விகடன் மேடை - சுப.உதயகுமாரன் பதில்கள்
வாசகர் கேள்விகள்... படம்: எல்.ராஜேந்திரன்
எஸ்.ரகுபதி, குரோம்பேட்டை.
''உங்கள் அடுத்த நடவடிக்கை அரசியலா?''
''இப்போதே நாங்கள் அரசியலில்தான் இருக்கிறோம். மக்களின்
வாழ்வுரிமைகளை, வாழ்வாதார உரிமைகளை, வருங்காலச் சந்ததிகளைக் காக்கும்
அரசியலைவிட மேலான அரசியல் வேறென்ன இருக்கிறது?''
க.நாராயணன், செய்யாறு.
''ஏதோ ஒரு நாட்டுக்குச் சென்று நீங்கள் வாழ்வதற்கு உங்களுக்கு அனுமதி அளித் தால், எந்த நாட்டைத் தேர்வு செய்வீர்கள்? ஏன்?''
''நார்வே. இயற்கையும், இனிமையும், ஜனநாயகமும், சமூக
நீதியும் போற்றப்படும் நாடு. 1987-ம் ஆண்டு நான் அங்கே படித்த போது
அப்போதைய பிரதமரின் கணவர் ஆஸ்லோ பல்கலைக்கழக வகுப்பில் எனக்கு ஆசிரியராக
இருந்தார்.
வெளியுறவுத் துறை அமைச்சரோடு மெட்ரோ ரயிலில் அரட்டை அடித்தபடியே
பயணம் செய்ய முடிந்தது. அங்கு இருக்கும் ஒரே பிரச்னை என்ன வென்றால்,
கோடைக் காலத்தில் இருட்டே வராது. குளிர் காலத்தில் சூரியனே வராது. அதனால்
என்ன, அங்குதான் ஈழத் தமிழர்கள் நிறையப் பேர் இருக்கிறார்களே... அது
போதாதா?''
ம.ராஜா, கோயம்புத்தூர்.
''நீங்கள்
வேண்டுமானால் நேரடியாக என்.ஜி.ஓ-க்களுடன் (அரசு சாரா தன்னார்வத் தொண்டு
நிறுவனங்கள்) தொடர்பு வைத் திருக்காமல் இருக்கலாம். ஆனால், கூடங்குளம்
போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதில் கணிசமானோர் என்.ஜி.ஓ-க்களாக
இருக்கிறார்களே..?''
''எங்கள் போராட்டத்துக்கு எந்த உள் நாட்டு,
வெளிநாட்டுத் தொண்டு நிறுவனமும் பணமோ, பொருட்களோ, வேறுவிதமான உதவி களோ
செய்யவில்லை. நாங்களும் பெற முயற் சிக்கவில்லை. போராடும் மீனவ மக்கள்,
விவசாயிகள், வர்த்தகர்கள், பெண்கள் தரும் நன்கொடையில்தான் போராட்டம்
நடக்கிறது. மக்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் பல தொண்டு நிறுவனங்கள்
கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவாகச் சிந்திப்பதில், அவர்கள் பகுதிகளில்
அணுசக்திக்கு எதிராகப் பரப்புரை செய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?''
எஸ்.ராதாகிருஷ்ணன், திண்டிவனம்.
''போராட்டத்தை வாபஸ் வாங்கவைக்க மறைமுகமான பேரங்கள் எதுவும் வந்தனவா?''
''விரும்பிய நாட்டுக்குச் சென்று பெரு வாழ்வு வாழ ஆவன
செய்வதாக ஒரு நண்பர் மூலம் ஆசை காட்டப்பட்டது. 'என்ன வேண்டும் என்று
கேட்டுச் சொல்லுங்கள்... நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்’ என்று பலர் என்
பெற்றோரிடமும் மனைவியிடமும் சென்று கேட்டார்கள். தூது
வந்தவர்கள் விரும்பாத பதிலைத் 'தூ’வென்று வீட்டாரே சொல்லி
அனுப்பிவிட்டதால், நான் தலையிட வேண்டிய நிலை எழவில்லை!''
இரா.அரி, கண்ணமங்கலம்.
''நீங்கள்
இடிந்தகரை மக்களுக்காகப் போராடுவது நல்ல விஷயம். இதே போல தமிழ கத்தின் பிற
பகுதி மக்களும் மின்வெட்டு, ஊழல், ஆற்று மணல் கொள்ளை என்று பலப்பல
விதங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் இப்படியான
போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இருப்பதை உணர்கிறீர்களா?''
''தங்களின் வாழ்வுரிமைகளும், வாழ்வாதார உரிமைகளும்,
வருங்காலச் சந்ததிகளும் பாதிக்கப்படும் அபாயத்தை உணர்ந்த எங்கள் பகுதி மீனவ
மக்களும், மற்றவர் களும் போராடுகிறார்கள். நானும், நண்பர்களும் அவர்கள்
சேவகர்களாகப் பணியாற்றுகிறோம். எங்கெல்லாம் மேற் கண்ட ஆபத்து எழுகிறதோ,
அங்கெல்லாம் மக்கள் தன்னெழுச்சி யோடு முனைப்பாகப் போராடியே தீர வேண்டும்.
அப்படியான தருணங்களில் அவர்களுக்காக ஆதரவுக் குரல்களும் கரங்களும்
இயல்பாகவே எழும்!''
கே.கலைவாணி, திருத்தணி.
''அணு உலை
பாதிப்பு உண்டாக்கும் என்பது உண்மைதான்... ஏற்றுக்கொள்கிறேன். ஆனால்,
வளர்ச்சி கொடுக்கும் வசதிகளை அனுபவிக்க, ஏதோ ஒரு வகையில் இழப்பு
இருக்கத்தானே செய்யும். இப்போது நீங்களே கடைக்கோடி கிராமத்தில்
அமர்ந்துகொண்டு சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரங்கள் செய்துவருகிறீர்கள்.
அந்த இணைய இணைப்பு களுக்காக ஆழ்கடல் கேபிள்களைப் பதிப்பதால் கடல் சூழல்
மாசுபடத்தானே செய்கிறது?''
''கற்காலத்துக்குத் திரும்பச் செல்ல முடியாது என்பதை
நானும் உணர்ந்தே இருக்கிறேன். எனவே, இழப்புகளை நம்மால் முடிந்த வரை
குறைத்து... நீடித்த, நிலைத்த வளர்ச்சியை அடைய முயற்சிக்கலாமே? 'கடலில்
கேபிள் போடுவதா, அணுக்கழிவைக் கொட்டுவதா?’ என்றால், கேபிள் போடுவோம்
என்பதுதான் என் கட்சி. வாழ்க்கையின் விளிம்புநிலையில் நின்று உழலும்
மீனவர்கள், விவசாயிகள், தலித் தொழிலாளர்கள் போன்றோர் இழப்புகளைச் சந்திக்க
வேண்டும், டாட்டாக்களும், மிட்டல்களும், அம்பானிகளும் கோடி கோடியாகக்
கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழல்
சீர்கேடுகளை அனுமதிக்கவே முடியாது. ஏனெனில், சொற்ப ஆயிரங்களில் இருக்கும்
பணக்காரர்களுக்காக கோடிக்கணக்கான மக்கள்தொகையின் நலனை நாம் விட்டுக்கொடுக்க
முடியாது!''
இராம.பாலசுப்ரமணியன், கொடுங்காலூர்.
''இந்தியாவில்
பாலிதீன் பயன்பாடு அதிகம், அணைகள் ஏகம், மணல் வளம் சகட்டுமேனிக்குக் கொள்ளை
அடிக்கப்படுகிறது, காற்று மாசுபடுதல் அதீதம், காடுகள்
அழிக்கப்படுகின்றன... திரும்பிய திக்கெல்லாம் இயற்கை வளங்கள்
சூறையாடப்படுகின்றன அல்லது மாசுபடுத்தப்படுகின்றன. இந்த நிலையில்,
அதிஅவசரமாக இயற்கையின் எந்த வளத்தைப் பாதுகாக்க நாம் போராட வேண்டும்...
ஏன்?''
''நாம் வாழும் பகுதியின் இயற்கை வளங்கள்பற்றிய முழுத்
தகவல்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நமது பகுதியில் நடக்கும் இயற்கை
வாழ்வாதாரச் சிதைப்பை, சீரழிப்பை, திருட்டை, வியாபாரத்தைத் தடுத்து நிறுத்த
அணி திரள வேண்டும். அரசியல் கட்சிகளின், அரசியல்வாதிகளின் இயற்கை
பாதுகாப்புக் கொள்கைகள்குறித்துக் கேள்விகள் எழுப்ப வேண்டும். அதிகாரிகளின்
இயற்கைப் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கண்ணும் கருத்துமாகக் கவனிக்க
வேண்டும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம், பொதுநல வழக்கு, கருத்தரங்குகள்,
துண்டுப் பிரசுர விநியோகம், பொதுக் கூட்டங்கள், போராட்டங்கள் எனப் பல
வழிகளில் தொடர்ந்து உழைக்க வேண்டும். பெண்கள், இளையோர், குழந்தைகள்
மத்தியில் பரப்புரை செய்ய வேண்டும். இது நம் அனைவரின் தலையாய கடமையாகும்!''
எஸ்.ஏழுமலை, திருச்சி-3.
''இடிந்தகரை
பெண்களும் போராட்டக் களத்தில் மிகவும் தீவிரமாக நிற்கிறார்கள்.
அவர்களுக்குள் அந்தத் தீவிரத்தை எப்படி உண்டாக்கினீர்கள்?''
''அவர்கள்தான் என்னையும், நண்பர்களையும் தீவிரமிக்கவர்களாக மாற்றியிருக்கிறார்கள்!''
வா.இரவிச்சந்திரன், கோவிலூர்.
''அருந்ததி
ராய், மேதா பட்கர் போன்றவர்களுடன் உங்கள் அமைப்புக்குத் தொடர்பு
இருக்கிறதா? போராட்டத் திசைகுறித்த தகவல் தொடர்பு உரையாடல்கள் உங்களிடையே
நிகழுமா?''
''இருவரோடும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
2003-ம் ஆண்டு முதல் மேதா பட்கர் அவர்களை நாகர்கோவில் பொதுக்கூட்டம்,
கூடங்குளம் மாநாடு, இடிந்தகரைப் போராட்டம் எனப் பல முறை அழைத்து
வந்திருக்கிறோம். அமெரிக்காவில் இருந்தபோதே அருந்ததி எனக்குப் பரிச்சயம்.
அவரும் எங்கள் போராட்டத்தின் போக்கைக் கவனித்தபடிதான் இருக்கிறார்!''
அந்தோணிசாமி பாட்ரி, ஃபேஸ்புக்.
''வேறுபட்ட
சிந்தனைகொண்ட மனிதர்களை, சுயநல எண்ணம் மிகுந்தவர் களை இந்தப் போராட்டத்தின்
பொருட்டு எப்படி உங்களால் ஒருங் கிணைக்க முடிந்தது. அதன் ரகசியம் என்ன?''
''கோஷ்டி சண்டைக்கும், வேஷ்டிக் கிழிப்புக்கும்
பெயர்போன வேறு யாரிடமோ கேட்க வேண்டிய கேள்வியை எனக்கு அனுப்பிவிட்டீர்களோ?
எங்கள் மீனவர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், பெண்கள், இளைஞர்கள்,
குழந்தைகள் அனைவரும் ஒருமித்த சிந்தனையுடன் பொதுநல எண்ணம் மிகுந்தவர்களாக,
சாதி, மதம், ஊர், தொழில், அரசியல் கடந்த ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாகப்
போராடிக் கொண்டிருக்கிறோம். இது ஒன்றிணைந்து வந்த தமிழர் கூட்டம்; யாராலும்
ஒருங்கிணைக்கப்பட்டது அல்ல!''
சு.அருளாளன், ஆரணி.
''உங்கள் போராட்டத்தின் முடிவு என்னவாக இருக்கும்? உங்கள் மனதில் ஒரு எண்ணம் இருக்குமே... அதைச் சொல்லுங்கள்?''
''உண்மையைச் சொல்லட்டுமா? கூடங்குளம் அணுமின் நிலையம் நிரந்தரமாக இழுத்து மூடப்படும். இது உறுதி!''
- அடுத்த வாரம்...
''அணுசக்தியின் முக்கியத்துவம் பற்றி நாடாளுமன்றத்தில் பேசிய கனிமொழி கூட, கூடங்குளம் அணுஉலைகுறித்து வாய் திறக்க மறுக்கிறாரே?''
''நடுநிசியில்
சாலையில் நடந்து வந்தாலே ஓர் இளைஞனைக் கைது செய்யும் நம் தமிழகக் காவல்
துறை. ஆனால், எண்ணற்ற வழக்குகள் பதியப்பெற்ற உங்களை மட்டும் இத்தனை
மாதங்களாகச் சுதந்திரமாக நடமாட விட்டிருப்பதன் மர்மம் என்ன?''
''தமிழகத்தில் சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் நிலவும் 16 மணி நேர மின்வெட்டுபற்றி தங்களுக்குக் கவலைஇல்லையா?''
- போராடுவோம்
நன்றி - விகடன்
0 comments:
Post a Comment