விஸ்வரூபம் - முழுக்கதை!
'விஸ்வரூபம்’
என, கமல் என்ன நினைத்துத் தலைப்பு வைத்தாரோ... பிரச்னைகளும் விஸ்வரூபம்
எடுக்கிறது. 'சட்டம்-ஒழுங்கைப் பாதிக்கும்’ எனச் சொல்லி தமிழக அரசு இந்தப்
படத்துக்கு 15 நாள் தடை விதிக்கும் அளவுக்கு விவகாரம் செம சீரியஸ்.
திரைக்குப் பின்னால் நடந்த கதை, படத்தின் திரைக்கதையைவிட பரபரப்பானது.
கோலிவுட் முதல் கோட்டை வரை விசாரித்தபோது வந்து விழுந்த தகவல்களை அப்படியே
தருகிறோம்.
கமல் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை!
துப்பாக்கி’ படம் ரிலீஸ் ஆனபோதே முஸ்லிம்கள் போர்க் கொடி தூக்கினர்.
அப்போது, 'விஸ்வரூபம்’ படத்திலும் முஸ்லிம்களைத் தவறாக சித்திரித்து
இருக்கிறார்கள் என்ற பேச்சும் கூடவே கிளம்பியது. 'முன்கூட்டியே
எங்களுக்குத் திரையிட்டுக் காட்டிய பிறகுதான் படத்தை கமல் வெளியிட
வேண்டும்’ என குரல் கொடுக்க ஆரம்பித்தன முஸ்லிம் அமைப்புகள். '
'
'விஸ்வரூபம்’ முஸ்லிம்களுக்கு எதிரான படம் அல்ல. அப்படிச் சந்தேகப்படும்
இஸ்லாமியர்கள் படம் பார்த்துவிட்டு, தேவை இல்லாமல் கமலை சந்தேகப்பட்டு
விட்டோமே என்று மனதுக்குள் வருந்துவர். சகோதரனைச் சந்தேகப்பட்டதற்குப்
பிராயச்சித்தமாக அண்டா அண்டாவாக முஸ்லிம்கள் பிரியாணி விருந்து போட
வேண்டும். அந்த விருந்தில் கலந்துகொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்''
என அறிக்கை விட்டார் கமல்.
ஜனவரி 11-ம் தேதி படம் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியான
நேரத்தில், 24 முஸ் லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்புப்
பிரதிநிதிகள் ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் கமலை
சந்தித்தனர். வெளிநாடுகளில் விநியோகஸ்தராக இருக்கும் முஸ்லிம் ஒருவர்தான்
இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.
அப்போது சுமுகமாகப்
பேச்சுவார்த்தை நடந்தது. ''முஸ்லிம்களோடு நல்ல நட்புஉணர்வு கொண்டவன் நான்.
அவர்களைக் கொச்சைப்படுத்தி படம் எடுக்க மாட்டேன்'' என்றார் கமல்.
''துப்பாக்கி படக் குழுவினரிடம் எங்களைப்பற்றி கேட்டுப் பாருங்கள்.
எங்களின் செயல்பாடு பற்றி நீங்கள் வைத்திருக்கும் பிம்பம் உடையும்'' என்று,
கமலிடம் சொன்னது முஸ்லிம் கூட்டமைப்பு. இறுதியாகப் பேசிய கமல், ''
'விஸ்வரூபம்’ இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் அல்ல. இந்து முன்னணியினருக்கு
எதிரான படம். ராமகோபாலன் படத்தைப் பார்த்து விட்டு எதிர்ப்பார்'' எனச்
சொன்னார். பேச்சு வார்த்தையின் இறுதியில், திரைக்கு வருவதற்கு முன் படத்தை
போட்டுக்காட்ட ஒப்புக்கொண்டார் கமல்.
