Friday, March 29, 2013

சாகித்ய அகாடமி விருது வென்ற மலர்வதி


பள்ளிக்கூடத்துல இருந்து திரும்பி வந்ததும் என்னைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு அம்மா உச்சி முகர்ந்து முத்தம் கொடுப்பாங்க. அப்போ அவங்க மேல அடிச்ச பினாயில் நெடி இப்பவும் என் நெஞ்சின் அடியாழத்தில் பதிஞ்சிருக்கு. அது என் உள்ளுணர்வில் உண்டாக்கிய உணர்வுதான் 'தூப்புக்காரி’ நாவலின் ஒவ்வொரு வார்த்தையும்!''- மெல்லிய புன்னகையும் அழுத்தமான வார்த்தைகளுமாகப் பேசுகிறார் மலர்வதி. 2012-ம் ஆண்டின் இளம் எழுத்தாளருக்கான சாகித்ய அகாடமி விருது வென்ற பெருமிதம் பூரிக்கிறது மலர்வதியின் புன்னகையில்.
 கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிக்கோடு கிராமத்தைச் சேர்ந்த மேரி புளோரா எனும் மலர்வதி எழுதிய இரண்டாவது நாவல் தூப்புக்காரி. கிராமத்தின் கிழக்கு மூலையில் ஒரு முட்டுச் சந்தில் பாதி மட்டுமே கட்டி முடிக்கப்பட்ட வீட்டில் வசிக்கும் மலர்வதி, திருமணச் சிந்தனைகளைத் தவிர்த்து இலக்கியமே நேசமும் சுவாசமுமாக இருக்கிறார்.

''என் இயற்பெயரான மேரி புளோரா தமிழ்ப் பெயராக இல்லைனு சொல்லி, வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான தக்கலை பென்னி, 'மலர்வதி’னு அந்தப் பெயரைத் தமிழாக்கம் செஞ்சாங்க. என் கூடப் பிறந்தவங்க ஒரு அண்ணன், ஒரு அக்கா. என் அம்மா ரோணிக்கம் மட்டும் இல்லைன்னா, என் வாழ்க்கை எப்பவோ கேள்விக்குறி ஆகியிருக்கும். என்னைக் கர்ப்பத்தில் சுமந்தப்பவே,  அப்பா குடும்ப உறவுகளைத் தூக்கி எறிஞ்சுட்டு, அம்மாவைத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டாரு. அம்மாவுக்குப் படிப்பறிவு கிடையாது. அப்பா வீட்டை விட்டுப் போனதும் குடும்பமே வீதிக்கு வந்துடுச்சு.

 ஆனா, ஒத்தை மனுஷியா நின்னு அம்மா எங்க மூணு பேரையும் வளர்த்தெடுத்தாங்க. பள்ளிக்கூடத்தில் துப்புரவுப் பணிக்குப் போனாங்க. மாசம் முப்பது ரூபாய் சம்பளம். அந்த வேலை போக பல வீடுகள்ல பாத்திரம் தேய்ச்சுக் கொடுப்பாங்க. ஒரு ரூபாய் கூலிக்காகப் பக்கத்து வீடுகளுக்கு ரேஷன்ல நின்னு பொருட்களை வாங்கிட்டு வந்து கொடுப்பாங்க. தலையிலும் சுமை, வயித்திலும் சுமையை வெச்சுக்கிட்டு, மூணு குழந்தைங்க வயிற்றுப் பசியைத் தீர்க்கத் தன் உயிரையே தேய்ச்சுக்கிட்டாங்க.


விவரம் தெரிஞ்சதில் இருந்தே, அம்மாவின் வேதனையை என் மனதில் சுமந்துட்டே இருந்தேன். குடும்பச் சூழல் காரணமா ஒன்பதாம் வகுப்புக்கு மேல படிக்க முடியலை. எங்க சுத்துவட்டாரப் பகுதிகளில் பள்ளிக்கூட விடுமுறையில் வீட்டில் இருக்கும் பொடிசுங்கள்ல இருந்து பார்வை மங்குன பாட்டி வரை எல்லா பெண்களுக்கும் வேலை கொடுக்குறது களம் அண்டி ஆபீஸ்தான் (முந்திரித் தொழிற்சாலை). நானும் முந்திரி உடைக்குற வேலைக்குப் போனேன். அந்த சின்னஞ்சிறிய உலகத்தில் நான் கத்துக்கிட்ட விஷயங்கள் அதிகம்.


வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போனா, கழிவறை கழுவுறதுக்காக அம்மா வாங்கி வெச்சுருக்குற பினாயில் வாடைக்கு நடுவில் தான் சாப்பாடு, தூக்கம் எல்லாமே. திருவிழாக்களுக்குப் போறப்பகூட அம்மா அங்கே இருக்கிற கடைகளில் புது துடைப்பத்தைத்தான் அழகு பார்ப்பாங்க. 

 
முந்திரித் தொழிற்சாலையில் வேலை பார்க்கும்போது, இளம் கிறிஸ்துவ மாணவர் இயக்கத்துக்கு நாடகங்கள் எழுதிக் கொடுத்தேன். எங்கள் பகுதியில் சாதியப் பிரச்னைகளோ, மதரீதியான வன்முறைகளோ கிடையாது. அங்கே இருந்ததெல்லாம் ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடும் படிச்சவன், படிக்காதவன் என்ற பாகுபாடும்தான். மனிதனை மனிதனாக இருக்கும் நிலையிலேயே ஏற்றுக் கொள்வதுதான் மனிதநேயங்கிற அடிப்படைப் பண்பைப் புறந்தள்ளி விட்டு, வேறுபாடு கற்பித்த சமூகம்தான் என்னை இலக்கிய உலகின் வாசலில் கொண்டுவந்து நிறுத்தியது.


கல்வியும் பணமும் இல்லாததால் என் நியாயமான திறமைகள் புறந்தள்ளப்பட்டன. நான்கு சுவர்களுக்குள் கையில் முந்திரியும் இதயத்தில் நிராகரிப்பின் வலியும் சேர்ந்து வார்த்தவைதான் என் இலக்கிய தாகம்.


அதே சமயம், இலக்கியத்தில் சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம்னுலாம் தேடித் தேடிப் படிச்சவள் இல்லை நான். ஆரம்பத்தில் கிறிஸ்துவ மதம் சம்பந்தப்பட்ட மூன்று கட்டுரைத் தொகுப்புகளை எழுதினேன். என் முதல் நாவலான 'காத்திருந்த கருப்பாயி’யை 1,000 பிரதிகள் அச்சடிச்சு நானே வெளியிட்டேன். அந்த நாவலில் கல் குவாரித் தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சொல்லியிருந்தேன். அதுக்காக அடகுவெச்ச செயினைக் கூட சமீபத்தில்தான் மீட்டேன். இரண்டாவது நாவலான 'தூப்புக் காரி’யை அனல் பதிப்பகம் வெளியிட்டாங்க. சாமான்ய மனுஷியான எனக்கு இந்த விருது கிடைச்சதால், இப்போ 'தூப்புக்காரி’ நாவலுக் குத் தட்டுப்பாடாகி இருக்கு. என் அம்மா பட்ட பாட்டுக்கு நான் ஏதோ சாதிச்ச திருப்தி கிடைச்சிருக்கு.


ஊரெல்லாம் மழை பெய்யுது. அதன் துளி கடலில் விழுந்தால் அது சமுத்திரம். சாக்கடையில் விழுந்தால்..? எனக்கு எப்பவும் கடலில் விழவே ஆசை!''

thanx - vikatan

0 comments: