திரும்பிய பக்கமெல்லாம் தமிழ் ஈழத் தீ
இதோ... தமிழகத்தின் பல இடங்களிலும் மாணவர்கள் நடத்திய போராட்டங்களின் லைவ் ரிப்போர்ட்!
சென்னை: அப்புறப்படுத்த நினைத்த போலீஸ்!
சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 11-ம் தேதி தொடங்கிய
தொடர் உண்ணாவிரதப் போராட்டம், இன்னும் நீடிக்கிறது. மற்ற கல்லூரி
மாணவர்களின் போராட்டத்தைவிட சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் அதிக
ஆபத்து மிகுந்தது என்று காவல் துறை கருதியதோ என்னவோ... 'நீதிமன்ற
வளாகத்தின் உள்ளே வெடிகுண்டு இருக்கிறது. அதனால், சோதனை நடத்த வேண்டும்’
என்று, நீதிமன்ற வளாகத்தைவிட்டு அவர்களை வெளியேற்றினர். அவர்களை வெளியேற்ற
மட்டும்தான் காவல் துறையால் முடிந்தது. ஆனால், போராட்டம் தொடர்கிறது.
சென்னை சட்டப் பல்கலைக்கழக மாணவர்களும் தொடர் உண்ணாவிரதம் இருந்து
வருகின்றனர். இதில், ஆந்திராவைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த நான்கு
நாட்களாக உண்ணாவிரதத்தில் பங்கேற்று வருகிறார். சென்னைப் பல்கலைக்கழக
மாணவிகள் விடுதிக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி தங்களின் ஆதரவைப்
பதிவுசெய்தனர்.
உண்ணாவிரத்தை நிறுத்தினாலும் லயோலா கல்லூரி மாணவர்கள்,
கையெழுத்து இயக்கம் தொடங்கி உள்ளனர். மாநிலக் கல்லூரி, மயிலாப்பூர்
விவேகானந்தா கல்லூரி, வேளச்சேரி குருநானக் கல்லூரி, துரைப்பாக்கம்
டி.பி.ஜெயின் கல்லூரி என்று சென்னையில் உள்ள பல கல்லூரி மாணவர்களும்
உணர்வுப்பூர்வமாகப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
செங்கல்பட்டு: 'இதயத்துடிப்பு குறைந்தது’
செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 11 பேர் கல்லூரி
வாசலில் பந்தல் அமைத்து உண்ணாவிரதத்தில் அமர்ந்துள்ளனர். கல்லூரி
மாணவர்கள் பலரும் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு அவர்களுக்கு
ஆதரவளிக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் சித்திரசேனன் வந்து உண்ணாவிரதத்தைக்
கைவிடுமாறு கேட்டுக்கொண்டும், மாணவர்கள் மசியவில்லை. 13-ம் தேதி...
மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் இருந்த மாணவர்களில் சிலருக்கு உடல்நிலை
மோசமானதை அறிந்த ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா,
மருத்துவக் குழு ஒன்றை அழைத்துவந்தார்.
மாணவர்களை பரிசோதனை செய்த
மருத்துவக் குழு, 'மாணவர்களின் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம்
குறைந்துவிட்டது. உடனே சிகிச்சை அளிக்க வேண்டும்’ என்று எச்சரிக்கை
செய்தனர். கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் போலீஸார் கெஞ்சிக்
கேட்டுக்கொண்டதை அடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்ட மூவரை மட்டும் மருத்துவச்
சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர் மாணவர்கள். மற்றவர்கள் தொடர்கின்றனர்.
கோவை: விமான நிலையத்துக்குள் நுழைந்தனர்
கடந்த 11-ம் தேதி முதல் கோவை சட்டக் கல்லூரி மற்றும்
அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் 22 பேர், ம.தி.மு.க. அலுவலகத்தில்
காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை பாரதியார்
பல்கலைக்கழக மாணவர்கள் எட்டுப் பேரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்
நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக 100-க்கும் மேற்பட்ட கல்லூரி
மாணவர்கள் போராட்டத்தில் குதித்து இருக்கின்றனர். கோவை இந்துஸ்தான் கலை
அறிவியல் கல்லூரி மாணவர்கள், இலங்கையில் தனித் தமிழ் ஈழம் அமைய
பொதுவாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி வகுப்புகளைப் புறக்கணித்து
போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில்
குதிக்கத் தயாராகி வருகின்றனர்.
13-ம் தேதி மதியம் சட்டக் கல்லூரி மாணவர்கள் 28 பேர்
கோவை விமான நிலையத்துக்கு வந்தனர். காவல் துறையினர் அவர்களிடம் சமாதானம்
பேசியும் கலைந்து செல்லாமல், மூன்று அடுக்குப் பாதுகாப்பையும் மீறி உள்ளே
சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேறு வழி இல்லாமல் அனைவரையும் போலீஸார்
கைது செய்தனர்.
இதே போல், காரைக்குடி அழகப்பா கலைக் கல்லூரி, சேலம்
சட்டக் கல்லூரி , தேனி கம்மவார் கல்வியியல் கல்லூரி, கடலூர் அரசுக் கலைக்
கல்லூரி, செயின்ட் ஜோசப், கிருஷ்ணசாமி கல்லூரி, புதுச்சேரி அரசு சட்டக்
கல்லூரி ஆகியவற்றிலும் மாணவர் போராட்டம் தொடங்கியுள்ளது.
தமிழக மாணவர்களின் போராட்டங்களாவது மத்திய அரசை உலுக்குமா?
- ஜூ.வி. டீம்
மாணவர் போராட்டக்குழு அமைப்பு
இலங்கைக்கு எதிரான அனைத்துக் கல்லூரி மாணவர்களின்
போராட்டத்தை ஒருங்கிணைக்கும் வகையில், 'தமிழீழத்துக்கான மாணவர் போராட்டக்
குழு’ ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 14-ம் தேதி சென்னையில்
பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்தக் குழுவினர், ''ஜெனிவா மனித உரிமை
மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை நாங்கள் ஏற்கவில்லை.
வல்லாதிக்க நாடான அமெரிக்கா நினைத்திருந்தால் ஈழத்தில் இனப்படுகொலை நடந்த
நேரத்தில் அதைத் தட்டிக் கேட்டு தடுத்திருக்கலாம். அப்போது சில
லாபங்களுக்காக அமைதியாக வேடிக்கை பார்த்த அமெரிக்காவுக்கு, இப்போது அந்தக்
கேள்வி கேட்கும் உரிமையே கிடையாது. எங்கள் போராட்டம் விடாது தொடரும்.
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களும் வரும் 18-ம் தேதி ஒரே
நேரத்தில் ராஜபக்ஷே, மன்மோகன்சிங் உருவ பொம்மைகளை எரித்துப் புறக்கணிப்புப்
போராட்டம் நடத்த உள்ளோம்'’ என்று கொந்தளித்தனர்.
வேலூர்: 'டி.சியைக் கொடுத்திடுவோம்!’
வேலூர் ஊரீசு கல்லூரியில் கடந்த 11-ம் தேதி காலை 10
மணிக்கே 50 மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உண்ணாவிரதம் தொடங்கினார்கள்.
கல்லூரி முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியும் யாரும் கலைந்து செல்லவில்லை.
வேலூர் தெற்கு காவல் நிலைய அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையும்
தோல்விதான்.
'போராட்டங்களில் கலந்துகொள்பவர்கள் அனைவருக்கும் டி.சி.
தரப்படும்’ என்று மிரட்டியும் அவர்கள் மசியவில்லை. ஒருநாள் அடையாள
உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள், 3 மணி அளவில் கலைந்தனர். திருப்பத்தூர்
தூயநெஞ்சக் கல்லூரி மாணவர்கள் 12-ம் தேதி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
குடியாத்தம் திருமகள் ஆலைக் கல்லூரி மாணவர்களும் அன்றைய தினம் அடையாள
உண்ணாவிரதம் மேற்கொண்டனர். 14-ம் தேதியில் இருந்து வேலூர் சட்டக் கல்லூரி
மாணவர்கள் 18 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
திருச்சி: தாக்கப்பட்ட போலீஸ் வாகனம்!
திருச்சியில் கடந்த 12-ம் தேதி முதல் சட்டக் கல்லூரி
மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். கல்லூரி வளாகத்தில் தொடங்கிய
உண்ணாவிரதத்தில், நாளுக்கு நாள் மாணவர்களின் எண்ணிக்கை கூடியது.
13-ம் தேதி புரட்சிகர மாணவர்கள் இயக்கத்தைச் சேர்ந்த
மாணவர்கள் 35 பேர் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகே ராஜபக்ஷே, மன்மோகன்
சிங் ஆகியோரது கொடும்பாவியை எரித்தனர். அப்போது காவல் துறையினர் அவர்களில்
எட்டு பேரை கைது செய்தனர். அதனைக் கண்டித்து மீண்டும் மாணவர்கள்
போராட்டத்தில் இறங்கினர். போலீஸ் துணை கமிஷனர் செல்வகுமார் மாணவர்களிடம்
பேச்சுவார்த்தை நடத்த, எட்டு பேரும் விடுவிக்கப்பட்டனர்.
அப்போது
கூட்டத்தில் இருந்த மாணவர் ஒருவர் போலீஸ் வாகனத்தை ஓங்கி அடித்தார். இதனால்
கோபம் அடைந்த காவலர் ஒருவர் அந்த மாணவரை அடிக்க... மீண்டும் மாணவர்கள்
போராட்டத்தில் குதித்தனர். இதனால், திருச்சியில் இருந்து செல்லும் முக்கிய
சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சட்டக் கல்லூரி முதல்வர்,
ம.தி.மு.க. பிரமுகர்கள் மற்றும் சீனியர் வழக்கறிஞர்கள், 'பொதுமக்களுக்கு
இடையூறாக மாற்றிவிடாதீர்கள்’ என்று மாணவர்களிடம் எடுத்துச் சொன்ன பிறகே,
அவர்கள் அமைதியானார்கள். இந்தப் போராட்டத்தால் மூன்று மணி நேரத்துக்கும்
மேல் திருச்சி ஸ்தம்பித்தது.
மதுரை: பூட்டப்பட்ட தபால் நிலையம்!
மதுரையில் பெரும்பாலும் அனைத்து கல்லூரி மாணவர்களும்
உள்ளிருப்பு, ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். சட்டக் கல்லூரி
மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 11-ம்
தேதி ஸ்டேட் பேங்க் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அடுத்த நாள் மாவட்ட
ஆட்சியர் அலுவலகம் அருகில் இருக்கும் தபால் நிலையத்தைப் பூட்டினர். இதனால்
கூச்சல் குழப்பம் ஏற்பட... காவல் துறையினர் 17 மாணவர்களை கைதுசெய்தது.
13-ம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர்கள் ஒருநாள் உள்ளிருப்புப்
போராட்டம் நடத்தி தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். மதுரை சட்டக் கல்லூரி
மாணவர்கள் மூவர் கல்லூரி வளாகத்தில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு
வருகின்றனர்.
நெல்லை: மிரட்டிய கல்லூரி நிர்வாகம்!
நெல்லையில் கடந்த 11-ம் தேதியில் இருந்து பல்வேறு
கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் தீவிரமாக
இருக்கிறார்கள். இவர்களில் பலருக்கு உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து
மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். பல மாணவர்களின்
பெற்றோர்கள் வந்து சமாதானப்படுத்தியதில் அவர்கள் உண்ணாவிரத்தை
முடித்துக்கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு ஆதரவாக
இருக்கின்றனர்.
பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மாணவர்கள் 11 பேர்
கல்லூரியில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். கல்லூரி நிர்வாகம் அவர்களுக்கு
அனுமதி மறுக்கவே, புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாருக்குச்
சொந்தமான கடை அருகே உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இருந்தும் கல்லூரி
நிர்வாகமும் போலீஸ் தரப்பும் தொடர்ந்து மாணவர்களை மிரட்டி வருவதாக குற்றம்
சாட்டுகிறார்கள். இந்த நிலையில் மாணவர்களுக்கு ஆதரவாக ம.தி.தா. இந்து
கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். நெல்லை மாவட்டத்தில்
போராட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது என்றாலும், உண்ணாவிரதம்
மேற்கொண்டு வரும் பல்வேறு மாணவர்களின் உடல்நிலை மோசமான நிலையை எட்டி
உள்ளது. காவல் துறையினால் மாணவர்கள் எப்போதும் கைது செய்யப்படலாம்.
thanx - ju vi
0 comments:
Post a Comment