Wednesday, April 17, 2013

பிரபாகரனை ப.சிதம்பரம் சந்தித்தாரா? - லாயர் அதிரடி பேட்டி

லங்கைத் தமிழர்கள் பிரச்னையில் தங்களுக்கும் ஈடுபாடு உண்டு என்பதைக் காட்டிக் கொள்ள படாதபாடுபடுகிறது காங்கிரஸ். 'கோடம்பாக்கத்தில் இருந்த பிரபா​கரனை நானே கார் ஓட்டிச் சென்று சந்தித்தேன்’ என்று, ப.சிதம்பரம் ஒரு கூட்டத்தில் பேசினார். அந்த நாளில் இருந்து இன்றுவரை இலங்கைப் பிரச்னைகளில் தீவிரமாகச் செயல்பட்டுவரும் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அது​குறித்து விரிவாகப் பதில் அளிக்கிறார். 

''1984-ம் ஆண்டு, கோடம்பாக்கத்தில் தங்கி இருந்த பிரபாகரன், பாலசிங்கத்தை சந்தித்து இலங்கை பிரச்னையில் தீர்வு ஏற்படுத்த முயன்றதாக நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியுள்ளாரே?''

''பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு சம்ப​வத்தை முன்னிட்டு விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், ராகவன், பிளாட் தலைவர் முகுந்தன் ஆகியோர் 1983-ல் கைது​செய்யப்பட்டு சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். பிரபாகரனுக்காக மூத்த வழக்கறிஞர் என்.டி.வானமாமலையும் நானும் ஆஜராகி பெயில் வாங்கிக் கொடுத்தோம். 

முகுந்தன் சென்னையிலும், பிரபாகரன் மதுரையிலும் தங்கி இருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அதன்பிறகு, திருவான்மியூர் காமராஜர் நகரில் சிறிது காலம் பிரபாகரன் தங்கியிருந்தார். பின்னர், அடையாறு இந்திரா நகருக்குக் குடிபெயர்ந்தார்.

1983 இறுதியில் பாலசிங்கம் சென்னை வந்தார். நானும் பேபி சுப்பிரமணியன் என்ற இளங்குமரனும் அவரை இரண்டு வாரங்கள் நியூ உட்லண்ட்ஸ் ஓட்ட​லில் தங்கவைத்தோம். அதன்பிறகு, பெசன்ட்நகர் வேளாங்கன்னி மாதா கோயில் அருகிலுள்ள வீட்டில் பாலசிங்கம் தங்கி இருந்தார். பின் அவர் அடையாறு இந்திரா நகரில் தங்கினார். ஆக, 83-க்குப் பிறகு அவர்கள் கோடம்பாக்கத்தில் தங்கவே இல்லை. 

பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோர் கோடம்பாக்கத்தில் தங்கி இருந்தபோது 1984-ல் சந்தித்து, இலங்கை பிரச்னை குறித்து பேசியதாக நிதி அமைச்சர் சிதம்பரம் கூறுவது வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. 80 தொடக்கத்தில் இருந்து பாண்டி பஜார் சம்பவம் வரை மயிலாப்பூர் சாலைத் தெருவில் நெடுமாறனின் பழைய வீட்டில் என்னுடன் பிரபாகரன் தங்கியிருந்தார்.''


''தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்து வீணாகப் பிரச்னையை உருவாக்குவதாக இலங்கைத் தமிழ் மீனவர்கள் புகார் தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி பேசிவருகிறாரே?''

''தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய மத்திய அமைச்சர் நாராயணசாமி, இலங்​கைக்கு வக்காலத்து வாங்குவது தமிழக மீனவர்கள் நெஞ்சில் வேல் பாய்ச்சுவது போன்றது. அவர், இந்திய அமைச்சரா? இலங்கை அமைச்சரா?

1974-ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த போது, தலைவர் கலைஞர் அதைக் கடுமையாக எதிர்த்தார். கலைஞர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் கலந்துகொண்ட அரங்கநாயகம் அரசுத் தீர்மானத்துக்கு ஆதரவாக இல்லை. பிரதமர் இந்திரா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரண் சிங்கிடம், கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்கக் கூடாது என்றார் கலைஞர். நாடாளுமன்றத்திலும் தி.மு.க. கடுமையாக எதிர்த்தது. அதே கோரிக்கையை வலியுறுத்தி, தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டன. 

ஆனாலும் கச்சத்தீவை மத்திய காங்கிரஸ் அரசு கொடுத்தது. மீன் வலைகளை உலர்த்தவும் அந்தோணியார் கோயிலுக்குச் செல்ல​வும் மீனவர்கள் ஓய்வு எடுக்கவுமான உரிமை, கலைஞரின் போராட்டத்தால் அந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. 

ஆனால், 1976-ம் ஆண்டு நெருக்கடி நிலையில் அந்த மூன்று ஷரத்துக்களையும் காங்கிரஸ் அரசு விட்டுக் கொடுத்து விட்டது. அப்போது, தி.மு.க. ஆட்சியில் இல்லை. கச்சத்தீவை இழந்ததால்​தான் தமிழக மீனவர்கள் இப்போது இத்தனை கொடுமைகளை அனுபவிக்கின்றனர். இதையெல்லாம் தெரிந்துகொண்டு அமைச்சர் நாராயணசாமி பேச வேண்டும்.''

''இலங்கை பிரச்னையில் இந்திய ஆட்சியாளர்கள் பொறுப்புடன் செயல்படவில்லை என்று, இலங்கை பாதுகாப்புத் துறை செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே குற்றம்சாட்டியுள்ளாரே?''

''இந்தியா இல்லை என்றால் இலங்கை இல்லை. சேதுக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற பிரதமர் நேரு அமைச்சரவை 1963-ல் ஒப்புதல் அளித்தது. 'சேதுத்திட்டம் நிறைவேறினால் இலங்கையின் பொருளாதாரமே சீர்குலைந்துவிடும்’ என்று, இலங்கை ஆட்சியாளர்கள் மன்றாடினர். 

அண்டை நாடு என்ற ரீதியில் அந்தத் திட்டத்தை நேரு கைவிட்டார். சாஸ்திரி- ஸ்ரீமாவோ ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய வம்சாவழி தோட்டத் தொழிலாளர்கள் திரும்ப அழைக்கப்பட்டனர். அந்த நடவடிக்கையே தவறு என்று கண்டித்தோம். 

ஆனாலும், இலங்கையின் பொருளாதார சிக்கலைத் தவிர்க்க அந்த முடிவை இந்தியா ஏற்றுக்கொண்டது. இந்திரா காந்தி காலத்தில் இருந்து தொடர்ந்து இன்றளவும் உதவுகிறோம்.
இந்தியாவின் செயல்பாட்டைக் குறை சொல்ல சிங்கள ஆட்சியாளர்களுக்கு அருகதையே கிடையாது.''
- எஸ்.முத்துகிருஷ்ணன்

 நன்றி - ஜூ.வி.

0 comments: