கல்லா கட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் - ஒரு மினி தொடர்: பாகம் 1
-எஸ்.முத்துகிருஷ்ணன் தமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டடங்கள் வீதிக்கு வீதி ஜொலிக்கின்றன. அரசு கல்விக் நிலையங்களின் கட்டடங்களோ 'எப்போது இடிந்து விழுமோ' என பதற வைக்கின்றன. தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க தவம் கிடக்கும் பெற்றோர்கள், அரசுப் பள்ளிகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ஒரு பக்கம் அரசுப் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுக்கொண்டிருக்க... இன்னொரு பக்கம் தனியார் பள்ளிகள் பெருகியபடியே இருக்கின்றன. ஆனால் பள்ளிகள் மட்டும் அதிகரிக்கவில்லை... அவர்களின் வசூல் வேட்டையும் அதிகரித்துக்கொண்டே போகிறது. காற்றுவாங்கும் அரசு பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் அனைத்தும் ஜூன் 3 ஆம் தேதி திறக்க இருக்கின்றன. தாங்கள் விரும்பிய பள்ளியில், தங்கள் வீட்டு அருகே உள்ள பள்ளியில் எல்.கே.ஜி. சீட் வாங்க பட்டபாடு பெற்றோர்களுக்குத்தான் தெரியும். விண்ணப்பம் வாங்குவதற்கே இரவு எல்லாம் வீதியில் படுத்துறங்கும் அளவுக்கு தனியார் பள்ளிகள் மீதான மோகம் மக்களை ஆட்டிப்படைக்கிறது. எவ்வளவோ சலுகைகளை அறிவித்தாலும், கூவி கூவி அழைத்தாலும் அரசு பள்ளிகள் காற்று வாங்குகிறது. தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள புள்ளி விபரம் இந்த உண்மைகளை உரக்கச் சொல்கிறது.
தொடக்க கல்வியை பொறுத்த வரையில் 2008-09ம் ஆண்டு மாணவர்
சேர்க்கையானது அரசு பள்ளிகளில் 43.67 சதவீதம்; அரசு உதவி பெறும்
பள்ளிகளில் 21.83 சதவீதம்; தனியார் பள்ளிகளில் 34.5 சதவீதம் என்று இருந்த
நிலையில், 2012-13ல் அரசு பள்ளியில் 36.58 சதவீதம்; அரசு உதவி பெறும்
பள்ளிகளில் 17.99 சதவீதம்; தனியார் பள்ளிகளில் 45.4 சதவீதம் என்று தலைகீழாக
மாறி இருக்கிறது. இதே நிலையைத்தான் நடுநிலைபள்ளி, உயர் நிலைப்பள்ளி
மற்றும் மேல் நிலைப்பள்ளிகளின் புள்ளி விபரங்களும் காட்டுகின்றன. நாளுக்கு
நாள் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளை, தனியார் பள்ளிகள் கபளீகரம்
செய்து வருகின்றன.
இத்தனைக்கும் தனியார் பள்ளிகளில் பல்லாயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். ‘டொனேஷன்’ என்ற பெயரில் கொள்ளை அடிக்கிறார்கள். அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கல்விக் கட்டணமே இல்லை. இலவச நோட்டு புத்தகம், சத்துணவு, இலவச பஸ் பாஸ் எல்லாம் உண்டு. ஆனாலும் கூலித் தொழிலாளி கூட தன் பிள்ளையை தனியார் பள்ளியில்தான் சேர்க்க துடிக்கிறார். ஏன்? கட்டண கொள்ளை நடக்கிறது என்பது தெரிந்தும், அங்கே போவது ஏன்? இது விடை தெரிந்த கேள்விதான்.
ஏனெனில் அரசுப் பள்ளிகளின் அவலநிலை மக்களை அந்தப்
பக்கம் போகவிடாமல் துரத்தி அடிக்கிறது. இரண்டாவது, தனியார் பள்ளிகளின்
கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மக்களை ஈர்க்கின்றன. ‘தனியார் பள்ளியில்
படித்தால்தான் தரமான கல்வி கிடைக்கும். தன் பிள்ளை கான்வென்டில்
படித்தால்தான் கவுரவம்’ என்று நினைக்கிறார்கள்.
