20 வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக தாஜ்மகாலுக்குச் செல்கிறேன்.
முதல்முறை பூமியில் கால் பதித்து நடைபயிலும் பிள்ளையைப் போல இருந்தது
மனம்.
மார்பிள் தரையின் குளிர்ச்சியைப் பாதம் உணரத் துவங்கி, நரம்புகளின்
வழியே தலைக்கு ஏறியது கிறுகிறுப்பாக இருந்தது. தாஜ்மகாலைத் தூரமாக நின்று
தரிசிக்க வேண்டும். அப்போதுதான் அதன் அழகு முழுமையாகப் புலப்படும். அதன்
அருகில் சென்றாலோ, அது விஸ்வரூபம் எடுக்கும். அதனுள் நுழைந்துவிட்டாலோ...
நாம் அதில் மூழ்கிக் காணாமல் போய்விடுவோம். காதலில் கரைந்துவிடுவதைப்
போலத்தான்.
தொலைவில் நின்று தாஜ்மகாலைக் கவனிக்கத் தொடங்கினேன். முன்பு இருந்த
தூய்மையான அழகை தாஜ்மகால் மெள்ள இழந்துவருவது உண்மைதான். காரணம், அமில மழை
என்கிறார்கள். அதன் மேல் ஸ்தூபியில் லேசான மஞ்சள் நிறம் படியத்
தொடங்கியுள்ளது, பல தடவை சலவைக்கு உட்படுத்தப்பட்ட வெண்ணிற ஆடையைப் போல.
காற்றிலும் நாசி வெறுக்கும் ஒருவிதமான துர்நாற்றம். மனித மனங்களைப் போலவே
தாஜ்மகாலும் மெள்ள மெள்ள மாசு அடைந்துவருகிறது.
தாஜ்மகால் என் வாழ்வோடு பின்னிப் பிணைந்துவிட்ட ஒன்று. என்னைப்
பொறுத்தவரையில் தாஜ்மகால் வெறும் கட்டடம் மட்டும் இல்லை. வெறும் காதலின்
சின்னமும் இல்லை. வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஏதோ ஒன்று இங்கு
இருக்கிறது. இந்தக் காற்றில் சொல்ல முடியாத துக்கமும் காதலும் மிதக்கிறது.
இந்தத் தூண்களில் காதல் படிந்து உள்ளது. இந்தப் பெரிய பிரமாண்டமான அமைப்பு
என்னைத் துரும்பனாக மாற்றிக் கேலி செய்கிறது.
எப்பேர்பட்ட ஆன்மிக அனுபவம் அது. இமய மலையின் முன் நிகழும் அதே
அற்புதம். காதலும்கூட ஆன்மிகத்தின் ஒரு வழிதான். காதல் மட்டும் அல்ல;
எந்தத் தீவிரமான உணர்வும் ஆன்மிகத்துக்கான முதல் திறவுதான். ஷாஜகானைப்
பற்றி எத்த னைக் கருத்துகள் உலவினா லும், நிரம்பி வழிந்த அவனுடைய காதல்தான்
இப்படி ஓர் அற்புதத்தை உருவாக்கி இருக்க முடியும். காதல், வாளைப்
பறித்துவிட்டு... பூக்களைத் தருகிறது. காதல், ஒரு வீரனைக்
கோழையாக்குகிறது... கோழையை வீரனாக்குகிறது. எப்போதும் காதல் முரணுக்குப்
பிறந்த குழந்தைதான்.
தாஜ்மகால் வெறும் ஷாஜகானின் காதலுடன் மட்டும் தொடர்புடையது அல்ல என்றே
எனக்குத் தோன்றுகிறது. இங்கு வருகை தரும் எவருமே தங்க ளுடைய மனக் கண்ணில்
ஒரு மின்னல் நொடிப்பொழுதே னும் தாங்கள் இழந்த காதலி யையோ, நழுவிப்போன
காதலையோ நினைக்காமல் இருக்க முடியாது. பல இதயங்கள் தூவிய காதல் இந்தக்
காற்றில் முளைத்து வேர் விட்டிருக்கிறது. கோயிலின் உள்ளே நுழைந்ததும் தன்
முயற்சி எதுவும் இன்றி தூண்டப்படும் பக்தியைப் போலவே தாஜ்மகாலின் உள்ளே
யும் காதல் மேலெழும்பும்.
வெளிப் பிராகாரத்தில் கால்போன போக்கில் சுற்றி அலைந்துகொண்டு இருந்தேன்.
ஏனோ, சாலைகளில் பிரக்ஞையற்றுச் சுற்றும் கந்தல் ஆடைக்காரனின் நினைவு
வந்தது. அவனுடைய உலகம் முற்றிலும் வேறானது. அவன் இந்த உலகத்தோடு ஒரு நூலிழை
அளவே கட்டப்பட்டு இருக்கிறான். அதில் நாம் அறியாத ஒரு மேன்மையான வாழ்வும்
இருக்கலாம்தான்.
பரந்து விரிந்த வெண்ணிற மார்பிள் தரை எனக்குச் சற்றும் சொந்தம் இல்லாத,
ஆனாலும் நான் சரிய ஏங்கும் மடியைப் போலத் தோன்றியது. வானம் பார்க்க
நெடுஞ்சாண்கிடையாகப் படுக்க வேண்டும்போல இருந்தாலும், சுற்றி லும்
அங்கொன்றும் இங்கொன்று மாக அலையும் மனித நடமாட்டத்தை மனதில்வைத்துக்
குட்டைச் சுவருக்கு முதுகைக் கொடுத்துக் கால்களை நீட்டி அமர்ந்தேன்.
இப்படித்தான் மனதில் தோன்று வதை எல்லாம் நம்மால் செய்ய முடிவது இல்லை.
சத்தமாகப் பாட, சுற்றி உள்ளவர்களைப் பற்றி சட்டை செய்யாமல் குதித்து ஆட...
என எத்தனை மனத் தடைகள்?
மனித மனம் காட்டை மறந்து, வீட்டின் சூழலுக்குப் பழக்கப்பட்ட மிருகம்போல
எப்போதும் ஒரு நிர்பந்தத்துக்குக் கட்டுப்பட்டது. மிருகம் மிருகமாக இருக்க
இயலாமல் தடுப்பது மிருகத்தின் கோணத்தில் பெருந்துக்கம். களைப்பாக இருந்தது.
இந்த உலகில் இருந்து முற்றிலும் என்னைத் துண்டித்துக்கொள்ள முயல்பவனைப்
போல கண்களை இறுக மூடிக்கொண்டேன். உள் இழுத்து முழுவதுமாக வெளி யிட்ட
மூச்சு, புதைந்துபோயிருந்த நினைவுகளை எல்லாம் தூர்வாரி வெளியே
இழுத்துப்போட்டது.
முதல்முறையாக தாஜ்மஹால் பார்க்க வந்தது அமுதாவுடன். பலரும் எங்களுடன்
இருந்தார்கள் என்றாலும், அன்று இங்கு இருந்தது நான், அமுதா மற்றும்
தாஜ்மகால் மட்டுமே.
அமுதாவுக்கும் எனக்குமான காதல் நீடித்தது ஒரே ஒருநாள் மட்டுமே.
சொல்லப்போனால் சில நொடிப் பொழுதுகள் மட்டுமே. ஆனாலும் அந்தக் காதல்
வாழ்நாள் முழுவதும் வலி தரக் கூடியதாக, வலிமையானதாக மாறும் என்று நான்
நினைக்கவே இல்லை. அமுதாவை நினைத்ததும் அவளுடைய சுருள்சுருளான அடர்ந்த
முடிதான் நினைவில் ஆடியது. அவள் என்னை உரசிக்கொண்டு அமரும்போது, ஒன்றாக
உறங்கும்போது எல்லாம் என் மூக்கின் துவாரத்தில் அவை கிச்சுகிச்சு மூட்டும்.
தொடர்ந்த தும்மலின் எரிச்சலில், ''ஏய்... பஞ்சு மிட்டாய் தலை... தள்ளிப்
போடி'' என்பேன். பதிலுக்கு அவள் நகங்களால் கிள்ளிய காயங்களின்
தழும்புகள்கூட இப்போது என்னிடம் இல்லை.
ஏதேனும் புத்தகத்தில் அவள் மூழ்கியிருக்கும்போது அவள் கையில் உள்ள ஒற்றை
முடியை மட்டும் அவள் அறியாமல் மெள்ள இழுப்பது எனக்குப் பிடித்தமான
விளையாட்டு. வலியால் துடித்தபடி அலறும் அமுதா, என்னைத் துரத்திப்
பிடித்துத் தலைமுடியைப் பற்றி இழுத்து ஓர் அடியேனும் போடாமல் ஓய மாட்டாள்.
உண்மையில் அமுதாவைத் திருமணம் செய்து கொள்ள எங்களுக்குள் எந்தத் தடையும்
இல்லை. உறவின் முறையில் அவளை நான் மணந்துகொண்டு இருக்கலாம்தான். அமுதாவின்
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அடிக்கடி மாற்றலாகும்படியான மத்திய அரசு
வேலை. அவளுடைய கல்வியின் காரணமாக, பால்யம் தொட்டே அவள் எங்கள் வீட்டில்
எங்களுடன் வளர வேண்டியதாயிற்று.
என் வீட்டில் நான், அப்பா, அம்மா, அமுதா மற்றும் அமுதா வயதில் ஒரு
தங்கை. அமுதாவை ஆசை தீரக் காதலிப்பதற்கான எல்லாவிதமான சந்தர்ப்பங்களும்,
சூழ்நிலையும், சுதந்திரமும், உரிமையும் இருந்தது எனக்கு. கண்ணாமூச்சி
ஆடும்போது, ஓடிப் பிடித்துப் புரண்டு விளையாடும்போது, குளியல் அறையில்
இருந்து ஈரம் சொட்டச் சொட்ட அமுதா வெளியேறும்போது, பைக்கில் ஒன்றாக ஊர்
சுற்றும்போது... ஏகாந்தமான எந்தச் சூழலிலும் அந்தப் பாழாய்ப் போன காதல்
எங்களுக்குள் மணி அடிக்கவே இல்லை.
ஒருவேளை அந்த வெளிப்படையான சூழல்தான் எங்கள் காதலுக்குப் பெரும் தடையோ?
காதலில் கள்ளத்தனமும் தடைகளும்தான் சுவாரஸ்யமோ? என்னவென்று இதுவரையில்
விளங்கவே இல்லை. என்னைப் பொறுத்தவரையில் பெண் மனம் மட்டும் அல்ல; மனித
மனங்களே ஆழமானவைதான். ரகசியங்களும், மர்மங்களும், அழகும், அபாயமும் நிறைந்த
கடல் மாதிரி.
யாரோ தோள் தொடுவதைப் போல உணர்ந்ததும் மெள்ளக் கண் திறந்தேன். ஓர் இளைஞன்
சிநேகமாக என்னைப் பார்த்துப் புன்னகைத்தபடி இருந்தான். நெடுநேரமாக என்னை
அழைத்துக்கொண்டு இருந்திருப்பான்போலும். நான் சுய நினைவு வந்தவனைப் போல
மெள்ளத் தலையை உலுக்கிக்கொண்டு, ''யெஸ்...'' என்றேன்.
''யூ டேக் எ போட்டோகிராஃப் ப்ளீஸ்... இஃப் யூ டோன்ட் மைன்ட்...''
என்றான். அவன் பின்னால் மலர்ந்த புன்னகையுடன் ஓர் இளம் பெண் நின்றுகொண்டு
இருந்தாள். அவர்கள் இருவருடைய முகங்களும் காதலால் ஜொலித்துக்கொண்டு
இருந்தன. அவர்கள் இருவரும்தான் இந்த உலகிலேயே இன்பமயமானவர்களைப் போல
இருந்தார்கள். நிச்சயம் உலகம் காதல் வயப்பட்டவர்களின் கைகளில்தான் உள்ளது.
அந்த இளைஞன் தன்னிடம் இருந்த கேமராவை என்னிடம் நீட்டினான். நான் கோணம்
பார்க்கத் தயாரானேன். அவர்கள் பசை போட்டதைப் போல ஒட்டிக்கொண்டார் கள்.
கரங்களைக் கோத்துக்கொண்டார்கள். முத்தமிட்டுக்கொண்டார்கள். ஒரே
சால்வைக்குள் குளிர்காய்ந்தார்கள். அவனுடைய ஒவ்வொரு செயலிலும் ஏதேனும் ஒரு
வகையில் அவனது காதல் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. மிக இயல்பாகத் தோன்றிய
பொறாமையைப் புறந்தள்ளிவிட்டு அவர்களை ரசிக்கத் தொடங்கினேன்.
அமுதாவுக்குத் திருமணமான புதிதில் அவள் கணவனுடன் சேர்ந்து எடுத்திருந்த
தேனிலவுப் புகைப்படங்களை அனுப்பியிருந்தாள். அந்தப் புகைப்படங்களில்
எல்லாம் நெருக்கம் காட்டுவதில் அமுதாவுக்குச் சிறு தயக்கம் இருந்ததைப்
போலத் தோன்றியது. அவள் முகத்தில்கூட மென்சோகம் இழையோடியதைப் போல இருந்தது.
அல்லது அவ்வாறு எண்ணிக்கொள்வது எனக்குச் சமாதானமாக இருந்தது.
நன்றி சொல்லி கேமராவுக்காகக் கை நீட்டினான் இளைஞன். கைகுலுக்கி விடைபெற்றான். அந்தப் பெண் தூரத்தில் இருந்து கையசைத்துச் சென்றாள்.
அமுதாவின் திருமணத்துக்குப் பிறகு நாங்கள் சில முறை சந்தித்தோம். கிரஹப்
பிரவேசம், அறுபதாம் கல்யாணம், திருமண வீடு, துக்க வீடு இப்படிச் சில
சந்தர்ப்பங்களில்தான் சந்திக்க முடிந்தது. அமுதா உணவு பரிமாற நேரிட்டால்
எனக்குக் கூடுதலாக ஒரு ஸ்வீட் கிடைக்கும். ஒரு பண்டிகையின்போது என்
மனைவியும் நானும் அமுதாவுக்கு மிக விருப்பமான நிறத்தில் புடைவை ஒன்றைப்
பரிச ளித்தோம். இப்படித்தான் நாங்கள் அன்பை இதுநாள் வரை பரிமாறிக்
கொண்டோம்.
வயிறு, 'என்னைக் கொஞ்சம் கவனி’ என்று பசியை அனுப்பியது. ஒரு சிறுவனிடம் பேல்பூரி வாங்கிச் சாப்பிடத் தொடங்கினேன்
.
அம்மா ஊரில் இல்லாத நாட்களில் அமுதாதான் சமைப்பாள். கிச்சனைப்
போர்க்களமாக்கிவிடுவாள். அப்பா சத்தம் இல்லாமல் சாப்பிடுவார். நான்தான்
அவளைச் சீண்டுவேன். ''ச்சீ... என்னடி சாப்பாடு இது... இதுக்குப் பேர் என்ன?
இல்ல... இனிமேதான் வைக்கப்போறியா? உன் பரிசோதனைக்கு நான் என்ன எலியா?''
என்பேன். அமுதாவுக்கு முகம் எல்லாம் சிவந்துவிடும். புருவத்தை நெரித்துக்
கண்களை உருட்டுவாள்.
''பாருடா... உனக்கு சமைக்கவே தெரியாத ஒருத்திதான் பொண்டாட்டியா வருவா.
நீ அவளுக்கும் சேர்த்துச் சமைக்கிற கோலத்தை நான் பார்க்கத்தான் போறேன்.
அன்னைக்கு வெச்சுக்கறேன் உன்னை. என் சாபம்டா இது...'' என்பாள். அவள்
பேச்சின் தாளத்துக்கு ஏற்ப அவள் சுருள் முடியும் ஆடும். பள்ளிப் படிப்பு
முடிந்து கல்லூரிப் படிப்புக்கு அமுதா அவள் பெற்றோருடன் டெல்லிக்குச்
சென்றுவிட்டாள். அப்புறம் அமுதாவின் கல்யாணச் செய்தியுடன்தான் அத்தை எங்கள்
வீட்டுக்கு வந்தாள். மொட்டை மாடியில் அத்தையும் நானும் வெகுநேரம்
பேசிக்கொண்டு இருந்தோம்.
அத்தை திடுமென அந்தக் கேள்வியை என்னிடம் கேட்டாள். ''ஏண்டா ஹரி, உனக்கு
அமுதாவைக் கல்யாணம் பண்ணிக்க ணும்னு தோணவே இல்லையா?'' என்றாள்.
நான் அதிர்ந்துபோய் ''ச்சீ... என்ன அத்தை, நான் ஒருநாளும் அமுதாவை அப்படி நினைச்சதே கிடையாது...'' என்று பதறினேன்.
''இதையேதான் அவளும் சொன்னா!'' என்றாள் அத்தை சாதாரணமாக.
பின் மிகவும் ஆர்வமாக, ''அத்தை, இப்போ அமுதாவுக்குப் பார்த்திருக்கிற வரன் யாரு? பையன் என்ன பண்றான்?'' என்றேன்.
''காலேஜ்ல கூட படிச்ச பையனாம். அமுதாவை ரொம்பப் பிடிக்குமாம்.
அவகிட்டகூடச் சொல்லாம நேரா எங்ககிட்ட வந்தான். எங்களுக்கும்
பிடிச்சுஇருந்தது. சரின்னு சொல்லிட்டோம்...'' என்ற அத்தையிடம், ''கழுதை...
இவளும் லவ் பண்ணியிருப்பா. இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறாங்க...
நீங்களும் நம்பிட்டீங்களாக்கும்'' என்று சிரித்தேன்.
அத்தையும் சிரித்தபடி, ''அது சரி, உனக்கு எப்போ கல்யாணம்... நீயும்
யாரையாவது..?'' என்று அடிக் கண்ணால் பார்த்துக் குறும்பாகச் சிரித்தாள்.
அப்படியே அமுதாவின் வயதான பிம்பம்போல இருந்தது.
''ம்... லவ் பண்ற லிஸ்ட் பெருசு. அதுக்குக் குறைஞ்சது நான் அஞ்சு கல்யாணமாவது பண்ணணும்!'' என்றேன்.
''போடா வாலு...'' என்றபடி அத்தை அடிக்க வந்தாள்.
தாஜ்மகாலைச் சுற்றி உள்ள புல் தரையில் ஆங்காங்கே நாரைகள், சிறகு முளைத்த
குட்டிக் குட்டி தாஜ்மகாலைப் போல அலைந்துகொண்டு இருந்தன. அப்பாவுக்கு ஏனோ
அமுதா மேல் தனிப் பிரியம். எல்லாவற்றுக்கும் ''அமுதாவைப் பார்... அமுதாவைப்
பார்'' என்று ஒப்பிட்டுப் பேசுவார்.
''நீ ஏண்டி இங்க இருக்கே. உன் வீட்டுல போய் இருக்க வேண்டியதுதான. நான்
நிம்மதியா இருந்திருப்பேன். உன்னாலதான் இந்தாளு என்னைத் திட்டுறாரு'' என்று
சண்டையிட்ட அன்றைக்கு, அமுதா பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி ரகளையே
செய்துவிட்டாள். அப்பாவும் அம்மாவும் அவளைச் சமாதானம் செய்யப்
பெரும்பாடுபட்டார்கள். பிற்பாடு நான் அவளிடம் மன்னிப்பு கேட்டதெல்லாம்
தனிக் கதை.
அமுதாவின் திருமணத்துக்காக ஒரு வாரம் முன்பே நாங்கள் டெல்லிக்குச்
சென்றுவிட்டோம். அந்த ஒரு வாரம் முழுவதும்தான் நான் அமுதாவை மிக அருகில்
நன்றாக உணர்ந்தேன். அமுதா முற்றிலும் வேறு யாரோவைப் போலவே இருந்தாள். அவள்
தோற்றத்தில், உடல் மொழியில் மெருகேறி இருந்தது. அமுதா எங்கள் வீட்டுப் பெண்
என்ற பெருமிதமும் உரிமையும் தோன்றியது. திருமணத் துக்கு முதல் நாள்
அமுதாவுக்குத் திடீரென அந்த ஆசை வந்தது.
''தாஜ்மகால் போலாமா?''
நான் பதில் சொல்லும் முன், ''ப்ளீஸ்... போலாம்டா. என் கடைசி ஆசை'' என்றாள்.
அத்தை, ''சரி... ஹரி கூடப் போ'' என்று சொன்னாள்.
''ம்ஹும்... நம்ம குடும்பத்துல எல்லாரும் வரணும்'' என்று சிறு குழந்தையைப் போல அடம்பிடித்தாள்.
அமுதா, பூப்போட்ட பச்சை நிற சல்வார் கமீஸில் தயாராகி வந்தாள். ''ஹரி...
இந்த சல்வார் கமீஸ் எப்படி இருக்கு?'' என்று கேட்டவள், நான் பதில்
சொல்வதற்கு முன், ''அவர் வாங்கித் தந்தது...'' என்றாள்.
அத்தை கேட்ட கேள்வி வட்டமடித்தது. 'ஏன் ஹரி, அமுதாவைக் கல்யாணம் பண்ணிக்க ணும்னு உனக்குத் தோணவே இல்லையா?’
ஐயோ... இவள் என் அமுதாவாச்சே. இவளை எப்படி நான் யாருக்கோ தாரை
வார்ப்பேன். அவளுக்கு இருட்டு என்றால் பயமாச்சே. வண்ணதாசனின் எழுத்துகள்
என்றால் உயிரை விடுவாளே. குளிர்காலத்தில் மூச்சுவிடச் சிரமப்படுவாளே.
புதியவனுக்கு இதெல்லாம் தெரியுமா? அவளை முழுவதுமாகப் பறிகொடுக்கப்போகிறோமோ
என்ற பரிதவிப்பு என்னை அலைக்கழித்தது.
ஏன் இத்தனை நாட்களாக இப்படி முட்டா ளாக இருந்தேன். அமுதாவின் தோழிகளை
வசீகரிக்கத் தோன்றிய அளவு ஏன் அமுதாவை வசீகரிக்கத் தோன்றவில்லை. அல்லது
அவ்வாறு நடந்துகொண்டு அமுதாவை ஆழம் பார்த் தேனோ? இல்லை... இவள் என்
அமுதாதானே எங்கே போய்விடப்போகிறாள் என்ற அலட்சியமும் உதாசீனமுமா? பைத்தியம்
பிடித்துவிடும்போல இருந்தது.
காரில் அமுதா என் அருகில்தான் அமர்ந்து இருந்தாள். வழக்கத்துக்கு மாறாக
இருவரும் வெகு அமைதியாக இருந்தோம். நடுவே ஒரு வார்த்தைகூடப் பேசிக்கொள்ளவே
இல்லை. சண்டையிட்டுக்கொள்ளவும் இல்லை. அந்தப் பேரமைதி என்னைக் குலைத்தது.
என் பால்யம் தொட்டு என்னுடன் வளர்ந்தவள், இன்று என் அருகில் இருந்தும்
அந்நியமாகிப்போனாள். விநோதமான ஏதோ ஓர் உணர்வு தொண்டையை அடைத்தது. நடக்கக்
கூடாத ஒன்று நடக்கப்போகிறது என்று உள்ளே மணி அடித்தது.
நீண்ட வரிசையில் காத்திருந்த பின்னர் ஒரு சிறிய மரக் கதவு திறந்தது. அது
தாஜ்மகாலின் நுழைவாயில். ஒரு நிமிடம் இந்த வெண்மையான, பிரமாண்ட
கட்டடத்தின் முன் நான் கரைந்துபோனேன். என் மூச்சு நின்றது. அறிவு
ஸ்தம்பித்தது. தாஜ்மகால் பேரழகியாக மாறி என்னை மயக்கி, கோடானுகோடி
உணர்வுகளைத் தூண்டினாள். என் பார்வை தாஜ்மகா லின் மேல் நிலைகுத்தி நிற்க,
அமுதாவின் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டேன். அவள் விரல்களோடு எனது விரல்களைக்
கோத்துக் கொண்டேன். தொட்டுக்கொள்ளல் எங்களுக் குள் புதிதல்ல என்றாலும்,
இந்தத் தொடுதல் புதிது. அவள் விரல்களை விடுவித்துக்கொள்வாளோ என்ற பயத் தில்
அவளுடைய கரங்களில் என் பிடியை மேலும் இறுக்கினேன். அமுதா என் முகத்தை
உற்று நோக்கி னாள். நான் தாஜ்மகாலில் இருந்து கண்களை விலக்கவில்லை.
''ஹரி...'' என்றாள் அமுதா மிக பலவீனமாக. கடைசி மூச்சை வெளியிடும் ஆன்மாவின் குரலாக அது இருந்தது.
''ஷ்...'' என்றபடி அவள் விரல்களை மேலும் இறுகப் பற்றியபடி நடந்துகொண்டு
இருந்தேன். நடைப் பூங்காவின் நடுவே இருந்த குளத்தில் தாஜ்மகாலின்
பிம்பத்துடன் எங்களுடைய பிம்பமும் பிரதிபலித்தது.
''ஹரி... கல்யாணப் பொண்ணைப் பத்திரமா கூட்டி வா'' என்றவாறே எங்களிடம்
இருந்து வெகு தூரமாகச் சென்றுகொண்டு இருந்தார்கள் குடும்பத்தினர்.
அமுதா, ''ஹரி...'' என்றாள் மறுபடியும், மிக சன்னமாக. அவளது குரல் யாரோ
ஒருவரின் குரல்போல் ஒலித்தது. இப்போது அவளின் கரங்கள் எனது கரங்களை இறுகப்
பற்றியிருந்தது.
தாஜ்மகாலின் வெளிப் பிராகாரத்தில் முதல் அடி எடுத்து உள் நுழைந்ததும்
வீசிய காற்றில் அமுதாவின் தலை முடியில் ஒரு கற்றை முன் நெற்றியில்
விழுந்தது. எப்போதும் மையிட்டதைப் போல இருக்கும் அமுதாவின் கண்கள்
பிரகாசமாக விரிந்திருந்தன. அவை காதலாலும் கண்ணீராலும் பளபளத்தது. விரிந்த
அவளுடைய இதழ்களின் நடுவே அவளது பற்கள் தெரிந்தன. நாசி சிவந்து
துடித்துக்கொண்டு இருந்தது. அவளது காதோரத்தின் சுருள் முடிக் கற்றை ஒன்று
கரிய நாகத்தைப் போலக் கன்னத்தில் வழிந்தோடியது. அதை ஒதுக்கிவிட வேண்டும் என
என் கைகள் பரபரத்தன.
''அமுதா... நீ இத்தனை அழகாடி?'' என்றேன் உடைந்து தோற்றுப்போனவனாக... போரில் புறமுதுகுக் காட்டிய கோழையாக.
ரசாயனம் ஊற்றெடுத்தது. காமம் தலைக்கேறியது. முத்தமிடவோ, கட்டியணைக்கவோ
இயலாமல் இரு தனித் தனி எரிமலைகளாக நாங்கள் கனன்றுகொண்டு இருந்தோம்.
தடயமேதும் இன்றி ஒரு களவு நிகழ்ந்தேறியது.
''ஹரி... என்னடா செய்ய நான்?'' என்றாள் அமுதா கண்ணீர் வழிய.
அழுத்தப்பட்டு இருந்த மொத்த அன்பின் உச்சபட்ச வெளிப்பாடாக நாங்கள் மௌனித்து
இருந்தோம். ஏதோ மந்திர விரலுக்குக் கட்டுப்பட்ட பொம்மைகளா னோம். நான்
சுதாரித்து பற்றிய விரல்களை உதறி, திகைத்து விலகினேன். அமுதா என்னை ஊடுருவி
வெறித்தாள் வெகுநேரம் வரை.
'குற்றம் செய்தவன் இதனைத் தஞ்சம் அடைந்தால், மன்னிக்கப்பட்டவனைப் போல
அவன் தனது பாவங்களில் இருந்து விடுதலை பெறுவான். ஒரு பாவி இந்த மாளிகைக்கு
வருவானேயானால், அவன் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். இதனைக்
காணும்போது துயரத்துடன் கூடிய பெருமூச்சு உண்டா கும். சூரியனும் சந்திரனும்
கண்ணீர் வடிப்பர். படைத்தவனைப் பெருமைப்படுத்தவே இந்தக் கட்டடம் எழுப்பப்பட்டு உள்ளது!’ - இவை ஷாஜஹானின் வாசகம் எனப் பின்னாளில் அறிந்தேன்.
ஒருவகையில் சரியான தருணத்தில் காதலை உணராத குற்றவாளி நான். அமுதாவுடன்
நான் வாழ முடியாத வாழ்வு, என்னை மிகத் தூய்மையானவனாகவே இன்று வரை
வைத்திருக்கிறது. அந்த நொடிப்பொழுது காதல் இன்னும் உயிர்ப்புடன்
இருக்கிறது. காதலிக்கக் காதலி தேவை இல்லையே. வெறும் காதல் மட்டுமே போதும்.
அவளுக்கும் அப்படித்தான் இருக்க முடியும்.
மீண்டும் ஒரு முறை பார்வையால் தாஜ்மகாலைப் பருகிவிட்டு வெளியேறத் தொடங்கினேன்.
அடுத்த முறை அமுதாவைப் பார்க்கும்போது கேட்க வேண்டும், அவள் மீண்டும் எப்போதாவது தாஜ்மகால் பார்க்க வந்தாளா என்று?
thanx - vikatan
2 comments:
நல்ல கதை. பகிர்வுக்கு நன்றி.
அருமையான காதல் கதை ... என் முதல் காதலின் பெயர் .. அமுதா :)
Post a Comment