விகடன் மேடை சந்துரு பதில்கள்!
வாசகர் கேள்விகள்...
படம்: கே.ராஜசேகரன்
உங்களுடைய மிக
எளிமையான நடவடிக்கைகளை, உங்களுடன் பணியாற்றிய சக நீதிபதிகள் எப்படிப்
பார்த்தார்கள்? அவர் களிடம் உங்களுக்குக் கெட்ட பெயர்தானே
மிஞ்சியிருக்கும்?''
''ஓய்வுபெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஒரு
தீவிர அறுவை சிகிச்சை செய்துகொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
இருந்தேன். என்னுடைய ஏழு வருடப் பணியில் நான் விடுப்பு எடுத்தது அந்த
மூன்று வாரங்கள் மட்டுமே. மருத்துவமனையிலும் அறுவைசிகிச்சை முடிந்து வீடு
திரும்பிய பின்னரும் என்னைச் சந்தித்த நீதிபதிகள் மொத்தம் 11 பேர் மட்டுமே.
அதே போல் ஓய்வுபெறும் கடைசி நாள் அன்று எனது சேம்பருக்கு வந்து வாழ்த்து
சொன்னவர்கள் 10 பேர் மட்டுமே. தற்போது ஹைகோர்ட்டில் நீதிபதிகளின் எண்ணிக்கை
47 என்பதை மனதில்கொள்ளவும்!''
க.ஆனந்த், சென்னை-17.
''சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு தாங்கள் சொல்ல விரும்புவது என்ன?''
'' 'கல், கற்பி, கலகம் செய்...’ என்ற தாரக மந்திரத்தை
பாபா சாஹேப் அம்பேத்கர் உப தேசித்தார். ஆனால், அவர் பெயரில் இயங்கும்
சட்டக் கல்லூரியில், மாணவர்கள் முதல் இரண்டைத் தவிர, மூன்றாவது
வார்த்தையில் மட்டுமே கவனம் செலுத்துவது வருத்தத்துக்கு உரியது.''

கி.ராஜா, புதுச்சேரி.
''மாஜிஸ்திரேட்
கோர்ட் நீதிபதியாக இருந் தாலும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்தாலும்,
சட்டப் புத்தகம் ஒன்றுதான். அதை வைத்துதான் தீர்ப்பு வழங்கப்போகிறார்கள்.
ஆனால் ஏன், கீழ்க் கோர்ட்டில் ஒரு மாதிரியும் மேல் கோர்ட்டில் ஒரு
மாதிரியும் தீர்ப்பு வழங்கப்படுகிறது?''
''கீழமை நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றம் வரை
எல்லாமே நீதிமன்றங்கள்தான். ஆனால், ஒரு கீழமை நீதிமன்றம் தவறான தீர்ப்பை
வழங்கினால், அதைப் பரிசீலிக்கத் தான் மேல்முறையீடுகள் சட்டத்தில்
வழங்கப்பட்டுள்ளன. எல்லாமே சமமானது என்று சொல்லி விட்டால்,
மேல்முறையீடுகளுக்கும் சீராய்வு மனுக்களுக்கும் தேவையில்லாமல் போய்விடும்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களைக்
கட்டுப்படுத்தும். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அந்த மாநிலத்தில் உள்ள
மற்ற கீழமை நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்தும். அதை லத்தீன் மொழியில் Stare
decisis என்று சொல்வார்கள். அதாவது, அந்தத் தீர்ப்பே நிலைக்கட்டும்.

‘Supreme Court is infalliable not because it is supreme, because it is final it is infalliable!’
அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி பாட்டர் ஸ்டூவர்ட்,
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளின் கட்டுப்படுத்தும் தன்மையைப் (binding
nature) பற்றிச் சொல்லும்போது இவ்வாறு குறிப்பிட்டார்...
‘Our judgement oflate have been railroad tickets, good for the day and good for the trip!’ ’’
சு.நாகராஜன், பம்மல்.
''கறுப்பு கவுன் அணியும் சடங்கு இனியும் தேவைதானா?''
''தேவையில்லை என்பது எனது கருத்து. ஆங்கிலேயர்கள்
உருவாக்கிய சட்டங்கள், நீதிமன்றங்களுடன் நமக்குக் கிடைத்த கொசுறுதான் இந்த
கறுப்பு கோட்டும் கறுப்பு அங்கியும். 1961-ம் வருடம் வழக்கறிஞர்கள் சட்டம்
(Advocates Act, 1961) நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டது. அதில் இந்திய
வழக்கறிஞர்கள் கவுன்சில் (Bar Council of India) என்ற தன்னாட்சி பெற்ற
அமைப்பு உருவாக்கப்பட்டது. வழக்கறிஞர்களுக்கான கல்வித் தகுதி, நெறிமுறைகள்,
ஒழுக்கக் கட்டுப்பாடுகள் போன்றவற்றை உருவாக்க, அந்த அமைப்புக்கு அதிகாரம்
வழங்கப்பட்டது. அவர்கள் ஒரு புதிய சீருடையை (Dress code), நமது நாட்டின்
கலாசாரம் மற்றும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப உருவாக்கத் தவறி விட்டார்கள்.
பழைய சம்பிரதாயத்தை மாற்ற முன்வரவில்லை. ஆனால், பின்னர் ஹைகோர்ட் மற்றும்
சுப்ரீம் கோர்ட்டில் மட்டும் கறுப்பு அங்கி அணிவது கட்டாயமாக்கப்பட்டது.
மற்ற கீழ்க் கோர்ட்களில் தேவை இல்லை என்றாலும் வழக்கறிஞர்கள் அந்த அங்கி
அணிவதை விடத் தயார் இல்லை. அவர்களிடம் அதுபற்றிக் கேட்டபோது, 'வக்கீல்
குமாஸ்தாவும் கறுப்பு கோட் போடுகிறார். அவருக்கும் நமக்கும் வித்தியாசம்
தெரிய வேண்டாமா..?’ என்ற பதில் வந்தது.
வட மாநிலங்களில் கோடைக் காலம் கடுமை யாக இருப்பதால்,
கறுப்பு அங்கி அணிவதில்இருந்து அங்கெல்லாம் ஏப்ரல் முதல் ஜூலை வரை விதியைத்
தளர்த்தியுள்ளனர். இரு வாரங்களுக்கு முன் கேரள உயர் நீதிமன்றத்தில்
இதுபற்றி வழக்கறிஞர் ஒருவர் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். 'நமது
பருவநிலைக்கு ஏற்ப இந்தச் சீருடையை மாற்ற வேண்டும்’ என்று கேரள உயர்
நீதிமன்றமும் பார் கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இன்னொரு துணுக்குத் தகவல். இங்கிலாந்து நாட்டில்
புதிதாக ஏற்படுத்தப்பட்ட சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ஆடை நிபுணரைக்
கலந்தாலோசித்து புதிய சீருடையை நீதிபதிகள் அணிகிறார்கள். ஆனால், 'பழைய
சடங்குகளை யார் கைவிட்டாலும் நாங்கள் விட மாட்டோம்’ என்ற நம்மவர்களின்
போக்கு வருத்தத்தை அளிக்கிறது!''
நா.மதுமிதா, சென்னை-75.
''உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட முடியுமா?''
''முடியாது, அரசியல் சட்டம் ஷரத்து 348-ன் படி உயர்
நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்பட
வேண்டும். ஆனால், ஷரத்து 348 (2)ன்படி அந்த மாநில அரசு விரும்பினால்,
குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அந்த மாநிலத்தின் அதிகாரபூர்வமான
மொழியையும் உயர் நீதிமன்றத்தில் கையாளும் நடைமுறையை அறிமுகம் செய்யலாம்.
அப்படி உத்தரவு வந்த பிறகும் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை ஆங்கிலத்தில்
மட்டுமே வழங்க வேண்டும்.
தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு முன்னால் குடியரசுத்
தலைவருக்குப் பரிந்துரைக்கும் முன், சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்தை
அறிய விரும்பியது. அதற்காகக் கூட்டப்பட்ட முழு நீதிபதிகள் அடங்கிய
கூட்டத்தில் நான் தயார் செய்த 35 பக்கங்கள்கொண்ட குறிப்புரை சுற்றுக்கு
விடப்பட்டு, விவாதிக்கப்பட்டு முழு இசைவு பெறப்பட்டது. அதன் பின்னர் அந்த
வேண்டுகோள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. என்ன காரணத்தினாலோ, அவர்
சுப்ரீம் கோர்ட்டின் கருத்தையும் அறிய விரும்பினார் (அரசியல் சட்டத்தில்
அப்படிக் கருத்து கேட்கும்படி கூறப்படவில்லை) அன்றைய உச்ச நீதிமன்றத் தலைமை
நீதிபதி அப்படி தமிழ் மொழியைப் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்த தால், அந்த
முயற்சி தோல்வி அடைந்தது. ஆனாலும், இன்று சில நீதிபதிகள் தங்களது
கோர்ட்களில் தமிழில் வாதங்களை வைக்கத் தடை விதிப்பது இல்லை!''
சு.அருளாளன், ஆரணி.
''நீதிபதிகள் பல நேரங்களில் தீர்ப்பு சொல்வதைவிட, கருத்துதான் சொல்கிறார்கள். ஒரு நீதிபதிக்குக் கருத்து சொல்லும் உரிமை உண்டா?''
''பல நேரங்களில் நீதிபதிகள் சட்டத்தின்
அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்குகிறார்கள். சில சந்தர்ப் பங்களில்
சட்டத்தை வியாக்கியானம் செய்யும்போது, சில கருத்துகளை உதிர்க்கிறார்கள்.
அப்படிக் கருத்து கூறும் தருணங்களில் அது விவாதத்துக்கு உரிய
பொருளாகிவிடுகிறது.
ஆந்திர மாநிலத்தில் ஒரு வழக்கு. தேர்வு எழுதும்
அறைக்குள் மாணவர்கள் எந்த ஒரு குறிப்பையும் கொண்டுவரக் கூடாது என்று ஒரு
விதி. அதையும் மீறி செயல்பட்ட ஒரு தேர்வாளரை அதிகாரிகள் தேர்வு எழுதும்
அறையில் இருந்து வெளியேற்றினர். அவர் ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தை
அணுகினார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, 'நான் படிக்கும் காலத்திலும்
இப்படிக் கடைசி நேரத்தில் சிறு குறிப்புகளை எடுத்துச் செல்வது நடந்தது
உண்டு.
தேர்வுக்கு முன் நினைவுபடுத்திக்கொள்ள உதவும் எண்ணத்தில் அப்படி
எடுத்துச் செல்வதில் தவறு இல்லை!’ என்று தேர்வுக் குழுவின் உத்தரவுக்குத்
தடைவிதித்தார். பின்னர், சுப்ரீம் கோர்ட் அந்த உத்தரவை ரத்துசெய்தது.
அப்போது, 'ஒரு நீதிபதி தன்னுடைய இளமைக் காலத்தில் அல்லது மாணவப் பருவத்தில்
நடந்த நிகழ்வுகளை முன்மாதிரி யாக வைத்து, தீர்ப்பு வழங்கக் கூடாது என்றும்
சம்பந்தப்பட்ட விதிகளின் அடிப்படையில்தான் வழங்க வேண்டும்’ என்று
கண்டித்தது.
நான்கூட, 'பெரியார் எழுத்துகளுக்குக் காப்புரிமை கோர
முடியாது. யார் வேண்டுமானாலும் அவருடைய எழுத்துகளைப் பதிப்பிக்கலாம்’ என்று
தீர்ப்பு சொன்னேன். அந்தத் தீர்ப்பின் இறுதியில் 'இந்த சகோதர யுத்தத்தில்
பெரியார் எழுத்துகள், வழக்குக் கோப்புகளில் சிக்கிப் புதைக்கப்படக் கூடாது’
என்று முடித்தேன். அதற்கு, வழக்குப் போட்டவர் தனது கட்சி இதழில் இவ்வாறு
விமர்சனம் செய்தார்:
'நீதியரசர்கள் சட்டத்தின்படி தீர்ப்பளிக்க வேண்டும். அவர்களது மலைப் பிரசங்கங்கள் எங்களுக்குத் தேவையில்லை’!''
அடுத்த வாரம்



- இன்னும் பேசுவோம்...
thanx - vikatan
0 comments:
Post a Comment