பாலியல் பலாத்கார பாரதம்
தலைநகர் டெல்லி...தலைகுனிவு காட்சிகள்
ஆர்.ஷஃபி முன்னா
டெல்லியில், பாராமெடிக்கல் கல்லூரியில் பிஸியோதெரபி பயிலும் 23 வயது
மாணவி சீமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஓடும் பேருந்தில் பாலியல்
வன்புணர்ச்சிக்கு ஆளாக் கப்பட்ட சம்பவம், நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக
நடந்து வரும் குற்றங்களின் உச்சகட்டம். இதைச் சமூகமும் உச்சபட்சமாக
உணர்ந்ததால்... தலைநகரே ஸ்தம்பிக்க, நாட்டின் பல இடங் களிலும் பொதுமக்கள்
கொந்தளித்துள்ளனர்.
மால் ஒன்றில், தன் 'பாய் ஃப்ரெண்ட்' அர்விந்த் பிரதாப் பாண்டேவுடன்
சினிமா பார்த்துள்ளார் சீமா. வீடு திரும்புவதற்காக, இரவு 9.30-க்கு தனியார்
பேருந்தில் இருவரும் ஏறியுள்ளனர். உள்ளே இருந்த சில பயணிகள், அடுத்த
ஸ்டாப்பிங்குகளில் இறங்கிவிட, சீமா, அர்விந்த், டிரைவர் மற்றும் ஐந்து
ஆண்களுடன் பயணம் தொடர்ந்துள்ளது.
அவர்கள் சீமாவை சீண்ட, இருதரப்பினருக்கும்
கடும் வாக்குவாதம். கோபம் அடைந்தவர்கள்... அர்விந்தை இரும்புத் தடியால்
தாக்கியுள்ளனர். பிறகு, டிரைவர் ஸீட்டின் அருகே உள்ள கேபினில், ஓடும்
பேருந்திலேயே அனைவரும் சீமாவை மாறி மாறி வல்லுறவு கொண்டுள்ளனர்.
சுமார் 30 கி.மீ தூரம் வரை பயணப்பட்ட அந்தப் பேருந்தில் அரங்கேற்றப்பட்ட
கொடூரம்... சினிமாக்களில்கூட பார்த்தறியாத உச்ச கொடூரம். அதன்பிறகு,
இருவரையும் ஓடும் பஸ்ஸில் இருந்து தூக்கி எறிந்தது... கொடுமையிலும் கொடுமை!
இதைப் பார்த்த ஒருவர் தந்த தகவலை அடுத்து, இருவரையும் மீட்டு அருகிலுள்ள
சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் சேர்த்தது போலீஸ்.
குற்றவாளிகள் ஆறு பேரில் இருவர் மறுநாள் கைது செய்யப்பட்டாலும், மீதம்
உள்ளவர்களை கைது செய்வதில் போலீஸ் வழக்கம்போல் சுணக்கம் காட்டியது. சம்பவம்
தலைப்பு செய்தியாக மாற.... டெல்லியின் கல்லூரி மாணவ -மாணவிகளும்,
பொதுமக்களும் கைகோக்க... போராட்டக்களமாக மாறியது இந்தியா கேட்.
நாடாளுமன்றத்திலும் விஷயம் எதிரொலிக்க... 'குற்றவாளிகளுக்கு உச்சபட்ச
தண்டனை' என்கிற குரல் உரக்க ஒலிக்கிறது.
''பஸ்ஸிலிருந்து தூக்கி எறியப்பட்ட மாணவி, காயங்களுடன் நிர்வாணமாக
நடுரோட்டில் கிடந்துள்ளார். போலீசார் வரும்வரை ஒரு துணியை அவர் மீது
போர்த்தவும் யாரும் முன்வரவில்லை. நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக
தொடர்ந்து நடந்து வரும் குற்றங்களில் இந்தச் சம்பவமே கடைசியாக இருக்க
வேண்டும். இதற்கு ஒரு முடிவு கட்டாமல் எங்கள் போராட்டம் ஓயாது'' என
நம்மிடம் ஆவேசப்பட்டவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி பிரதீபா
சர்மா.
பொதுமக்களின் ஆவேசப் போராட்டம் டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்,
காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி... ஏன், ஜனாதிபதியின் வீட்டையும் விட்டு
வைக்கவில்லை. இதன் பிறகே... மீதம் இருந்த நான்கு குற்றவாளிகளையும் கைது
செய்தது டெல்லி போலீஸ். அமைதி காக்கும்படி பிரதமர் மன்மோகன் சிங்
தொலைக்காட்சியில் தோன்றி கோரிக்கை வைக்கும் அளவுக்கு போராட்டம்
விஸ்வரூபமெடுத்திருக்கிறது!
''பாலியல் வன்புணர்ச்சி வழக்குகள் பலவும், பத்து வருடங்களுக்கு மேலாக,
முடிவடையாமல் நிலுவையில் உள்ளதாக செய்திகள் வருகின்றன. இவர்கள் விஷயத்தில்
மனித உரிமைகளைப் பார்ப்பது பாவமாகிவிடும். குற்றங்கள் நடக்காமல்
தடுக்கவும், குற்றவாளிகளுக்கு துணைபோகாமலிருக்கவும் போலீஸார் உறுதி எடுக்க
வேண்டும். அப்போதுதான் என் மகள் மற்றும் பேரக் குழந்தைகள் இந்த நகரத்தில்
பாதுகாப்பாக இருக்க முடியும்'' எனச் சீறினார் போராட்டத்திலிருந்தவர்களில்
ஒருவரான முதியவர் சாய்ராம் ராத்தோட்.
போராட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் லாபம் தேட முனைந்த சில அரசியல்
கட்சிகளை, போராட்டக்காரர்கள் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
எனினும், போராட்டக்காரர்களுக்கு இடையே ஊடுருவிய சமூக விரோதிகள் சிலரால்,
எண்பதுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக
சேர்க்கப்பட்டனர்.
போராட்டக்காரர்களை அடக்கும் பணியில் திடீர் என மயக்கம் அடைந்து,
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்து போயிருக்கிறார் ஒரு போலீஸ்காரர்.
ஆனால், 'மாரடைப் பால் மயங்கி விழுந்து, மருத்துவமனையில்
இறந்துபோயிருக்கிறார். போராட்டத்தை ஒடுக்குவதற்காக இந்த விஷயத்தை போலீஸ்
பெரிதாக்குகிறது' என்று இந்த மரணத்தையும் சர்ச்சைக்கு உள்ளாக்குகிறார்கள்
இப்போது.
''சீமா மருத்துவ மாணவி என்பதால், உடலின் தன்மையை அறிந்து சிகிச்சைக்கு
நன்கு ஒத்துழைக்கிறார். ஐந்து முறை கோமா நிலைக்குச் சென்று திரும்பியபோதும்
அவருக்கு மனஉறுதி அதிகமாக உள்ளது. இது, தான் உயிருடன் இருந்தால்தான்
குற்றவாளிகளை தண்டிக்க முடியும் என்பதற்காகவும் இருக்கலாம். ஒருமுறை நினைவு
திரும்பியபோது, 'அம்மா... நான் வாழ விரும்புகிறேன்!’ என ஒரு பேப்பரில்
எழுதிக் காட்டினார்.
ஒரு கட்டத்தில் ஒருசில அடிகள் நடக்கவும் செய்தார். ஆனால், இப்போது
அவரால் எதுவும் முடியவில்லை. வெறி கொண்ட அந்தக் கொடூரர்கள் அவருடைய
பெண்ணுறுப்பில் இரும்பு கம்பியையும் நுழைத்துள்ளனர். அது வயிற்றுக்குள்ளும்
சென்று பல உறுப்புகளையும் பாதித்துள்ளது. இதனால், உடல் முழுவதும்
பரவிவிட்ட இன்ஃபெக்ஷன்தான் தற்போது மாணவிக்கு மிகவும் ஆபத்தாக உள்ளது.
முதுகிலும் பல எலும்புகள் முறிந்துள்ளன. அவரு டைய முழு நிலைமையையும்
விளக்கமாகக் கூறினால்... மருத்துவர்களாகிய எங்களுக்கே மனது வலிக்கிறது.
இந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் மனிதர்களே அல்ல?'' என ஆதங்கப்பட்டார்
சப்தர்ஜங் மருத்துவமனையின் சூப்பிரண்டென்டன்ட் பி.டி.அத்தானி.
விவகாரம் தொடர்ந்து பெரிதாகிக் கொண்டே போகும் நிலையில், ஒரு சமயம்
நன்றாக.... மறுசமயம் மோசமாக என மாணவியின் உடல் நிலையும் மாறிக் கொண்டே
போனதால்... மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு, அரசு செலவில்
அனுப்பப் பட்டார் சீமா. ஆனால், உடல்உறுப்புகள் ஒவ் வொன்றாக செயல் இழக்க...
டிசம்பர் 29-ம் தேதி அதிகாலை சிங்கப்பூரிலேயே, 13 நாள் போராட்டத் துக்குப்
பின் இறந்து போனார்.
தேசிய குற்றவியல் ஆவணப் பதிவுகளின்படி, நம் நாட்டின் 53 பெரு
நகரங்களில், மிக அதிகமான பாலியல் வன்புணர்ச்சி வழக்குகள்
பதிவாகியிருப்பது... டெல்லியில்தான். 2011-ல் இங்கே மட்டும் 572 பெண்கள்
பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள் ளனர். மும்பை-239, பெங்களூரு-96,
சென்னை-76, கொல்கத்தா-47 என இந்த பட்டியல் நீள்கிறது!
டெல்லியில் இரண்டு நாட்களுக்கு, மூன்று கற்பழிப்பு வழக்குகள்
சராசரியாகப் பதிவாகின்றன. கற்பழிப்பு குற்றங்கள் சம்பந்தமான டெல்லி
போலீஸின் குற்றப் பதிவுகளின் புள்ளிவிவரங்கள், 'பெண்களுக்கு, அவர்களை
அறிந்தவர்களால்தான் அதிக ஆபத்து' என்கின்றன.
2011-ம் வருடத்தில் பதிவான
வழக்குகளில் மட்டும் 97.54 சதவிகித குற்றவாளிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு
ஏற்கெனவே அறிமுகமானவர்கள்தான். இதில், 58.28 சதவிகித குற்றவாளிகள்
உறவினர்கள். 36.46 சதவிகித குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களுடைய தெருவிலேயே
வசிப்பவர்கள். வெறும் 2.8 சதவிகித குற்றவாளிகள் மட்டுமே முன்பின்
தெரியாதவர்கள். இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல!
'பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு' என்ற பட்டியலில் இந்தியா இருப்பது,
காந்தி பிறந்த தேசத்துக்கு எத்தனை பெரிய கேவலம்!
பஸ் டிரைவர் ராம்சிங்,
இவனுடைய சகோதரன் முகேஷ் சிங், பாடி பில்டரான வினய் சர்மா, தள்ளுவண்டியில்
பழங்களை விற்கும் பவண் குப்தா (இந்த இருவரும்... டிரைவரின் நண்பர்கள்),
ப்ளஸ் டூ படித்துவிட்டு வேலை தேடி பீகாரிலிருந்து டெல்லி வந்திருக்கும்
அக்ஷய் தாக்கூர், கூலி வேலை செய்து பிழைக்க ராஜஸ்தானில் இருந்து
வந்திருக்கும் ராஜு ஆகிய ஆறு பேரும், இந்தக் கொடூரம் தொடர்பாக கைது
செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
1. பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடு.....இப்போதுதானா? மாபெரும் இதிகாசமென இந்த
நாடு கொண்டாடுகிறதே அந்த 'மகாபாரத'த்தில் மனைவியை வைத்து சூதாடுகிறார்கள்
பாண்டவர்கள்.அறிவிற் சிறந்த பெரியோரும்,மூத்தோரும் கூடியிருக்கும் சபையில்
துகிலுரியப்படும் போது ஐந்து கணவர்களோ,அல்லது வீரத்திலும்,அறிவிலும் சிறந்த
பெரியோர்களோ காப்பாற்றும் திறனை இழந்து விட்டதால் கடவுளைக்
கூப்பிடுகிறாள்.....
.
இப்போது இந்தியப் பெண்களை பாஞ்சாலியின் நிலையில் வைத்துப் பாருங்கள் இரண்டு காட்சிகளுக்கும் வித்தியாசம் எதுவுமில்லை.
இப்போது இந்தியப் பெண்களை பாஞ்சாலியின் நிலையில் வைத்துப் பாருங்கள் இரண்டு காட்சிகளுக்கும் வித்தியாசம் எதுவுமில்லை.
நல்லவேளை குறைவாக அணிந்திருந்ததால் பாஞ்சாலி பலாத்காரத்திற்கு உள்ளாட்கப்பட்டாள் என யாரும் இதுவரை யாரும் கருத்து சொல்லவில்லை.
இங்கு பெண் என்பவள் ஆணின் உடமை,அவள் ஒரு நுகர்பொருள்.... அவ்வளவுதான்.அப்படித்தான் இந்த கலாச்சாரம் சொல்லிக்கொடுத்திருக்கிறது.இங்கு பெண் தெய்வங்கள் வணங்கப்படுவதும்,
பெண்களின் பெயரால் நதிகளும்,மலைகளும் போற்றபடுவதும் நிஜத்தில் பெண்ணுக்கு இழைக்கும் கொடுமைகள் ஏற்படுத்தும் குற்ற உணர்வினால் மட்டுமே தவிர வேறு காரணம் ஏதுமிருக்க முடியாது.
கற்பழிப்பு என்பது கடைந்தெடுக்கப்பட்ட வன்முறையே.இந்தக் கொடுமையை செய்த அந்த இளைஞர்கள் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்ள என்ன தூண்டியது,எது தைரியம் கொடுத்தது என்பதை யோசிக்கவே இயலவில்லை.
இந்த தேசத்து ஆண்கள் மனதில் பெண்களின் மீது இவ்வளவு வ்ன்மமா?
இதை பாலியல் இச்சை என்று மட்டும் எடுத்துக்கொண்டால் மிகக் குறுகிய வட்டத்துக்குள் சிக்கிக்கொள்வோம்.
எதுவென்றாலும் இந்த தேசம் முழுதும் மாறவேண்டிய தருணம் வந்து விட்டது...மாறுங்கள்,இல்லயென்றால் மாற்றப்படுவீர்கள்.
இத்தனை அவமானத்திலும்,துயரத்திலும் ஆறுதல் வீறு கொண்டு போராடும்
இளைய சமுதாயம். நாளைய வாழ்க்கையின் மீது ஒரு நம்பிக்கை ஒளி தெரிகிறது...!!!
2. இந்த அரசியல்வாதிகள் பேசி முடித்து சட்ட்ம இயற்றுவதற்கு வருடங்கள் ஆகலாம்.
சவுதியில் வழங்கப்படும் தண்டனையே (கட்டி வைத்து குற்றவாளிகளின் மேல்
கல்லெறிதல்) சிறந்த தண்டனை. அதற்கு பயப்படாதவர்கள் குறைவே. கர்ஜிக்கும்
மனித ஆர்வலர்கள் இந்த பெண்ணின் உயிரை கொண்டு வர மாட்டார்கள்.
3. பாலியல் வன்முறை வழக்குகள் டெல்லியில் அதிகம் என்றாலும், உண்மையில் மற்ற
மாநிலங்களில் குடும்ப கௌரவத்திற்காக உண்மை வெளியே வந்து விடாமல் மறைத்து
விடுகிறார்கள் பாதிக்கப் பட்டவர்கள்..இனிமேல் தைரியமாக சட்ட
நடவடிக்கைகளுக்கு முன் வருவார்கள் என்பதுடன், தங்களைப் பாதுகாத்துக்
கொள்வதிலும் தைரியமாக நடந்து கொள்வார்கள் என நம்புவோம்.
நன்றி - விகடன்
0 comments:
Post a Comment