Monday, March 18, 2013

மிரளவைத்த போலி கிரெடிட் கார்டு நெட்வொர்க்

மிரளவைத்த போலி கிரெடிட் கார்டு நெட்வொர்க்
மதுரை.. சிவகங்கை... பள்ளிக்கரணை!
போலி கிரெடிட் கார்டுகளால் மிரண்டுபோயிருக்கிறது மதுரை. நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்து​பவரா? அப்படியானால், அவசியம் படியுங்கள்... 


கடந்த 29.12.12 அன்று மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள ஜி.ஆர்.டி. நகை மாளிகையில் 22 வயது மதிக்கத்தக்க ஒருவன் 20 லட்ச ரூபாய்க்கு நகை வாங்கி இருக்கிறான். மறுநாள் இன்னொருவன், 27 லட்சத்துக்கு நகை வாங்கி இருக்கிறான். அந்த இருவரும் கொடுத்த கிரெடிட் கார்டுகள் போலியானவை என்பது கேஷியருக்குத் தெரியவில்லை.


சில நாட்களுக்குப் பிறகு, வெளிநாட்டு வங்கி ஒன்றில் இருந்து உள்ளூர் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மூலமாக சம்பந்தப்பட்ட நகைக் கடையைத் தொடர்புகொண்டு, 'வெளி​நாட்டைச் சேர்ந்த ஒருவரது கிரெடிட் கார்டு உங்கள் கடையில் மிஸ்யூஸ் செய்யப்பட்டுள்ளது. கவனமாக இருக்கவும்’ என்று தகவல் வந்திருக்கிறது. நகைக் கடை மேனேஜர் பிரபாகரன் உடனே, மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.


சம்பவம் நடந்த நாளில் நகைக் கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்து சந்தேகத்துக்கு உரிய இருவரை வட்டமிட்டு இருக்கிறது போலீஸ். குறிப்பிட்ட அந்த நபர்கள் வந்த நேரத்தில், நகைக் கடை உள்ள ஏரியாவில் பயன்படுத்தப்பட்ட செல்போன் நம்பர்களின் பட்டியலை எடுத்தது. இரண்டு எண்களில் மட்டும், வேறு எந்த எண்ணுக்கும் அழைப்பு போகாமல் மாறி மாறி பேசப்பட்டு இருந்தது. 


அந்த செல்போன் நம்பரின் முகவரியில் விசாரித்தபோது, அது போலியானது என்பது தெரிந்தது. அந்த நம்பர் பயன்படுத்தப்படுகிறதா என்பதைத் தொடர்ந்து போலீஸ் கண்காணிக்க ஆரம்பித்து, சில தினங்களில் அந்த நம்பரைப் பயன்படுத்திய இருவரையும் பிடித்தனர். சிக்கிய ராம்குமார், ராஜராஜேஸ்வரன் இருவரும்தான் ஜி.ஆர்.டி.யில் போலி கிரெடிட் கார்டு கொடுத்து நகை வாங்கியவர்கள் என்பது தெரிந்தது. இருவருமே மதுரை செல்லூர் ஜான்சிராணிபுரத்தைச் சேர்ந்தவர்கள்.


இருவரிடமும் விசாரித்தபோது, 'இந்தக் கார்டுகளைப் பயன்படுத்தி பொருட்களை வாங்கிக் கொடுத்தால், எங்களுக்கு கமிஷன் தருவதாக விளாங்குடி ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் பணிபுரியும் மருதுபாண்டி என்பவர் கூறினார். அதன்படி செய்தோம்'' என்று கூலாகச் சொல்லி இருக்கின்றனர். அதிர்ந்த போலீஸார், மருதுபாண்டியையும், அவருக்கு உதவியாக இருந்த சதீஷ்குமார் என்பவரையும் அமுக்கிவிட்டனர்.


சிவகங்கை மாவட்டம் ராஜகம்பீரத்தைச் சேர்ந்த பாசில் ரகுமான் என்பவர் போலி கிரெடிட் கார்டுகளை மருதுபாண்டிக்கு சப்ளை செய்திருக்கிறார். அவரையும் பிடிக்குள் கொண்டுவந்து இருக்கிறது போலீஸ். அவரிடம் இருந்து 45 பவுன் தங்க நகையும்  காரும் பறிமுதல் செய்யப்பட்டன.


போலீஸ் விசாரணையில் பாசில் ரகுமான், ''சென்னை பர்மா பஜாரில் சைனா மொபைல் போன்களை விற்பனை செய்துவந்தேன். அப்போது, பள்ளிக்கரணையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்ப​வருடன் பழக்கம் ஏற்பட்டது. அவன்தான் எனக்கு போலி கிரெடிட் கார்டுகளை அச்சடித்துக் கொடுத்தான். எவ்வளவு பொருட்கள் வாங்கு​கிறாயோ, அதன் மதிப்பில் 25 சதவிகிதத்தை மட்டும் எனக்குக் கொடுத்தால் போதும் என்று சொன்னான். அந்த டீலிங் பிடித்திருந்ததால், இந்தத் தொழிலில் ஈடுபட்டேன். நல்ல லாபம் கிடைத்தது' என்று கூறி இருக்கிறான்.


அடுத்து, சுரேஷ்குமாரையும் அமுக்கியது போலீஸ். அவனிடம் நடத்திய விசாரணையில், 'இன்டர்நெட் மூலம் பொருட்கள் வாங்குபவர்​களிடம் இருந்து, அவர்களின் கிரெடிட் கார்டு விவரங்களைத் திருடுவதற்கு ஒரு டீம் இருக்கிறது. அவர்கள் திருடிய விவரங்களை என்னைப் போன்றவர்களுக்கு விற்பார்கள். ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து, நாங்கள் அந்த விவரங்களை வாங்குவோம். அந்த டேட்டாக்களை எந்தத் தகவலும் பிரின்ட் செய்யப்படாத கிரெடிட் கார்டுகளில் பதிவுசெய்வோம். கார்டின் மேல் உள்ளூர் நபர் ஒருவரின் பெயர் உள்ளிட்ட தகவல்களைப் பிரின்ட் செய்வோம். அட்டையின் மேல் இருக்கும் நபர் மதுரைக்காரராக இருப்பார். ஆனால், கணக்கு எண் சீனாக்காரனுடையதாக இருக்கும். நம்ம ஊர்க்காரர்களின் கணக்கில் பத்து ரூபாய் குறைந்தாலும், அதைப் பெரிய பிரச்னையாக்கிவிடுவார்கள். அதனால்தான் வெளிநாட்டுக்காரர்கள் கணக்கில் கை வைப்போம். 10 ஆயிரம் ரூபாய்க்கு பொருள் வாங்கினாலும், அவர்களுக்கு சில டாலர்களே குறையும். அதை அவர்களும் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள்'' என்று அதிர்ச்சித் தகவலைக் கக்கினான்.


மதுரை போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூரிடம் பேசினோம். 'போலி கிரெடிட் கார்டு தயாரித்த ஒட்டு​மொத்தக் கும்பலையும் பிடித்துவிட்டோம். கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது, மக்கள் உஷாராக இருக்க வேண்டும்'' என்று எச்சரித்தார்.


வசதிகளும் வாய்ப்புகளும் அதிகமாக அதிகமாக, பிரச்னைகளும் அதிகரிக்கவே செய்கிறது. உஷாரா இருங்க மக்களே!


- கே.கே.மகேஷ்,

படங்கள்: பா.காளிமுத்து

thanx - ju vi 

2 comments:

RAMA RAVI (RAMVI) said...

மிகவும் தேவையான விழிப்புணர்வு பதிவு. நன்றி பகிர்வுக்கு.

Sathya said...

அடப்பாவிகளா.....,

இவனுக்ககிட்டே எப்படித்தான் பாஸ் ஜாக்கிரதையா இருக்குறது. பேங்ல வேலை செயுரவனே இப்படி பண்ணுனா என்ன பண்ணுறது. :(

Web Hosting India