-->
ஸ்லிம் சுந்தரி ரகசியம்!
- தேவதர்ஷினி
கொஞ்சம் கொழு கொழு உடம்புதான் பெண்களுக்கு அழகு என்றிருந்த தமிழ் சினிமாவில், ஒட்டிய கன்னம், ஒல்லியான உடம்புடன் நுழைந்து, தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் தேவதர்ஷினி. இதே உடல்வாகுடன் கடந்த பத்தாண்டுகளாகவலம் வருகிறார்!
வளசரவாக்கத்திலுள்ள ஒரு ஷூட்டிங் ஹவுஸில் ‘திரைப்பட நகரம்’ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த தேவதர்ஷினி, டைரக்டர் கொடுத்த பிரேக்கில் உரையாடினார்.
மீடியா உலகில் உங்கள் என்ட்ரி பாய்ன்ட்?
பெரிய ஹீரோயின்களையும், டீ.வி தொகுப்பாளினிகளையும் தந்த எத்திராஜ் காலேஜில் பி.காம் படித்தேன். படிக்கும்போதே தூர்தர்ஷனில் ‘கனவுகள் இலவசம்’ சீரியலில் நடிக்க வாய்ப்புக் கிடைச்சுது. அதேசமயத்தில் நன்றாகத் தமிழ் உச்சரிக்கத் தெரிந்த காம்பியர் வேண்டுமென ஒரு தனியார் சேனலில் இருந்து அழைப்பு வந்தது. எனது தமிழ் உச்சரிப்பால் உடனே தேர்வானேன். ‘மர்மதேசம்’ டீ.வி சீரியல் எனக்கு மிகப்பெரிய பிரேக் தந்தது. அதே சீரியலில் நடித்த சேத்தனைக் காதலித்து மணந்து கொண்டேன்.
சேத்தனிடம் உங்களுக்குப் பிடிச்சது என்ன?
சேத்தன் ரொம்ப வெளிப்படையானவர். கொஞ்சம்கூட பாசாங்கு கிடையாது. அவரது இந்தக் குணம், காதலிக்கத் தொடங்கிய நாட்களில் என்னைக் கொஞ்சம் கஷ்டப்படுத்தியதுதான். ஆனால், நாளடைவில் ஆழ்ந்த புரிதலையும், நம்பிக்கையையும் அதிகப்படுத்தியது.
ஏதாவது ஒரு சீரியலில் ஊர் உலகமே எனது நடிப்பைப் பாராட்டும்போது சேத்தன் என்ன சொல்கிறார் என ஆர்வமுடன் கேட்பேன். சேத்தன் ரொம்பக் கூலாக, இது சரியா இல்லை. இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம்"
என்பார். அவரது காமென்ட் என்னை எந்தவிதத்திலும் கஷ்டப்படுத்தாது. அவர் எதிர்ப்பார்க்கும் விஷயங்களை அடுத்தடுத்த படங்களிலும், சீரியல்களிலும் செய்து பாராட்டைப் பெற்று விடுவேன். எனது நடிப்புக்குக் கிடைக்கும் பாராட்டுகளுக்குச் சேத்தனின் பாரபட்சமற்ற விமர்சனமும் ஒரு காரணம்.
உங்கள் மகள் நியதி அப்பா செல்லமா? அம்மா செல்லமா?
நியதி எங்க ரெண்டு பேருக்குமே செல்லம்தான். ஆனாலும் இலேசான கண்டிப்புக் காட்டிதான் வளர்க்கிறோம். ஏன் இதைச் செய்யக் கூடாதுனு பக்குவமாகப் பேசிப் புரிய வைப்போம். குழந்தை வளர்ப்பு ஒரு சேலஞ்ச்தான்!
காமெடி - குணசித்திரம் இரண்டு ரோல்களும் வந்தால் உங்க சாய்ஸ் எது?
‘பார்த்திபன் கனவு’ படத்தில் விவேக் வேலையற்ற கணவனாகவும், நான் அவரது மனைவியாகவும் நடித்திருப்பேன். அந்தப் படம் வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இன்றைக்கும் என்னைப் பார்க்கும் பலரும் அதைப்பற்றியே பேசுறாங்க. அப்புறம் ‘காஞ்சனா’ வரவும், அதைப் பத்தி பேசினாங்க. நடுவுல நான் எத்தனையோ கேரக்டர்கள் பண்ணிட்டேன். ஆனாலும் காமெடி ரோல்தான் நினவுல நிற்குது. அதனாலதான் இப்பல்லாம் காமெடி சார்ந்த குணச்சித்திர வேஷங்கள்னா உடனே ஒத்துக்கிறேன்.
விவேக், ஸ்ரீமன், மதுரை முத்து என ஜோடி சேர்ந்துதான் காமெடி செய்யறீங்க. ஜோடி இல்லாமல் காமெடி செய்ய முடியாதா?
தனியா அழுது காட்டி ரசிகர்களிடையே கைத்தட்டல் வாங்க முடியும். ஆனால், நம் காமெடியைப் பார்த்து வாய் விட்டுச் சிரிக்கணும்னா, கூட நடிக்கிற கலைஞர்களும் முக்கியம். இதைக் காமெடி கெமிஸ்ட்ரினு சொல்லலாம். இந்த ஜோடி நடிகராகவும் இருக்கலாம்; நடிகையாகவும் இருக்கலாம். ‘டைமிங்சென்ஸ்’, ‘டயலாக் டெலிவரி’, ‘வாய்ஸ் மாடுலேஷன்’, ‘ரியாக்ஷன்’, ‘பாடி லேங்வேஜ்’... இந்த ஐந்தும் ஃபர்பெஃக்டா சேரும்போது தான் காமெடி சீனே எடுபடும்.
சமீபத்தில் வியக்க வைத்த நபர்?
ஸ்ரீதேவி! அவங்க நடிச்ச ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ - படத்தைக் குடும்பத்தோட பார்த்தேன். அடேயப்பா! எவ்வளவு அற்புதமான நடிப்பு! வெரி டச்சிங்! பல இடங்களில் சீட்டை விட்டு எழுந்து கை தட்டினேன். கண்டிப்பாக ஒவ்வொரு பெண்ணும் பார்க்க வேண்டிய திரைப்படம், அதுவும் கணவருடன்!
எடையே போடாமல் ஸ்லிம் சுந்தரியாக இருப்பதன் ரகசியம் என்ன?
எனது அக்கா கார்த்திகேயினி ‘பிலாடி’ (Pilates) என்ற ஜெர்மன் வகை உடற்பயிற்சி செய்றாங்க. அவங்ககிட்ட இதைக் கத்துக்கிட்டு, தினமும் செய்றேன். அவ்வளவு தான். ‘டயட்’ எல்லாம் கிடையாது. நான் நல்லாவே சாப்பிடுற டைப். ஒருவேளை குண்டாயிட்டா அக்கா, அண்ணி ரோல்களுக்குப் பதில் அம்மா, மாமியார் ரோல் பண்ணுவேன்.
2013 எப்படி?
‘கண்ணா, லட்டு தின்ன ஆசையா?’, ‘அமளி துமளி’, ‘தில்லு முல்லு’, ‘எனக்கு வாய்த்த நண்பர்கள் இப்படி’, ‘கருத்தம் பட்டி’, ‘கோப்பெருந்தேவி’, ‘வெள்ளைக் காகிதம்’னு 2013 முழுக்க என் கால்ஷிட் ஃபுல்!"
thanx -kalki
thanx -kalki
1 comments:
அவங்க பெண் படத்தைப் பார்த்தீங்களா? இந்த மாதம் மங்கையர் மலரைப் பார்க்கவும்.
Post a Comment