Tuesday, March 12, 2013

தமிழ் சினிமாவோட தவிர்க்க முடியாத சக்தி பவர் ஸ்டார் பேட்டி @ ஆனந்த விகடன்

"அந்த ஊறுகாயே நான்தான்!''

க. ராஜீவ் காந்தி, படம்: ஜெ.தான்யராஜு
பவரைச் சந்தித்து இரண்டு மாதங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் எத்தனை மாற்றங்கள்? இப்போது எல்லாம் கோடம்பாக்கத் தில் படத்துக்குப் பூஜை போடும்போதே பவர் ஸ்டாருக்கு போன் போடுகிறார்கள். (ரஜினியைக்கூட சூப்பர் ஸ்டார் என்று பட்டத்தோடு  எழுதுவது இல்லை. ஆனால், சீனிவாசனை பவர் ஸ்டார் போடாமல் எழுத முடியவில்லை. என்ன கொடுமை பவர்?)



 அந்த வகையில் பவரைத் தன் 'அழகன் அழகி’ பட புரமோஷனுக்காக ஆடவைத்திருக்கிறார் இயக்குநர் நந்தா பெரியசாமி. ஷூட்டிங் ஸ்பாட்டில் படுவேகமாக வந்த பவர் (பிஸியா இருக்காராமாம்) முதல் வேலையாக அருகில் இருக்கும் ஃபேன் வேகத்தைக் குறைக்கச் சொல்கிறார் (விக் பறந்துரும்ல?) டான்ஸ் மாஸ்டர் காதல் கந்தாஸ் டான்ஸ் மூவ்மென்ட்ஸை விளக்குகிறார். ''



ஓ... மை கேர்ள் நெவர் மிஸ் யூ... ஓ... ஓ...'' இதுதான் பாடல் வரி. கையில் ரோஜாப்பூ வைத்துக்கொண்டு ஏக்கத்தோடு கையை மேலே தூக்கிப் பாட வேண்டும். ரிகர்சலின்போது சரியாகச் செய்து குட் வாங்கும் பவர், கேமரா ஸ்டார்ட் ஆனதும் சொதப்புகிறார்.



அவர் கைகளை மேலே தூக்க, ஆவிக்குரிய செய்திகள் போன்ற கூட்டங்களில் ஆசீர்வாதம் வழங்குவதுபோல் ஆகிவிடுகிறது மூவ்மென்ட். கட்... திரும்ப பவருக்கு சொல்லித் தருகிறார்கள். அடுத்த ஷாட்டில் ஓ.கே. ஆகிறது. சும்மாவா... ஒரு நாள் கால்ஷீட்டுக்கு ஐந்து லட்சமாச்சே? மூவ்மென்ட் ஆடி முடித்து (!) டயர்டாகி வந்த பவரிடம் பேசினோம். 



 ''தமிழ் சினிமாவோட தவிர்க்க முடியாத சக்தி ஆகிட்டீங்களே?''



(வாயெல்லாம் பல் தெரிகிறது) ''அப்படிலாம் இல்லை சார். இப்ப ஆரம்பக் கட்டத்துலதான் இருக்கேன். இன்னும் நிறைய வளரணும். இப்ப உள்ள டிரெண்டுக்கு ஏத்த மாதிரி நானும் சந்தானமும் நல்லா காமெடி பண்றோம். அதனால வண்டி ஓடிக்கிட்டு இருக்கு!''



''ஒரு கோடி சம்பளம் கேட்கிறீங்களாமே?''



''நான் கேட்கிறேன். ஆனா, யாரும் கொடுக்க மாட்டேங்குறாங்களே? வாய்ப்பு இருக்கும்போதே பயன்படுத்திக்கணும் சார். இப்போ நார்மலான சம்பளம்தான் வாங்குறேன்!''



'' 'லத்திகா’ படம் ரிலீஸ் ஆனப்ப 'எனக்கு அஞ்சு லட்சம் ரசிகர்கள் இருக்காங்க’னு சொன்னீங்க. இப்போ கூடியிருக்குமே?''



''ரசிகர்கள் எண்ணிக்கையில ஒரு கோடியை எப்பவோ தொட்டுட்டேன் சார். மன்றங்கள் மூலமா கணக்கெடுக்கச் சொல்லியிருக்கேன். சீக்கிரமாவே அறிவிக்கிறேன். எல்லாத்துக்கும் காரணம், என்னோட ரசிகர் மன்ற நிர்வாகிகள்தான். நான் சிரிச்சா அவங்க சிரிக்கறாங்க... நான் அழுதா அவங்க அழுறாங்க. அவங்கதான் எனக்கு எல்லாமே!''



''ஒரு கோடி ரசிகர்களை வெச்சுக்கிட்டு ஒரு பாட்டுக்கெல்லாம் ஆடலாமா?''



''சாப்பாட்டுல பல வகை இருந்தாலும் ஊறுகாய் இருந்தாத்தானே ருசி. அந்த ஊறுகாய் நான்தான். தமிழ் சினிமால சந்திரபாபுவுக்குப் பிறகு ஒரு பாட்டுக்கு ஆடற ஆண் நான் மட்டும்தான். இது பெருமைதானே? யார் கூப்பிட்டாலும், நான் ஆட ரெடி!''



''இப்ப 'லத்திகா’ படத்தை ரீ ரிலீஸ் பண்ணா நல்லா ஓடுமே?''


(சீரியஸாக யோசிக்கிறார்) ''நல்ல ஐடியாவா இருக்கே? என் ரசிகர் மன்ற நிர்வாகிகள்கிட்ட பேசுறேன். அவங்க ஓ.கே. சொன்னா, தமிழ்நாட்டுல ஒரு திருவிழா நடத்திரலாம்!''



''சரி... நீங்க சி.எம். ஆனா முதல் உத்தரவு என்ன போடுவீங்க?''



(பதறுகிறார் ஐயைய்யோ... இப்பதான் ஒரு ரவுண்டு ஜெயிலுக்குப் போய்ட்டு வந்திருக்கேன். இன்னொரு ரவுண்டு உள்ளே போகணும்னு ஆசைப்படறீங்களா? வேணாம் சார்... என்னை விட்ருங்க ப்ளீஸ்!''



நன்றி - விகடன்

1 comments:

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

பவர் ஸ்டார் பவர் ஸ்டார் பேட்டி அவர் நடிக்கிற படம் மாதிரியே இருக்கு