Thursday, January 10, 2013

பரஸ்பர நிதிகள் - மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சில் நம்பிப்பணம் போடலாமா? சோம. வள்ளியப்பன் கட்டுரை-

ஷேர் மார்க்கெட் சீக்ரெட்!



பரஸ்பர நிதிகள் பராக் பராக்!



சோம. வள்ளியப்பன்



கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகிறவர்கள். சமைக்க நேரமில்லாதவர்கள். ஆனாலும் மனைவி விடமாட்டார். நான் சமைக்கிறேன் என்பார். அவருக்குச் சமைக்கத் தெரியுமா என்றால், அதுவும் இல்லை. சமைக்க முயற்சி செய்வார். நேரமாகும். பொருட்கள் வீணாகும். சமைத்ததைச் சாப்பிட முடியாது.

அவர்கள் என்ன செய்யலாம்?

ஹோட்டலுக்குப் போய் விடலாம். காசு கொஞ்சம் செலவாகும்தான். தவிர ஹோட்டலில் இருக்கிற மெனுவில் இருந்துதான் தேர்வு செய்து சாப்பிட வேண்டும். ஹோட்டல் நேரத்துக்கு, ஹோட்டல் சர்வர் கொடுக்கும் விதம் என்பது போல சில அனுசரிப்புகள் தேவைப்படும்.

தானே ஆராய்ந்து பங்குகள் தேர்வு செய்து, வாங்கி, சரியான நேரத்தில் விற்று லாபம் பார்க்க முயல்வது, தானே சமைப்பது போல. பலரும் செய்வது அதைத்தான். கூடுதலோ குறைவோ, வெந்ததோ வேகாததோ, தானே சமைத்து சாப்பிடுவதில்தான் சிலருக்குத் திருப்தி.

வேறு சிலர் எனக்குச் சமைக்கத் தெரியாது. அல்லது எனக்கு சமைக்க நேரமில்லை. எனக்குத் தேவை சாப்பாடு. அதை செய்து வாங்கிக் கொண்டால் என்ன என்று யோசிப்பவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கான திட்டங்கள் தான், பரஸ்பர நிதிகள்.

சில கூட்டங்களில் இப்படிப்பட்ட கேள்விகள் வரும். பரஸ்பர நிதிகள் முழுக்க சேஃப்தானே. மியூட்சுவல் பண்டில் போடும் பணம் பத்திரமாக இருக்கும் தானே?"

இதற்கு நான் சொல்லும் பதில் என்ன தெரியுமா?

அவையும் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவைதான். என்ன, அவற்றைக் கையாளுகிறவர்கள் விவரம் தெரிந்தவர்கள். அவ்வளவுதான். காரணம், தனி முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிற அதே பங்குச் சந்தையில்தான் பரஸ்பர நிதிகளும் முதலீடு செய்கின்றன. அதனால் உலகளாவிய அல்லது தேசத்தின் அல்லது நிறுவனம் சார்ந்த பிரச்னைகளால் பங்குவிலைகள் பாதிக்கப்படும்போது, அவற்றில் முதலீடு செய்திருக்கும் பரஸ்பர நிதிகள் மட்டும் தனித்தீவாக இருக்க முடியாது.

வெறும் கையால் கேட்ச் பிடிப்பதற்கும், கிளவுஸ் போட்டுக் கொண்டு கேட்ச் பிடிப்பதற்குமான வித்தியாசம் மட்டுமே இருக்கும். பரஸ்பர நிதிகளில் இருக்கும் கிளவுஸ் என்பது, அந்நிறுவனத்தின் பண்ட் மேனேஜர்."



ஏதோ தொழில், வியாபாரம் அல்லது முழுநேர வேலை செய்து கொண்டிருப்பவர் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வதற்கும், பண்டு மேனேஜர்கள் வாங்கி விற்பதற்கும் வேறுபாடு உண்டு. காரணம் பண்டு மேனேஜர்கள் இதற்காகவே படித்தவர்கள். இதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்ட திறமைசாலிகள். எல்லாம் போக எல்லா நேரமும் கண்கொத்திப் பாம்பாக சந்தையின் போக்குகளையும் சந்தையைப் பாதிக்கும் மற்றவற்றையும் இடைவிடாது கண்காணிப்பவர்கள்.

இதனால் அவர்கள் சரியான முடிவுகள் எடுக்கும் சாத்தியம் கூடுதல். மேலும் காரணங்கள் சொல்லுவதென்றால், அவர்கள் உணர்வு வசப்படாமல் சரியான முடிவுகள் எடுக்கலாம். உணர்வு வசப்படுவது என்றால், ‘அட! அவ்வளவு விலைக்கு வாங்கியது. அதைப்போயா நட்டத்துக்கு விற்பது!என்பதுபோல யோசிப்பது.

தனிநபர்கள் இப்படித்தான் யோசிப்பார்கள். விலை மேலும் இறங்கப்போகிற பங்குகளை, சரியாகிவிடும் சரியாகிவிடும் என்று நினைத்து, விற்காமல் வைத்திருப்பார்கள். முன்பு பார்த்த யூனிடெக், சுஸ்லான் பங்குகளைப் போல.

ஆனால், பண்டு மேனேஜர்கள், மருத்துவ சர்ஜன்கள் போலத்தான். பிரச்னை ஆகக்கூடிய, மற்ற பகுதிகளுக்கும் பரவக் கூடிய பிரச்னையா? வெட்டு அந்தப் பாகத்தைஎன்று முடிவெடுப்பார்கள். அறுவை சிகிச்சை என்றால் வலிக்குமே, பாவம். இன்னும் கொஞ்சம் மருந்து மாத்திரைகளிலேயே முயற்சிப்போமேஎன்று கருணை காட்டி, பிரச்னையை வளரவிட மாட்டார்கள்.

பரஸ்பர நிதிகளில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யும் நிதிகள். மற்றொன்று கடன் பத்திரங்களில் முதலீடு செய்பவை. இரண்டிலும் கலந்து செய்யும் மியூட்சுவல் பண்டுகள் இல்லையா என்றால், அதுவும் உண்டு. அவற்றை ஹைபிரிட் என்பார்கள்.

மேலே பார்த்த பங்குச் சந்தையின் ஆபத்துகள், முதல்வகை மியூட்சுவல் பண்டுகளில் மட்டும்தான். அவற்றை ஈக்குவிட்டி ரிலேட்டட் என்பார்கள்.

இவற்றில் முதலீடு செய்தால், நேரடியாக பங்குகளில் முதலீடு செய்யும் போது கிடைக்கிற வரிச்சலுகைகள் கிடைக்கும். அதாவது பண்டு நடத்தும் நிறுவனம், லாபத்தில் இருந்து டிவிடெண்ட் கொடுத்தால் அதற்கு வருமான வரி கிடையாது. இந்தவகை பண்டுகளை ஓராண்டு வைத்திருந்து விட்டு விற்றால், அதில் லாபம் (கூடுதல் விலையில் விற்பதால் கிடைக்கிற முதல் பெருக்கம்) கிடைத்தால், அந்த கேப்பிடல் கெயின்க்கு வரி கிடையாது.

ஆக இவ்வகை பரஸ்பர நிதி என்பது, பங்கு முதலீடு போலவேதான். எதை எப்போது வங்குவது விற்பது போன்றவற்றை நமது பண்டு மேனேஜர் பார்த்துக் கொள்வார். ஆண்டு இறுதியிலோ நிறுவனம் லாபத்தைக் கணக்கிட்டுப் பார்த்து டிவிடெண்ட் கொடுக்கும். லாபம் இல்லாவிட்டால் கொடுக்காது.

அடுத்த வகை பண்டுகள், பலவகை கடன் பத்திரங்களில் முதலீடு செய்து அதில் கிடைக்கும் லாபத்தைப் பகிர்ந்து கொடுக்கும். கடன் பத்திரங்களில் போடப்படும் பணம் பங்குகளில் போடுவதைவிட பாதுகாப்பானது. ஆனால் அவை ஓரளவுதான் வருமானம் தரும். நம்மால் மிக அதிகமாக வட்டி தரும் நல்ல நிறுவனங்களைக் கண்டுபிடித்து முதலீடு செய்ய முடியாது என்பதால், அந்தத் தேவையை பலரும், பரஸ்பர நிதிகள் மூலம் நிறைவு செய்து கொள்கிறார்கள்.

நம் நாட்டில் இருக்கும் பரஸ்பர நிதிகளில் போடப்படும் பணத்தில் பெரும் பகுதி, இந்த வகைக்குள்தான் போகின்றன. போடுகிறவர்கள் கார்பரேட்டுகள். இதில் கிடைக்கும் வருமானத்துக்கும் (டிவிடெண்ட்) மற்றும் இந்த மியூட்சுவல் பண்டை விற்கும்போது கிடைக்கும் லாபத்துக்கும் வருமான வரி உண்டு.



நிறுவனம் மக்களிடம் பணத்தை வாங்கி பங்குகளிலோ அல்லது கடன் பத்திரங்களிலோ (அல்லது அதில் கொஞ்சம் இதில் கொஞ்சம் என்றோ) முதலீடு செய்கிறார்கள். லாபம் பார்க்கிறார்கள். டிவிடெண்ட் கொடுக்கிறார்கள். அது தவிர, விற்கும்போது எப்படி லாபம் கிடைக்கும் என்று கேட்கலாம்.

குறைந்த விலைகளுக்கு பங்குகள் வாங்கி, அதன்பிறகு பங்கு விலைகள் உயர்ந்து விட்டால், அந்த நிறுவனத்தின் வளம் அதிகமாகிவிடும். இதை எதிர்பார்த்து தான் பண்டு மேனேஜரும் சரி, முதலீட்டாளர்களும் இருக்கிறார்கள். அப்படி நடந்தால், அந்தக் குறிப்பிட்ட நிதியில் போடப்பட்ட பணம் பெருகியிருக்கும். அதை நிகர சோத்து மதிப்பு என்ற பொருளில் நெட் அசெட் வேல்யு (NAV) என்று அழைப்பார்கள். கடன் பத்திரங்களில் முதலீடு செய்கிற போதும், பிரித்துக் கொடுத்த வட்டி போக, மீதம் நிதியிலேயே இருக்கும். அதனால் நெ..வே. கூடும்.

தவிர, எல்லா நிதிகளும் அவ்வப்போது அல்லது ஆண்டுக்கு ஆண்டு லாபத்தில் இருந்து டிவிடெண்ட் கொடுப்பதில்லை. மாறாக பிக்செட் டிப்பாசிட்டில், முதிர்வின் போது வாங்கிக் கொள்கிறேன் என்று விட்டு வைப்பதுபோல விட்டு விடுவார்கள். அந்த வகை பண்டுகளின் பெயர் குரோத் பண்டுகள். அவற்றின் நெ..வே .பெருகிக் கொண்டே போகும். உதாரணத்துக்கு, HDFC குரோத் பண்ட், குரோத் ஆப்ஷனின் நெ..வே. 92 ரூபாய்.

பங்குகளை NSE மற்றும் BSE போன்ற சந்தைகளின் புரோக்கர்கள் மூலம் விற்கலாம், வாங்கலாம் என்பது தெரியும். பரஸ்பர நிதிகளை எங்கே வாங்குவது விற்பது என்ற கேள்வி வருகிறதா?

பண்டு வெளியிடப்படும்போது IPOவில் பங்குகளுக்கு விண்ணப்பிப்பது போல, NFOவில் வாங்கலாம். ஓப்பன் எண்டட் திட்டங்களில் அதன் பிறகும் கூட அதே நிறுவனத்திடம் இருந்து அவ்வப் போது நிலவும் நெ..வே.க்கு ஏற்ப விலைகளில் வாங்கலாம். விற்கலாம். வாங்கினால் ஒரு விலை. நாம் விற்றால் அதை விட சற்றுக்குறைவு.

இது தவிர, குளோசிடு எண்டட் திட்டங்கள் உள்ள பண்டுகளை வாங்குவதென்றால் NFO நேரம்தான் சரி. அதைவிட்டு விட்டால் அதன் பிறகு பங்குச் சந்தைகளில் பங்குகளை வாங்குவதைப் போல நடப்பு விலைக்கு வாங்கலாம். விற்கலாம்.

0 comments: