Thursday, May 09, 2013

ஆனந்த விகடன் - மே தின படங்கள் 3 - விமர்சனம்

எதிர்நீச்சல் - சினிமா விமர்சனம்

ரு பேருக்கு இத்தனை அக்கப்போரா?
குஞ்சிதபாதம் என்ற பெயர் 27 வயது வரை தன்னைப் பாடாய்ப்படுத்திய சுவடுகளை மறைக்க, சிவகார்த்திகேயன் அடிக்கும் 'எதிர்நீச்சல்’! கல்யாணத்துக்குப் பிறகு தன் பேருக்குப் பின் இந்தப் பேரைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே டேக்கா கொடுக்கும் காதலி. 'எந்தப் பேரையும் நான் சுருக்கித்தான் கூப்பிடுவேன்!’ என்று அடமாக குஞ்சிதபாதத்தை 'ஷார்ட்’ ஆகக் கூப்பிட்டுக் கடுப்படிக்கும் மேனேஜர் என பார்ட்டிக்குப் பயங்கர சிக்கல்கள்.


ஒரு கட்டத்துக்குப் பிறகு, 'ஹரீஷ்’ எனத் தன் பெயரை மாற்றியதும் ப்ரியா ஆனந்தைக் காதலிக்கும் அளவுக்கு வாழ்க்கை மாறுகிறது சிவகார்த்திகேயனுக்கு. ஆனால், அந்தப் பெயர் மாற்றமே இருவருக்கும் இடையில் பிரச்னையை உண்டாக்க, தன் காதலின் ஆழம் உணர்த்த சிவகார்த்திகேயன் என்ன செய்தார் என்பது மீதிக் கதை!

முதல் பாதியில் காதல், காமெடி. இரண்டாவது பாதியில் சென்டிமென்ட், லட்சிய த்ரில் என அழகான பேக்கேஜில் படம் தந்திருக் கிறார் அறிமுக இயக்குநர் துரை செந்தில்குமார். முதல்முறையாகக் கூட்டம் சேர்க்காமல் 'ஸோலோ’ ஆட்டம் ஆடியிருக்கிறார் சிவகார்த்திகேயன். உடல்மொழி, நக்கல் டைமிங், ரொமான்ஸ், டான்ஸ் என அனைத்து டிபார்ட்மென்ட்களிலும் 'ஃபைன் டியூன்ட் ஹீரோ மெட்டீரியல்’! சீனுக்கு சீன் சிரிக்கவைத்தே சிக்ஸர் அள்ளுகிறார்.



 பள்ளிக்கூட அறிமுகக் காட்சியில் ப்ரியா ஆனந்தின் முகத்தில் அட்டகாச ஜன்னல், மின்னல் எக்ஸ்பிரஷன்கள். ஆனால், அதன் பிறகு அழகிக்கு வேலையே இல்லை. ''நீ ஓடுவியானு வள்ளிக்குச் சந்தேகம். நீ வள்ளிகூட ஓடிருவியோனு கீதாவுக்குச் சந்தேகம்'' - செம லந்து வசனங்களை நச்நச்செனப் பிரசென்ட் செய்யும் சதீஷ்... ஹீரோவின் நண்பர்கள் பட்டியலில் ஃப்ரெஷ் டாப்அப்!  
பெயர் உண்டாக்கும் இம்சைகள், பெயர் மாற்றும் படலம், சிறுவனின் பள்ளிக்கூட டிராப்கள், கல்யாண மண்டபக் களேபரம் என முன்பாதி முழுக்கவே குட்டிக் குட்டி அத்தியாயங்களில் தியேட்டரில் அள்ளுகிறது அப்ளாஸ். 


மாரத்தானில் சிவகார்த்திகேயன்தான் ஜெயிப்பார் என்பதை யூகிக்க முடிந்தாலும் அதையும் சுவாரஸ்ய டெம்போவோடு கொண்டுசென்றிருப்பது... வெல்டன்! ஆனால், அதற்காக மூன்று மாதப் பயிற்சியிலேயே மாரத்தான் ஓட்டத்தில் சிவகார்த்திகேயன் சாதிப்பதெல்லாம்... டூஹண்ட்ரட் மச். அவ்வளவு பரபரப்பு, நீண்ட ஓய்வுக்குப் பிறகு நயன்தாரா ஸ்க்ரீனில் வரும் காட்சி, இப்படியா கவனிக்கப்படாமல் கடந்து போக வேண்டும்!?


'ஸ்பீடு... ஸ்பீடு...’ எனப் பாடலுக்கும் படத்துக்கும் செம மைலேஜ் கொடுக்கிறது அனிருத்தின் துள்ளல் இசை. பாடல் காட்சிகளுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் கொடுக்கிறது வேல்ராஜின் கேமரா. 

ஒரு 'பெயர் மாற்றும்’ படலத்தை வைத்துப் பெயர் தட்டியிருக்கிறது சிவகார்த்திகேயன் - துரை செந்தில்குமார் - அனிருத் அடங்கிய தனுஷ் கூட்டணி!


சூது கவ்வும் - சினிமா விமர்சனம்

திகாலை அலாரம் வைத்து அரக்கப்பறக்க எழுந்து குளித்து, உடைமாற்றி, அமர்ந்து சாவகாசமாகச் சரக்கு பாட்டிலைத் திறக்கும் ஒருவனில் ஆரம்பிக்கிறது காமெடிக் கச்சேரி!

இதுவரை தமிழ் சினிமா டெரராகக் காட்டிய ஆள் கடத்தல் சூதினை ஜாலி கலாட்டாவாகப் படைத்து மனதைக் கவ்வியிருக்கிறது 'சூது கவ்வும்’!
கடத்தலுக்கு ஐந்து விதிகளை வகுத்துக்கொண்டு 'மிக நேர்மையாக, இதய சுத்தியுடன்’ ஆட்களைக் கடத்தும் விஜய் சேதுபதி, நிதி அமைச்சரின் மகனைக் கடத்தினால் என்ன ஆகும் என்பதே... கெக்கேபிக்கே படம்! ஆனால் கதை, ட்விஸ்ட், க்ளைமாக்ஸ் என்று தொகுத்து விளக்க அவசியம் இல்லாத திரைக்கதை.

1. ''இதை இட்லினு சொன்னா, சட்னிகூட நம்பாதுடா!''
''நீங்க நியூஸ் பேப்பரே படிக்கிறது இல்லையா?''
''டெய்லி டேட் மாத்தி விக்கிறான்... அதை எதுக்குப் படிக்கணும்?''


2. ''சென்னைக்கு பிளானோட வந்தவன் எல்லாம் திரும்பப் போயிடுறான். பிளான் இல்லாம வந்தவன்தான் ஜெயிக்கிறான்!''
''சார்... எம் பொண்ணை ஒண்ணும் பண்ணிராதீங்க சார்!''


3 ''அய்யய்யா... நீங்களே சொன்னாலும் நாங்க எதுவும் பண்ண மாட்டோம் சார். கவலைப்படாதீங்க. மூச்சை இழுத்து விடுங்க. இப்போ ஃப்ரீயா ஃபீல் பண்றீங்களா?''


4  ''நான் கத்த மாட்டேன். தயவுசெஞ்சு அந்த கர்ச்சீப்பை வாய்ல திணிக்காதீங்க.. நாறுது!''

5. ''ஃப்ராடுத்தனம் பண்றதுக்கு குருட்டுத் தனமான முட்டாள்தனமும், முரட்டுத் தனமான புத்திசாலித்தனமும் வேணும்!''

6. ''டெய்லி 18 டீ குடிக்கிறான்... இவனைக் கடத்த பிளான் எதுவும் போடத் தேவை யில்லை. ஒரு டீக்கடை போட்டா போதும்!''

7. ''நாளைக்கு சண்டே... நாங்க வொர்க்பண்ண மாட்டோம். திங்கட்கிழமை பணத்தை வாங்கிக் கிறோம்!''

- இப்படி சீனுக்கு சீன் சிரிப்பு மேளா நடத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் நலன் குமாரசாமி. ஆனால், அசட்டுக் காமெடிகளாக இல்லாமல் நினைத்து நினைத்துச் சிரிக்கும் அளவுக்கு ஒவ்வொரு ஒன் லைனும் அவ்வளவு இன்ட்ரஸ்டிங் ப்ளஸ் இன்டெலிஜென்ட். தமிழ் சினிமாவில் நலனுக்குக் கலகல வரவேற்பு!
படத்தில் ஹீரோ என்று யாரைச் சொல்வது? அமெச்சூர் கடத்தல்காரனாக வரும் விஜய் சேதுபதி, அதிகாலை சரக்குப் பார்ட்டி ரமேஷ், நயன்தாராவுக்குச் சிலைவைக்கும் சிம்ஹா, சாஃப்ட்வேர் பேர்வழி அசோக், நேர்மையான அரசியல்வாதி எம்.எஸ்.பாஸ்கர், அவருடைய பக்கா ஃப்ராடு மகன் கருணா, ஒரு வார்த்தை கூடப் பேசாமல் டெரர் கிளப்பும் திகில் போலீஸ் யோக் ஜெப்பி, சேஸிங்கில் கியர் தட்டும் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், பின்னணி இசையில் மிரட்டும் சந்தோஷ் நாராயணன் என எல்லாருமே அவரவர் வேலைகளில் செம ஃபிட். அரூபக் கற்பனையாக வந்தாலும் 'மாமா... மாமா...’ என்று விஜய் சேதுபதியைக் கொஞ்சிக் கொஞ்சியே கிளாமரும் ஹ்யூமருமாக வசீகரிக்கிறார் சஞ்சிதா ஷெட்டி. 

படத்தின் குறைகள்? நிறையவே!

இவ்வளவு சொதப்பலாக ஒரு கடத்தல் கும்பல் இருக்க முடியுமா?

ஒரு அமெச்சூர் கடத்தல் கும்பலுக்குப் பயந்து மாநில முதல்வரே கட்சி நிதியில் இருந்து கோடிகளைத் தூக்கிக் கொடுப்பாரா?

 பணப் பை ஜி.பி.எஸ். சிக்னலைப் பின்தொடராமல் போலீஸ் ஏன் வேடிக்கை பார்க்கிறது?


கான்ஸ் டபிளைப் பார்த்தாலே உச்சா போகும் விஜய் சேதுபதி அண்ட் கோ, இன்ஸ்பெக்டர் பிரம்மா வுக்குத் தண்ணி காட்ட முடியுமா...

 போன்ற கேள்விகளுக்குப் பதில் யோசித்தாலே படத்தை ரசிக்க முடியாது. ஆனால், அது எதையும் யோசிக்கவிடாமல் அள்ளுகிறது காமெடி!

வெளியுலகை மறக்கடித்து, ஆறாம் அறிவை முடக்கிவைத்து, இரண்டு மணி நேரம் சிரித்துக் கொண்டே இருக்க முடியுமென்றால், இப்படியான 'சூது’களுக்கு நிச்சயம் விரிக்கலாம் சிவப்புக் கம்பளம்!

மூன்று பேர் மூன்று காதல் - சினிமா விமர்சனம்

‘காதல் ஸ்பெஷல் இயக்குநர் வஸந்த், மூன்று காதல்களோடு களம் இறங்கிய படம்! 'காதல் என்பது எடுத்துக்கொள்வது அல்ல; கொடுப்பது’ என்பதுதான் கதையின் ஒன் லைன்.  

விமலுக்கு லாசினியைக் கண்டதும் காதல். ஆனால், லாசினிக்கு ஏற்கெனவே அவரது காதலனுடன் நிச்சயமாகி இருக்கிறது. திடீரென லாசினியின் காதலில் பிரிவு நேர, அந்த இடைவெளியில் தன் காதலைத் தெரிவித்து லாசினியை ஏற்றுக் கொள்ளவைக்கிறார் விமல். எல்லாம் சுபமாகப் போகும் வேளையில், தானாகவே காதலை முறித்துக்கொள்கிறார் விமல். காரணம், சேரன்- பானு மற்றும் அர்ஜுன்- சுர்வீன் ஜோடிகளைப் பற்றி அவர் அறிந்துகொள்ளும் உண்மைகள். அது என்ன உண்மைகள் என்பதே நீளமான மீதிப் படம்!


'கேளடி கண்மணி’,  'ஆசை’, 'ரிதம்’, 'சத்தம் போடாதே’ படங்களில் காதலை அழகிய பழகியலாகப் பதிவுசெய்த வஸந்த் படமா இது? ஒன்றுக்கு மூன்றாக இருக்கும் காதல்களில் ஒன்றில்கூட வஸந்த் ஸ்பெஷல் டச் இல்லையே! 

மூன்று ஜோடிகளில் சேரன் - பானுவிடம் மட்டுமே காதலுக்கான சமிக்ஞைகள் இருக்கின்றன. விமல்-லாசினி, அர்ஜுன் -சுர்வீன் இடையிலான உரையாடல் தொடங்கி சம்பவங்கள் வரை அனைத்திலும் படர்ந்திருக்கிறது செயற்கை! 

நாகர்கோவிலில் தொண்டு நிறுவனம் நடத்தும் சேரனை மனப்பூர்வமாகக் காதலிக்கும் பாத்திரத்தில் பானு அசத்தல். மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாகத் தயக்கமும் துணிச்சலும் கலந்து கட்டிய பெண்ணாக வசீகரிக்கிறார். சேரனின் துளியும் மிகை இல்லாத நடிப்பு... சிறப்பு. லாசினியை இம்ப்ரெஸ் செய்ய விமல் பேசுவதற்கெல்லாம் லாசினி சிரிக்கிறார்... காமெடியாம்.


 செம காமெடி! தன்னிடம் நீச்சல் கற்கும் மாணவியையே காதலிக்கும் பயிற்சியாளராக அர்ஜுன். என்ன லாஜிக் சொன் னாலும் அர்ஜுன்-சுர்வீனுக்கு இடையிலான நெருக்கத்தில் காதல் இல்லவே இல்லை! 

மூன்று காதல்களுக்கும் இடையிலான தொடர்பு இயல்பாக இல்லாததால், இதை எதற்கு ஒரே படமாக எடுக்க வேண்டும் என்ற கேள்வி எழாமல் இல்லை. பாடல் களிலும் காதல் ஹம்மிங்குகளின்போதும் யுவன்ஷங்கர் ராஜா இசை ஸ்பெஷல் ஸ்கோர். 'ஆஹா... காதல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே’, 'மழை... மழை’ பாடல்களில் நா.முத்துக்குமாரின் வரிகள் காதலும் காதல் நிமித்தமுமாகப் பொங்கித் ததும்புகிறது. மலையும் மலை சார்ந்த இடமும், கடலும் கடல் சார்ந்த இடமும், நிலமும் நிலம் சார்ந்த இடமும் எனப் பிரிந்திருக்கும் கதைக் களத்தை போஜன் கே.தினேஷின் ஒளிப்பதிவு அழகாக வித்தியாசப்படுத்துகிறது.


படத்தில், 'உடம்புல சின்னக் காயம்கூட படாத ஒரே விளையாட்டு, நீச்சல்’ என்கிறார் அர்ஜுன். ஆனால், படத்தில் மூன்று காதல்கள் இருந்தும், மனசில் சின்னக் காயம்கூட ஏற்படுத்தவில்லையே வஸந்த்!?


நன்றி - விகடன்

0 comments: