Sunday, April 14, 2013

ஆரூர் சிட்ஃபண்ட்ஸ் ரெங்கா - திருவாரூர் பாபு - சிறுகதை

ஆரூர் சிட்ஃபண்ட்ஸ் ரெங்கா

அரைமணி நேரம் தாமதம். எட்டரை மணிக்கு பிரஸ் திறப்பது என்பது பரமேஸ்வரின் 20 ஆண்டு கால வழக்கம். அந்த நேரம் நேதாஜி சாலையில் யூனிஃபார்ம் அணிந்த மாணவ - மாணவியர் சைக்கிளில் பள்ளிக்கூடம் நோக்கி விரைவார்கள். எதிரே இருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு மாடுகள், ஆடுகள், நாய்களைச் சிகிச்சைக்காக அழைத்துவந்திருப்பார்கள். உள்ளே போதுமான இடம் இல்லாத காரணத்தால் வெளியே நிற்க வைத்திருப்பார்கள். வொர்க்ஷாப் வாசலில் இருக்கும் டீக்கடை மாரிமுத்து இவரைப் பார்த்த நிமிடத்தில் டீ கிளாஸை வெந்நீரில் ஊறப்போடுவார். பிரஸ் திறந்து கதவிடுக்கில் சிக்கிக்கொண்டிருக்கும் தினசரியை எடுத்து தலைப்புச் செய்தியைப் பார்த்தபடி நாற்காலியில் அமரும்போது டீ வந்துவிடும்.
இன்றைக்கு மாணவ - மாணவிகள் பள்ளிக்குச் சென்றுவிட்டார்கள். எதிரே ஆஸ்பத்திரியில் வழக்கத்தைவிடக் கூட்டம் அதிகம். ஆடி அமாவாசைக்கு மனைவியோடு கோயிலுக்குப் போனதால் அரை மணி தாமதம்.
பரமேஸ் இரவு ஓடி முடித்திருந்த போஸ்டர்களைப் பார்த்தார். இரண்டு பொதுக்கூட்ட அறிவிப்பு, ஒரு மரணச் செய்தி, ஒரு நினைவு நாள் அறிவிப்பு. மரணச் செய்தி போஸ்டரில் கறுப்பு நிறம் சற்றுக் கூடுதலாக ஏறி இருந்தது. ஆர்டர் முழுக்க ஓடி முடிந்துவிட்டதா என்று பார்த்தார். முடிந்திருந்தது. நள்ளிரவில் ஓடியிருக்க வேண்டும். தூக்கக் கலக்கத்தில் பசங்க கவனிக்காமல் விட்டிருப்பார்கள்.
9.30 மணி தொடங்கி வேலையாட்கள் ஒவ்வொருவராக வந்து சேர்வார்கள். இரவு வேலை பார்த்திருப்பதால் காலையில் சிறிது தாமதம் நேரிடலாம். பெண்டிங் ஆர்டர் எதுவும் இல்லை. புது ஆர்டர் வந்தால்தான் வேலை. வினைல் போஸ்டர்களும் ஃப்ளெக்ஸ் பேனர்களும் வந்த பிறகு வியாபாரத் தில் சுணக்கம் ஏற்பட்டுவிட்டது. திருமணங்களும், அரசியல் நிகழ்ச்சிகளும், மரணங்களும் லித்தோ போஸ்டரில் மட்டுமே வெளிப்பட்ட காலம் போயிருந்தது. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இப்போது வேலை வருகிறது. இதை மட்டுமே நம்பி வாழ்க்கை இல்லை என்பதால் சமாளிக்க முடிகிறது.
பரமேஸ், யதேச்சையாக வாசலைப் பார்த்தார். க்ரில் கதவைப் பிடித்தபடி, ஒருவன் நின்றிருந்தான். முகத்தை முக்கால்வாசி ஆக்ரமித்திருந்த தாடி, வாரப்படாத கேசம், அழுக்கு வேட்டி, பட்டன் போடாத சட்டை, நெஞ்சுப் பகுதியில் கிழிந்திருந்தது. உள்ளே அமர்ந்திருந்த அவரையே பார்த்தபடி... யார்?
பரமேஸ் கவனம் கலைந்தார். அவனும் இமைக்காமல் பரமேஸைப் பார்த்தபடியே இருந்தான். விழிகளில் வியப்பைத் தேக்கியபடி, உட்கார்ந்திருந்த நிலையிலேயே தலையை ஆட்டி யார் என்பதுபோலக் கேட்டார். பதில் இல்லை. ஆனால், பார்வை இவரை நோக்கி வெறித்தபடி. ஏதோ கேட்க வருவதுபோல...
அந்தப் பார்வை பரமேஸைச் சலனப்படுத்தியது. யாசகம் கேட்பவர்போல இல்லை. ஒரு உரிமையோடு தன்னிடம் ஏதோ சொல்ல வருவதுபோல...
பரமேஸ் எழுந்தார். அவனைப் பார்த்தபடி வாசல் நோக்கி நடந்தார். அருகே நெருங்கி... அந்த நபரை உற்றுப் பார்த்தார். சட்டென மூளைக்குள் ஒரு திடுக்கிடல். நினைவு அலைவரிசையில் ஒரு சலனம்.
தன்னை அறியாமல் ''ரெங்கா...'' என்றார்.
அவன் சிரித்தான். வாழ்க்கையில், இனி நடக்கவே நடக்காது என்று மனதுக்குள் முடிந்திருந்த சந்திப்பு. வாரத்தில் ஒரு முறையாவது தன்னை மறந்து யோசிக்கும் ஒரு விஷயம்.
ரெங்கா... நண்பன்!
20 வயதில்... ஒரு தை மாதத்தில்... அப்பா பெயரில் நவீனப்படுத்தப்பட்ட சேரன் லித்தோ பிரஸ் தொடங்கப்பட்டபோது, 500 ரூபாய் முதல் வைத்தவன். அருகில் இருந்து அவரது வளர்ச்சியை ரசித்தவன். தினசரி இரவு பிரஸ் பூட்டும் வரை காத்திருந்து சைக்கிளில் எருத்திக்காரத் தெருவில் இருக்கும் வீட்டுக்கு அழைத்துச் சென்றவன். கால ஓட்டத்தில் சிட்ஃபண்ட் தொடங்கி, இரண்டு வருடத்தில் அமோகமாக வளர்ந்து, பொதுமக்களிடம் இருந்து வசூலித்த டெபாசிட்டில் ஏறிவரும் பவுன் விலையை உத்தேசித்து 500 பவுன் நகை வாங்கி, அதைத் தொலைத்து, வளர்ந்த வேகத்தில் சரிந்து, ஒரு அதிகாலை நேரத்தில் மனைவி, மகனோடு காணாமல்போனவன்.
பல லட்ச ரூபாயைப் பறிகொடுத்த ஊர் மக்கள் திகைத்துத் திண்டாடி, பதைத்து ஒன்று கூடி, அழுது அரற்றி... சிலர் தற்கொலை செய்து... 'சார், உங்க ஃப்ரெண்ட் சிட்ஃபண்ட் ரெங்கா எங்க இருக்கார்னு தெரியுமா?’ நேற்று இரவுகூட துர்கையம்மன் கோயிலில் ஒருவர் கேட்டார்.
அந்த ரெங்கா...
''ரெங்கா?''
தலையாட்டினான். அந்தத் தீர்க்கமான கண்களைத் தவிர, வேறு எந்த உடல் பாகங்களும் அவனை ரெங்கா என்று கூறவில்லை.
''ஏன் வாசல்லயே நிக்கற... உள்ள வா...'' - உரிமை யோடு அழைக்க, தயக்கமாக நிலை வாசல் தாண்டினான். பரமேஸ் சிறிதும் தயக்கமின்றி அவன் கைகளைப் பற்றினார். இதை ரெங்கா எதிர்பார்த்திருக்கவில்லைபோலும். பரமேஸையே சில விநாடிகள் உற்றுப் பார்த்தவன், தோள் குலுங்க வாய்விட்டு அழுதான். கண்களில் நீர் வழிந்தது. உதடு கோணிக்கொண்டு, தன்னிலை மறந்து எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் உடைந்து மனதிலிருந்து அழுதான்.
''ஏய்... ஏண்டா... ஏன் அழற..? உட்காரு...'' என்றபடி கட்டிப்பிடித்து நகர்த்திச் சென்றான்.
நாற்காலியில் அமர்ந்தபடி, ''சொந்த ஊர்ல பரதேசி மாதிரி நிக்கறேன் பார்த்தியா பரமேஸ்...''
பரமேஸ் அமைதியாக இருந்தான்.
''ஊர்ல என்னை யாராவது அடையாளம் கண்டுபிடிச்சிடுவாங்களா?''
சத்தியமா வாய்ப்பு இல்லை. ஆனாலும் அவனது வருகையில் பரமேஸுக்கு ஒரு விதச் சங்கடம் இருந்தது. ஆகவே, அமைதியாக இருந்தான். அதை அவன் புரிந்துகொண்டிருக்க வேண்டும்.
''கௌம்பிடுவேன்... இந்த ஊர... உன்னைப் பார்க்கணும்னு உள்ளுக்குள்ள ஒரு துடிப்பு... அதான் என்னவானாலும் பரவாயில்லேனு வந்துட்டேன் பரமேஸ். ஒரு மணி நேரம் உன் கூட இருக்கலாமா?''
பரமேஸ் அவன் கைகளைப் பற்றினான்.
''தாராளமா... மொதல்ல டீ சாப்பிடலாம்.''
அப்போதுதான் வந்திருந்த ஆபீஸ் பையன் இவன் பேச்சறிந்து டீ சொல்ல ஓடினான். சுவரில் சைஸ் காட்டுவதற்காக ஒட்டப்பட்டிருந்த லித்தோ போஸ்டர்களைப் பார்த்தான் ரெங்கா.
''என்னைத் தேடி இப்பவும் போலீஸ் வருதா?''
''இப்ப இல்ல... ரெண்டு வருஷம் அப்பப்ப வந்தாங்க...''
மறுபடியும் ரெங்கா உடல் குலுங்கினான்.
''உனக்கு ரொம்பக் கஷ்டம் கொடுத்துட்டேன். தப்புப் பண்ணிட்டேன் பரமேஸ்... பெரிய தப்புப் பண்ணிட்டேன். என்னை நம்பித்தான பணம் கட்டினாங்க... ரெண்டு வருஷத்துல 400 மெம்பர். 50 லட்சம் வரைக்கும் சீட்டு பிடிச்சேன். எல்லாம் போயிட்டு... எல்லாம் போயிட்டு...'' என்றவன் கண்களில் நேற்று இரவு அடிக் கப்பட்டிருந்த போஸ்டர்கள் விழுந்தன.
போஸ்டரில் இருந்த போட்டோவையே உற்றுப் பார்த்தான்.
''வேணு டீச்சர் பையன்தானே?''
''ம்...''
''இவர்கூட 25 ஆயிரம் ரூபாய் சீட்டுப் போட்டிருந்தாருடா... எவ்வளவு பேரோட நம்பிக்கையைச் சிதைச்சேன்.''
டீ வந்தது. உள்ளங்கையில் கிளாஸை வைத்த படி குடித்தான்... அந்தப் பழக்கம் இன்னும் மாறாமல்.
''கலை எப்படி இருக்கு?''
''நல்லாருக்கு.''
''பசங்க என்ன படிக்குது?''
''பெரியவன் இன்ஜினீயரிங் முடிச்சிட்டு அமெரிக்கால இருக்கான். பொண்ணு ப்ளஸ் டூ.''
சிரித்தான்.
''உன் வீட்டுல ராசாத்தி எப்படி இருக்காங்க..? எங்க இருக்காங்க... நீ மட்டும்தான் வந்தியா?''- பரமேஸ் கேட்டான்.
கிளாஸைக் கீழே வைத்துவிட்டு, ரெங்கா விரக்தியாகச் சிரித்தான்.
''ராசாத்தி செத்துட்டா... அபிலேஷ§ம் போயிட்டான்''- தழுதழுத்தான்.
பரமேஸுக்குப் பேரதிர்ச்சி.
''என்னடா சொல்ற..?''
''குடும்பத்தையே தொலைச்சுட்டேண்டா... தலைமறைவு வாழ்க்கை அவளுக்குப் பிடிக்கலை. எட்டு ஊரு. எந்த நேரத்துல போலீஸ் வருமோனு பயம். அடையாளம் கண்டுபிடிச்சிடுவாங்களோ... அடிச்சிடுவாங்களோனு ரெண்டு பேருமே தினமும் செத்துச் செத்துப் பொழைச்சோம். கையில பணம் இருந்த வரைக்கும் பிரச்னை இல்லை. பணம் கரைஞ்சதும் அடுத்து என்ன பண்றதுங்கிற கவலையிலயே அவளுக்கு உடம்பு முடியாமப்போச்சு. வைத்தியம் பார்க்கக் கையில் ஒண்ணும் இல்ல. யார்கிட்டயும் உதவி கேட்க முடியாத சூழ்நிலை. ராத்திரி படுத்தவ காலைல பொணமாக் கெடந்தா. யாருக்கும் சொல்ல வழி இல்லை. போலீஸ் எப்பவும் கண்காணிச்சுக்கிட்டே இருக்கற மாதிரி ஒரு உணர்வு. செல்போன்கூட வெச்சுக்கலை. உன்னைக் கண்காணிச்சுட்டு இருப்பாங்களோ... என்னால கஷ்டப்படுவியோனு நெனப்பு. அதான் உனக் குக்கூடச் சொல்லாம... எல்லாம் நாசமாப்போச்சுடா.''
சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.
''சீட்டுப் புடிச்ச பணத்துல கோயம்புத்தூர்லேர்ந்து வாங்கிட்டு வந்த ரெண்டு கிலோ தங்கத்த வர்ற வழியில பறிகொடுத்த உடனே போலீஸுக்குப் போயிருக்கணும். அன்னைக்கு அந்தச் சம்பவம் மட்டும் நடக்கலைன்னா, நான் சரிஞ்சிருக்க மாட்டேன். எல்லாத்தையும்தான் பக்கத்துல இருந்து பார்த்தியே... கணக்குவழக்கு சரியில்லாததால... நம்ப மாட்டாங்களோ... சொந்த ஊர்லயே அடிவாங்கணுமோ... அவமானப்படணுமோனு போலீஸுக்குப் போகப் பயந்துட்டேன். நிதானமா எதிர்காலத்தைப் பத்தி யோசிக்காமச் சபலப்பட்டுட்டேன். தேவையான அளவுக்குக் கையில பணம் இல்லாததால சீட்டு முடிச்சவங்களுக்குப் பணம் கொடுக்க முடியாம ஏதோ ஒரு நெனப்புல புத்தி பிசகி, கம்பெனிப் பணத்தோட ஊரைவிட்டு ஓடி, இப்ப எல்லாத்தையும் இழந்து பழிபாவத்த சுமந்துக்கிட்டு நிக்கிறேன்!''
பரமேஸ் அமைதியாக இருந்தான்.
''நான் காணாப் போனதும் உன்னையும் ரெண்டு நாள் ஸ்டேஷன்லவெச்சு விசாரிச்சதா கேள்விப்பட்டேன்... அழுதேன். எனக்கு வேற வழி தெரியலடா. என்னை மன்னிச்சிரு... உன்னைப் பார்க்கணும்... உன்கூடப் பேசணும்னு துடிச்சிருக்கேன். ஆனா, பொண்டாட்டி குழந்தைகளோடு இருக்கற உனக்கு, என்னால சங்கடம் வந்துடக் கூடாதுனு உறுதியா இருந்தேன். அதனாலதான் இத்தனை வருஷமா உன்னைத் தவிர்த்தேன்!''
வேட்டியால் முகம் துடைத்துக்கொண்டான். 20 வருட சோகத்தை, ஆற்றாமையைத் தன்முன்னே இறக்கிவைக்கிறான் என்பது பரமேஸுக்குப் புரிந்தது. ஆகவே, அமைதியாக இருந்தான்.
''பள்ளிக்கூடம் போன பையன் தண்ணி லாரில அடிபட்டு நசுங்கி செத்துப்போன அன்னைக்குத்தாண்டா நான் பண்ண துரோகத்தோட முழு பாரமும் எனக்குப் புரிஞ்சுச்சு.''
''என்னடா சொல்ற?''
''ஆமாண்டா... எத்தினி பேர் வயித்தெரிச்சல்... சாபம். அவ போன சூட்டோடயே புள்ளையை யும் பறிகொடுத்துட்டேண்டா.''
ஓரத்தில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த போஸ்டர் ஃபைலைப் பார்த்தான். எழுந்து சென்று கீழே அமர்ந்து ஒவ்வொரு போஸ்டராகத் திருப்பினான்.
''இது ராமசாமி வாத்தியார்... செத்துட்டாரா..?''
''இவங்க சரஸ்வதி டெய்லர்...''
''பிரபாகரன் மேஸ்திரி... ஐயோ! இவரு லட்ச ரூபாய் சீட்டுப் போட்டிருந்தாரே... பொண்ணு கல்யாணத்துக்கு எடுக்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்தாரே. என்கிட்ட ஏமாந்த வேதனையிலயே செத்திருப்பாரு''- தலையில் அடித்துக்கொண்டான்.
பரமேஸ் அமைதியாக ரெங்காவைப் பார்த்தபடி இருந்தான்.
''பரமேஸ்... மனசளவுல நான் என்னைக்கோ செத்துப்போயிட்டேன். இப்ப சாவு என்னை நெருங்குது. என்னால உணர முடியுது. பண்ணின துரோகத்தை நெனைக்கறப்ப யாரோ கழுத்தப் புடிச்சு நெரிக்கற மாதிரி இருக்கு. தற்கொலை பண்ணிக்கத் தைரியம் வரலேங்கிறதவிட, செஞ்ச பாவத்த நெனச்சு நெனச்சுக் கரைஞ்சுபோகணும். அதுக்காகவே இருக்கணும்னு தோணுது. அதனால தான் உசுரக் கையில பிடுச்சிட்டு அதுவா போறப்ப போகட்டும்னு இருக்கேன்!''
''கடைசியா நான் பொறந்து, வளர்ந்து, தொழில் செஞ்ச ஊரைப் பார்க்கணும்... உன்னைப் பார்க்கணும். அதுக்காகத்தான் இங்க வந்தேன். பரமேஸ்... எனக்கொரு உதவி செய்வியா?''
''சொல்லுடா...''
''எனக்கு ஒரு ஆட்டோ புடிச்சுக் கொடு... ஊர சுத்தணும்... தெருத்தெருவாப் போகணும். கமலாலயக் கரை சிமென்ட் திட்டுல ஒரு அரை மணி நேரம் தனியா உக்கார்ந்திருக்கணும். நாம படிச்ச பள்ளிக்கூடத்த, காலேஜ, காகிதக்கார மாரியம்மன் கோயில...'' என்றவன் குரல் தழைத்து... ''உன் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறியா... கலையப் பார்க்கணும்.''
பரமேஸ் திடுக்கிட்டு அவனைப் பார்த்தான்.
''என்னைப் பத்தி அதுகிட்ட ஏதும் சொல்லாத பரமேஸ்... ஒரு மூணாம் மனுஷனா பார்த்துட்டுப் போறேன். ஆசையா இருக்குடா... ப்ளீஸ்... அழைச்சுட்டுப் போறியா?''
''ம்..!''
வேலையாட்கள் ஒவ்வொருவராக உள்ளே நுழைய... ரெங்காவைப் பார்த்துத் தலையாட்டினான். இருவரும் வெளியே வந்தார்கள். காரில் ஏறினார்கள்.
''என் கார்லயே நீ விரும்பின இடத்துக்கெல்லாம் போகலாமா?''
ரெங்கா, பரமேஸைப் பார்த்தான்.
''உனக்கு நேரம் இருக்கா... முடியுமா?''
''ம்...''
''அப்ப போகலாம்...''
கார் மெதுவாக நகர்ந்தது.
''மொதல்ல தெற்கு வீதி வழியாப் போ. நாலு வீதியையும் பார்க்கணும்.''
அவன் கூறியபடியே காரைச் செலுத்தினான் பரமேஸ். இன்றைய தினம் வாழ்க்கையில் ஒரு முக்கியமான தினமாக உணர்ந்தான். இனி, சந்திக்கவே மாட்டோம் என்று நினைத்திருந்த நண்பன் ஒருவன்... டிராயர் போட்ட பருவத்தில் இருந்து நெருக்கமாகப் பழகி, கல்லூரி தொடர்ந்து, கட் அடித்து சினிமா பார்த்து, ஊர் சுற்றி, ஒரே பெண்ணை சைட் அடித்து, சண்டை போட்டு, வாலிப கால தாபங் களைப் பகிர்ந்துகொண்டு, சிட்ஃபண்ட் தொடங்கி சட்டென வாழ்க்கையில் உயர்ந்த நண்பன் ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலையில் தவறிழைத்து, இன்று சொந்த ஊரில்... பரதேசியாக... தேடப்படும் குற்றவாளியாக...
வெளிநாடு சென்று பல வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு வந்தவன்போலச் சாலையை வெறித்தபடி வந்தான் ரெங்கா. காலையில் பிரஸ்ஸில் பார்த்த நிலையிலிருந்து இப்போது ரெங்காவின் தோற்றத்தில் ஒரு வித்தியாசம் தெரிந்தது. தன்னைப் பார்த்த திருப்தியில் உணர்வுரீதியாக அவனிடம் மாற்றம் ஏற்பட்டு அது முகத்தில் பிரதிபலிக்கிறதா அல்லது காட்சிப் பிழையா என்பது பரமேஸுக்குப் புரியவில்லை.
மயிலாடுதுறை சாலையில் கார் சிறிது தூரம் ஓடி... சுந்தரம் நகரில் பரமேஸ் வீட்டின் காம்பவுண்டுக்குள் நுழைந்தது. அவன் மனைவியிடம் ஏதும் விளக்கியிருக்கவில்லை. 'நண்பனோடு வருகிறேன்’ என்று மட்டுமே தெரிவித்திருந்தான். கண்டுபிடிப்பாளா? அவனுக்குச் சவாலாக இருந்தது. திருமணமான புதிதில் 'சிஸ்டர்... சிஸ்டர்’ என்று இழைவான். வாரத்துக்கு ஒரு நாள் வீட்டுக்குச் சாப்பிட வந்துவிடுவான்.
கார் சத்தம் கேட்டு வெளியில் வந்த கலை, ரெங்காவின் தோற்றத்தால் சலனப்பட்டு, பரமேஸை வியப்பாகப் பார்த்து பிறகு ரெங்காவைக் கும்பிட்டாள். அரைகுறையாக ஒரு சிரிப்பு.
''வாங்க...''
அவள் நகர... பரமேஸிடம் கிசுகிசுத்தான் ''என்னைத் தெரியல! சிஸ்டர் அப்படியே இருக்காங்கடா''- பரமேஸ் மெலிதாகப் புன்னகைத்தான்.
ரெங்கா பங்களாவைப் பார்வையால் தடவினான். ரசித்து ரசித்துக் கட்டப்பட்ட வீடு அற்புதம் காட்டியது. ஒவ்வொரு சதுர அடியிலும் அழகு உணர்ச்சி மின்னியது. ஏனோ அவனுக்குள் ஒரு மகிழ்ச்சி... திருப்தி.
பரமேஸின் கைகளை நெகிழ்ச்சியாகப் பற்றிக்கொண்டு, உணர்ச்சிப்பூர்வமாக, ''நான் வாழ நினைச்சிருந்த வாழ்க்கைடா... இது மாதிரி ஒரு வீடு கட்டணும்னு எனக்கு அப்பவே ஆசை. இப்ப நீ கட்டியிருக்க... ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குடா... எனக்குள்ள இருந்த கவலைஎல்லாம் போயிடுச்சுடா... நான் தவறவிட்ட வாழ்க்கைய என் நண்பன் வாழறான்...''
கலை, காபி கொண்டுவந்தாள். பரமேஸை ஒரு மாதிரி பார்த்துவிட்டுப் போனாள்.
''ரெங்கா... இரு... மதியம் சாப்பிடலாம்.''
அவன் அவசரமாக மறுத்தான்.
''வேணாம்டா... ரொம்ப நேரம் இருந்துட்டேன். இப்ப நான் பேரளம் போகணும். என் மாமியாரைப் பார்க்கணும். அவங்களைப் பார்த்தும் 20 வருஷமாச்சு. அடையாளம் வெச்சிருப்பாங்களானு தெரியல. ஆனா, பார்க்கணும்''- எழுந்துகொண்டான்.
''சிஸ்டர்... போயிட்டு வர்றேன்...''
கைகுவித்தான். வீட்டைவிட்டு வெளியே வந்தார்கள். சட்டெனக் கண்களில் நீர் கோத்துக்கொள்ள... பரமேஸின் கைகளை அழுத்தமாகப் பற்றிக்கொண்டான்.
''இதுதான் நம்ம கடைசி சந்திப்பு. இதுக்குப் பிறகு சத்தியமா நான் உன்னைப் பார்க்க வாய்ப்பு இல்லை. உன்கூட ஊர் சுத்தினதுல இந்த மண் என்ன மன்னிச்சிட்ட மாதிரி இருக்கு. ஆனா, மனுஷங்க மன்னிக்கணும்டா...''
''என்கிட்ட திருப்பித்தர எதுவுமே இல்ல... ஆனா, இந்த ஊர் மக்கள் என்னால ஏமாற்றப்பட்டவங்க. அவங்களை நான் ஏதோ ஒரு விதத்துல திருப்திப்படுத்தணும்டா!'' - சட்டைப் பையில் இருந்து எதையோ எடுத்து பரமேஸிடம் நீட்டினான்.
அவனது புகைப்படம்.
''என்னோட பழைய போட்டோ. நான் சிட்ஃபண்ட் நடத்துனப்ப எடுத்த போட்டோ. இந்த போட்டோதான் போலீஸ்கிட்டயும் இருக்கு. எனக்கு ஏதாச்சும் நடந்துட்டா அந்தத் தகவல் நிச்சயம் வரும். அப்ப எனக்கு நீ ஒரு உதவி பண்ணணும் பரமேஸ்...''
சலனம் இல்லாமல் பரமேஸ் அவனைப் பார்த்தான்.
''ஆரூர் சிட்ஃபண்ட்ஸ் ரெங்கா அகால மரணம் அடைந்தார். இந்த போட்டோவ பெரிசா வெச்சு நான் பிறந்த தேதி, இறந்த தேதி எல்லாம் போட்டு, போட்டோ பின்னால  எழுதியிருக்கேன். நாற்பத்துச் சொச்சம் வயசுல நான் செத்துப் போனதை இந்த ஊருக்குச் சொல்லணும்டா. பழைய போட்டோவைப் போட்டாதான் என்னை அடையாளம் தெரியும். ஆயிரம் போஸ்டர் அடிச்சு தெருத் தெருவா ஊர்ல உள்ள அத்தினி சுவத்துலயும் ஒட்டு. என்கிட்ட ஏமாந்தவன், நான் ஏமாத்தினவன் எல்லாம் போஸ்டரைப் பார்த்து 'தொலைஞ்சான்’னு ஒரு பெருமூச்சுவிடுவான். அதுதான் என் ஆத்மா சாந்தி அடையறதுக்கான மந்திர வார்த்தை. எனக்காக இதைச் செய்வியா? என்னோட கடைசி ஆசைடா...''
பரமேஸ் அவன் கைகளை நெகிழ்ச்சியாகப் பற்றிக்கொண்டான். இருவரும் தங்களை மறந்த நிலையில் கலங்கிய கண்களோடு நின்றிருந்தார் கள்.
''தென்றல் நகர் பஸ் ஸ்டாப்புல மயிலாடுதுறை போற பஸ் நிக்கும். அதுல ஏறிப் போயிடறேன்... வரட்டுமா...''
கையாட்டிவிட்டு வேகமாக நடந்தவன், ஏதோ நினைத்தபடி திரும்ப வந்து பரமேஸைக் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டுத் திரும்ப நடந்தான். அவன் கண்களில் இருந்து மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, பரமேஸ் வீட்டுக்கு வந்தான். நெஞ்சை அடைப்பது மாதிரி இருந்தது. கனமாக ஒரு துக்கப் பந்து தொண்டைக் குழி வரை வந்துவந்து போனது. ஓவென வாய் விட்டு அழ வேண்டும்போல் இருந்தது. வாசலி லேயே நின்றிருந்தாள் கலை.
''யாருங்க...? பார்க்கப் பரதேசி மாதிரி இருக்காரு... உங்க ஃப்ரெண்டா? என்கிட்ட இதுவரைக்கும் சொன்னதே இல்லையே!''
பரமேஸ் மனைவியை ஓரிரு விநாடிகள் உற்றுப் பார்த்தான்.
''உனக்கு நிஜமாவே அடையாளம் தெரியலையா கலை?''
''சத்தியமா தெரியலைங்க.''
''ரெங்கா.''
கலை முகத்தில் அதிர்ச்சி.
''யாருங்க... நம்ம ரெங்கா அண்ணனா... உசுரோட இருக்காரா? அடையாளமே தெரியலைங்க... ஏன் என்கிட்ட சொல்லலை?''
''நான்கூடக் கஷ்டப்பட்டுதான் அடையாளம் கண்டுபிடிச்சேன். உன்கிட்ட சொல்ல வேணாம்னுட்டான்...''
''பிரஸ்ஸுக்கு வந்தாரா?''
''ம்...''
''அப்படியே பேசித் திருப்பி அனுப்பிட வேண்டியதுதானே. எதுக்கு வீட்டுக்குலாம் அழைச்சுட்டு வர்றீங்க? பைத்தியமா உங்களுக்கு? நம்ம வசதியைப் பார்த்துச் சந்தேகம் வந்து கண்டுபிடிச்சிடப்போறாருங்க.''


நன்றி - விகடன்

1 comments:

”தளிர் சுரேஷ்” said...

சுவையான கதையாக இருந்தாலும் முடிவு ஊகிக்க முடிந்தது!