Sunday, March 24, 2013

ஈழத் தமிழருக்காக கைகோத்த 25 நாடுகள்! ஜெனிவாவில் திக்.. திக்.. நிமிடங்கள்!

ஈழத் தமிழருக்காக கைகோத்த 25 நாடுகள்!

ஜெனிவாவில் திக்.. திக்.. நிமிடங்கள்!

ஏமாற்றங்களை எல்லாம் கடந்து, 25 நாடுகளின் ஆதரவோடும் 13 நாடுகளின் எதிர்ப்போடும் இலங்கை மீது அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறி விட்டது. இதுவரை ஈழத்தமிழன் அழிவுக்கு எதிரான குரல், இலங்கையிலும் தமிழகத்திலும் புலம்பெயர்ந்து தமிழர் வாழும் நாடுகளில் மட்டுமே கேட்டது. அந்தக் குரலுக்கு உலகளாவிய அங்கீகாரம் இப்போது கிடைத்துள்ளது.  
 
 
2012-ம் ஆண்டு மார்ச் மாதத் தீர்மானத்துக்கும் இப்போதைய தீர்மானத்துக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லைதான். அதேபோல் மக்களின் முன்னேற்றத்துக்காகக் கொடுக்கப்பட்ட ஓர் ஆண்டு அவகாசத்தில் இலங்கையின் கள நிலைமையிலும் பெரிய வித்தியாசம் இல்லை. இப்போது மேலும் ஓர் ஆண்டு காலம் அவகாசம் தரப்பட்டுள்ளது.


வாக்கெடுக்கும் முன் விவாதங்கள் 


அனைத்து தமிழர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நாள் மார்ச் 21. அன்றைய தினம் இந்திய நேரம் மதியம் 2 மணிக்கு இறுதி விவாதம் நடந்தது. இலங்கையை பச்சையாக ஆதரித்தது பாகிஸ்தான். ''இலங்கைக்கு இன்னும் அவகாசம் தேவை. அந்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவது முறையானதல்ல. தீவிரவாதத்தை ஒழிக்கும் போரில் வென்றுள்ள இலங்கையைப் பாராட்ட வேண்டுமே தவிர, எதிர்க்கக் கூடாது’ என்று இலங்கையை அவர்கள் ஆதரிக்க, அடுத்து இந்தியா பேசியது.


தொடக்கத்திலேயே ஒலிவாங்கியின் இடர்பாடோடு தொடங்கிய இந்தியாவின் பேச்சு, ''13வது  அரசியல் சட்டத்திருத்தத்தை அமல்படுத்துதல், 'கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்கப் பரிந்துரைகள்’ (எல்.எல்.ஆர்.சி.) அடிப்படையில் முன்னேற்றப் பணிகள், தமிழர் வாழ்நிலங்களில் பாதுகாப்புப் படையைக் குறைத்தல், நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திர விசாரணை செய்தல், இடம்பெயர்ந்தவர்களுக்கு வசதியை ஏற்படுத்துதல் போன்றவை நிறைவேற்றப்பட வேண்டும். 


இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வடக்கு மாகாண தேர்தல் நடக்கும் என எதிர்ப்பார்க்​கிறோம். போர் முடிந்திருக்கும் இந்தத் தருணத்தை சமாதானத்துக்கான காலமாகப் பார்க்கிறோம்'' என்று, இந்தியா சார்பில் பேசியவர் கவனமாக இலங்கையைக் குற்றம் சாட்டிவிடாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார். ''இலங்கை நம்முடன் நெருங்கிய உறவில் இருக்கிறது. அதனால் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னையில் எப்போதும் இந்தியா கவனம் செலுத்தும்'' என்றும் கவனத்துடன் முடித்தார்.


அமெரிக்காவின் தீர்மானத்தில் உள்ள ஒரு வரியைக்கூட இலங்கை ஏற்றுக்கொள்ள​வில்லை. ''அமெரிக்காவின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கையில் நாங்கள் செய்த மறுவாழ்வுப் பணிகளை அமெரிக்கா கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை’ என்று இலங்கைப் பிரதிநிதி பேசினார்.
இறுதியில் வாக்கெடுப்பு நடந்தது. அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ஆதரவாக 25 நாடுகள் வாக்களித்து தீர்மானத்தை வெற்றிபெற வைத்தன. இந்தியாவும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது. 13 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.


நாங்கள் பாடம் புகட்டுவோம்! 


ஜெனிவாவில் இலங்கையின் மனித உரிமைப் பிரச்னைகள் பெரும்அதிர்வுகளை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது. மனித உரிமைப் பிரச்னைகளை எடுத்துக்கூறும் அமைப்புகளின் மீதும் ஐ.நா-வின் பிரதிநிதிகளின் மீதும் இலங்கை அரசு, மிகச்சுலபமாகப் புலிப்பட்டம் கட்டி புறக்கணிக்க முயற்சி செய்கிறது. புலிப் பட்டம் கட்டும் காட்டத்தை இலங்கை அரசின் மனித உரிமைகளுக்கான பிரதிநிதி மகிந்த சமரசிங்க ஜெனிவாவிலேயே வெளிப்படுத்தினார்.


 அவர், ''ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற அமைப்புகள் புலம்பெயர்ந்துள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவில் செயல்படுகிறது. ஐ.நா. அதிகாரி நவநீதம் பிள்ளையும் அந்த ஆதரவில்தான் செயல்படுகிறார்'' என்று ஆதாரமில்லாமல் ஆவேசப்பட்டார்.


மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி வெளியிட்ட 'நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம். இலங்கை ஆயுதப் படைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை’ என்ற 144 பக்க அறிக்கையில், இலங்கையைத் தோலுரித்துக் காட்டியது. இந்த அறிக்கையில், 2006-2012 வரை பாலியல் வல்லுறவுகளால் பாதிக்கப்பட்ட 75 பேரின் ஆதாரப்பூர்வ வாக்குமூலங்கள் வெளியிட்டு இருந்தது. 


இதுபற்றி கருத்துக் கூறிய அந்தக் கண்காணிப்பகத்தின் ஆசிய இயக்குநர் பிராட் ஏடம்ஸ், ''இலங்கையின் பாதுகாப்புப் படையினர் சிறையில் பல தமிழ் ஆண்களையும் பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திச் சித்ரவதை செய்துள்ளனர். இவை யுத்தகாலத்தில் மட்டும் நிகழ்ந்த அட்டூழியங்கள் அல்ல. இப்போதும் அந்த அட்டூழியங்கள் தொடர்கின்றன. புலிகளோடு தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படும் தமிழர்கள் கடும் ஆபத்தை எதிர்கொள்கிறார்கள்''என்றார்.


ஆனால், இலங்கையோ இதை முழுமையாக மறுத்தது. இப்படி ஆயிரக்கணக்கான மனித உரிமை பிரச்னைகள் பேசப்பட்டாலும் இலங்கைக்கு தண்டனை என்பதே இல்லை. ஏன் என்றால் சர்வதேச நீதிமன்றத்தாலோ, ஐ.நா-வினாலோ இலங்கையை தண்டிக்கவே முடியாது. காரணம், இலங்கையும் இந்தியாவும் சர்வதேச நீதிமன்றத்துக்கான விசாரணை விதிமுறைகளுக்கு இணங்கி இன்றுவரை கையெழுத்திடவில்லை.


அமெரிக்காவின் நீர்த்துப்போன தீர்மானம் 


இலங்கையை தன் வசத்துக்குள் கொண்டுவர துடித்துக் கொண்டிருந்த அமெரிக்கா, இத்தனை நாட்களாக 'ஐ.நா. தீர்மானத்தில் சர்வதேச விசாரணை’ என்று பொய்யாக மிரட்டுகிறது. இப்போது அதை விலக்கிக்கொண்டு ஒரு வெற்றுத் தீர்மானத்தைத்தான் ஐ.நா-வில் சமர்ப்பித்தது. இலங்கையில் தமிழர் வாழ் நிலங்களில் ராணுவத்தை உடனே விலக்க வேண்டும், போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும், மக்கள் நலன் சார்ந்த அமைப்புகளை இலங்கை அரசு வலுப்படுத்த வலியுறுத்தப்படும்.

.. இவ்வாறு அந்த தீர்மானம் இருக்கிறது. இலங்கை மீதான நடவடிக்கைகள் பேசப்பட்ட காலத்திலிருந்தே இனப்படுகொலை என்பதை மறைத்துப் போர்க் குற்றம் என்ற அடிப்படையிலேயே அமெரிக்கா தனது தீர்மானங்களை முன்வைத்தது. இனப்படுகொலை என்று குறிப்பிடப்படவில்லையே என்று கேள்விகள் எழுந்தபோது 'போர்க் குற்றத்தின் மீதான சுதந்திர விசாரணை’ நடக்குமானால் அதிலே 'இனப்படுகொலை’ என்பது சேர்க்கப்படும் என்று ஏமாற்றி, இப்போது அந்த 'சுதந்திர விசாரணை’ என்ற பேச்சையே விலக்கிக் கொண்டது.


சுப்பிரமணியன் சுவாமியின் வேலை! 


இப்படி இந்தத் தீர்மானத்தில் மாற்றம் ஏற்பட்டதற்கு, இலங்கையை காப்பாற்றும் முடிவில் இந்தியா உறுதியாக இருப்பதே காரணம் என்று சொல்லப்பட்டாலும், இதற்குப் பின்னால் சுப்பிரமணியன் சுவாமியின் பங்களிப்பு உண்டு என்று சொல்லப்படுகிறது. மார்ச் 1-ம் தேதி, மகிந்த ராஜபக்ஷேவை சந்தித்த சுவாமி, அடுத்த நான்காவது நாளிலேயே அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைச் சந்திக்கிறார் என்றால் அது இலங்கையைக் காப்பாற்றத் துடிக்கும் செயல்தான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 


'மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்த விசாரணையாக இருந்தாலும், அது ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அரசால்தான் நடத்தப்பட வேண்டும். ஒருபோதும் சர்வதேச பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்படக் கூடாது’ என்பதே சு.சுவாமி அமெரிக்க அதிகாரிகளிடமும் ஒபாமாவிடமும் தெரிவித்த கருத்தின் சுருக்கம். இதையேதான் அமெரிக்காவும் தன் தீர்மானத்தில் கூறி இருக்கிறது. எப்படி இருந்தாலும் தமிழர் பிரச்னையை உலக நாடுகளின் விவாதப் பொருளாக மாற்றிவிட்டது இந்தத் தீர்மானம்!


- மகா.தமிழ்ப்பிரபாகரன்

thanx - ju vi

2 comments:

'பரிவை' சே.குமார் said...

தீர்மானம் வெற்றி... ஆனால் தீர்மானத்தில் ஒன்றும் இல்லையே... எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று ராஷபக்சே கொக்கரிக்கிறான்....

நல்ல பகிர்வு....

abisri said...

நல்லது அடுத்து என்ன