சீண்டப்படாத சிங்காரவேலு கமிட்டி பரிந்துரை ஆசிரியர்களை கசக்கி பிழிந்து, மாணவர்களை மனப்பாடம் செய்ய வைத்து தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்க வைத்துவிடுவதால், தனியார் பள்ளிகள் இந்த மோகத்தை தக்க வைத்துக்கொள்கின்றன. கூடுதல் பணம் பறிக்க இந்த தேர்வு முடிவுகள் அவர்களுக்கு உதவுகின்றன. உதாரணமாக சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் எல்.கே.ஜி. அட்மிஷன் சமயத்திலேயே குறைந்த பட்சம் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை நன்கொடை வாங்கப்படுகிறது. எந்த சட்டமும் இதை தடுக்க முடியவில்லை. “அரசாங்கம் அப்படித்தான் சார் ரூல்ஸ் போடும். அதை எல்லாம் ஃபாலோ பண்ணா ஸ்கூல் நடத்த முடியுமா? டொனேஷன் கொடுத்தா சீட். இல்லேன்னா இல்ல” என்று எந்த அச்சமும் இல்லாமல், பச்சையாக பேசுகிறார்கள். இந்த நன்கொடைகளை பதிவு செய்வதற்கு என்றே பள்ளியின் பெயரில் ஒரு டிரஸ்ட்டை ஏற்படுத்திக்கொள்கின்றனர். அல்லது கட்டடம் கட்ட, பள்ளிக்கு வாகனம் வாங்க, மேஜை நாற்காலி வாங்க... என ஏதோ ஒரு பெயரில் இந்த வசூல் நடக்கிறது. சீட் வேண்டும் என்பதற்காக கூடுதல் நன்கொடை கொடுக்கவும் பணக்கார பெற்றோர்கள் போட்டி போடுவதால், இந்த விஷயம் ஒரு பிரச்னையாக வெளியில் வருவதில்லை. தமிழக அரசின் சிங்காரவேலு கமிட்டி தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் குறித்து வரையறை செய்திருக்கிறது. அதை எல்லாம் எந்தப் பள்ளியும் ஒரு பொருட்டாகக் கூட மதிப்பதில்லை. சொல்லப்போனால் இப்படி ஒரு கமிட்டி இருப்பதே பல தனியார் பள்ளிகளுக்குத் தெரியாது. “கட்டடம் கட்டுனது நானு, முதல் போட்டது நானு, இதுக்கு விலை வைக்க வேண்டியதுதான் நான்தான்” என கல்வியை ஒரு முதலீடாக நினைத்து லாபத்தை நிர்ணயிக்கிறார்கள். கட்டணக் கொள்ளை தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்சி பள்ளிகளின் கட்டண விபரம் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு வகுப்புக்கும் சுமார் 18 ஆயிரம் ரூபாய் என்பது பொதுவான விதியாக உள்ளது. இந்த தொகையை சில பள்ளிகள் மொத்தமாக வசூல் செய்கின்றன. வேன், பஸ் கட்டணங்கள் தனி கணக்கு. சில பள்ளிகள் முதலில் ரூ.10 ஆயிரமும், பின்னர் 3 மாதத்துக்கு ஒருமுறை ரூ.3 ஆயிரம் என்று மொத்தம் ரூ.12 ஆயிரமுமாக... மொத்தம் ரூ.22 ஆயிரம் ரூபாய் வசூலித்து விடுகிறார்கள்.
இதுத் தவிர யூனிபார்ம், நோட் புக், ஸ்மார்ட் கிளாஸ்,
கம்யூட்டர் லேப், மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ஸ்பெஷல் பீஸ் என்று தனித்
தனியாக மொய் எழுத வேண்டும். ஸ்போர்ட்ஸ், டிராயிங் கிளாஸ் என்றும் தனித்தனி
பீஸ் வைத்துள்ளனர். இப்படி ஒரு பிள்ளையிடம் இருந்து குறைந்தபட்சம் வருடம்
ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வசூல் செய்து விடுவார்கள். ஒரு வகுப்பில்
குறைந்தபட்சம் 40 மாணவர்கள் என்றால் ஆண்டுக்கு ஒரு வகுப்பில் மட்டுமே ரூ.
12 லட்சம் வசூல் ஆகி விடுகிறது. எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை
பெரும்பாலான பள்ளிகளில் இந்த கொள்ளைதான் நடக்கிறது.
|
ஆனால், இப்படி அடிக்கும் கொள்ளையில் தனியார் பள்ளி நிர்வாகங்கள்
ஆசிரியர்களுக்கு கவுரவமான சம்பளம் கொடுக்கிறார்களா என்றால் இல்லை. அந்த
ஆசிரியர்கள் வாங்குவது மிக மிக குறைந்த சம்பளம். உதாரணமாக, அரசு பள்ளியில்
பி.ஏ., அல்லது பி.எஸ்.சி., பி.எட்., முடித்த ஆசிரியருக்கு குறைந்த பட்ச
சம்பளம் மாதம் ரூ.26,000. இதே தகுதியுள்ள ஆசிரியருக்கு தனியார் பள்ளிகளில்
15 ஆயிரம் என்பதே அதிகபட்ச சம்பளம். இந்த ஆசிரியர்கள் காலை 8 மணி முதல்
மாலை 5 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும். இப்படி ஆசிரியர்களின் உழைப்பை
உறிஞ்சி, பெற்றோர்களை கசக்கி பிழிந்து இவர்கள் பிடுங்கும் பணம் எங்கெல்லாம்
முதலீடு செய்யப்படுகிறது தெரியுமா?
நாளை பார்க்கலாம்....
நாளை பார்க்கலாம்....
2 comments:
அவசியமான பதிவு...
நன்றி
உண்மையிலே 26000/- சம்பளம் தருவார்களா( இங்கே அது 65000/-) அதே நேரம் இலங்கையில் வெறும் 22000/- ( 9000/- இந்திய ரூபா)
Post a Comment