சாக்ரடீஸை நண்பர் ஒருவர்
சந்திக்க வந்திருந்தார். பேசிக்கொண்டிருக்கும்போது உள்ளே கடமுடா என்று
பாத்திரங்கள் உருளும் ஓசை. நண்பர் கேள்விக்குறியாகப் பார்க்க சாக்ரடீஸ்,
''ஒன்றுமில்லை, உள்ளே இடி இடிக்கிறது'' என்றார். சற்றுநேரம் கழித்து உள்ளே
கோபத்தில் இருந்த மனைவி, ஒரு வாளித் தண்ணீரை சாக்ரடீஸ் மீது வீசியடித்தார்.
அதிர்ந்துபோன நண்பரைப் பார்த்து சாக்ரடீஸ், ''இடி இடித்ததல்லவா..? இப்போது
மழை பெய்கிறது அவ்வளவுதான்'' என்றார்.
எல்லா எழுத்தாளர்களின் மனைவிகளுமே இப்படி, 'என்னத்தையோ வேலைவெட்டி இல்லாம எழுதிக் கிழிக்கிறாரு’ என்று அலுத்துக்கொள்ளும் ரகம்தானோ?
தமிழ் நாவலாசிரியர்களின் திருமதிகளைச் சந்தித்த போது...
1. முதலில் ரா.கி.ரங்கராஜன் வீடு...
''பிரபல எழுத்தாளரான உங்க கணவருக்கு நீங்கள் எப்படி அனுசரணையாக இருக்கிறீர்கள்...?'' என்று கமலா ரங்கராஜனிடம் கேட்டபோது...
''உயிரே
போற மாதிரி தலையைப் பிச்சுக்கிட்டு, வீட்டையே ரெண்டு பண்ணிக்கிட்டுக் கதை
எழுதற ரகம் இல்லை இவர். யாருக்கும் எந்தத் தொந்தரவும் தராம, அவர்பாட்டுக்கு
எழுதிக்கிட்டிருப்பாரு. எழுதும்போது லேடீஸ் பத்தி ஏதாவது சந்தேகம் வந்தா,
என்னைக் கூப்பிட்டுக் கேட்பாரு... 'கேரக்டருக்கு என்ன டிரெஸ் இருக்கலாம்...
காதில் மாட்டறதுல லேட்டஸ்ட்டா வந்திருக்கிற டிசைன் என்ன?’னு கேட்பாரு.
நானும் சொல்வேன். சினிமா பார்த்து விமர்சனம் எழுதுவாரே தவிர,
நடிச்சிருக்கறவங்களோட பேரு தெரியாது. என் கிட்டதான் கேட்பாரு'' என்றார்
கமலா ரங்கராஜன்.
'நான் கிருஷ்ணதேவராயன்’ தொடரை ரா.கி.ரங்கராஜன் விகடனில்
எழுதிக்கொண்டு இருந்தபோது, அதற்குத் தேவையான புத்தகங்கள் அனைத்தையும்
கன்னிமரா நூலகத்தில் இருந்து எடுத்துவந்து கொடுத்தவர் கமலா. தன் கணவர்
எழுதி, வாரப் பத்திரிகைகளில் பிரசுரமான அனைத்துப் படைப்புகளையும் அழகாக
பைண்டு செய்து வைத்திருக்கிறார்.
''இலக்கியரீதியான உதவியா இல்லேன்னாலும் கமலா இல்லைன்னா,
நான் இவ்வளவு எழுதியிருக்க முடியாது. குடும்பப் பிரச்னையை அவள் என்னிடம்
கொண்டுவர்றது இல்லை. புத்தகம், கேஸட்ஸ் எல்லாத்தையும் அவள் தான்
அடுக்கிவெச்சிருக்கா. கேட்டதும் சட்டுனு எடுத்துக் கொடுப்பா...
இதெல்லாம்தான் ஒரு எழுத்தாளனுக்கு அடிப்படை உதவிகள். அது அத்தனையும் கமலா
பார்த்துப்பா...'' என்று நெகிழ்ந்தார் ரா.கி.ரங்கராஜன்.
2. அடுத்து 'சுபா’. அதாவது, சுரேஷ்-பாலகிருஷ்ணன். இந்த எழுத்தாள இரட்டையர் குடியிருப்பது ஒரே பங்களாவுக்குள்!
முதலில்
ஜெயந்தி சுரேஷிடம் பேசினோம். சுரேஷைக் கல்யாணம் செய்துகொள்வதற்கு முன்பே
அவர் எழுதிய கதைகள் மீது அதீதக் காதல் ஜெயந்திக்கு. ''அப்பவே கதைகளைப்
படிச்சுட்டு போன் செய்து பேசுவேன்'' என்று சிரிக்கிறார்.
''எப்பவுமே கண்ணையும் காதையும் திறந்துவெச்சுக்கிட்டே
இரு’னு எங்க அக்கா சொல்வாங்க... (ஜெயந்தியின் அக்கா - எழுத்தாளர் அனுராதா
ரமணன்). எனக்குத் தெரிஞ்ச, கேள்விப்பட்ட கேரக்டர்ஸை அவரிடம் சொல்வேன்.
'புத்திசுவாதீனம் இல்லாத தம்பியின் கிட்னியை எடுத்து அண்ணனுக்கு வெச்சாங்க’
என்ற 'கோழிக்குஞ்சு’ கதைக்கான கருவை நான்தான் சொன்னேன். அதே மாதிரி
வித்தியாசமான நியூஸ் எது வந்தாலும், அவர்கிட்ட எடுத்துக் காண்பிப்பேன்''
என்றார் ஜெயந்தி.
''எழுதும்போது அவரை யாரும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாது.
அதனால பக்கத்தில் போறதையே தவிர்த்துடுவேன்'' என்ற ஜெயந்தியிடம், 'சுரேஷ்
டிக்டேட் செய்து எழுதியிருக்கீங்களா..?’ என்று கேட்டபோது, சுரேஷ் பதில்
சொன்னார்:
''உடம்பு சரியில்லாதபோது, ஒரு தடவை டிக்டேட் செய்தேன்.
அவங்க எழுதினாங்க. ஆனா, அது சரியா வரலை. பொதுவா டிக்டேட் செய்து எழுதுவது
திருப்தியா அமையறது இல்ல. எங்களுக்குள்ளேயே (அதாவது, நானும் பாலாவுமே)
டிக்டேட் செய்து எழுதிக்கிறதுஇல்லே.''
பாலாவுக்கு
வரும் கடிதங்களுக்குப் பதில் போட்டு, அவரின் ரசிகர்களுக்குப் புத்தாண்டு
வாழ்த்து அட்டை அனுப்புவது எல்லாம் அவர் மனைவி யசோதா பாலகிருஷ்ணன்தான்.
''எழுத்தாளரோட வீட்டுக்கு யார் யாரோ தேடி வருவாங்க... அவங்களை எல்லாம்
பார்த்து, உட்காரவைத்துப் பேசிக்கிட்டு இருக்க முடியாது. எனவே, நானே
ஃபில்டர் பண்ணிக் குறைச்சிடுவேன்...'' என்கிறார் யசோதா. ''நான்
எழுதும்போது ரொம்பக் கோபக்காரன். என் மூஞ்சியைப் பார்க்கவே சகிக்காது...''
என்ற பாலாவைத் தொடர்ந்து யசோதா பேசினார்:
''அதனால பசங்களை மேல் மாடிக்குப் போகாம பார்த்துப்பேன்.
குடும்ப விஷயங்களைக் கடைசியாத்தான் கொண்டுபோவேன்...'' என்ற யசோதா
பாலகிருஷ்ணனுக்கு ஸ்ரீவைஜெயந்தி, ஸ்ரீகமல்குமார் என்ற இரண்டு குழந்தைகள்.
சுரேஷ் - ஜெயந்தி தம்பதிக்கும் கிருத்திகா, சுஜைய்
கிருஷ்ணா என இரண்டு குழந்தைகள். ''இதிலும் ஆண் ஒன்று, பெண் ஒன்று என்று
ஒற்றுமைதானா..?'' என்று கேட்டால், ''அதுவா அமைஞ்சதுதான்...'' என்று
சிரிக்கிறார்கள் 'சுபா’!
3. எழுத்தாளர்
சு.சமுத்திரத்தின் மனைவி கோகிலாவைச் சந்தித்தபோது, ''இவர் எழுதுறதை
எல்லாம் நான் கதையாவே நினைக்கல. அதுக்குப் பிறகு நிறையப் பேர் ஆராய்ச்சி
பண்றதுக்கு எல்லாம் இவர் கதையைத் தேடி வந்தபோதுதான்... 'சரி, இதுலயும் ஏதோ
இருக்குது’னு புரிஞ்சுக்கிட்டேன்...'' என்றார்.
''எழுதுற மாதிரிதான் நடந்துப்பார். ஏழைகளுக்கு
உதவுவார். பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி தனக்குக் கிடைத்த பணத்தை
இலங்கைத் தமிழர்களுக்காக இவர் கொடுத்தபோது, எனக்கு வருத்தமாதான் இருந்தது.
ஆனா, இப்போ திருநங்கைகளுக்காகப் பத்தாயிரம் ரூபா கொடுத்தப்போ,
சரின்னுட்டேன்...'' என்றார் கோகிலா.
''வெளியே எங்கேயாவது போயிட்டு வந்தா திட்டுவாங்க...
எழுதும்போது திட்ட மாட்டாங்க. எழுதிக்கிட்டிருக்கும்போது நான் திட்டினாலும்
திருப்பித் திட்ட மாட்டாங்க...'' என்று சொல்லிச் சிரிக்கிறார் சமுத்திரம்!
''4. 'இவர்
கதை எழுதுவதையே விட்டுவிட்டால் நல்லது’ என்று நான் நினைப்பதும் உண்டு...''
- இது ராஜேஷ்குமாரின் மனைவி தனலட்சுமி நம்மிடம் சொன்னது.
'' 'ஒரு ராஜாளியும் ஒரு புல்புல் பறவையும்’ என்ற
கதையில் மில் தொழிலாளிகளின் தவறான செயல் பற்றி எழுதியிருந்தார். அதைச் சில
தொழிலாளர்கள் எதிர்த்தார்கள். 'கையை வெட்டுவோம்... காலை வெட்டுவோம்’னு
மிரட்டினாங்க. இன்னொரு சமயம், இவர் பற்றி ஒரு பத்திரிகையில் வந்த
கிசுகிசுவைப் படித்துவிட்டு உறவினர்கள் துக்கம் விசாரித்தபோது, மனதளவில்
ரொம்ப பாதிக்கப்பட்டுவிட்டேன்...'' என்று சோகப்பட்டார் தனலட்சுமி.
ராஜேஷ்குமாருடன் வெளியே போவதென்றால் தனலட்சுமிக்கு
அலர்ஜியாம். ''எங்கே போனாலும் ரசிகர்கள் சூழ்ந்துக்கிறாங்க. இவருக்கும்
நம்ம ஞாபகம் வர்றதில்லை. பிரபல எழுத்தாளரின் மனைவி என்ற சந்தோஷத்தைவிட,
எனக்குச் சங்கடங்களே அதிகம். கொஞ்சம் கொஞ்சமா இதுதான் நம் வாழ்க்கைனு என்னை
முழுமையா மாத்திக்கிட்டேன். இப்போது இவரின் முதல் ரசிகை யும்
விமர்சகருமாகிவிட்டேன்...'' என்று வேகமாகச் சொன்னார் தனலட்சுமி.
5. கொஞ்சம்
உரக்கப் பேசினால் மொத்தக் கிராமமும் வீட்டின் முன் திரண்டுவிடும்
அளவுக்குக் குட்டிக் கிராமம் விருதுநகர் மாவட்டத்தின் மூலையில் இருக்கும்
மேலாண்மறைநாடு. பேட்டி முடியும் வரை அடுக்களைக்குள் இருந்து பாதி முகம்
மட்டும் காட்டிப் பேசிக்கொண்டிருந்தார் மேலாண்மை.பொன்னுச்சாமியின் மனைவி
பொன்னுத்தாய்.
''எழுதும்போது
யாரும் தொந்தரவு பண்ணக் கூடாது... முணுக்குனு கோவம் வந்துடும் அவருக்கு.
நான் பொம்பளை... வீட்டுல வேலை பாக்கையில ஊடமாட ஏதாவது புலம்பிக்கிட்டே
இருப்பேன். உடனே பொல்லாக் கோவம் வந்துடும் அவருக்கு. எழுதினதை அப்படியே
போட்டுட்டு, எந்திரிச்சு வெளியே போயிடுவாரு. அவரு போனது தெரியாம நான்
பாட்டுக்குப் பேசிக்கிட்டே இருப்பேன். அப்பால சத்தத்தையே காணோம்னு
அடுப்படியில இருந்து எட்டிப்பார்த்தா, இவரு இருக்க மாட்டாரு. கொஞ்ச நேரம்
செண்டு திரும்ப வருவாங்க. 'நீ பேசிக்கிட்டே இருந்த... அதான் போயிட்டேன்’னு
சொல்லுவாரு. அப்புறம்தான் நம்ம தப்பு புரியும்...'' என்றார் பொன்னுத்தாய்.
''கதை எழுதும்போது அவருக்குத் தெரியாத, எனக்குத்
தெரிஞ்ச சங்கதி எதுனா இருந்துச்சுன்னா, கதைக்கு வேணும்னு கேக்காம... சும்மா
கேக்கிற மாதிரி கேப்பாங்க. நானும் எதுக்கோ கேக்கிறாருனு சொல்லிடுவேன்.
பொறங்காட்டி, நான் சொன்னது அவரு எழுதுன கதைல இருக்கிறதைப்
பொஸ்தகத்திலேர்ந்து படிச்சுக் காட்டுவாரு. எனக்கு வெட்கமாப்போயிடும்...''
''உங்கள் கணவர் எழுதிய கதைகளைப்
படித்திருக்கிறீர்களா..?'' என்றதும் தயங்காமல், ''நான் படிக்காதவ. எனக்கு
பொஸ்தகமெல்லாம் வாசிக்கத் தெரியாது. அவரு கதைகளை பாப்பாதான் வாசிச்சுக்
காட்டுவா. கேக்குறப்ப பெருமையா இருக்கும்...
வெளியூர் கூட்டங்களுக்குப் போகும் போது டிரெஸ்
செய்துகொண்டு (கதர் சட்டை, வேட்டிதான்) மனைவியிடம் 'மேட்சிங்காக
இருக்கிறதா?’ என்று கேட்டு விட்டுத்தான் செல்வாராம் பொன்னுச்சாமி.
''அவருகூட நான் அதிகமா கூட்டங்களுக்குப் போனதில்லை. படிக்காதவ நாம
எதுக்குனு சள்ளையா இருக்கும். ஆனாலும், 'நானே போறேன்... உனக்கென்ன’னு
வற்புறுத்திக் கூப்பிடுவாரு. ஒண்ணு ரெண்டு கூட்டத்துக்குப் போயிருக்கேன்.
என்னமா பேசுறாருன்னு பிரமிப்பா இருக்கும்.
சின்ன வயசுல அவர் பட்ட அத்தனை சிரமங்களையும்தான் இப்ப
கதையா எழுதறாரு. அதனாலதான் அதுல ஒரு நிஜமும் உயிரும் இருக்கு. இன்னும் அவர்
வாழ்க்கையை வெச்சு எத்தனையோ கதைகள் எழுதலாம்'' என்கிறார் பொன்னுத்தாய்.
- பாலா, எஸ்.தேவராஜ், ப.திருமாவேலன்
படங்கள்: உசேன், கிருஷ்ணமூர்த்தி, எஸ்.கே.முருகேசன்
நன்றி - விகடன்
2 comments:
சரி... உங்க வீட்டம்மாகிட்ட பேட்டி எடுக்கலையா?
எனக்கு பிடிச்ச எழுத்தாளர் ராஜேஸ்குமார். அவர் மனைவி பற்றி இதுவரை எங்கும் படித்ததில்லை. பகிர்வுக்கு நன்றி
Post a Comment