Tuesday, February 12, 2013

பாலு மகேந்திரா பேட்டி @ கல்கி




நான் செட் பண்ணுவதுதான் ட்ரெண்ட்!

பேட்டி: கி.. திலீபன்

இன்னலும், இன்பமும் கலந்த மனித வாழ்வை அதன் முழு யதார்த்தத்தோடு புத்தம் புதிய சினிமா மொழியில் தொழில்நுட்ப நேர்த்தியோடு தமிழ் ரசிகர்களுக்கு அளித்தவர் பாலுமகேந்திரா... ‘வீடு’, ‘சந்தியாராகம்’, ‘அழியாத கோலங்கள்என காலத்தால் அழியாத படைப்புகள் மூலம் தமிழ் சினிமாவை நவீன தளத்துக்கு நகர்த்திச் சென்ற திரைப் படைப்பாளி. அவர் கல்கிக்கு அளித்த பிரத்யேக பேட்டி.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போதுதலைமுறைகள்படம் எடுத்துக் கொண்டிருக்கிறீர். உங்களுக்குள் இருக்கும் அந்தக் கலைத்தாகம் இன்னும் தீரவில்லையா?
கலைத்தாகம்னு சொல்றதைவிட சினிமா மீதும் வாழ்க்கை மீதும் எனக்கு இருக்கும் பெருங் காதல்னு சொல்றதுதான் சரியா இருக்கும். வாழ்க்கை மீதும், சினிமா மீதும் நான் கொண்டிருக்கும் காதல் எனது கடைசி மூச்சு உள்ளவரை தணியாது."
கதைநேரம் தொடரின் மூன்றாவது பாகத்தைக் கொண்டு வரும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளீர்களே?
ஆமாம். எனது கதைநேரம் தொலைக்காட்சித் தொடரின் மூன்றாம் பாகத்தைக் கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறேன் என்பது உண்மைதான். விஷுவல் கம்யூனிகேஷன் துறையுள்ள பெரும்பாலான கல்லூரிகளில் எனது கதைநேரம் குறும்படங்கள்தான் பாடப்புத்தகங்களாக அமைந்துள்ளன என்று பல பேராசிரியர்கள் சொல்லியிருக்கிறார்கள். எழுத்து என்ற ஊடகத்திலிருந்து சினிமா என்ற ஊடகத்துக்கு எப்படி ஒரு கதையைக் கொண்டு செல்வது என்பதற்கு எனது குறும்படங்கள் உதாரணமாக இருக்கும் என்பது கணிப்பு. எனது படைப்புகள் இளைய தலைமுறைக்குப் பயன்பட வேண்டும் என்கிற ஆவல் தான் என்னை மும்முரமாக இயக்கிக் கொண்டிருக்கிறது. சினிமா சம்பந்தப்பட்ட வேலைகள் எப்பொழுதுமே என்னை சோர்வடைய வைத்ததில்லை. காரணம் நான் சினிமாவைக் காதலிக்கிறேன், அன்றும் இன்றும், இனியும்...! காதல் வயப்பட்டவர்கள் சோர்வடைவதில்லை."
தலைமுறைகள் படத்தில் இன்றைய ட்ரெண்டுக்கு நீங்கள் மாறி ஆக வேண்டிய கட்டாயம் இருந்ததா?

எனது முந்தைய படங்களில் அன்றிருந்த ட்ரெண்டுக்கு நான் மாறியிருந்தேனா? நிச்சயமாக இல்லை. ட்ரெண்டைப் பற்றி நான் என்றுமே கவலைப்பட்டதில்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் நான் செட் பண்ணுவதுதான் ட்ரெண்ட்."
ஒளிப்பதிவாளர் அல்லது இயக்குனர் எதை உங்களது அடையாளமாகக் கருதுகிறீர்கள்?
எனது படங்களின் திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு ஆகிய பணிகள் அனைத்தையும் நானே செய்கிறேன். இப்படிச் செய்வதில்தான் எனக்கு முழு மகிழ்ச்சி. என்னைக் கேட்டால் பிலிம் மேக்கர் என்பதுதான் எனது அடையாளம். இப்படிக் குறிப்பிடப்படுவதையே நான் விரும்புகிறேன்."
இலங்கைத் தமிழர்கள் பற்றி நீங்கள் படம் பண்ண நினைத்ததுண்டா?
பல முறைகள், நினைத்தது மட்டுமல்ல அதற்கான முயற்சியிலும் இறங்கியதுண்டு. அந்த முயற்சிகளைப் பாதியிலேயே கைவிட்டு விடுவேன். காரணம் இலங்கைத் தமிழர்கள் பற்றிய எனது படம் மிக மிகத் தீவிரமாக இருக்கும். இங்குள்ள பலருக்கு அந்தத் தீவிரம் பிடிக்காமல் என்னை அழித்து விடுவார்கள். அந்தப் பயம்தான் அப்படியொரு படத்தை எடுக்காததற்குக் காரணம்."
உங்கள்மூன்றாம் பிறைபடத்தில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரம் வணிக ரீதியான படைப்பாகத் தெரிகிறதே?
நிச்சயமாக இல்லை. மனவளர்ச்சி குன்றிய ஓர் இளம்பெண்ணை விபச்சார விடுதியொன்றிலிருந்து ஒரு நல்ல மனிதன் காப்பாற்றி அவளை தன் கண்மணியாகக் கருதி வளர்க்கிறான். அந்த நல்ல மனிதனின் மனத்திண்மையைத் தெளிவுபடுத்த சில்க் ஸ்மிதா கதாபாத்திரம் தேவைப்பட்டது. சில்க் ஸ்மிதா போன்ற வாளிப்பான ஒரு பெண்ணின் காம அழைப்பையே நிராகரிக்கும் மன உறுதி கொண்டவன் அவன் என்பதைத் தெளிவுபடுத்தவே அந்தப் பாத்திரம். அந்தப் படத்தில்பொன்மேனி உருகுதேஎன்ற பாடல் வணிக ரீதியான சமரசம். அந்தப் பாடல் இல்லையென்றால்மூன்றாம் பிறைஇன்னும் சிறப்பாக இருந்திருக்கும்."
உங்களதுஜூலி கணபதி’, ‘அது ஒரு கனாக்காலம்படங்கள் வணிக ரீதியாக வெற்றியைத் தரவில்லையே?
தவறான கணிப்பு. ரிலீசுக்கு முன்பே லாபம் பார்த்த படம்ஜூலி கணபதி’. திரையிட்ட பின் தியேட்டர்களிலிருந்து போனஸ் கிடைத்தது. ‘அது ஒரு கனாக் காலம்கூட முதலீட்டை விட சொற்பம் லாபம் பார்த்த படம்தான். இன்னுமொரு முக்கியமான விஷயம் முழுக்க முழுக்க வணிகத்துக்கென்று நான் என்றுமே படம் பண்ணுவதில்லை. எனது படங்கள் முதலில் என்னைத் திருப்தி படுத்த வேண்டும். அப்புறம் தான் மற்ற விஷயங்கள்."
உங்களது படங்கள் அக்காலகட்ட வாழ்க்கையைப் பதிவு செய்தது. அதேபோல அந்தக் காலகட்ட வாழ்க்கையைப் பதிவு செய்த சமகால சினிமா என்று எதைச் சொல்வீர்கள்?

எனது தலைமுறையைச் சேர்ந்த சக படைப்பாளிகளைப் பற்றியோ அவர்களது படைப்புகள் பற்றியோ கருத்து சொல்வதில்லை என்ற கொள்கையைத் தீவிரமாகப் பின்பற்றி வருகிறேன். அப்படிக் கருத்து சொல்வதற்கு எனக்குத் தகுதியும் இல்லை; அது என் வேலையும் இல்லை."
நடுத்தர வர்க்கத்தின் சூழலைப் பின்புலமாக வைத்து 25 ஆண்டுகளுக்கு முன்வீடுபடம் எடுத்தீர்கள். அந்தப்படம் இன்றைய காலத்துக்கும் பொருத்தமானதாக இருக்குமா?
இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகுகூட எனதுவீடுபடம் நேற்று எடுத்த படம் போல தான் இருக்கும். ‘வீடுபடத்தின் 25வது ஆண்டையொட்டி சமீபத்தில் சில இடங்களில்வீடுபடம் திரையிடப்பட்டது. அதைப் பார்த்த அனைவரும் ஏகமனதாக இதே அபிப்ராயத்தைத்தான் தெரிவித்தார்கள். உள்ளடக்கத்திலும், உருவாக்கத்திலும் எனதுவீடுசாகாவரம் பெற்ற ஒரு படைப்பு என்பதில் எனக்கு கர்வம் உண்டு. ‘வீடுபடத்துக்கென கட்டிய கட்டடம்தான் இப்போது எனது திரைப்படப் பள்ளி."
கடந்த காலத் திரைச்சூழலோடு ஒப்பிடும்போது இன்றைய திரைப்படங்கள் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கிறதா?
சினிமா வளர்ந்து கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. காரணம் அது மிகவும் இளமையான ஊடகம். எழுத்து, ஓவியம், சிற்பம், இசை போன்ற ஊடகங்களோடு ஒப்பிடுகையில் சினிமா ஒரு குழந்தை. குழந்தைக்கு வளர்ச்சி என்பது வெகு இயல்பானது. தவிர்க்க முடியாததும்கூட. என்னைக் கேட்டால் சினிமாவின் வாலிபம் இனிதான் தொடங்க வேண்டும்."


நன்றி - கல்கி

2 comments:

காரிகன் said...

இவர் எடுத்த முக்கால்வாசி படங்கள் ஆங்கில மற்றும் ஹிந்தி படங்களின் காப்பி. இவர் டிரெண்ட் என்று பேசுவது வினோதமான ஆச்யர்யம். சொந்த சரக்கு இல்லாத ஆனால் பெரும்பான்மையானவர்களால் பெரிதும் மதிக்கப்படும் உண்மையில் அதற்க்கு தகுதி இல்லாத ஒரு இயக்குனர்.

arun said...

please can you send me the movie name how he copied from english. Here most of the s....d like you always targeting some people like bala sir....