Friday, January 11, 2013

பாட்டாளி சொந்தங்களே - மருத்துவர் ச. ராமதாஸ்

-->
பாட்டாளி சொந்தங்களே

தித்திக்கும் தைக்கூடல்!

மருத்துவர் . ராமதாஸ்
என்னை எதிர்க்கும் கவிதா

எங்களுக்குக் கடைசி மகள் கவிதாதான் மிகவும் செல்லம். ஏற்காட்டில் படித்துக் கொண்டிருந்த அவரைப் பார்ப்பதற்காகச் செல்லும்போதெல்லாம் அழுதுகொண்டே எங்களுடன் வந்து விடுவதாக அடம்பிடிப்பாள். அப்போது, நீ படித்து வளர்ந்து கலெக்டர் ஆக வேண்டும் என்பதற்காகத்தான் உன்னை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறேன்" என்று நான் சமாதானம் கூறுவேன். கவிதா 5-ஆம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்து அவரிடமிருந்து வாரம் ஒரு கடிதம் ஆங்கிலத்தில் வரும். அவ்வாறு எழுதப்பட்ட கடிதம் ஒன்றில், ‘நான் இங்கே படித்தால்தான் கலெக்டர் ஆவேனா? திண்டிவனத்தில் படித்தால் கலெக்டர் ஆக மாட்டேனா? நீங்கள் கிராமத்தில் படித்து மருத்துவராகவில்லையா?’ என்ற வாதங்களை முன் வைத்திருந்தார். பள்ளிப்படிப்பை முடித்ததும் சென்னை எத்திராஜ் கல்லூரியில் இளங்கலை படிப்பையும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஊடகவியலில் முதுநிலை படிப்பையும் கவிதா முடித்தார். அதன் பின்னர் அவருக்கு பெண்ணே நீஎன்ற பெயரில் மாதப் பத்திரிகை நடத்த ஏற்பாடு செய்தேன். இந்தப் பத்திரிகையின் பெயரையும் நானே தேர்வு செய்தேன். கவிதா குழந்தைப் பருவத்திலிருந்தே சுட்டியாக இருப்பார். அன்றும், இன்றும் என்னை எதிர்த்துப் பேசும் ஒரே நபர் அவர்தான்.
எழுந்திரு காரில் போய் உட்கார்

ஏற்காட்டில் அன்புமணி ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது அவரிடமிருந்து எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், இங்கு படிக்கிற பையன்கள், குறிப்பாக வெளிநாட்டு மாணவர்கள் மது அருந்துகிறார்கள். சிகரெட் பிடிக்கிறார்கள். நான் உங்களுக்கு ஒரே மகன். இங்கு இருந்தால் கெட்டுவிடுவேன். எனவே, இங்கு வந்து என்னை அழைத்துச் சென்று விடுங்கள்" என்று எழுதியிருந்தார். இரண்டு மாதங்கள் கழித்து அன்பு மணியும், கவிதாவும் விடுமுறைக்காக திண்டிவனம் வந்திருந்தனர். விடுமுறை முடிந்ததும் ஏற்காடு போக மாட்டேன் என்று அன்புமணி அடம்பிடித்தார். ஒருவாறு அவரை சமாதானம் செய்து ஏற்காடு அழைத்துச் சென்றேன். எங்களோடு ஜிப்மரில் படித்துக் கொண்டிருந்த என் நண்பர் டாக்டர் சுதாமனும் வந்திருந்தார். ஏற்காடு சென்றும் பள்ளிக்கூடம் செல்ல மாட்டேன் என்று அடம்பிடித்தார். ஒரு பூங்காவில் அமர்ந்து அவரது தாயும், டாக்டர் சுதாமனும் எவ்வளவோ பேசியும் அவரது பிடிவாதம் தளரவில்லை. கடைசியில் நான் கோபமாக, எழுந்திரு... காரில் போய் உட்கார்... பத்து எருமை மாடுகள் வாங்கித் தருகிறேன். தைலா புரத்தில் போய் மேய்" என்று அதட்டினேன். அதன்பின் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. பள்ளிக்குப் போகிறேன் என்றார்.

அதிலிருந்து பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை எந்தப் பிரச்னையும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் எல்லா விளையாட்டிலும் அவர்தான் முதலிடம்.
ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் ஓய்வெடுப்பதற்காக ஏற்காடு செல்லும்போது, அன்பு மணி படித்த மான்போர்ட் பள்ளிக்குச் சென்று அப்பள்ளி முதல்வர் சகோதரர் ஜார்ஜ் கலங்கோடு (Bro.George Kalangode) கொடுக்கின்ற அன்பான விருந்தையும், வரவேற்பையும் பெறாமல் வருவதில்லை.
அன்புவின் ஆசை
என் சகோதரியின் குழந்தைகள் நால்வரும் எங்களுடனேயே வளர்ந்தனர். அவரது ஒரே மகன் பரசுராமன் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., எம்.எஸ். படித்து முடித்தார். அவருக்கு எனது மூத்த மகள் ஸ்ரீகாந்தியைத் திருமணம் செய்து வைத்தேன். மற்ற மூன்று பெண் குழந்தைகளையும் நான் தான் வளர்த்துப் படிக்க வைத்துத் திருமணம் செய்து வைத்தேன். அவர்கள் தற்போது சென்னையிலும், திண்டிவனத்திலும் வாழ்ந்து வருகின்றனர். சகோதரி இன்றும் என்னோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

என் மகன் அன்புமணிக்கு பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், பொறியியல் படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசை. இந்த ஆசையைத் தமது தாயார் மூலமாக என்னிடம் அவர் கூறியபோதிலும் அது எடுபடவில்லை. சென்னை மருத்துவக் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்ததால் அதில் சேர்ந்து படிப்பை முடித்தார். பொதுவாகவே அன்புமணிக்கு என்னிடம் நேரடியாக எதையும் கேட்பதற்குப் பயம். எனவே, தமது கருத்துக்களை அன்றும், இன்றும் தமது தாயார் மூலமாகத்தான் என்னிடம் தெரிவிப்பார்.
எனது வழியில் மருத்துவம் படித்த எனது மகன் அன்புமணியும், மருமகன் பரசுராமனும் எனது மருத்துவமனையில் எனக்கு உதவியாக சில காலம் பணியாற்றினர். மருத்துவமனையை மருமகன் பரசுராமன்தான் இப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அன்புமணி திண்டிவனத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள நல்லாளம் என்ற ஊரில் ஒரு மருத்துவமனையைத் தொடங்கி நடத்தி வந்தார். அன்பு மணிக்கு மருத்துவம் படிக்க விருப்பமில்லை என்ற போதிலும், அவரை மருத்துவம் படிக்க வைத்ததன் நோக்கம் அவர் எனக்கு உதவியாகப் பணியற்றுவார் என்ற எதிர்பார்ப்புதான். ஆனால், ஒரு கட்டத்தில் மருத்துவம் பார்க்க விருப்பமில்லை என்று கூறி, தமது மனைவியுடன் சென்னைக்குச் சென்று விட்டார்.
அன்பு இல்லம்

திண்டிவனத்தில் வாடகைக் கட்டடம் ஒன்றில் குடியிருந்து கொண்டு அங்கேயே மருத்துவமனையையும் நடத்தி வந்த நாங்கள், ஒருகட்டத்தில் தெருவில் இருந்த பழைய வீட்டை விலைக்கு வாங்கி, அதை இடித்து விட்டு, புதிய வீடு கட்டினேன். அதற்கு அன்பு இல்லம் என்று பெயரிட்ட நான், அந்த வீட்டில் கடந்த 1974-ஆம் ஆண்டில் குடியேறினேன்.
அதற்கு அடுத்த ஆண்டில் திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் தரிசாகக் கிடந்த 20 ஏக்கர் நிலத்தை மார்வாரி ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கினேன். அந்தத் தரிசு நிலத்தைப் பயன்படுத்திப் பயிரிடத் தொடங்கினேன். பின்னர் அதுவே தைலாபுரம் தோட்டம் என்றழைக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக நானும், எனது மனைவியும் இந்தத் தோட்டத்தில்தான் வாழ்ந்து வருகிறோம். இப்போது தைலாபுரம் தோட்டத்தில் உள்ள மரம், செடி, கொடிகள் அனைத்தும் எனது கைகளாலேயே நடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

நான் மருத்துவரானதும் எனது சம்பாத்தியத்தில் முதன் முதலாக கறுப்பு வண்ணத்தில் அம்பாசிடர் கார் ஒன்றை வாங்கினேன். பின்னர் பியட் கார் ஒன்றை வாங்கினேன். இவ்வாறாகப் பல வண்ணங்களில் மாற்றி மாற்றி கார்களை வாங்கினேன்.
அதற்கு முன்பெல்லாம் திரைப்படம் பார்ப்பதற்காகவே நானும், எனது மனைவியும் காரில் சென்னைக்குச் செல்வோம். திண்டிவனத்திலிருந்து சென்னைக்குச் செல்லும் போது நானும், அங்கிருந்து திரும்பும்போது எனது மனைவியும் காரை ஓட்டுவோம்.
புதிதாக எந்தத் திரைப்படம் வந்தாலும் அதைப் புதுச்சேரிக்கு குடும்பத்துடன் சென்று பார்த்து விடுவோம். பிளாக்கில் நுழைவுச் சீட்டு வாங்கும் பொறுப்பு என்னிடம் அளிக்கப்படும். அந்தப் பணியை நான் சிறப்பாகச் செய்து, படம் பார்த்துவிட்டு, அங்குள்ள ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்டு விட்டு வீடு திரும்புவோம். செலவழிப்பதில் வெள்ளைக்காரனைப் போல்தான் இருந்தோம். ஒவ்வொரு வாரமும் சம்பாதித்த பணத்தை எடுத்துக் கொண்டு, ஞாயிற்றுக் கிழமை காலையில் வீட்டிலிருந்து புறப்பட்டு ஏதேனும் ஒரு சுற்றுலாத் தலத்துக்குச் சென்று வார விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிப்போம். அந்தக் காலத்தில் என்னைப் போல வேறு யாரும் வார விடுமுறையை அவ்வளவு மகிழ்ச்சியாகக் கழித்திருக்க மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

1980-ஆம் ஆண்டு வரை எனது குடும்ப வாழ்க்கை மருத்துவம் பார்ப்பது, குடும்பத்துடன் வார விமுடுறையைக் கழிப்பது, ஏற்காட்டுக்குக் குழந்தைகளைப் பார்க்கச் செல்வது, திரைப்படங்களுக்குச் செல்வது என மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்தது. 1980ஆம் ஆண்டில் வன்னியர் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு குடும்பப் பணிகளுடன் இயக்கப் பணிகளும் சேர்ந்து கொண்டன.
குழந்தைகள் வளர்ந்து ஆளான பின்னர் அவர்களுக்குக் குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்தித் தரும் காலம் வந்தது. மகன் அன்பு மணிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி அவர்களின் மகள் சவுமியாவைத் திருமணம் செய்து வைத்தேன். அவர்களுக்கு சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுக்தா என மூன்று பெண் குழந்தைகள். அவர்களில் முதல் இரு குழந்தைகளும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதே போல், எனது மகள் வயிற்று மூத்த பேரனான சுகந்தனுக்கு திருமணமாகி, ஒரு வயதில் நேயா என்ற பெண் குழந்தையும் உள்ளது. அவளால் நான் பூட்டனாகவும் ஆகி நிற்கும் பெரிய அதிர்ஷ்டம் வாய்த்திருக்கிறது. இவ்வாறாக எனது குடும்பம் கொள்ளுப் பேத்தியுடன் சேர்ந்து மொத்தம் 32 பேர். பண்டிகைக் காலங்களில், இவ்வளவு பேரும் கூடி, மற்ற உறவினர்களையும் வர வழைத்து ஆட்டம்-பாட்டம்- கொண்டாட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவோம். பொங்கல் திருநாளின் போது மூன்று நாட்களும் தைலாபுரம் அமர்க்களப் பட்டுவிடும். அந்த மூன்று நாட்களில் நானும் ஒரு குழந்தையாகி விடுவேன்.
எனது பேரக் குழந்தைகள் 14 பேரைப் பார்க்கும் போதும், அவர்களின் பேச்சைக் கேட்கும்போது எனக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
தைக்கூடல்
தைலாபுரத் தோட்டத்தில் நடைபெறும் தைக்கூடல் விழா புகழ்பெற்று 1999-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சிந்தித்தபோது, ‘தைக் கூடல்என்று இளைய மகள் கவிதா பெயர் சூட்டினார். இதற்காக அந்த விழாவை நடத்தும் அவரது அண்ணன் அன்புமணியிடமிருந்து ஐயாயிரம் ரூபாய் பரிசு வென்றார். இந்தத் திருநாளின் போது குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் பாட்டு, நடனம், பேச்சு, நாடகம் என எண்ணற்ற நிகழ்ச்சிகளை நடத்தி, தைக்கூடலை மிகச் சிறந்த கலை விழாவாக மாற்றிவிடுவதால், ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவுக்கு வரும் சம்பந்திகள் உள்ளிட்ட உறவினர்கள், நண்பர்கள் என கூட்டம் கூடிக் கொண்டே செல்கிறது.

மாறுவேடப் போட்டி, பூக்கள் சேகரிக்கும் போட்டி, ஜோடிப் பொருத்தம், கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, வில்லுப் பாட்டு, கிராமிய நடனம் என ஒவ்வொரு ஆண்டும் தைக்கூடல் விழா பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்த விழாவுக்கு மேலும் மெருகூட்டும் முயற்சியாக, பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து பாடல்களைத் தேர்வு செய்து, அதற்குக் கதை வடிவம் கொடுத்து நாட்டிய நாடக நிகழ்ச்சியாக நடத்தி வருகிறார் மருமகள் சவுமியா அன்புமணி. இந்த நாட்டிய நாடகங்களில் எங்கள் வீட்டுக் குழந்தைகள்தான் நடிப்பார்கள். திரிகூட ராசப்ப கவிராயரின் குற்றாலக் குறவஞ்சி, இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம், மணிமேகலை, பாரதியின் பாஞ்சாலி சபதம், பாண்டித்துரை தேவர் பாடிய காவடிச் சிந்து, நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உமருப் புலவர் எழுதிய சீறாப்புராணம், முக்கூடற் பள்ளு, முருகாயனம் போன்ற தமிழிலக்கியங்கள் தைலாபுரத் தோட்டத்துத் தைக்கூடல் விழாவில் நாட்டிய நாடகங்களாக அரங்கேற்றப் பட்டிருக்கின்றன.
தமிழிசையில் எனக்குத் தீராத ஆர்வம். அதைத் தீர்த்துக்கொள்ளும் வகையில் நான் உள்ளிட்ட எங்கள் குடும்பத்தின் பெரியவர்கள் முதல் 4 வயது பேரன் வரை அனைவரும் தமிழிசை பாடி வருகிறோம். திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை, சித்தர் பாடல்கள், திருமுறை என எங்கள் வீட்டில் ஒரு பொங்கு தமிழ் பண்ணிசையையே அரங்கேற்றி விடுவோம்.

இவ்விழாவின் இன்னொரு முக்கிய அம்சம் திண்டிவனம் தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினரும், எனது சகோதரியின் மருமகனுமான தன்ராஜும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து பொய்க்கால் குதிரை ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், குடு குடுப்பைக்காரன் நாடகம் என எண்ணற்ற நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவார்கள். எனது இளைய மகள் கவிதாவும், எனது அக்கா மகள் கனிமொழியும் இணைந்து வன்னிய புராணம், பக்தபிரகலாதா போன்ற தெருக்கூத்து நாடகங்களைக் குழந்தைகளை வைத்து நடத்தி வருகின்றனர்.
கிராமங்களிலிருந்து இலக்கிய மேடைகள் வரை வளர்ந்த எங்களது கலைவிழா எனது இளைய மகள் கவிதாவின் முயற்சியால் நவீனமயமாகி விட்டன. மௌன நாடகங்கள், பின்னல், கோலாட்டம், படுகா நடனம் போன்ற புதிய முயற்சிகளைக் குழந்தைகள் மேற்கொண்டனர். இவை அனைத்தும் மிகமிக வெற்றிகரமாக அமைந்தன. தைக்கூடல் திருவிழா கலை இலக்கியத்துடன் முடிவடைந்து விடுவதில்லை. தமிழர்களின் வீரக் கலைகளும் இடம்பெறும். இதிலும் முழுக்க முழுக்க குழந்தைகள்தான் இடம்பெறுவார்கள். சிலம்பாட்டம், நெருப்பு நடனம், காவடியாட்ட சாகசம், கத்திச் சண்டை, கம்புச் சண்டை, புலியாட்டம் என வீரத்துக்கு இங்கு பஞ்சமில்லை.
தைக்கூடல் திருநாளின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் சிரிப்புக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். எனது சிரிப்பு, எனது மனைவியின் புன்னகை ஆகியவற்றைப் பார்ப்பதே எங்களது குடும்பத்தினரின் நோக்கம். அதனால் அன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் சிரிப்பு, சிரிப்பு, சிரிப்பு. மருமகனின் பாட்டு, பேரப் பிள்ளைகளின் நடனம் ஆகியவை அனைவரையும் கவரும். பேரன் குணாநிதியின் நாடகங்களும், நடனங்களும் அன்று வெகு சிறப்பாக இருக்கும்!
அடடா அந்த மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள் இருக்கின்றனவே?

0 comments: