கையளவு நெஞ்சத்துல கடலளவு ஆசை மச்சான்!
ஆ. அலெக்ஸ் பாண்டியன்
படங்கள் : ஜெ.வேங்கடராஜ்
எங்கேயும் காதல்...’, 'என்னமோ ஏதோ’, 'காதல் ஒரு
பட்டர்ஃப்ளை’ என மென்மெலடிகளால் மனம் மயக்கிய ஆலாப் ராஜு, 'நடுக்கடலுல
கப்பல இறங்கித் தள்ள முடியுமா’, 'ஆடி போனா ஆவணி’ என கார்டன் வீடுகளில்கூட
கானாவை உலவவிட்ட கானா பாலா, 'கையளவு நெஞ்சத்துல கடலளவு ஆசை மச்சான்’ என ஒரே
பாட்டில் உச்சம் தொட்ட கிராமியக் குயில் மகிழினி மணிமாறன், 'வேர் இஸ் த
பார்ட்டி’, 'வணக்கம் வாழவைக்கும் சென்னை’ பாடல்களில் பீட் ஏற்றி, பல்ஸ்
பிடித்த முகேஷ், 'கன்னித் தீவுப் பொண்ணா... கட்டெறும்புக் கண்ணா’வாடா வாடா பையா’ என சகல தளங்களிலும் இறங்கிக் குத்திய
எம்.எல்.ஆர்.கார்த்திகேயன், 'செங்க சூளக்காரா...’, 'அடியே இவளே...
ஊருக்குள்ள திருவிழாவாம்’ என ஐஸ்க்ரீம் குரலில் வித்தியாசம் காட்டி
விருதுகள் தட்டிய அனிதா...
உலகத் தமிழர்கள் சமீபமாக அடிக்கடி முணுமுணுத்த இந்தப் பாடல்களுக்குத்
தங்கள் குரல் மூலம் உயிரும் உணர்வும் சேர்த்த பின்னணிப் பாடகர்கள் இவர்கள்.
ஐ.டி. இளைஞன், கிராமத்துப் பெண், கிடார் இசைஞன் எனப் பல்வேறு பின்னணியில்
இருந்து வந்து முத்திரை பதித்த இந்தத் தலைமுறை இளைஞர்களைச்
சங்கமிக்கவைத்தேன். கோரஸ் கச்சேரியில் இருந்து இங்கே கொஞ்சம்...
''நான்தான் இந்தச் சந்திப்பின் காம்பியர். அப்பதான் கடைசியா நம்மளைப்
பத்திப் பேசிக்கலாம். முதல்ல சிறந்த பின்னணிப் பாடகர்களா விகடன்
தேர்ந்தெடுத்த கானா பாலாவுக்கும் மகிழினி மணிமாறனுக்கும் வாழ்த்துகள்.
இப்போ ஒரே பாட்டில் பட்டையைக் கிளப்பிய மகிழினி... நீங்க பேசுங்க...''
என்று லீட் கொடுத்தார் கார்த்திகேயன்.
வெட்கமும் ஆர்வமும் விழிகளில் பிரதிபலிக்கப் பேசத் தொடங்கினார் மகிழினி.
''எனக்கு வேடந்தாங்கல் பக்கம் ஒரு கிராமம். என் கணவர் நாட்டுப்புறப்
பாடலாசிரியர். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி 'சென்னை சங்கமம்’ நிகழ்ச்சியில்
அவர் எழுதின பாட்டை நான் பாடினேன். அப்போ என் போன் நம்பரை யாரோ கேட்டுக்
குறிச்சுக்கிட்டாக. அப்புறம் கிராமத்துத் திருவிழாக்கள்ல பாடிட்டு
இருந்தேன்.
இப்போ திடீர்னு ஒரு நாள் இமான் அண்ணா போன் பண்ணிக்
கூப்பிட்டாரு. சும்மா வந்தேன். பாடவெச்சாரு. இப்போ என்னை எல்லாருக்கும்
தெரியுது. எல்லாமே கனவு மாதிரி இருக்கு... வேற ஒண்ணும் சொல்லத் தெரியலை!''
என்று நெகிழ்ந்தார், இன்னமும் வெள்ளந்தித்தனம் விலகாத மகிழினி.
''மகிழினிக்கு இனி எல்லாமே மகிழ்ச்சிதான்'' என்று அவருடைய தோள் இறுக்கிய
அனிதா, கானா பாலா பக்கம் பார்வையைத் திருப்ப, குஷியாக ஆரம்பித்தார் பாலா.
''நான் ஒரு வக்கீலுங்க. ஆனா, அது பார்ட் டைம்தான். இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மதப் பாடல்களை கானா ஸ்டைல்ல
பாடிட்டு இருந்த டிவோஷனல் சிங்கர்தான் என் அடையாளம். சினிமாவுக்கு
வரணும்னு 25 வருஷமாப் போராடிக்கிட்டு இருந்தேன். ஆனா, சொல்லிக்கிற மாதிரி
எதுவுமே நடக்கலை. எதிர்பார்க்காத ஒரு சமயத்துல 'அட்டகத்தி’ டைரக்டர்
ரஞ்சித் என்னை வரச் சொன்னார்.
'ஒன்சைட் லவ். அதுவும் ஃபெயிலியர். இதான்
சிச்சுவேஷன். ஒரு பாட்டு எழுதிக்குடுங்க’னு சொன்னார். 'நடுக்கடலுல கப்பல
இறங்கித் தள்ள முடியு மா’னு எழுதிக் குடுத்துட்டு, அதைப் பாடியும்
காமிச்சேன். அப்படியே ஸ்டுடியோல பாடுங்கனு சொல்லிப் பாடவெச்சிட் டாங்க.
இப்போ பெரிய பெரிய ஆளுங்கள்லாம் என்னைப் பாராட்டுறாங்க. ஆனா, எனக்கு
பாட்டுப் பாட ஆசை இல்லை. எழுதத்தான் ஆசை. ஆனா, ஆண்டவன் அருளால என்ன
வாய்ப்பு கிடைச்சாலும் பயன்படுத்திக்குவேன்!'' என்று நிறுத்த,
''என்ன ஒரு பணிவு... சூப்பர் சார்'' என்று பாராட்டிய கார்த்திகேயன்,
''இப்போ யாருக்கும் தெரியாத ரகசியம் ஒண்ணு சொல்றேன்... ஆக்சுவலா, ஆலாப்
ராஜு ஒரு சிங்கரே கிடையாது'' என சஸ்பென்ஸ் வைத்தார். ஆலாப் முகம் கலவரமாக,
''ஆரம்பத்துல நீ ஒரு கிடார் பிளேயரா இருந்தியே... அதைச் சொல்ல வந்தேன்பா.
ப்ப்பா... பையன் எப்படிப் பயப்படுறான் பாருங்க...'' என்று கார்த்திகேயன்
சொல்ல, கலகலவெனச் சிரித்துவிட்டார் ஆலாப்.
''ஆமா... நான் பேசிக்கலா ஒரு கிடாரிஸ்ட். ஐ.டி. கம்பெனியில் வேலை
பார்த்துட்டு இருந்தேன். போர்டு மீட்டிங், எம்.டி. ரெவ்யூனு தினமும்
மண்டைக் காய்ச்சலா இருக்கும். 'அடப்போங்கப்பா’னு அதெல்லாம் தூக்கிக்
கடாசிட்டு சினிமாவுக்கு வந்துட்டேன். 'பொல்லாதவன்’ல கிடார் வாசிச்சேன்.
'கோ’ படத்துல 'என்னமோ ஏதோ’ பாட்டுக்குக் கூப்பிட்டப்போ, கிடார்
வாசிக்கத்தான் கூப்பிடுறாங்கன்னு நினைச்சேன். பார்த்தா, அந்தப் பாட்டை
என்னையே பாடச் சொல்லிட்டார் ஹாரிஸ் சார். முதல் பாட்டே நல்ல ஹிட். இப்போ
வரை ஆல் இஸ் வெல்!'' என்கிற ஆலாப்பின் தோள் தட்டி, ''நீ இன்னும் நல்லா
வருவீங்க பிரதர்'' என்றார் முகேஷ்.
''அடுத்து வரப் போற பாடகி அவங்க குரலைப் போலவே மென்மையானவங்க!'' என்று
கார்த்திகேயன் இன்ட்ரோ கொடுக்க, அவரை ஒரு முறை முறைத்துவிட்டு ஆரம்பித்தார்
அனிதா. ''நான்தான் இந்த செட்லயே சீனியர். இளையராஜா சார் என்னை
அறிமுகப்படுத்தினார். ரொம்ப வருஷமா மெலடி மட்டுமே பாடிட்டு இருந்தேன். 'ஏன்
மெலடி மட்டுமே பாடுற? உன் குரலுக்கு எல்லாப் பாடல்களுமே பாடலாமே’னு
உற்சாகப்படுத்துன இமான் சார், அவரே 'வாடா வாடா பையா’ பாட்டுல என்னைப்
பாடவும் வெச்சார். அந்தப் பாட்டுக்கு அப்புறம்தான் பளிச்னு எனக்கு ஒரு
அடையாளம் கிடைச்சது. 'வாகை சூட வா’ படத்துல பாடுன 'செங்க சூளக்காரா’
பாட்டுக்கு விருதுகள் குவிஞ்சது... நான் நினைச்சே பார்க்காதது!'' என்றார்
நெகிழ்வாக.
''நம்ம எல்லாருக்கும் சென்னைதான் வந்தனம் சொல்லுச்சு. ஆனா, சென்னைக்கே
வந்தனம் சொன்ன நம்ம அண்ணன் முகேஷ§க்கு ஒரு ஓ...'' என்று கார்த்திகேயன் வார,
''உன்னை என்னமோனு நினைச்சேன். நல்லாப் பேசவும் செய்றியே!'' என்று அவருக்கு
கவுன்ட்டர் கொடுத்துவிட்டுப் பேசத் தொடங்கினார் முகேஷ்.
''சின்ன வயசுல இருந்தே பாடகன் ஆகணும்னு ஆசை. ரொம்ப வருஷமா ஸ்டேஜ்
ஷோக்களில் பாடிட்டு இருந்தேன். பெரிய போராட்டத்துக்கு அப்புறம்தான்
சினிமாவில் டிக்கெட் கிடைச்சது. அதுவும் ரஹ்மான் சார் மியூஸிக்ல.
இருந்தாலும், அடுத்தடுத்து பளிச் பளிச்னு ஹிட்ஸ் அமையலை. 'வேர் இஸ் த
பார்ட்டி’க்கு அப்புறம் 'வணக்கம் வாழவைக்கும் சென்னை’ நல்ல ஓப்பனிங்
கொடுத்திருக்கு. இப்ப மெலடி, ஹிட் பீட் ரெண்டுலயும் ஃபோகஸ் பண்றேன்.
ஓ.கே... இப்போ எல்லாரை யும் கலாய்த்த திருவாளர் கார்த்திகேயன் அவர்கள்
திருவாய் மலர்ந்தருள்வார்!'' என்று அவரை நெட்டினார்.
''விவரம்
தெரிஞ்ச வயசுல இருந்து பாட்டு பாட்டுனுதான் திரிஞ்சேன். மூணு வயசுல
சங்கீதம் கத்துக்கிட்டேன். 13 வயசுலயே மேடையில பாட ஆரம்பிச்சேன். 'ஆறு’
படத்தில் முதல் பாடல். அப்புறம் 'வாடா வாடா பையா’ நல்ல ஓப்பனிங். இப்போ
'கன்னித் தீவுப் பொண்ணா... கட்டழகுக் கண்ணா’ பாட்டு டாப் கியர்
தட்டிருச்சு. அந்த உற்சாகத்துலதான் எல்லாரையும் கலாய்ச்சுட்டு இருந்தேன்.
இப்போ இந்தச் சந்திப்பை இனிதே நிறைவு செய்ய... திருமதி மகிழினி
'சொய்ய்ங்... சொய்ய்ங்...’ பாடுவாங்க!'' என்று கார்த்தி சொல்ல, அழகாகப்
பாடத் துவங்கினார் மகிழினி. கூடவே, அத்தனை குரல்களும் சேர்ந்துகொள்ள, அங்கு
நடந்தது தமிழகத்தின் செல்லக் கச்சேரி.
நன்றி - விகடன்
0 comments:
Post a Comment