Thursday, January 10, 2013

லைஃப் அஃப் கடி - லாஸ்ஏஞ்சல்ஸ் ராம் - காமெடி கட்டுரை

-->
லைஃப் அஃப் கடி

ஒரு பையின் கதை!

லாஸ்ஏஞ்சல்ஸ் ராம்

கடைகளில் கெஞ்சிக் கெஞ்சி எக்ஸ்ட்ராவாக வாங்கப்படும் ப்ளாஸ்டிக் பை, புடைவைக் கடைகளில் பெண்கள் சண்டைபோட்டு வாங்கி வீட்டில் பீரோக்களில் சேமித்து வைக்கும் கட்டைப் பை, சாஸ்திரிகளின் தர்ப்பைப் பை, அசிஸ்டெண்ட் டைரக்டர்களின் ஜோல்னாப் பை, ஆர்மிக்காரர்களின் கம்பளிப் பை, யுவதிகளின் ஃபேஷனான சணல் பை - இப்படி பலதரப்பட்ட பைகள் இருந்தாலும், நமது பாரம்பரியமான தமிழ்ப் பை மஞ்சள் பை தான். ஆகவே அதன் கதையை ஆங்கிலப் படமாக எடுப்பதே என் நோக்கம்.
ஷங்கர் எடுத்துக் கொண்டே இருக்கும் படத்துக்குப் போட்டி பை’. ஆனால், ஷங்கர் இன்னும் சீனாவின் மலைகளுக்கு பெயிண்ட் அடித்து முடிக்கவில்லை, படம் வெளிவர பலகாலம் ஆகலாம் என்று நம்பத்தகாத ஊடகச் செய்திகள் சொல்வதால், அதுவரை நாம் பொறுத்திருக்க வேண்டாம், ஹாங்காங் கம் ஹாலிவுட் டைரக்டர் ஆங்லீயுடனேயே மோதிவிடலாம் என்று நான் முடிவெடுத்ததன் பலனே ஒரு பையின் கதை.
விட்டலாச்சார்யா மாய மோதிரம்எடுத்தால் நாம் கிண்டல் செய்வோம். ஆனால், ஆங்லீ அதையே அந்தரத்தில் பறந்து பறந்து சண்டை போடும் 'Crouching Tiger Hidden Dragon' என்றால் ஹாஎன்று வாய் பிளந்து பார்ப்போம், அமெரிக்க ஆக்செண்டில் அவரைப் பேட்டி காண்போமல்லவா?.
""Pie என்றால் அப்பம்" என்று ஆப்பக்காரர்களும், ஓஹோ, இது ஒரு பாய்பற்றிய கதையா?" என்று பத்தமடை பாய் முடைபவர்களும் தூக்குடா படப்பெட்டியஎன்று சண்டைக்கு வருமுன், நம் சினிமாக் கதையை எல்லோருக்கும் சொல்லி விட்டு படத்தை ஆரம்பிக்கும் ஒரு நவீன முயற்சியே இப்படி கதையை முதலிலேயே சொல்லும் என் உத்தி.
படத்தைத் திருடி எடுப்பதாக நான் ஏற்கெனவே முடிவு செய்து விட்டேன். மன்னிக்கவும் திருடி அல்ல, 3டி-ல் என்று சொல்ல வந்தேன். அப்போதுதான் கோக், பாப்கார்ன் எல்லா விலையையும் உயர்த்தி சம்பாதிக்க முடியும்.
கதையை முதலில் கேளுங்கள்.
படத்தில் மஞ்சாப்பை தான் பாய்ஹீரோ. அப்படியென்றால் பை டான்ஸ் ஆடுமா, ஃபைட் பண்ணுமா என்றெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது. வெய்ட் ப்ளீஸ்.
படம் கூடுவாஞ்சேரியில் ஒரு சேரியில் ஆரம்பிக்கிறது. மங்களகரமான கோவிந்தா மஞ்சள் பையில் பட்டையாக நாமம் போட்டிருப்பதால் பை தனக்குத்தானே நாம் பிறப்பால் ஹிந்து என்று முதலில் நினைத்துக் கொள்கிறது. ஆனால் பலபேர் மஞ்சள் பைகளில் கசாப்புக் கடையிலிருந்து கறி வாங்கிச் செல்வதால் ஓஹோ இந்த மஞ்சள் மற்றவருக்கும் மகிமை பொருந்திய கலரோஎன்று தனக்குத்தானே மயங்குகிறது. ஒரே நேரத்தில் இரண்டு மதத்திலும் இருந்தால் என்ன என்று பையான ஹீரோ பையன் யோசிக்கிறான். ஆனால் உச்சிவெயிலில் மயங்கிவிழும் ஒருவர் மஞ்சள் பையை, தண்ணீரில் நனைத்து மண்டையில் போட்டுக்கொண்டு ஆசுவாசப்படுத்திக் கொள்வதையும் பார்த்து ஹீரோ இன்னும் கன்ஃப்யூஸ் ஆகிறான்.
இனிமேல் மூன்று மதங்களையும் ஹோல் சேலாக ப்ராக்டீஸ் செய்வேன் என்று அப்பாவிடம் அடம்பிடிக்கிறான். மொத்தத்தில் நம் ஹீரோ ஒரு குடாக்கு என்பதை பட ஆரம்பத்திலேயே ரசிகர்களுக்கு நுணுக்கமாகத் தெரிவித்து விடுகிறோம். இப்படிப்பட்ட லூசை பிள்ளையாகப் பெற்றவர் எப்பேர்ப்பட்ட மாங்காவாக இருக்கவேண்டும்?

வேலைவெட்டி ஏதுமில்லாமல் டான்ஸர்களை சைட் அடிப்பது, டப்பாங்குத்தில் எடுபிடி என்று அலையும் ஹீரோவை கடுப்பு + போண்டியான அவனுடைய அப்பா ஒருநாள் நன்றாகக் காய்ச்சி எடுத்து விடுகிறார். ஏற்கெனவே சோத்துக்கு லாட்டரி, மாமூல் கொடுத்து மாளவில்லை என்பதால் அவர்களுடைய குடும்ப பிசினஸான தெருக்கூத்தை மூடும்படியான கஷ்டகாலம் என்பதை பைபுரிந்து கொள்கிறான். கையில் மஞ்சாப் பையுடன் கூடுவாஞ்சேரி கடற்கரைக்கு வந்து நம் ஹீரோ ஒரு sad mood போஸ் கொடுகிறான்.
ஆனால் திடீரென்று கடற்கரையில் எழுந்த ஒரு சுனாமியால் நம் பை கடலுக்குள் தூக்கி வீசப்படுகிறான். நடுக்கடலில் மிதந்து வரும் மட்டை ஒன்றில் அவன் ஒண்டுக்குடித்தனம் நடத்த நினைக்கையில் அதே மட்டையில் நண்டு, கழுகு, முதலை, சுறாமீன் போன்ற சிலவும் அங்கேயே டேரா போடுகின்றன.
எப்போது பார்த்தாலும் நண்டுக்கும் முதலைக்கும், முதலைக்கும் சுறாவுக்கும், சுறாவுக்கும், கழுகுக்கும், மஞ்சாப்பைக்கும், (தயாரிப்பாளருக்கும், ஃபைனான்சியருக்கும், விநியோகஸ்தருக்கும் என்பதும் இங்கே சொல்லாமல் சொல்லப்படும் சிம்பாலிக் சிச்சுவேஷன்) சண்டையோ சண்டை, மண்டை உடைகிறது.
கடைசியில் மஞ்சாப்பை கரை ஏறியதா? அதில் திருப்பதி லட்டுவைப் போட்டு யாராவது புண்ணியம் தேடிக் கொண்டார்களா?
ஏதோ போனால் போகிறதென்று கதை சொல்ல ஆரம்பித்தால் இப்படியா வெட்கமில்லாமல் முழுக்கதையும் கேட்பீர்கள்? காசு, கீசு கொடுத்து தியேட்டரில் படம் பார்ப்பதாக ஐடியாவே இல்லையா?
மீதியை வெள்ளித் திரையில் (3D) காணுங்கள்.
திருட்டு வி.சி.டி. அளவுக்கு படம் பிரபலமானால் எனக்கும் சந்தோஷமே. அநேகமாக தயாரிப்பாளருக்கும் எனக்கும் கண்டிப்பாக முட்டிக்கொண்டு விடுமென்பதால் நானும் திருட்டு வி.சி.டி.யிலேயே பார்த்துக் கொள்கிறேன்.
எல்லாவற்றையுமே பின்னணியில் ஒரு கதை சொல்லி சொல்வதாகக் காட்சி அமைக்க வேண்டும். அப்போது கதையை 2 அல்லது 3 வர்ஷனாக மாற்றி மாற்றிச் சொல்ல வேண்டும். அப்போதுதான் படம் Memento, Inception ரேஞ்சுக்குப் போய் ஒரு பயலுக்கும் ஒன்றும் புரியாது. ஆளுக்கொரு கதை சொன்னால் படம் ஓஹோவென்று ஓடும்.
பின்னாளில் அது இன்னமும் பரிணாம வளர்ச்சி பெற்று முருகதாஸ் மாதிரி யாராவது அதை மீண்டும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என்று மாற்றி மாற்றிக் கரை சேர்ப்பார்கள்.
எனக்கும் ரஜினிக்கும் எங்கேயோ கேட்ட குரல்காலம் தொட்டு கனெக்ஷன் இருப்பதால், நான் கேட்டால் ரஜினி குரல் கொடுப்பார். ஜஸ்ட் எஸ்கேப்டு ஜக்குபாய், ராணா, சுல்தான் என்று சுழன்றடிக்கும் அவர் திரையுலக மனப்புண்களுக்கும் கையால் போடா விட்டாலும் பையால் மருந்து போட்ட புண்ணியம் எனக்கு.

0 comments: