமும் இல்லை. இதைகண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்றேன். அங்கு சென்ற பிறகுதான் போலீசார் இங்கு பேசக்கூடாது என்று தடுத்து கைது செய்தனர்.

சிறையில் வசதிகள் இல்லை

டெல்லியில் பிரதமர் வீட்டு முன்பும், சோனியா வீட்டு முன்பும், அமைச்சர்கள் வீட்டு முன்பும் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதில்லை. ஆனால் தமிழகத்தில்தான் இந்த நிலை.

விழுப்புரத்தில் கைது செய்த என்னை, போலீசார் 12 மணி நேரம் மின்சாரம் இல்லாத ஒரு மண்டபத்தில் வைத்து விட்டு அதிகாலை 4 மணிக்கு திருச்சி சிறைக்கு கொண்டு வந்து அடைத்தனர். 108 டிகிரி வெயில் கொளுத்துகிற கந்தக பூமியான திருச்சி மத்திய சிறையில் 12 நாட்கள் என்னையும், பா.ம.க.வினர் நூற்றுக்கணக்கானவர்களையும் அடைத்து கொடுமைப்படுத்தினர். சிறையில் எந்த வசதிகளும் இல்லாமல் ஒரு அறையில் படுத்து கிடந்தேன். பா.ம.க. முக்கிய நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

சிறையில் எனக்கு சன்ஸ்ட்ரோக் ஏற்பட்டு நெற்றியிலும் தலையிலும் ஈரத்துணியை வைத்து சமாளித்தேன். எங்கே மாரடைப்பு ஏற்பட்டு பத்திரிக்கையாளர்களையும், மக்களையும் வெளியில் வந்து சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்று நினைத்தேன். நாங்கள் ஒருபோதும் எங்கள் கட்சியினரை வன்முறையில் ஈடுபடவோ, தவறான பாதையில் செல்லவோ அனுமதிப்பதில்லை.இதற்காக எங்கள் கட்சியினருக்கு அரசியல் பயிலரங்கமே நடத்துகிறோம்.

இனிமேல் கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும்...

கடந்த 6 மாதத்திற்கு முன்பு அ.தி.மு.க.வோடு பா.ம.க. கூட்டணி அமைக்கும் என்று உளவுத்துறை போலீசார் அரசுக்கு `நோட்' அனுப்பினர். அதன் பிறகு நான் இனிமேல் கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் திராவிட கட்சிகளோடு பா.ம.க. இனி எக்காலத்திலும் கூட்டணி அமைக்காது என்று கூறினேன். இதனால் அரசு பா.ம.க. மீது பழிவாங்கும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது.

ஏற்கனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வோடு ம.தி.மு.க.வை கூட்டணியில் சேர்க்க முடிவு செய்துள்ளனர். கம்யூனிஸ்டும் அங்கு உள்ளது. இந்நிலையில் தலித் ஓட்டுகளையும் சேர்த்தால் மிகப்பெரிய வெற்றி பெறலாம் என்று நினைத்தவர்கள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். அதனால்தான் பா.ம.க. தலைவர் மீது வழக்கு, பத்திரிகையாளர்களிடம் பேசிய அன்புமணி மீது மூன்று வழக்கு, குரு மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை என சட்டத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

போலீசாருக்கு நல்ல யோசனைகளைத்தான் கூறினேன்

மாமல்லபுரம் விழாவில் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லாததை சுட்டிக்காட்டி பேசிய நான் அப்போது போலீசாருக்கு நல்ல யோசனைகளைத்தான் கூறினேன். ஆனால் என் மீது கூடங்குளம் போராட்டம் தொடர்பான வழக்குகளை எல்லாம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறிய பிறகும் அந்த 2 வழக்குகளிலும் என்னை கைது செய்தனர். கடைசியாகத்தான் இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் கிடைத்தது. இதுபோன்ற அடக்கு முறைகளை ஏராளமான முறை சந்தித்து உள்ளோம்.

ஒரு ஆட்சி என்றால் உண்மை, நேர்மை, தூய்மை, சத்தியம், ஜனநாயகம், எதிர்கட்சிகளை மதிக்கும் தன்மை இருக்க வேண்டும். ஆனால் இந்த அரசுக்கு இல்லை. தொடர்ந்து தமிழகம் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. வரலாறு கானாத வறட்சி, குடிநீர் பஞ்சம் இப்படி ஏராளமான பிரச்னைக்ள உள்ளன. கடந்த 2 ஆண்டில் எந்த பணிகளும் நடைபெறவில்லை, மக்கள் சோர்ந்து போய் உள்ளனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பெரும் தோல்வி அடையும்" என்றார். கருணாநிதிக்கு நன்றி

தொடர்ந்து பேசிய ராமதாஸிடம், தி.மு.க. தலைவர் கருணாநிதி உங்களுக்கு நாவடக்கம் தேவை என்று கூறியுள்ளாரே? எனக் கேட்டபோது,"அவர் நான் சிறையில் இருந்தபோது என்னை விடுதலை செய்யவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதற்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அதேபோன்று என்னை விடுதலை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்த அனைத்து கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என்று பதிலளித்தார்.

"இப்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பா.ம.க. பெரிய கூட்டணியில் சேரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதே?" என செய்தியாளர்கள் கேட்டபோது,"எந்த சூழ்நிலையிலும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை. பா.ம.க. தலைமையில் பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணி அமைப்போம். 10 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்" என பதில் அளித்தார் ராமதாஸ். 

நன்றி - ராம் தாஸ்

0 comments: