Thursday, March 21, 2013

பரதேசி - சினிமா விமர்சனம் (விகடன் விமர்சனக் குழு)

ரசித்து ருசிக்கும் ஒரு குவளைத் தேநீரில், எவ்வளவு எளிய உயிர்களின் ரத்தம் கலந்திருக்கிறது என்பதை உணர்த்தி அதிரவைக்கிறான் 'பரதேசி’!


 1939-ல் நடக்கிறது கதை. சாலூர் கிராமத்தைச் சேர்ந்த ஒட்டுப்பொறுக்கி அதர்வா, தண்டோரா அடிக்கிறவர். அதே ஊரில் வாழும் வேதிகாவோடு காதல். ஊரே பஞ்சத்தால் தவிக்க, அந்த மக்களைத் தேயிலைத் தோட்ட வேலைக்கு அழைக்கிறான் கங்காணி. அவன் பேராசை வார்த்தைகளை நம்பிப் போகிறது ஏழை ஜனம். அங்கம்மாவை ஊரில் விட்டுவிட்டு ஒட்டுப்பொறுக்கியும் போகிறான். அங்கே போன பிறகுதான் அது எவ்வளவு பெரிய நரகக் குழி என்பது தெரிகிறது. 


அடி, உதை, அட்டைக் கடி, சுளீர் குளிர், பாலியல் தொந்தரவு, உழைப்புச் சுரண்டல், நயவஞ்சகம், கொள்ளை நோய் எனக் கொத்தடிமைகளில் ஒருவனாகக் கிடக்கும் ஒட்டுப்பொறுக்கி, அங்கிருந்து தப்பி ஓட நினைக்கிறான். இடையில் அங்கம்மா அவன் குழந்தையை சாலூரில் பெற்றெடுக்கிறாள். தப்பியோட முனைந்து, கெண்டைக் கால் நரம்பு அறுபட்டு முடங்க, அங்கம்மாவை ஒட்டுப்பொறுக்கி சேர்ந்தானா என்பது வலி நிறைந்த வரலாறு!


தேயிலைத் தோட்டத்தின் பச்சை இலைகளுக்குப் பின்னால், உறைந்திருக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்களின் ரத்தத்தை விவரித்த 'ரெட் டீ’ (தமிழில் 'எரியும் பனிக்காடு’) நாவலின் பாதிப்பில், 'பரதேசி’ படைத்திருக்கிறார் பாலா.


 தமிழ் சினிமா வரலாற்றில் இது மிக உண்மையான மைல்கல் சினிமா. கொத்தடிமைச் சமூகத் தின் சரித்திரத்தை இவ்வளவு எளிமையாக, வலிமையாக முன்வைத்ததற்காக பாலாவுக்கு ஒரு ரெட் சல்யூட்.


கடைசி வரை வெள்ளந்தியும் இயலாமையுமாகத் திரியும் நாயகன், காதலில் உயிர் சுமக்கும் ஒருத்தி, ஓடிப்போன புருஷனை நினைவிலும் இடுப்பில் பிள்ளையையும் சுமக்கும் இன்னொருத்தி, உடலை முதலாளி வெறிநாய்க்கும் உயிரைக் கொள்ளை நோய்க்கும் தருகிற மற்றொரு மனுஷி என மனதை நிறைக்கும் நாயகிகள், கண்ணீரில் கரைக்கும் க்ளைமாக்ஸ்... என பாலா படங்களிலேயே இது முற்றிலும் புதிய அனுபவம்!


சாலூரில் வறுமையில் கிடக்கும் அந்த மக்களின் வாழ்க்கைக்குள் ஒளிந்திருக்கும் கொண்டாட்டங்களும் நகைச்சுவையும் காதலுமாக விரியும் படம், பிழைக்க ஊர் விட்டுப் போகும் வழியில் மயங்கி விழும் ஓர் உயிரிலிருந்து தடதடக்கத் தொடங்குகிறது. தரையிலிருந்து உயர்ந்து அலையும் அந்தக் கை... அதிரவைக்கிறது. அதன் பிறகு தேயிலைத் தோட்டத்தில் நாம் பார்ப்பது... இதுவரை பார்த்திராத துயர உலகம்!  


அதர்வாவுக்கு இது லைஃப் டைம் படம். ஒரு கண்ணில் அப்பாவித்தனமும் இன்னொரு கண்ணில் பரிதாபமும் மிதக்க வெகுளி இளைஞனாக அபாரமாக உழைத்திருக்கிறார். 'நியாயமாரேஏஏஏஎய்ய்...’ எனத் தலையை ஆட்டி ஆட்டித் தமுக்கடித்து, வேதிகா காட்டும் காதல் சாடையில் வெட்கப்பட்டு, தேயிலைத் தோட்டத்தின் துயரத்தில் 'அவக்கு அவக்கு’ எனப் பசியில் சாப்பிட்டு, கால் நரம்பு அறுபட்டுக் கதறுவது வரை... அற்புதம் அதர்வா!


துடிப்பும் துறுதுறுப்புமான அழகுக் கருப்பியாக வேதிகா. திருமணப் பந்தியில் அதர்வாவுக்கு மட்டும் பரிமாறப்படாதபோது கண்களில் காட்டும் சிரிப்பும், குடிசைக்குள் அறைந்துவிட்டு கைப் பிடித்து இழுக்கும் ரியாக்ஷனுமே போதும்!


வேதிகாவைவிடக் கனமான பாத்திரம் தன்ஷிகாவுக்கு. அதர்வாவைத் தன் குடிசைக்குள் சேர்க்காமல் விரட்டுகிற முரட்டுத்தனமாகட்டும் அதர்வாவின் அப்பாவித்தனத்தைப் புரிந்துகொண்டு மௌனமாகப் புன்னகைப்பதாகட்டும், 'பொம்பளையப் பத்தித் தப்பாப் பேசாதே’ என்று ஆத்திரப்படுவதாகட்டும், தைரியமும் துயரமும் அலைக்கழிக்கும் பெண்மைக்கு உருவம் கொடுத்திருக்கிறார் தன்ஷிகா!


யாருங்க அந்த ஆத்தா..? அத்தனை அலட்சியமான உடல்மொழி, வசன உச்சரிப்பில் கலங்கடிக்கிறார் அதர்வாவின் பாட்டியாக வரும் கச்சம்மா. ''என் கல்யாணத்தை நானே தமுக்கு அடிக்கிற மாதிரிக் கனவு கண்டேன்' என்று சொல்லும் அதர்வாவிடம், ''ஆமா, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பிச்சை எடுக்கிற மாதிரி நான் கனாக் கண்டேன்' என்று துடுக்குக் காட்டி, பஞ்சாயத்தில் அவசரமாகச் சூடம் அணைத்து, ''அதெல்லாம் சத்தியம் பண்ணியாச்சு, போங்க... போங்க'' என்று விரட்டியடிக்கும்போது ஆச்சர்யப்படுத்துகிறார். 



புதிதாகத் திருமணமாகிக் கல்யாணக் கனவு கலையாமலே பஞ்சம் பிழைக்க எஸ்டேட் நரகத்துக்குப் புலம்பெயர்ந்து வெள்ளைக்காரனின் காம இச்சைக்குப் பலி யாகும் ரித்விகா, தன் மனைவி மானம் இழப்பதை வேறு வழியில்லாமல் பார்த்துச் சகித்து, இரவு நேரத்தில் அழுது புலம்பும் கார்த்திக், ஜாலி மைனராக டான்ஸ் போட்டு பெர்மனென்ட் மட்டையாகும் விக்ரமாதித்யன் என ஒவ்வொரு பாத்திரமும் நுட்பத்துடன் வார்க்கப்பட்டிருக்கின்றன. ''பிளெஸ் மீ மை லார்ட்...'' எனக் கிழிந்த சட்டையோடு நாயைப் போலக் கெஞ்சுவதும் வன்மத்தில் தொழிலாளர்களிடம் குமுறுவதுமாக கங்காணிக் கயவாளித்தனத்தைக் கண்ணில் நிறுத்திய ஜெர்ரி, நல்ல அறிமுகம்.
படத்தின் மிகப் பெரிய பலம் நாஞ்சில் நாடனின் வசனங்கள். அதே சமயம் வசனகர்த்தாவின் புத்திசாலித்தனங்களைக் காட்டாமல், ஒரு பாத்திரத்தின் வார்த்தைகளாகவே ஏற்றிவிட்டிருக்கிறார் இயக்குநர். அந்த மக்களின், காலத்தின் இயல்பும் அப்படியே பதிவாகியிருக்கின்றன. ''வேட்டிக்குள்ள இருந்து மந்திரி எட்டிப் பார்க்கிறாரு'' என முதல் பாதியில் குறும்பு கொப்பளிக்கும் வசனங்கள் ''ராசா வண்டியை விட்ருவேன்!'' என ஆங்காங்கே நெகிழவைத்து, ''நீயும் இந்த நரகக் குழியில வந்து விழுந்துட்டியே!'' எனக் கலங்கடிக்கின்றன.



சாலூர் கிராமத்தின் இண்டு இடுக்குகளில் புகுந்து புறப்படும் ஆரம்பக் காட்சி, முதல் மரணம் உறைந்திருக்கும் தேயிலை எஸ்டேட்டின் விஸ்தாரப் பரப்பைச் சுற்றிச் சுழலும் இறுதிக் காட்சி வரை செழியனின் கேமரா, படத்தின் ஆகப் பெரும் பலம்.  ஜி.வி.பிரகாஷின் இசையில் வைரமுத்துவின் வரிகளில், 'அவத்தப் பையா’ காதல் பொங்கவைத்தால், 'செங்காடே சிறுகரடே போய் வரவா’ பாடலும், 'செந்நீர்தானா’ பாடலும் கண்ணீர் பொங்கவைக்கின்றன. பின்னணி இசையில் இன்னும்கூட மெனக்கெட்டு இருக்கலாம் ஜி.வி!


பாலச்சந்தரின் கலையும் கிஷோரின் எடிட்டிங்கும் படத்தில் உயர் தரம். தாஸின் ஒப்பனை, பூர்ணிமாவின் ஆடை வடிவமைப்பு இரண்டும் பிரமிக்கவைக்கின்றன. கமர்ஷியல் சினிமாவுக் கான சங்கதிகள் இல்லாதபோதும் டாக்குமென்ட்டரி தொனி தவிர்ப்பதில், 'பரதேசி’ குழுவின் உழைப்பு அசரவைத்திருக்கிறது.  


படத்தின் திருஷ்டிக் காட்சிகள் மருத்துவராக வந்து மதப் பிரசாரம் செய்யும் 'பரிசுத்தம்’ பாத்திரக் காட்சிகள். மத மாற்றம் பெருமளவு நிகழ்ந்த காலகட்டம்தான் என்றாலும், அதை ஏதோ காமெடிக் குத்தாட்டம் ஆக்கியது... வெரி ஸாரி.  


இதுவரை பெரிதாகச் சொல்லப்படாத கொத்தடிமைச் சமூகத்தின் துயரச் சரித்திரத்தை அழுத்தமாகச் சொன்னதற்காக 'பரதேசி’யைக் கொண்டாட வேண்டும்.


'சேது’வில் யதார்த்த சினிமாவுக்கான ஓர் அலையை உருவாக்கிய பாலா, 'பரதேசி’யில் பல படிகள் கடந்து அடுத்தகட்டத் தமிழ் சினிமாவை ஆரம்பிக்கிறார்!

thanx - vikatan

diSki -

பரதேசி - சினிமா விமர்சனம்( cps)

http://www.adrasaka.com/2013/03/blog-post_1984.html

0 comments: