Wednesday, April 10, 2013

எலந்த பயம் ,கலாசலா கலசலா -எல்.ஆர். ஈஸ்வரி பேட்டி @ கல்கி

 

கலகல தொடர் - 1

காதோடு நான் பேசுவேன்...

எல் ஆர் ஈஸ்வரி

இசையுலகில் பொன் விழா கண்ட பிரபல பாடகி எல்.ஆர். ஈஸ்வரி. அதுஎலந்த பயம்ஆகட்டும், ‘கலாசலா கலசலாஆகட்டும்... அவரது தங்கக் குரல் சும்மா 916 கேட்மியமாக மினுக்கும்! அவரைச் சந்தித்து உரையாட, எஸ்.எஸ். ஜெயின் கல்லூரிப் பெண்கள் பூஜா, மீனா, வினு ஆகியோர் ஏகத்துக்கும் ஆர்வம் காட்டவே, இனியதோர் சந்திப்பு நிகழ்ந்தது.
வாங்க செல்லங்களா!" தமக்கே உரிய கணீர்க் குரலில் வரவேற்றார் எல்.ஆர். ஈஸ்வரி.
மேம்... வி கான்ட் பீலிவ் இட்!"
உங்களோட பூந்தமல்லிதான் பாட்டு. சான்ஸே இல்ல! சூப்பர் மேம்!"
கொட்டோ கொட்டென்று கொட்டிய பாராட்டு மழையில், இலேசாக நனைந்து மகிழ்ந்தார் எல்.ஆர். ஈஸ்வரி.
பூஜா: உங்க சொந்த ஊர் எது மேம்?
என்னோட அம்மா வழித் தாத்தாவுக்குச் சொந்த ஊர் பரமக்குடின்னாலும், அப்பாவோட சொந்த ஊர் சென்னை தான். நான் பிறந்து, வளர்ந்து சினிமாவுக்குள் நுழைந்து பேரும் புகழும் பெற்றது எல்லாமே இந்த சென்னை மாநகரத்திலேதான். அப்ப நாங்க புதுப்பேட்டை பகுதியில்தான் வசித்து வந்தோம்.
மீனா: உங்க ஃபேமிலி பத்திச் சொல்லுங்க...

ரொம்பச் சாதாரண குடும்பம்மா. அம்மா ரெஜினா மேரி நிர்மலா. அப்பா ஆண்டனி தேவராஜ். அவர் ஸ்பென்சர்ஸ் அண்ட் கம்பெனியில் டைப்பிங், ஷார்ட் ஹேண்ட் எல்லாம் தெரிந்த ஒரு ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவர் தினமும் சைக்களில் ஆபீஸுக்குப் போய்விட்டு வருவார் என்கிற வரையில் எனக்கு ஞாபகமிருக்கிறது. வேறு எதுவும் நினைவில் இல்லை. காரணம் என்னுடைய ஆறாவது வயதிலேயே அவர் இறந்து விட்டார். அவர் ரொம்ப நாட்கள் நோய்வாய்ப் பட்டிருந்தார். அவருடைய உடம்புக்கு என்ன என்பது கூட எனக்குத் தெரியாது. நினைவில்லை. அவருக்கு ஏழெட்டு ஆபரேஷன்கள் நடந்தன என்றும், டாக்டர் பொம்மையா என்பவர்தான் அவருக்குச் சிகிச்சை அளித்தார்னும் நினைவிருக்கு. அவருக்கு மருத்துவம் பார்ப்பதற்காக என் அம்மா நிறைய செலவு செய்ய வேண்டியிருந்ததாம். வீட்டில் இருக்கும் நகைகளை எல்லாம் வைத்துப் பணம் வாங்கி, அவருக்குச் செலவு செய்ததாக என் அம்மா சொல்வாங்க. அவர் எங்களை விட்டுப் பிரிந்த போது, கடைசியில் என் அம்மாவின் கழுத்தில் மிஞ்சியது ஒரு தாலிக்கயிறு மட்டுமே. எங்கள் சக்திக்கு மீறி, ஏராளமாகச் செலவு செய்தும், அப்பாவைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதேனு அம்மா பல நாள் மனம் வருந்தியதுண்டு. அப்போ எங்க சொந்தக்காரங்க யாரும் உதவ முன்வரலை.
வினு: உங்கக் குடும்பத்துல எத்தனை பேர்?

நான்தான் மூத்த பெண். எனக்கு ஒரு தம்பி. அவர் பெயர் அமல்ராஜ். அடுத்தது ஒரு தங்கை. அவளுக்கு அஞ்சலி என்று பேர். எங்க அப்பா இறந்தபோது என் தம்பிக்கு ஐந்து வயது. என் தங்கைக்கு இரண்டு வயது. நான் எழும்பூரில் இருக்கும் பிரசிடென்ஸி பெண்கள் பள்ளிக்கூடத்துலதான் படிச்சேன். என் தம்பி சிந்தாதிரிப் பேட்டை ஸ்கூலில் படித்தான். எங்கள் அப்பாவின் மறைவுக்குப் பிறகு, எங்கள் குடும்ப வருமானத்துக்குக் கைகொடுத்தது என் அம்மாவின் குரல்வளம்தான்.
பூஜா: , உங்க அம்மாவும் பாடகியா?
எங்க அம்மாவும் ரொம்ப நன்றாகப் பாடுவார். எங்க அப்பா, நோய்வாய்ப்பட்டிருந்தபோது, என் அம்மா, சினிமாவில் பாட வாய்ப்புக் கிடைச்சா அதன் மூலமாகக் கிடைக்கும் வருமானம், குடும்பத்தை நடத்தவும், அப்பாவின் மருத்துவச் செலவுக்கும் உபயோகமாக இருக்கும்னு நினைச்சாங்க. எங்க அப்பாவும் அதற்குச் சம்மதித்தார்.
அப்போ ஜெமினி நிறுவனம் சினிமாவில் மிகப் பிரபலமாக விளங்கியது. அப்போதான்சந்திரலேகாபடத்தை பிரம்மாண்டமான முறையில் எடுத்துக் கொண்டிருந்தார்கள். என் அம்மா, தன்னுடைய பாட்டுத் திறமையைப் பற்றியும், எங்கள் குடும்பச் சூழ்நிலையையும் விளக்கி, ஜெமினி நிறுவனத்துக்கு ஒரு கடிதம் எழுதினாங்க. அம்மாவுக்கு கோரஸ் பாடகி வாய்ப்பு கிடைத்தது.
வினு: நீங்களும் சின்ன வயசுல நல்லாப் பாடுவீங்களா?

ஆமாம்மா! இறைவன் அருளால், எங்க அம்மாவைப் போலவே, எனக்கும் நல்ல குரல்வாய்ச்சுது. பள்ளிக்கூடத்துல என்ன ஒரு நிகழ்ச்சி நடந்தாலும், என்னைப் பாடச் சொல்வாங்க. ஆண்டு விழா போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் போது, ஒரு நிகழ்ச்சிக்கும், இன்னொரு நிகழ்ச்சிக்கும் இடையில் வரும் சில நிமிட இடைவெளியை இட்டு நிரப்ப என் கையில் மைக்கைக் கொடுத்து, மேடை ஏற்றி விடுவாங்க. ஒருநாள் என் சிநேகிதி ஒருத்தி, ஒய்.எம். சி..வில் ஒரு பாட்டுப் போட்டி நடக்கப் போகுது. நீதான் நல்லாப் பாடுவியே! நீயும் அந்தப் போட்டியில் கலந்துக்கிட்டுப் பாடேன்"ன்னு சொன்னாள். முதலில் நான் தயங்கினாலும், அவளுடைய வற்புறுத்தலுக்காக சம்மதித்தேன். ஆனால், பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள நாலணா கட்டணம் செலுத்தணும்னு தெரிஞ்சதும், அந்த அளவுக்கெல்லாம் எனக்கு வசதி இல்லை. ஆளை விடு!"னு ஒதுங்கிட்டேன். ஆனால் என் சிநேகிதி விடவில்லை. அந்த நாலணாவை நான் கட்டறேன். நீ கட்டாயமாய் பாட்டுப் போட்டியில கலந்துக்கணும்"னு அன்புக் கட்டளை போட்டு விட்டாள்.
மீனா: அந்த ஃப்ரெண்ட் பேரு என்ன மேடம்?
கே.பானுமதி. நானும் அவளும் என் தங்கை அஞ்சலியையைக் கூட அழைச்சுக்கிட்டு நேரே ஒய்.எம்.சி..வுக்குப் போய்விட்டோம். அங்கே பல்வேறு பள்ளிக்கூடங்களிலும் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள வந்திருந்தாங்க. கூட வந்திருந்தவர்கள் உற்சாகப்படுத்த, அவர்கள் எல்லோரும் பாட்டுப் பாடி, தங்களைப் போட்டிக்குத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தாங்க. ஆனால், நானோ உள்ளூற நடுங்கிக் கொண்டிருந்தேன். காரணம், அம்மாவிடம் சொல்லாமல், இங்கே வந்து விட்டோமே! வீட்டுக்குப் போனதும் அம்மா என்ன சொல்வாங்களோங்கிற பயம்தான். ஒவ்வொருவராக அழைத்தார்கள். அவர்கள் பாடிவிட்டு இறங்கும் போது, எல்லோரும் கைதட்டினார்கள். என் பெயரைக் கூப்பிட்டவுடன், இலேசான நடுக்கத்தோடு மேடை ஏறினாலும், மைக்கைப் பிடித்தவுடன், என் பயம் காணாமல் போனது.

பூஜா: முதல் போட்டியில என்ன பாட்டு பாடினீங்க மேடம்?
நீ கேலனான்ற கீர்த்தனை பாடினேன்.
மீனா: அப்புறம் என்னாச்சு?
போட்டி முடிஞ்சு ஒய்.எம்.சி..விலிருந்து புறப்பட்டபோது இரவு ஏழுமணிக்கு மேலாயிடுச்சு. என் சிநேகிதியை வீட்டுக்கு அழைத்துக்கிட்டுப் போக வந்திருந்த அவளோட அம்மா, எங்களை பஸ் ஏற்றி விட்டார். வழக்கமா ஸ்கூல் விட்டு நாலரை மணிக்கு வந்துவிடுகிற நாங்கள், அன்றைக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது, மணி எட்டரை. எங்களைப் பார்த்ததும் என் அம்மாவின் கோபம் உச்சத்துக்குப் போனது. எங்கேடி போயிருந்தே? ஏன் இவ்ளோ லேட்?"னு கேட்டு, என்னை அடிக்க ஆரம்பித்தார். என்னை எதுவுமே பேச விடவில்லை. அடி என்றால் அடி, அப்படி பின்னி எடுத்துட்டாங்க. அடிவாங்கின களைப்பில் அப்படியே தூங்கிப் போயிட்டேன்."
க்விக் டேக்!

* உங்க இயற்பெயர் என்ன? லூர்து மேரி ராஜேஸ்வரி
* பாடிய முதல் பக்திப்பாடல்? குன்னக்குடி இசையில்உலகாளும் உமையவளே!’
* இதுவரை எத்தனை பாடல்கள் பாடியிருக்கீங்க? தெரியாது. எண்ணுவதில்லை.
* லேட்டஸ்ட் ஹிட்? பூந்தமல்லிதான்; நான் புஷ்பவல்லிதான்.
* உங்கள் மேடைக் கச்சேரிகளில் நேயர்களால் அதிகமாகக் கேட்கப்படும் விருப்பப்பாடல்? பெரும்பாலும் பக்திப்பாடல்கள்தான்! திரை இசைன்னா, எலந்தப்பழமும்கலாசலா கலசலாவும்!
* ஜெயலலிதாவுக்குப் பாடிய முதல் பாடல்?நீ என்பதென்ன... நான் என்பதென்ன?’ (வெண்ணிற ஆடை)
* இஷ்டதெய்வம்? வேளாங்கன்னி மாதா
* பிடித்த ராகம்? சண்முகப்ரியா, ‘வாராய் என் தோழிஅமைந்தது அதில்தான்.
* பிடித்த உணவு? மீன் வகையில் எல்லாமே!
(கல கலப்போம்...)

 

0 comments: