Wednesday, April 17, 2013

வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் தர்மசங்கடங்கள்


உத்வேகத் தொடர் - 3

சில பாதைகள்... சில பயணங்கள்...

பாரதி பாஸ்கர்                                   

அன்புள்ள பாரதி,

நேற்றைக்கு அம்மாவை சென்னையில் உள்ள உயர்தர வசதிகள் நிறைந்த முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டேன். இன்று இரவு அமெரிக்கா திரும்புகிறேன். முதியோர் இல்லத்திலிருந்து வெளியே வரும் போது அம்மாவின் இரு விழிகளும் என்னைத் துளைப்பதாய் உணர்ந்தேன். பிரமைதான். உறவுக்காரர்களிடம் கேட்டுப் பார்த்தேன். ‘எங்களுக்கே வயசாயிடுச்சு. உன் அம்மாவை நாங்க எப்படிப் பார்த்துக்க முடியும்?’ என்று மறுத்து விட்டார்கள். அம்மாவைப் பராமரிக்க அமெரிக்காவில் வழியில்லை. நானும், மாலுவும் வேலைக்குப் போய்விட்டால், நாள் முழுதும் வேலைக்கு ஆள் போட்டுப் பார்த்துக் கொள்வது அமெரிக்க வாழ்க்கையில் சாத்தியமேயில்லை. மாலுவிடம் கெஞ்சிப் பார்த்து விட்டேன். ‘இந்தியாவுக்குத் திரும்பிப் போயிடலாமே...’ என்று.


ஜெய், உனக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா?’ என்று என் நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள். ‘சின்னவன் இப்போதான் பாஸ்கெட் பால் டீமில் செலக்ட் ஆகியிருக்கான். பெரியவன் அடுத்த வருஷம் காலேஜில் சேரணும். இப்பப் போய் இந்தியா போறதா? இங்குள்ள வாய்ப்பு, வசதி அங்கே கிடைக்குமா?’ என்கிறாள்.


 எனக்கே கூட, இருபது வருஷ அமெரிக்க வாசத்திற்குப் பிறகு இந்தியா திரும்ப பயம் தான். அம்மாவை என்னதான் செய்வது? வேறு வழியில்லாமல்தான் இந்த முடிவு. எல்லாம் விசாரித்து விட்டேன். சுத்தமான இடம். பார்த்துக் கொள்ள ஆட்கள் போட்டிருக்கிறார்கள். சேர்த்து விட்டேன். சிறு வயதில் யார் அம்மா மடியில் படுப்பது என்பதற்கு நானும், என் தங்கையும் கடும் சண்டைகள் போடுவோம்.


 இப்போதும் சண்டைதான் எங்களுக்குள், யார் அம்மாவை வைத்துக் கொள்வது என்பதில். கடைசியில் முதியோர் இல்லம்தான் வென்றது. இல்லத்தின் முகவரியை இணைத்திருக்கிறேன். எப்போதாவது நேரம் இருந்தால் போய்ப் பார்த்துவிட்டு வா.


இப்படிக்கு ஜெய்.

ஜெய்கள் பெருகிவிட்ட ஒரு தலைமுறையின் தலைவாசலில் நாம். வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கிறோமோ இல்லையோ வீட்டுக்கு ஒரு பிள்ளை வெளிநாட்டுக் கனவுகளோடு வளர்கிறது. வளர்ந்து வெளிநாடு போன பின் பெற்றோரை விட்டு விட முடியாமலும், அன்னிய மண் தரும் சொர்க்கங்களை இழக்க முடியாமலும், அங்கேயும் இங்கேயுமாய் அல்லல் படும் பிள்ளைகளின் வாழ்வே கப்பல் பறவை வாழ்வல்லவா?

துறைமுகத்தில் நின்ற கப்பல் ஒன்றில் சிதறிக் கிடந்த தானியங்களைக் கொத்தித் தின்ற பறவை ஒன்று, கப்பல் புறப்பட்டதைக் கவனிக்கவில்லை. பாதிக் கடலுள் கப்பல் போனபின், பறவை கரையை நோக்கிக் கதறிப் பறந்தது. கரை கண்ணுக்குப் படாமல் கப்பலுக்கு மறுபடி வந்தது. கப்பலில் இருக்க முடியாமல் மறுபடியும் கரை நோக்கிப் பறந்தது. அங்கேயும் பிடிக்காமல், இங்கேயும் வர முடியாமல் அல்லல்படும் கப்பல் பறவை வாழ்க்கைதான் பல என்.ஆர்.. பிள்ளைகளின் வாழ்க்கைச் சுருக்கமா?


என்.ஆர்.. மகன்களின் பக்கத்து நியாயங்களும் வலுவானவையே. ‘தண்ணீரும் பாசமும் எப்போதும் கீழ் நோக்கித்தான் பாயும்என்கிறது ஒரு சீனப் பழமொழி. வசதியான வாழ்க்கைச் சூழலுக்குப் பழகிவிட்ட தம் பிள்ளைகளை அங்கிருந்து புலம் பெயர்த்து வேறு மண்ணில் நட அஞ்சுகிறது ஒரு வெளிநாட்டுவாழ் தந்தையின் உள்ளம்.


 அந்தக் கட்டத்தில் அவர்கள் தங்களை ஒரு மகனாக அல்ல - தந்தையாக மட்டுமே உணருகிறார்கள். எங்கெங்கும் பரவியிருக்கும் லஞ்சம், குற்றங்கள், வேலைத் தளங்களில் உள்ள கூழைக் கும்பிடு போடும் மனோபாவம் இவையெல்லாம் இங்கேயே வாழ்வோருக்குப் பழகி விடுகிறது -‘அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பாஎன்பது போல் திரும்பி வர நினைப்போருக்கு அதிர்ச்சி அளிக்கிறது இச்சூழல். இவ்வளவு கஷ்டப்பட்டு அம்மாவுக்காகவோ, அப்பாவுக்காகவோ திரும்பி வந்தாலும் அவர்கள் எத்தனை நாள் இருக்கப் போகிறார்கள் என்ற யதார்த்தத்தை நினைவுபடுத்துகிறது அவர்களது அறிவு.


இப்படிப்பட்ட மகன்களால் கொண்டு விடப்பட்டோ அல்லது தானே விரும்பியோ, தத்தம் வசதிகளுக்கேற்ற முதியோர் இல்லங்களில் வாழ வயதானவர்கள் முன்வருவது மிக மெதுவாகத் தொடங்கியிருக்கும் ஒரு சமூக மாற்றமே. நாம் எத்தனை அஞ்சினாலும் இவை வரும் நாட்களில் பெருகப் போவது காலத்தின் மாற்ற முடியாத கட்டளை. யாருமே முதியோர் இல்லங்களைப் பற்றி கனவிலும் நினைக்காத ஒரு காலகட்டத்திலேயே ஆதரவற்ற முதியோருக்காகவிஷ்ராந்திஎன்ற அமைப்பைத் தொடங்கிய சாவித்ரி வைத்தி ஒரு முன் ஏர் சிந்தனையாளர்.


 ‘முதியோர் இல்லமா? நம் புண்ணிய பாரதத்திலா? அப்பா, அம்மாவைக் காப்பாற்றுவது பிள்ளைகளின் தருமமான நம் நாட்டில் இதெல்லாம் கூடவே கூடாதுஎன்று குதித்த பலரின் எதிர்ப்பையும் தாண்டி, ‘அப்படி கவனிக்கப்படாத அல்லது கவனிக்க யாருமில்லாத முதியோர்கள் எங்கே போவார்கள்?’ என்ற பதிலோடு தொடங்கப் பட்டது விஷ்ராந்தி முதியோர் இல்லம்.


விஷ்ராந்தியின் பயணம் திருமதி சாவித்திரி அவர்களின் ஆன்ம சமர்ப்பணத்தின் பதிவு. அங்கே முதல் மரணம் நிகழ்ந்த போது, இறந்த பாட்டியின் மகன், ‘வர்றேன், வந்துகிட்டே இருக்கேன்என்கிறானே தவிர வரவேயில்லை. சடலத்துடன் மயானத்துக்குப் போய்க் காத்திருக்கிறார் சாவித்திரி. மயானப் பணியாளர் அந்திசாய்வதைக் காட்டுகிறார். ‘எடுத்துட்டு போயி நாளைக்கி வாம்மாஎன்கிறார். எங்கே எடுத்துப் போவது? என்ன செய்வது? பார்த்தார் சாவித்திரி. தானே அந்தப் பாட்டிக்கான இறுதிச் சடங்கைச் செய்து முடித்தார்.


அவரது மனத்தில் சிறு குழப்பம். ‘இந்தப் பணி பெண்களுக்கு விதிக்கப்பட்ட பணியில்லையே. காலம் காலமாக ஆணுக்கான கர்மா வாயிற்றே... தவறு செய்து விட்டோமோ?’ ஒரு சின்னக் குற்ற உணர்வு. காஞ்சி மஹா பெரியவரிடம் போனார். நடந்ததைச் சொன்னார். ‘இது சரியா தப்பான்னு தெரியலஎன்றார். கண் மூடி அரை நொடி யோசித்த அந்தக் கருணைத் தெய்வம், கை தூக்கி ஆசி வழங்கியது. இது ஓர் அசுவமேத யாகம் நடத்திய புண்ணியம் என்கிற செய்தி அந்த ஆசியில் இருந்தது. சாவித்திரி அன்றிலிருந்து இப்போது வரை நூறு நூறு அசுவமேத யாகங்களை நடத்தி விட்டார்.


ஒருமுறை அவரது கைகளைப் பற்றி என் கைக்குள் கொஞ்ச நேரம் வைத்துக் கொண்டேன். தீபாராதனையின் எரியும் சுடரைத் தொட்டு ஒற்றிக் கொண்ட கதகதப்பையும் பவித்திரத்தையும் அந்தக் கைகளில் உணர்ந்தேன். எத்தனையோ முதிய உயிர்களின் காலத்தை முன்னெடுத்துச் சென்ற கையல்லவா அது?

கிட்டத்தட்ட நாலு வாரங்கள் சென்ற பிறகே நான் ஜெய்யின் அம்மாவைப் போய்ப் பார்க்க முடிந்தது. என் மகன் இங்க கொண்டு விட்ட அன்னைக்கு ராத்திரி ரொம்ப அழுகையா வந்தது. நான் கல்யாணம் ஆகி முதல் முதல்ல வந்த வீடு, ஜெய் பிறந்த வீடு, அவன் அப்பா கட்டிய வீடு எல்லாம் ஞாபகம் வந்தது. இப்ப எந்த வீடுமே இல்லாம ஓல்ட் ஏஜ் ஹோம்ல இருக்கேனேங்கற துக்கம் அழுத்தியது. இருமிக்கிட்டே இருந்தேன்.



 பக்கத்து அறையில ஜலஜான்னு இருக்காங்க. அவங்க மகன் ஆஸ்திரேலியாவுல இருக்கான். அவங்கவெந்நீர் வேணுமா?’ன்னு கேட்டு ஃபிளாஸ்க்கிலேருந்து கொடுத்தாங்க. இப்போ அவங்க ஃபிரெண்ட் ஆயிட்டாங்க. கொஞ்சம் பழகியிருக்கு" என்றார். அவரை ஒரு தாதி சக்கர நாற்காலியில் உட்கார வைத்து அழைத்துப் போக ஆயத்தம் செய்தார். ஜலஜா நட்ட செம்பருத்திச் செடியில பூ பூத்திருக்காம். அதைப் பார்க்கத்தான் போறேன். நீயும் வர்றியா?" என்றார்.

என் நட்சத்திரங்களை வானில்
வைத்தேன்
என் ஜலத்தை ஆற்றில் விட்டேன்
இனி தன் இலையை தானே வியக்கும்
ஏதோ ஒரு மரத்தின் நிழலில்
ஊஞ்சலாடுவேன்
என் வேலைதான் முடிந்ததே

என்ற தேவதச்சனின் கவிதை என் நினைவுக்கு வந்தது.

பேரப் பிள்ளைகள் சூழ வாழும் வாழ்வோ, முதியோர் இல்ல நண்பர்களுடன் தள்ளும் பொழுதோ - எது விதிக்கப்பட்டதோ அதை ஏற்று மீதமிருக்கும் ருசிகளுக்காக, பார்க்க வேண்டிய மலர்களுக்காக, சிந்த வேண்டிய புன்னகைக்காக, வடிக்க வேண்டிய கண்ணீருக்காக - வாழ்வை அதன் தீரத்துடனும் அன்புடனும் எதிர்கொள்ளும் இந்த முதுமைக்கு முன் கைகுவிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

(பயணம் தொடரும்)

நன்றி - கல்கி 

1 comments:

Unknown said...

very painful but meaning ful post