Sunday, March 10, 2013

அழகிரிக்கு அஸ்தம காலமா? ஆனந்த விகடன் அலசல்

அவஸ்தை காலம் ஆரம்பித்துவிட்டது அழகிரிக்கு!

 தி.மு.க. தலைவரின் மகன், தென்மண்டல அமைப்புச் செயலாளர், மத்திய அமைச்சர், தி.மு.க-வின் அசைக்க முடியாத சக்தி, ஏழு தென் மாவட்டங்களில் அவர் வாக்குதான் வேதம், விரும்பியவருக்கு எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளைத் தாரைவார்ப்பார், அவருக்கு ஒன்று என்றால், உயிரைக் கொடுப்பதற்கு மதுரை வட்டாரத்தில் பெரும் படையே இருக்கிறது, கட்சித் தலைவர் போட்டியில் அவருக்கு தாய் தயாளுவின் ஆதரவு, ஸ்டாலினைப் பிடிக்காத முக்கியஸ்தர்கள் அனைவரும் இவரது தலைமையை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்... என்று உச்சி முகர்ந்து சொல்லப்பட்ட அழகிரி, இப்போது காற்று அடங்கிய பலூன் மாதிரி கம்மென்று கிடக்கிறார்.


முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார் அழகிரி. 'தலைவரின் மகன்’ என்ற ஒற்றைத் தகுதியுடன் அவர் எதிர்பார்த்த மகுடம், ஸ்டாலின் தலைக்குச் சென்றுவிட்டது. தென் மண்டல அமைப்புச் செயலாளரை, தென் மாவட்டத்து மாவட்டச் செயலாளர்களே மதிப்பது இல்லை. தி.மு.க-வில் அவர் பேச்சைக் கேட்டுவிட்டு, இப்போது எதுவும் செய்யப்படுவது இல்லை. மாநிலத்தில் ஆட்சி போனதால், மதுரை வட்டாரத்தில் லாபம் எதிர்பார்க்கும் கட்சிப் புள்ளிகள் கரைய ஆரம்பித்துவிட்டார்கள்.


 நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ளாததால் அங்கும் அவருக்கு நல்ல அறிமுகம் இல்லை. தயாளு, இவரை ஆதரித்துச் செயல்படும் அளவுக்கு ஆரோக்கியமான உடல்நிலையில் இல்லை. 'தலைமைக்கான தேர்தல் வந்து போட்டி வந்தால், நான் ஸ்டாலின் பெயரைத்தான் வழி மொழிவேன்’ என்று கருணாநிதியே சொன்ன பிறகு, ஸ்டாலினைப் பகைப்பவர்கள்கூட வலியப்போய் அவரிடம் சிரிப்பைப் பதிவுசெய்ய ஆரம்பித்துவிட்டார்கள். எல்லாக் கஷ்டமும் சொல்லிவைத்தது மாதிரி ஒரே சமயத்தில் அழகிரியைத் தாக்கும் என்பது யாரும் எதிர்பாராதது!


இதற்கு யாரையும் குறை சொல்ல முடியாது. அழகிரி மட்டுமே அனைத் துக்கும் காரணம். கருணாநிதியின் மூத்த மகனாக, கட்சியின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக, மத்திய அமைச்சராக... ஏதேனும் ஒரு பொறுப்பிலேனும் புலிப் பாய்ச் சல் காட்டியிருக்கிறாரா அழகிரி?


கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வியை எழுப்பினார் தி.மு.க. உறுப்பினர் கே.பி.ராமலிங்கம். அழகிரிக்கென இப்போது இருக்கும் ஒரு சில ஆதரவாளர்களில் இவரும் ஒருவர். ஆனால், தான் கேட்ட கேள்வி தனது கட்சித் தலைவரின் மகனையே பதம் பார்க்கும் என அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். உர மானியத்தில் 5,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக பரபரத்த விவாதத்தின்போது கே.பி.ராமலிங்கம் கேட்ட ஒரு கேள்விக்கு, ரசாயனம், உரத் துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா எழுந்து பதில் சொல்ல முற்பட்டார். 




அவ்வளவுதான்... பா.ஜ.க-வின் வெங்கய்ய நாயுடு பிலுபிலுவெனப் பிடித்துக்கொண்டார். ''எவ்வளவு பெரிய விவாதம் இங்கு நடக்கிறது. இதற்குப் பதில் சொல்ல வேண்டிய துறையின் அமைச்சர் எங்கே? அவர் எப்போதுமே அவையில் இருப்பது இல்லை. எல்லாவற்றுக்கும் இணை அமைச்சரே பதில் சொல்வதாக இருந்தால், அழகிரிக்கு எதற்கு அமைச்சர் பதவி? மொத்தத்தில் அவரது போக்கு சரியில்லை'' என்று பொரிந்துதள்ள... மொத்த பா.ஜ.க. உறுப்பினர்களும் அழகிரிக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.



 மத்திய அமைச்சரவையில் அழகிரியின் மீதான அதிருப்தி ஒன்றும் புதிய விஷயம் அல்ல; பல முறை பிரதமரே அழகிரியின் ஆப்சென்ட்டால் அப்செட் ஆகி இருக்கிறார். நாடாளுமன்ற விவாதங்களில் கலந்துகொள்ள வேண்டும், மணிக்கணக்கில் பேச வேண்டும், பதிலுக்குப் பதிலடி தர வேண்டும் என்று அனைவரிடமும் எதிர்பார்க்க முடியாது. ஆனால், சபையில் பங்கேற்க வேண்டும், தேவையான பதில்களையாவது தர வேண்டும். அதுவும் முடியாவிட்டால், 'எழுத்துபூர்வமாகப் பின்னர் பதில் தருவேன்’ என்று சொல்ல வேண்டும். இவை எதையுமே அழகிரி பின்பற்றவில்லை என்ற ஆதங்கம் பிரதமருக்கு இருக்கிறது.


மத்திய அமைச்சர் பதவி என்பது அழகிரியின் அரசியல் எதிர்காலத்துக்குக் கிடைத்த வரப்பிரசாதம். ஆனால், அந்த வல்லமை மிகுந்த வாய்ப்பை அழகிரி தவறவிட்டுக்கொண்டே இருக்கிறார். தி.மு.க-வின் மற்ற எம்.பி-க்கள் பிரதமரையும், சோனியாவையும், ராகுலையும் சகஜமாகச் சந்திக்க முடிகிறது. ஆனால், அழகிரியால் மட்டும் முடியவே இல்லை. கேட்டால், 'மொழிப் பிரச்னை’ என்கிறார்கள்.

 தி.நகரில் சாதாரண வியாபாரியாக இருந்த பா.ம.க-வின் ஏ.கே.மூர்த்தி ஆங்கிலமும் இந்தியுமா பேசி அவ்வளவு ரயில்வே திட்டங்களை தமிழகத்துக்குக் கொண்டுவந்தார்? லாலுபிரசாத் யாதவ் கொச்சை ஆங்கிலத்தைக்கொண்டு அமெரிக்காவின் ஹார்வர்டு, வார்ட்டன் பல்கலைக்கழகங்களை யும் அகமதாபாத்தின் ஐ.ஐ.எம்-மையும் அசத்த வில்லையா? திறன்மிக்க அமைச்சராகப் பிரகாசிக்க... கட்சியின் உறுப்பினராக மத்தியில் லாபி செய்ய... மொழி ஒரு தடை என்று சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம்!



டெல்லியை விடுங்கள்... கட்சியில் என்ன பிரச்னை? 'செயல்வீரர்’, 'இடைத் தேர்தல் வெற்றிகளின் வித்தகர்’ என்றெல்லாம் சொல்லித்தானே கட்சியின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி அவருக்கு அளிக்கப்பட்டது. அந்தப் பதவி வந்த பிறகு, ஒரே ஒருமுறை தன்னுடைய வீட்டில் மாவட்டச் செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடத்தியதைத் தவிர, கட்சிக்காகக் களம் இறங்கி அவர் என்ன வேலை பார்த்தார் என்று யாருக்கேனும் நினைவிருக்கிறதா? ஓரிரு நாள் பிரசாரங்களில் தலைகாட்டுவது மட்டுமே, ஒருவரை ஆக்ட்டிவ் அரசியல்வாதி ஆக்கிவிடாதே!




அதிலும் 'திருமங்கலம் ஃபார்முலா’ அழகிரிக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். ஆனால், தி.மு.க-வின் ஜனநாயக - ஓட்டு அரசியல் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை... தி.மு.க-வுக்கு தேசிய அளவில் இருந்த நற்பெயரை அது எந்த அளவுக்குச் சிதைத்தது என்பது கட்சித் தலைவரின் மனசாட்சிக்குத் தெரியும்.



கடந்த காலத்தில் அழகிரியின் பிறந்த நாள் விழாக்களில் பெருமளவு திரண்ட தென் மாவட்டச் செயலாளர்களும் முக்கிய அமைச்சர் களும் இந்த முறை சொற்ப எண்ணிக்கையாகச் சுருங்கிப்போனது ஏன்? உண்மையில் ஒரு சமஸ்தானத்தின் சர்வாதிகாரச் சக்ரவர்த்தியாக இருக்க மட்டுமே ஆசைப்படுகிறார் அழகிரி. 'யாரங்கே!’ என்று கட்டளையிட்டால், மூத்த அமைச்சர்களும் அண்ணா பாசறையில் திராவிடம் பயின்ற மூத்த தலைவர்களும் ஓடி வந்து நிற்பார்கள் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?



எல்லாவற்றையும்விட அ.தி.மு.க. ஆட்சியில் தனது நிலைமை எப்படி இருக்கிறது என்பதைக்கூடவா அழகிரி உணர மாட்டார்?



கிரானைட் வழக்கில் அவரது மகன் துரை தயாநிதியை விடாமல் துரத்துகிறது அ.தி.மு.க. அரசு. வேறு ஏதாவது ஒரு வழக்கில் அவரை வளைத்துப் போடக் கண்கொத்திப் பாம்பாக வாய்ப்புக்குக் காத்திருக்கிறது காவல் துறை. இன்னொரு பக்கம் தயா சைபர் பார்க்கின் சுற்றுச்சுவர்களை இடித்துத்தள்ளுகிறது மாநகராட்சி. எல்லாவற்றுக்கும் மேலாக பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் போலீஸின் சந்தேகக் கரங்கள் அழகிரியையும் துரை தயாநிதியையும் நோக்கி நீள் கின்றன.



குடும்ப உறவுகளில் சுமுகமாக இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. ஸ்டாலின், கனிமொழி, துர்கா, ராசாத்தி அம்மாள் தொடங்கி அத்தனை பேரும் ஆகாது அவருக்கு. அவ்வளவு ஏன்? தனது மகள்கள் கயல்விழியிடமும் அஞ்சுகச்செல்வியிடமும் ஓரிரு வார்த்தைகள் பரிவாகப் பேசி ஓர் ஆண்டுக்கு மேலாகிவிட்டது என்றும் சொல்லப்படுகிறது. அவர்களைவிடவா கட்சியும், பதவியும், அதிகாரமும் அழகிரிக்கு நிம்மதியைத் தந்துவிட முடியும்?



இப்போதைக்கு அழகிரி நம்புவது மனைவி காந்தி, மகன் துரை தயாநிதி, மருமகள் அனுஷா ஆகிய மூவரை மட்டும்தான். எல்லாப் பிரச்னைகளின்போதும் அழகிரிக்கு ஆறுதலும் தேறுதலும் அளிப்பது அவர்கள்தான். ஆனால், அந்த மூவருக்குமே அவரது 'செயல்பாடு’கள் பிடிக்குமா என்ன?



நன்றி - விகடன் 

1 comments:

Unknown said...

நன்றி . தன்வினை தன்னைசுடும்