Monday, April 22, 2013

கரூர் உப்பிடமங்கலம் பெண் அர்ச்சகர் சிவராணி பேட்டி

நம்மால் முடியும்!

கருவறையில் பெண்கள்!

பூஜைக்கு வந்த மலரே...

பூஜை செய்யும் உரிமையை பெண்களுக்கும் தர வேண்டும் என வலியுறுத்தும் வித்தியாசமான கிராமம் உப்பிடமங்கலம்... ஆண்கள் மட்டுமே அர்ச்சகர்களாக இருக்கும் இக்காலத்தில் கரூர் உப்பிடமங்கலம் கிராமத்தில் உள்ள கோயில் நிர்வாகியான சிவராணி, தன்னைப் போன்று பல பெண் அர்ச்சகர்களையும் கடவுள் வழிபாட்டில் ஈடுபடுத்துவது ஒரு சிறந்த முன்னுதாரணம்.
மார்கழி காலைப்பொழுது, நகரப் பேருந்தை விட்டிறங்கி கிராமத்து மண்ணில் கால் பதிக்கிறோம். காற்றில் மிதந்து வருகின்றன பன்னிரு திருமுறைப் பாடல் வரிகள். எதிர்ப்படும் நபரிடம் கேட்கிறோம்.
அய்யா... இங்கு பெண்களே அர்ச்சகர்களாக?..." அடியார்க்கு எளியர் கோயிலை அடையாளம் காட்டினார் அவர்.
அடியார்க்கு எளியன் சிற்றம்பலவன்
கொற்றங் குடியார்க்கு எழுதிய கைச்சீட்டு படியின் மிசைப்
பெற்றான் சாம்பானுக்கு பேதமுறத் தீக்கை செய்து
முத்தி கொடுக்க முறை."

இன்பத் தேனாய் நம் செவிகளுக்குள் வந்து பாய்கின்றன. இது ஓலைச்சுவடியில் சிவபெருமானே, தம் கைப்பட எழுதிய பாடல் எனச் சொல்லப்படுகிறது.
கோயிலை வந்தடைகிறோம். உட்பிராகரத்தில் சுவாமியின் வலதுபுறம், சிறிய ஐம்பொன் சிலைகளாக நால்வரான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தருடன், அர்த்தநாரீஸ்வரரும் காட்சி தருகிறார். எதிரே உற்சவ மூர்த்தியாக கிளிசேர் மொழிமங்கை உடனமர் அடியார்க்கு எளியர் (சேயிலைச் செல்வர்) ஐம்பொன் சிலைகளாக அருள்பாலிக்கிறார். அதனைக் கடந்தால் எதிரே தெரிவது கிழக்கு நோக்கிய கருவறை. ஈசன், லிங்கத் திருமேனியாக காட்சியளிக்கிறார். அந்தக் கருவறையில் இடது கையில் மணியும், வலது கையில் விபூதி கற்பூரத் தட்டுமாக ஒரு பெண்!
தமிழில் மந்திரங்களைப் பாடி ஈசனுக்கு அர்ச்சனை செய்கிறார் கோயிலின் பெண் அர்ச்சகரான சிவராணி. இக்கோயிலின் நிர்வாகியும் அவரே.
ஈசன் கருவறையில் ஒரு பெண்ணாகிய நீங்கள் எப்படி?" என்றோம்.

புன்முறுவலுடன் எல்லாம் ஈசன் செயல். நானும் என் கணவரும் சிவனடியார்கள். சிவன் கோயில்களில் உளவாரப் பணி செய்து வருகிறோம். ஒருமுறை எங்கள் ஊரின் அருகிலுள்ள பாழடைந்த சிவன் கோயிலில் உளவார பணி செய்த போது தொடர்ந்து எதிர்ப்புகள் ஏற்படவே பணியைத் தொடர முடியவில்லை. கோவையிலுள்ள மணிவாசக மன்றத்திலுள்ள எங்கள் குருநாதரிடம் கூறி வருந்தினோம்.
சில நாட்களில் குருநாதரிடமிருந்து தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. ‘எங்களிடம் சிவலிங்கம் ஒன்று உள்ளது. எடுத்து வருகிறோம். பிரதிஷ்டை செய்ய இடம் ஏற்பாடு செய்என்றார். எங்கள் வீட்டு முற்றத்திலேயே ஒரு பகுதியைக் கொடுத்தோம். இரவோடு இரவாக வேலை ஆரம்பித்தோம். கருவறைக்குத் தோண்டிய இடத்தில் திருக்கைலாய மலை உச்சியைப் போன்றே ஒரு பாறை இருந்தது. சிவனடியார்கள் பலர் வந்து பார்த்து வியந்தனர். ஒரு ரூபாய்கூட கூலி கொடுக்காமல் கொத்தனார் மற்றும் பெண்ணடியார்களைக் கொண்டுக் கட்டப்பட்ட கோயில் இது. தினமும் நான்கு கால பூஜைகள் உண்டு.
என் கணவர் வேலைக்குச் சென்று விடுவதால் நானே பூஜை செய்கிறேன். முதலில் எதிர்ப்புகள் வந்தன. இங்கு வரும் பெண்களையும் பூஜை செய்ய அனுமதித்தேன். எங்கள் ஈசன் முன் சாதிமத பேதமின்றி அனைவரும் சமம் என்பதை இங்கு நிறுவியுள்ளோம்.
பி. ஆங்கில பட்டதாரியான நான் சைவசித்தாந்தம் இரண்டு வருடம், தமிழில் குடமுழுக்கு வேள்விக்கான படிப்பு, தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் மூலமாக இரண்டு வருட அர்ச்சகர் படிப்பு ஆகியவை கற்று பணியாற்றி வருகிறேன்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் முக்கியமானவர் திருநீலநக்க நாயனார். அவரது மனைவியார் கருவறையில் சிவபூஜைகள் செய்து வழிபட்டு வந்துள்ளார். ஆக, இறைவன் கருவறையில் பெண்கள் இருந்து வழிபடுவது அந்தக் காலத்திலேயே இருந்துள்ளது. இடைக்காலத்தில் ஏதும் இல்லாதிருக்கலாம். பெண்களும் அர்ச்சகப் பணியில் ஈடுபடலாம். அதனை நாங்கள் நிரூபித்துள்ளோம். முழுவதும் தமிழிலேயே மந்திரங்களைப் பாடி வழிபடுவது எங்களின் தனிச்சிறப்பு. மனம், வாக்கு, மெய் (உடல்) மூன்றும் தூய்மையாக இருந்தால் போதும்!" எனச் சொல்கிறார் சிவராணி.


நன்றி - கல்கி

0 comments: