Saturday, March 02, 2013

சில்க் ஸ்மிதா VS பத்மா சுப்ரமணியம் ( விரக ராட்டினம் , பரத நாட்டியம்)

அதிகாலை 6 மணி இருக்கும். டாக்டர் பத்மா சுப்ரமணியம் அடையாறில் உள்ள தன்னுடைய இல்லத்தின் நடனக்கூடத்தில் நான்கைந்து மாணவிகளுக்கு, 'மன்னி’ சியாமளா பாலகிருஷ்ணன் பாட - அண்ணா பாலகிருஷ் ணன் கண்களில் ஆனந்த பாஷ்யம் பொங்க நிற்க, கர்ம சிரத்தையோடு தில்லானா கிளாஸ் எடுத்துக்கொண்டு இருந்தார்.


 திடீர் என்று ஒரு ஹாரன் சத்தம்... வாசலில் ஒரு கார் குலுக்கி மினுக்கித் தளுக்கியபடி நின்றது... அதில் இருந்து சிலுக்கு இறங்கினார். ஆவேசமாகத் தில்லானா ஆடிக்கொண்டு இருந்த மாணவிகளில் ஒருத்தி, ''டீ... அங்க பாரு, சிலுக்குடி!'' என்று அலற, மற்ற மாணவிகளும் ''ஹைய்யா...'' என்று பெருங்கூச்சலுடன் சிலுக்கை நோக்கி ஓட... பத்மா எல்லோரையும் கம்ஸவதம் செய்யும் கிருஷ்ணனின் கோப அபிநயத்தில் முறைத்ததுதான் ஆரம்பம்.


பத்மா சுப்ரமணியம்: (நாட்டிய சாஸ்திர முறைப்படி நிதானமாகத் தலையை இருபுறமும் லலிதமாக அசைத்து, இரு கரம் கூப்பி நமஸ்கரித்து) ''வாங்கோ... வாங்கோ... ரியலி உங்களோட இந்தத் திடீர்ப் பிரவேசம் ஷாக்கிங் சர்ப்ரைஸ் டு மீ! உக்காந்துக்கோங்கோ...

சிலுக்கு: ''மன்னிச்சுக்கணும்... உங்க டான்ஸ் கிளாஸின்போது பாதில நுழைஞ்சு டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.''

பத்மா: ''நோ... நோ... தில்லானா முடியற நேரத்துலதான் நீங்க வந்தேள். உங்களைப் புடைவையில பார்க்கிறது ஆச்சர்யமா இருக்கு. சின்னப் பையன் மாதிரி அரை நிஜார் போட்டுண்டுதான் உங்களை சினிமாவில் பார்த்திருக்கேன். புடைவையை யார் கட்டிவிட்டது?''

சிலுக்கு: ''நானே கட்டிண்டதுதான். வேணா, இங்கேயே மறுபடியும் கட்டிக் காண்பிக்கட்டா?''

பத்மா: ''ஐயையோ! வேணாம். நான் நம்பறேன். இப்போதான் அனுராதா உங்க இடத்தைப் புடிச்சாச்சே... புடைவை கட்டிக்க நிறையத்தான் நேரம் இருக்கும்.'


சிலுக்கு: ''இதெல்லாம் ரொம்ப டெம்பரரி... அனுராதா என்ன ஆடறா? யாரோ சவுக்கால அடிக்கறா மாதிரி மூஞ்சில ஒரே எக்ஸ்பிரஷன்... அதான் டிஸ்கோ சாந்தி கிடுகிடுனு மேலே வந்துட்டு இருக்கு.'

'
பத்மா: ''டிஸ்கோவா?''

சிலுக்கு: (தமாஷாக) ''டிஸ்கோ தெரியாதா..? பள்ளிக்கூடத்துல டிரில் மாஸ்டர் கை, காலைத் தூக்கச் சொல்வார்ல... அதோட கொஞ்சம் நம்ம ஊர் டப்பாங்குத்தை மிக்ஸ் பண்ணிடுங்க. அப்புறம் முதுகுல ஒரு நண்டை விட்டுடுங்க... பேக்ரவுண்ட்ல டிரம்ஸ், கிடார்னு போட்டுத் தூள் கிளப்புங்க... இதுதான் டிஸ்கோ!''

பத்மா: ''இப்போ நீங்க சினிமாவுல ஆடறீங்களே... அது எந்த வகை டான்ஸ்ல சேர்த்தி?''

சிலுக்கு: ''நாங்க ஆடற டான்ஸ்ல பரதம் இருக்கு... கதக் இருக்கு... அப்புறம் கதகளி, மணிப்புரி, குச்சிப்புடி, ஒடிசி எல்லாம் ஒளிஞ்சுண்டு இருக்கும். கலைக் கண்ணோட பார்த்தா, எங்க டான்ஸ்ல 'பாவம்’ புரியும் உங்களுக்கு.''


பத்மா: ''ஐயோ, பாவம்! இந்த டான்ஸ்ல குங்ஃபூ, கராத்தே இதெல்லாம்தான் இல்லியாக்கும்?! நல்ல காலம்! சரி, அதை விடுங்க. நீங்க வந்த விஷயம் என்ன... தெரிஞ்சுக்கலாமா?''

சிலுக்கு: ''மஞ்சு பார்கவி என்னை மாதிரிதான் இருந்தாங்க. 'சங்கராபரணம்’ வந்த பிறகு, அவங்க அந்தஸ்தே உசந்துடுத்து. இப்ப 'கிங்கராசரணம்’னு ஒரு கோடி ரூபாய்ல படம் எடுக்கறாங்க. அதுல சான்ஸ் வரும் போலிருக்கு. அதைத் தவிர, அனுராதா கொட்டத்தை அடக்கிறதுக்காக, தமிழ்ல கல்கியோட 'சிவகாமியின் சபதம்’ கதையைப் படமா எடுக்கலாம்னு இருக்கேன். அதுல நான் சிவகாமியா நடிக்கலாம்னு இருக்கேன்.''

பத்மா: ''சிவகாமி பரதநாட்டியம் ஆடற ரோல்... உங்களால முடியுமா?''

சிலுக்கு: ''அதுக்குத்தான் உங்ககிட்ட வந்தி ருக்கேன்... நீங்கதான் எனக்கு சாஸ்திரிகள் நடனம் சொல்லித்தரணும்.''

பத்மா: ''சாஸ்திரிகள் நடனமா..?''

சிலுக்கு: ''அதாங்க... கர்னாடக சங்கீதம் மாதிரி.''

பத்மா: ''கஷ்டம், சாஸ்திரிய நடனம் - சாஸ்திரிகள் நடனமில்லை.''

சிலுக்கு: ''ஏதோ ஒண்ணு... நீங்கதான் எனக்கு எப்படியாவது பரதநாட்டியம் சொல்லித் தரணும். நான் அந்தப் படத்துல சின்னாளம் பட்டுப் புடவை கட்டிண்டு சிவகாமியா ஆடணும். சிலுக்கு ஸ்மிதாங்கற இமேஜ் போய், சின்னாளம்பட்டு சிவகாமி ஸ்மிதான்னு பேர் வாங்கணும்.''

பத்மா: ''நீங்க நெனைக்கற மாதிரி பரதநாட்டியம் சுலபமான விஷயம் இல்லை. சின்ன வயசுலயே கத்துக்க ஆரம்பிச்சாதான் வரும்.''

சிலுக்கு: ''சின்ன வயசுன்னா..?''

பத்மா: ''அட்லீஸ்ட் பதினஞ்சு, பதினாறு வயசுக்குள்ளேயாவது ஆரம்பிச்சுடணும்.''

சிலுக்கு: ''எனக்குப் பதினேழு வயசுதானே ஆறது.

''
பத்மா: ''பதினேழா..?''

(அப்போது அபஸ்வரம் ராம்ஜி நுழைந்து...)
ராம்ஜி: ''எத்தனாவது பதினேழு..?''

சிலுக்கு: ''ஹாய் ராம்ஜி!''
பத்மா: ''என் தம்பி ராம்ஜியை உங்களுக்குத் தெரியுமா?''

சிலுக்கு: ''அவரோட 'உருவங்கள் மாறலாம்’ படத்துல டான்ஸ் ஆடியிருக்கேன்.''

பத்மா: ''ஷில்க் ஷ்மிதா... நீ...''

சிலுக்கு: ''ஒரு நிமிஷம்... எம் பேர் சில்க் ஸ்மிதா... ஏன் அப்பலேர்ந்து ஷில்க் ஷ்மிதானு எம் பேரைக் கொழைக்கறீங்க. 'ச’ 'சி’ இதெல்லாம் வராதா? இல்லை, இப்ப இப்படிப் பேசறதுதான் ஃபேஷனா? தயவுசெஞ்சு அப்படிக் கூப்பிடா தீங்க. முடியலேன்னா... காட்டன் கவிதா, பாலியஸ்டர் பபிதானு கூப்பிடுங்க. எனக்கு ஆட்சேபணை இல்லை. வாய்ல 'மாவை’ வெச்சுண்டு பேசறா மாதிரி இருக்கு.

''
பத்மா: (கிருஷ்ணசாமியைக் காட்டி...) ''இவர் தான் என்னோட இன்னொரு அண்ணா.''

கிருஷ்ணசாமி: ''ஹலோ... நான்தான் கிருஷ்ண சாமி. டைரக்டர், புரொடியூஸர்.''

சிலுக்கு: ''இதுக்கு முன்னே நீங்க என்ன படம் எடுத்தீங்க?''

கிருஷ்: ''இண்டஸ் வேலி டு இந்திரா காந்தி.''

சிலுக்கு: ''அதுல ஏன் நீங்க என்னை ஆடக் கூப்பிடல..? அதுல கிளப் டான்ஸே இல்லியா?''

ராம்ஜி: ''அதுல காபி கிளப் டான்ஸ்கூடக் கிடையாது.''

பத்மா: ''இப்ப இன்னொரு டாக்குமென்டரி எடுக்க பர்மிஷன் வாங்கியிருக்கார்... பேர் என்ன அண்ணா?''

கிருஷ்: ''ராமேஸ்வரம் டு ராஜீவ் காந்தி... ராமேஸ்வரம் கோயில்ல பத்மா டான்ஸோட படம் ஆரம்பிச்சு, ஒவ்வொரு கோயிலா டான்ஸ் ஆடிண்டே போய்... கடைசில டெல்லி ராஜ் காட்ல மகாத்மா காந்தி சமாதியில ஆடறா... ராஜீவ் காந்தி அதைப் பார்க்கறார்!''

பத்மா: ''இந்த டாக்குமென்டரியோட பர்ப்பஸ் என்னன்னா, இந்தியாவுல உள்ள எல்லாக் கோயிலையும் காட்டறதுதான். வெறுமனே காட்டுறதுக்குப் பதிலா, என் டான் ஸோட காட்டினா கொஞ்சம் அலுப்புத்தட்டாம இருக்கும்.''

சிலுக்கு: ''உங்கப்பா டைரக்டரா இருந்தும் நீங்க சினிமாவுல நடிக்கல. ஆச்சர்யமா இருக்கே.''

பத்மா: (சோகத்துடன்) ''அப்பா அந்தக் காலத்துலேன்னா டைரக்டரா இருந்தாரு.''

சிலுக்கு: ''வேற சினிமாக்காரங்க யாருமே உங்களை நடிக்கக் கூப்பிடலியா?''

பத்மா: ''ஹூம்... கூப்பிடலேம்மா! அதுக்குத் தனி முகராசி வேணும்.''

சிலுக்கு: ''டைரக்டர் பொண்ணா இருந்து சினிமால நடிக்க சான்ஸ் இல்லாம இத்தனை நாள் பொழுது எப்படித் தள்ளினீங்க... ஆச்சர்யமா இருக்கு.''

பத்மா: (எரிச்சலுடன்) ''பொழுது தள்றதுக்கு ரொம்பக் கஷ்டப்பட்டேன். அதனாலதான் காலேஜ்ல படிச்சேன். டிகிரி வாங்கினேன்... டான்ஸ் டெமான்ஸ்டிரேஷன்லாம் பண்றேன். டாக்டர் பட்டம் வாங்கினேன்.''

சிலுக்கு: (கொஞ்சலாக) ''நீங்க டாக்டரா அக்கா? அட! தெரியவே தெரியாதே. இனிமே, என்னோட ஃபேமிலி டாக்டர் நீங்கதான். எனக்கு இடுப்புகிட்ட அடிக்கடி வலி எடுக்குது அக்கா.''

பத்மா: ''இல்லேம்மா... நான் மெடிக்கல் டாக்டர் இல்லை. சிதம்பரம் நடராஜர் கோயில்ல 108 கரணங்கள் இருக்கு... அதை ஆராய்ச்சி பண்ணிப் பட்டம் வாங்கினேன்.''

சிலுக்கு: ''108 கரணங்களா..? அப்ப டீன்னா என்ன... கிராமத்துல கர்ணம்னு ஒருத்தர் இருப்பாரு... அது தெரியும். அப்புறம் தோப்புக்கரணம் தெரியும்.''

பத்மா: (வெண்ணெய் திருடும் கிருஷ்ண னைக் கோபத்துடன் பார்க்கும் பாவத்தில்) ''நீங்க சிதம்பரம் நடராஜப் பெருமான் கோயிலுக்குக் கட்டாயம் போகணும். ஆடல் போஸ் 108 செதுக்கியிருக்காங்க. அதிலே வராத டான்ஸ் முத்திரையே கிடையாது. அதுதான் கரணங்கள். அதைப் பத்திப் பேசினாலே எனக்கு உற்சாகம் வந்துடும். என் கால், கைகளும் ஆடத் துடிக்கும். நாட்டிய சாஸ்திரமே நடராஜப் பெருமானின் காலடியில் தோன்றியது தானே?''

சிலுக்கு: ''உங்களை ஒண்ணு கேக்கணும்... நீங்க ஏன் ஸோலோவா ஆடறீங்க..? டி.வி-ல பார்த்தேன்... 'கிருஷ்ணாய துப்யம் நம’, 'யசோதை கிருஷ்ணர், கம்சன், பலராமன், ஆடு, மாடு எல்லாத்தையும் நீங்களே ஆடிக் காட்டறீங்களே... நல்லாருக்கு... ஆனா, மிமிக்ரி மாதிரி இருக்கு.''

பத்மா: ''நான் பப்ளிசிட்டிக்காக ஆடலை. ஆத்மார்த்தமா எனக்காக ஆடறேன். அதான் ஸோலோ... கும்பலைச் சேத்துண்டு ஆடறது எனக்குப் பிடிக்காது.''

சிலுக்கு: ''என்ன இப்படிச் சொல்றீங்க..? டி.வி-ல ஒரு ராமாயண நாட்டிய நாடகம் பார்த்தேன். நல்லா இருந்துச்சு. இந்த கோவாபரேடிவ் சொஸைட்டி மாணவிகள்லாம் சேர்ந்து ஆடினாங்க.''

பத்மா: ''கஷ்டம்... கஷ்டம்... அது தியஸாபிகல் சொஸைட்டி. அதை நடத்தறது ருக்மிணி அருண்டேல்!''

சிலுக்கு: ''சரி... நம்ம விஷயத்துக்கு வருவோம். இந்தாங்க, 101 ரூபா அட்வான்ஸ்.''

பத்மா: ''அவசரப்படாதீங்க... மொதல்ல பரதம்னா என்னன்னு தெரிஞ்சுக்குங்க. பரதம்... இதுல 'ர’வை எடுத்துட்டா பதம். 'பர’வை எடுத்தா தம். தம் பிடிச்சுப் பதம் போடணும். அப்புறம் பரதத்துல 'ப’வை எடுத்துட்டா ரதம். அழகான ரதம் ஆடி அசையறா மாதிரி இருக்கணும். கடைசியா, பரதத்துல 'த’வை எடுத்துட்டா... 'பரம்’ அதாவது பரம்பொருள். பரம்பொருளோட ஐக்கியமாறதுதான் பரதத்தோட இலக்கணம்.'' (என்று சொல்லிக்கொண்டே திரும்ப, அங்கு சிலுக்கு இல்லையென்று அறிந்து...)

பத்மா: ''அட, ராம்ஜி... எங்கே சிலுக்கு?''

சியாமளா: ''101 ரூபாய் அட்வான்ஸைக் குடுத்துட்டு அவ அப்பவே போயிட்டா'' (சிலுக்கை வாசல் வரை அனுப்பிவிட்டுத் திரும்பி வருகிறார் கிருஷ்ணஸ்வாமி).

பத்மா: ''என்ன விஷயம் அண்ணா?''

கிருஷ்ணஸ்வாமி: ''ஒண்ணுமில்லே... 'சிக்கிம்லேருந்து சிலுக்கு வரை’னு ஒரு டாக்குமென்டரி எடுக்கறதைப் பத்தி சிலுக்குகிட்டே பேசிட்டு வரேன்... ஓகே. வாங்கியாச்சு!''

பத்மா: ''எனக்கென்னவோ இப்ப 'அஜந்தாவிலிருந்து அனுராதா வரை’னு டாக்குமென்டரி எடுத்துக்கிட்டு இருக் கிறதா சொன்னியே... அதுவே நல்லா ஒர்க் அவுட் ஆகும்னு தோணுது.''


('வாங்க சௌக்கியமா?' என்ற தலைப்பில், எதிர் துருவப் பிரபலங்கள் இருவர் சந்தித்தால் என்ன பேசிக்கொள்வார்கள் என்ற கற்பனைத் தொடரின் ஒரு அத்தியாயம் இது.)


நன்றி - விகடன்