அதன்பிறகு, 'விஸ்வரூபம்’ படம் பற்றி தலைமைச் செயலாளருக்கு கோரிக்கை
கடிதம் ஒன்றையும் கொடுத்தது முஸ்லிம் கூட்டமைப்பு. அந்தக் கடிதத்தின்
அடிப்படையில் முஸ்லிம் கூட்டமைப் பினரை உள்துறைச் செயலாளர் ராஜகோபால் 15
நாட்களுக்கு முன் அழைத்துப் பேசினார்
. ''படத்தில் இஸ்லாமியர்களைக்
கொச்சைபடுத்திக் காட்சிகள் இருந்தால், அதை நீக்க வேண்டும்'' என
ராஜகோபாலிடம் கூறினர் முஸ்லிம் பிரதிநிதிகள். ''மதநல்லிணக்கம் எந்த
வகையிலும் கெட்டுவிடக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது.
எந்தச் சமூகத்தையும் இழிவுபடுத்தி, அவர்களைக் காயப்படுத்துவதை அரசு
வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது'' என்று சொன்ன ராஜகோபால்,
''ரிலீஸுக்கு முன்பே படத்தை நீங்கள் பார்க்க விரும்பினால், அதற்கான
ஏற்பாடுகளை அரசே செய்து தரும்'' என்று உறுதி அளித்தார். ''கமலே படத்தைக்
காட்டுவதாகச் சொல்லி இருக்கிறார். அதனால் தேவைஇல்லை'' என்று சொல்லிவிட்டுக்
கிளம்பினர்.
படம் பார்த்த முஸ்லிம்கள்!
படத்தை இரண்டு நாட்களுக்கு முன், போட்டுக்காட்டுவதாகச் சொன்னார் கமல்.
ஆனால், 'ஐந்து நாட்களுக்கு முன்பே காட்ட வேண்டும்’ என்றது முஸ்லிம்
கூட்டமைப்பு. இறுதியில், நான்கு நாட்களுக்கு முன் என முடிவானது. தேதி
குறிக்கப்பட்ட தினத்தில் படத்தைப் பார்க்க முடியவில்லை. 'டி.டி.ஹெச்
பிரச்னை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது’ என, முஸ்லிம்களை
பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார் கமல். அப்போதும்கூட,
''இஸ்லாமியர்களைப் புண்படுத்தும் வகையில் படத்தை எடுக்கவில்லை. படத்தின்
ஹீரோவே முஸ்லிம்தான். படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் சந்தோஷப்
படுவீர்கள்'' என்று பீடிகை போட்டு இருக்கிறார் கமல்.
படம் ரிலீஸ் தேதி ஜனவரி 25 என அறிவிக்கப்பட, 21-ம் தேதி படத்தை
முஸ்லிம்களுக்குக் காட்ட முடிவு செய்யப்பட்டது. ''தொழுகை பாதிக்கும்
என்பதால், காலையில் படத்தைக் காட்ட வேண்டும்'' என்றனர் முஸ்லிம்
கூட்டமைப்பினர். 'மாலையில்தான் பார்க்க வாய்ப்பு இருக்கிறது. தொழுகைக்கு
என் அலுவலகத்திலேயே ஏற்பாடு செய்து தருகிறேன்'' என்று சொன்னார் கமல்.
மாலையில், ராஜ்கமல் அலுவலகத்தில் முஸ்லிம் கூட்டமைப்பு நிர்வாகிகள்
கூடினர். அங்கேயே மாலை நேரத் தொழுகையை முடித்துவிட்டு, படத்தைப் பார்க்க
ஆரம்பித்தனர். அலுவலகத்தில் இருந்த ஹோம் தியேட்டரில் 'விஸ்வரூபம்’
திரையிட்டபோது கமலும் அவர்களுடன் அமர்ந்து படத்தை முழுமையாகப் பார்த்தார்.
படத்தின் முதல்பாதி முடிந்து இடைவேளை விட்டபோது, படம் பார்த்த
முஸ்லிம்கள் கொஞ்சம் அப்செட் ஆனார்கள். 'படத்தின் காட்சிகள்
ஒவ்வொன்றுக்கும் என்னிடம் 300-க்கும் மேற்பட்ட ஆதாரங்கள் இருக்கின்றன’
என்று, இடைவேளையின்போது சொன்னார் கமல். தாலிபான்கள் பிரத்யேகமாகப்
பயன்படுத்தும் தொப்பி, ஆர்ட் டைரக்டர், காஸ்ட்யூம் டிசைனர், படத்தில்
ஹெலிகாப்டர்களுக்கு அடிக்கப்பட்ட பெயின்ட் பற்றி எல்லாம் பேசி
இருக்கிறார்கள்.
இரண்டாம் பாதிப் படத்தைப் பார்த்த முஸ்லிம் கூட்டமைப்பினர்
கோபத்தின் உச்சத்துக்குச் சென்றனர். படம் முடிந்ததும் சொல்லிவைத்ததுபோல
கமலிடம் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் அவர் பக்கம் திரும்பிக்கூட பார்க்காமல்
கிளம்ப ஆரம்பித்தனர். அப்போது, அவர்களின் கருத்தைக் கேட்பதற்காக வாசலில்
நின்று இருந்த கமலுக்கு, அவர்கள் எதுவும் பேசாமல் போனதால் முகம் மாறியது.
கடைசியாக வந்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் செயலாளர் முனீரிடம், 'படம்
பிடித்திருக்கிறதா? எதுவும் கருத்து சொல்லாமல் போகிறீர்களே?’ என்று கமல்
கேட்க, 'எதுவும் சொல்வதற்கு இல்லை.’ என்று முனீர் சொன்னார். 'ஏற்கெனவே
நிறைய சங்கடங்களைச் சந்தித்து இருக்கிறேன். இன்னும் சங்கடங்களை உண்டாக்கி
விடாதீர்கள்’ என்று கமல் சொல்ல, 'அல்லாஹ் உங்களைக் காப்பாற்றுவார்’ என்று
சொல்லிவிட்டுக் கிளம்பினார் முனீர். அப்செட்டான நிலையில், 'விஸ்வரூபம்’
பிரிமியர் ஷோவுக்காக அன்றைய இரவே அமெரிக்கா கிளம் பினார் கமல்.
கமிஷனர் அலுவலகத்தில் கொந்தளிப்பு!
இரவு 10 மணிக்கு படம் முடிந்து கிளம்பிய டீம், அப்போதே ஒரு ஓட்டலில்
நள்ளிரவு வரை ஆலோசித்தது. 'முஸ்லிம்களுக்கு எதிராகக் காட்சிகள் இருந்தால்,
அதை மட்டும் நீக்கிவிட்டு படத்தை வெளியிட சம்மதிக்கலாம்’ என முன்பு முடிவு
செய்து இருந்த முஸ்லிம் கூட்டமைப்பினர், 'மொத்தப் படத்தையும் தடை செய்ய
வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்தனர். அடுத்த நாள் 22-ம் தேதி, 'படத்தைத்
திரையிட அனுமதிக்கக் கூடாது’ என்ற கோரிக்கையுடன் சென்னை போலீஸ் கமிஷனர்
ஜார்ஜை சந்தித்தனர்.
அவர்களோடு மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.
ஜவாஹிருல்லாவும் வந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்த
சந்திப்பில், படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ஜார்ஜிடம் விவரித்தனர்.
'தொழுகை நடத்தி விட்டு தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதாகப் படத்தில்
அப்பட்டமாக நிறைய இடங்களில் காட்டுகிறார்கள். இஸ்லாமியர்களின் புனித நூலான
குர்-ஆன், தீவிரவாதிகளின் கையேடாகச் சித்திரிக்கப்பட்டு இருக்கிறது’ என்
றனர். 'பைபிள் படித்துவிட்டு சர்ச் சுக்குள் இருந்து வரும் ஒருவர் குண்டு
வைப்பதாக காட்சி இருந்தால், நீங்கள் எப்படி உணர்வீர்கள்?’ என்று
கிறிஸ்தவரான ஜார்ஜிடம் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
சந்திப்புக்குப் பிறகு,
வெளியே வந்த முஸ்லிம் கூட்ட மைப்பினர் படத்தைப்பற்றி முதல் முறையாக
மீடியாவிடம் பேசினர். ' 'விஸ்வரூபம்’ வெளியிடப்பட்டால் தேவை இல்லாத
பிரச்னைகள் ஏற்படும். மாமன் மச்சானாக வாழ்ந்து வருபவர்களிடையே தேவை இல்லாத
சங்கடங்களை உண்டாக்கி, சட்டம்- ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படலாம். இந்தப்
படத்தை அரசு தடை செய்ய வேண்டும். இல்லையெனில் உயிரைக் கொடுத்தாவது
முஸ்லிம்கள் தடை செய் வார்கள்’ எனக் கொந்தளித்தனர்.
படத்துக்கு 15 நாட்கள் தடை!
இந்த விஷயங்களை எல்லாம் அமெரிக்காவில் இருந்தே விசாரித்துக் கொண்டு
இருந்தார் கமல். அதற்கு அடுத்த நாள் 23-ம் தேதி உள்துறைச் செய லாளர்
ராஜகோபாலை கோட்டையில் சந்தித்தனர் முஸ்லிம் கூட்டமைப்பினர். 'உங்கள்
பக்கம்தான் அரசு இருக்கிறது என்ற நிலைப்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை’
என்ற ராஜகோபால், 'பட ரிலீஸ் தேதிக்கு நெருக்கத்தில் வந்து இப்படி
முறையிடுகிறீர்களே...’ என்றும் கேட்டு இருக்கிறார்.
'கமல் சினி மாவில்
நல்ல நடிகர். நிஜ வாழ்க்கையிலும் அவர் நடிகர் என்பது இப்போதுதான்
புரிந்தது. ரிலீஸ் தேதிக்கு நெருக்கத்தில் படத்தைக் காட்டி அவர்தான் எங்களை
இக்கட்டில் தள்ளிவிட்டார்’ என்று பதில் சொன்னார்கள். 'வழிபாட்டு முறைகள்
தீவிரவாதத்தைத் தூண்டுவதுபோல இருக்கிறது’ என்று காட்சிகளையும்
ராஜகோபாலிடம் விவரித்தனர். 'கோரிக்கைகள் நியாயமானதாக இருந்தால், நிச்சயம்
அரசு பரிசீலிக்கும்’ என்று வாக்குறுதி கொடுத்தார் ராஜகோபால்.
காலையில் இந்தச் சந்திப்பு நடந்து முடிந்த பிறகு, கொடநாட்டில்
இருந்து ஜெயலலிதா கோட்டைக்கு வந்தார். 'விஸ்வரூபம்’ பட விவகாரம் தொடர்பாக
தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், அரசு ஆலோசகர் தேபேந்திரநாத் சாரங்கி,
உள்துறைச் செயலாளர் ராஜகோபால், டி.ஜி.பி. ராமா னுஜம், உளவுப்பிரிவு ஐ.ஜி.
அம்ரிஷ் பூஜாரி, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், அட்வகேட் ஜெனரல்
நவநீதகிருஷ்ணன் எனப் பெரிய டீமோடு ஆலோசனை நடத்தி இருக்கிறார் ஜெயலலிதா.
அதன்பிறகு, படத்துக்குத் தடை என்ற பேச்சுகள் கிளம்ப ஆரம்பித்தன.
'விஸ்வரூபம்’ படத்துக்கு 15 நாட்கள் தடை என்பது இரவில் உறுதியானது.
''படத்தை தடை செய்யாவிட்டால் படம் ரிலீஸ் ஆகும் வெள்ளிக் கிழமை அன்று
கமல் வீட்டை முற்றுகையிடுவோம். தியேட்டர்களில் படத்தை வெளியிடாமல் தடை
செய்வோம். சென்சார் போர்டு அலுவலகம் முற்றுகை என அடுத்து போராட்டக் களம்
சூடு பிடிக்கும்'' என முஸ்லிம் அமைப்புகள் அறிவித்ததால், சட்டம்- ஒழுங்கு
பாதிக்கும் என்பதால் தடை விதிக்கப் பட்டது என்கிறார்கள். 'இன்னொசன்ஸ் ஆஃப்
முஸ்லிம்’ படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை அமெரிக்கத் தூதரக
அலுவலகம் தாக்கப்பட்டது. அடுத்தடுத்து முஸ்லிம்கள் நடத் தியப்
போராட்டத்தால் தூதரகத்துக்கு விடுமுறை விடும் சூழல் உருவானது. மொத்த
முஸ்லிம் அமைப்புகளும் அண்ணா சாலையில் நடத்திய போராட்டம் தலைநகரை
கிடுகிடுக்கவைத்தது. இதை யெல்லாம் கருத்தில்கொண்டுதான் இந்த முடிவு
எடுக்கப்பட்டதாம்.
'விஸ்வரூபம்’ - முழுக் கதை என்ன?
'விஸ்வரூபம்’ படத்தின் முழுக் கதை என்ன தெரியுமா? படத்தைப் பார்த்த முஸ்லிம் பிரதிநிதிகள் சொல்லும் விவரங்கள் இவ்வாறு செல்கிறது...
'இதய பலவீனம் உள்ளவர்கள் இந்தப் படத்தை பார்க்க வேண்டாம்’ படத்தின்
டைட்டில் போடுவதற்கு முன் திரையில் திகிலாக வந்து விழுகிறது இந்த வாசகம்.
அந்த வாசகத்தை நிஜம் ஆக்குவதுபோல படம் முழுவதும் கோரமான குண்டு
வெடிப்புகளும் கொடூரமான கொலைகளும் நிரம்பி வழிகின்றன.
படத்தின் கதைக் களம் ஆப்கானிஸ்தான். அங்கே இருக்கும் தாலிபான்களின்
செயல்பாடுகள்தான் படத்தை மொத்தமாக நகர்த்துகின்றன. இந்தியாவின் உளவு
அமைப்பான 'ரா’வின் உளவாளி கமல், முஸ்லிம் கேரக்டரில் நடித்து இருக்கிறார்.
காஷ்மீரி ஒருவருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் மகனாகப்
பிறந்தவர்தான் கமல்.
காஷ்மீருக்குச் செல்லும் கமலை, அங்கே தேடப்படும்
தீவிரவாதியாக அறிவிக்கிறார்கள். அவரைக் கண்டுபிடித்துக் கொடுத்தால், ஐந்து
லட்சம் ரூபாய் பரிசு என்று அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில்
ஆப்கானிஸ்தானுக்குள் நுழையும் கமல், தாலிபான்கள் கையில் சிக்குகிறார். அவரை
அரசிடம் ஒப்படைத்துவிட்டு, ஐந்து லட்சம் ரூபாயை வாங்கலாமா எனக் கணக்கு
போடுகிறது தாலிபான்.
அப்போது தமிழ் பேசும் கமலைப் பார்த்துவிட்டு, தாலிபான்
தலைவர் உமர் அவரிடம் தமிழில் பேசுகிறார். ''ஐந்து லட்சத்தைவிட விலை மதிக்க
முடியாத தமிழ் ஜிஹாதி. இவரைப் பிடித்துத் தர வேண்டாம். நமது குழுவிலேயே
இருக்கட்டும்'' என்கிறார் உமர். நிஜத்தில் சர்வதேச அளவில் தேடப்படும்
குற்றவாளியான தாலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா ஒமர் கேரக்டர்போலவே இந்த
உமர் கேரக்டர் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. உமர் தமிழ்
பேசுவதைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார் கமல். ''நான் தமிழ்நாட்டில் கோவை
மதுரையில் இரண்டு ஆண்டுகள் இருந்திருக்கிறேன்'' என்று அவர் சொல்கிறார்.
மாயவரத்தில் பிறந்த நிருபமா என்ற பெண்தான் கமலின் மனைவி. அவர் வேலை
பார்க்கும் சீசியம் மற்றும் அணுக்கதிர் கையாளும் நிறுவனத்துக்கும்
தாலிபான்களுக்கும் தொடர்பு இருப்பதாகச் சந் தேகப்படுகிறார் கமல். அதனால்,
மனைவிக்குத் தெரியாமலேயே அவர் உடையில் கேமராக்கள் வைத்து அந்த நிறுவனத்தை
உளவு பார்க்கிறார் கமல். ஸ்கூலில் குண்டு வைக்கும் காட்சி முறியடிப்பு,
காட்டிக்கொடுத்த போராளியை பொதுமக்கள் மத்தியில் தூக்கில் போடுவது என இப்படி
அடுத்தடுத்து காட்சிகள் நகர்ந்துகொண்டே இருக்கின்றன.
தீவிரவாதச் செயல்கள் செய்யப்படும்போது எல்லாம் தொழுகைக் காட்சிகள்
இடம்பெறுகின்றன. குர்-ஆன் வசனங்கள் அரபியில் ஓதப்படுகின்றன. ஒரு காட்சியில்
'ஜிஹாத்துக்கு (புனிதப் போர்) தயாராகுங்கள். சொர்க்கம் உங்களுக்குச்
சொந்தமாகும்’ என்ற வசனமும் அரபியில் ஒலிக்கிறது. தாலிபான்களின்
செயல்பாடுகள் அப்படியே திரையில் திகிலாகக் காட்டப்படுகின்றன. இடையில் ஒரு
வசனம். 'இது ஆயிலுக்காக நடக்கும் யுத்தம்’ என எண்ணெய் வளங்களை சுரண்டும்
அரசியல் பற்றியும் படம் பேசுகிறது. படத்தில் பின்லேடனும் வருகிறார். அவரை
அமெரிக்கா கொன்றபோது அமெரிக்காவில் கொண்டாட்டம் நடக்கிறது. அப்போது, தமிழ்
கேரக்டர்கள் இருவர், 'அசுரனைக் கொன்றதுபோல மக்கள் கொண்டாடுகிறார்கள்’ என
வசனம் பேசுகிறார்கள்.
தாலிபான் படையில் சேரும் கமல், அங்கே நடக்கும் செயல்களை உள்வாங்கி,
தகவல்களை தலைமைக்கு அனுப்பி வைக்கிறார். அமெரிக்கா மீது தாக்குல் நடத்தத்
திட்டமிடுகிறது தாலிபான். இதற்காக உமர் அமெரிக்கா செல்கிறார். இதை
முறியடிக்க கமலும் நடனக்காரர் வேடத்தில் அமெரிக்காவுக்குள் நுழைகிறார்.
அங்கே அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ-வுடன் சேர்ந்து திட்டத்தை
முறியடிக்கிறார். அமெரிக்காவுக்குத் தாலிபானால் வரும் ஆபத்தை இந்தியா
முறியடிப்பதாகக் கதை முடிகிறது. இறுதியில் உமர் விமானத்தில் தப்பிச் செல்ல,
''உமர் சாக வேண்டும்; இல்லை, நான் சாக வேண்டும்'' என கமல் வசனம் பேச...
இந்தியாவில் தொடரும் என முடிகிறதாம் படம்.
முஸ்லிம்களின் மனநிலை என்ன?
''இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும்
கேவலப்படுத்தி ஒரு படம் வெளியாகவே இல்லை. குர்-ஆன், தீவிரவாதத்தை
போதிக்கும் நூலாகவும் தொழுகை வழிபாடுகள் தீவிரவாதத்துக்கு ஊக்கம்
அளிப்பதாகவும் காட்சிகள் சித்திரிக்கப்பட்டுள்ளன. கோவை, மதுரை போன்ற
நகரங்கள் எல்லாம் சர்வதேசத் தீவிரவாதிகளின் புகலிடங்கள்போல்
காட்டப்பட்டுள்ளன. தமி ழகத்தில் மாமா, மச்சான் உறவுமுறை பேசி சமூக
நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய சூழலை சிதைக்க வல்லது 'விஸ்வரூபம்’
திரைப்படம். 'முற்போக்கு பேசும் வைதீகன் ஆபத்தானவன்’ என்று சொன்ன
பெரியாரின் கருத்தை கமல் மூலம் உண்மை என அறிய முடிகிறது'' என்கின்றனர்
முஸ்லிம் கூட்ட மைப்பினர்.
'விஸ்வரூபம்’ என்ன விஸ்வரூபம் எடுக்கப் போகிறது என்பதைக் காத்திருந்து கவனிப்போம்!
- ஜூ.வி. டீம்
ரஜினியின் மௌனம்!
''இஸ்லாமியர்களுக்கு
அனுதாபியாகவே நான் இருந்து வருகிறேன். மனிதாபிமானம் என்ற முறையில் ஒரு படி
மேலே போய் அவர் களுக்காகக் குரல் கொடுத்து இருக்கிறேன். இந்து-முஸ்லிம்
ஒற்றுமைக்காகப் பாடுபடும் 'ஹார்மோனி இந்தியா’ அமைப்பில் உறுப்பினராக
இருக்கிறேன். சில சிறிய குழுக்கள் அரசியல் லாபத்துக்காக இரக்கமே இல் லாமல்,
என்னை ஒரு வாகனமாகப் பயன்படுத்தி இருக்கின்றனர். தேசபக்தி உள்ள முஸ்லிம்
இந்தப் படத்தைப் பார்த்து நிச்சயம் பெருமைப்படுவார்'' என உருக்கமாக
அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் கமல்.
''கமலின் பிறந்த நாளை ஒட்டி சில வருடங்களுக்கு முன்பு அவரது ரசிகர்கள்
ஒட்டிய போஸ்டரில், 'நடிப்புலகின் நபிகள் நாயகம் கமல்’ என்ற வாசகத்தைப்
பார்த்து அதிர்ந்த கமல், இரவோடு இரவாக அதை அப்புறப்படுத்தி விட்டு, நடந்த
செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். முஸ்லிமை உயர்வாகச் சித்திரிக்கும்
'மருதநாயகம்’ படத்தை எடுக்க கடும் முயற்சி மேற்கொண்டார். பாபர் மசூதி
இடிக்கப்பட்ட நேரத்தில்கூட கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்தார். இப்படி
முஸ்லிம் மக்கள் மீது அன்பு செலுத்திய கமலா, அவர்களுக்கு எதிராகப் படம்
எடுத்து இருப்பார்'' என்று வருத்தப்படுகிறார்கள் கமலின் அபிமானிகள்.
கமலின் நெருங்கிய நண்பரான ரஜினியும் இந்த விஷயத்தில் மௌனம் காப்பது
அவரது ரசிகர்களை வருத்தப்படுத்தி இருக்கிறது. ''ரஜினிக்கு ரொம்பவும்
பிடித்த படமான 'முள்ளும் மலரும்’ படத்தின் கிளைமாக்ஸ் முடிவடையாமல்
நின்றது. அப்போது விஷயத்தைக் கேள்விப்பட்ட கமல், தனது சொந்தப் பணத்தைக்
கொடுத்து படப்பிடிப்பை நடத்தி பிரச்னையை சுமுகமாகத் தீர்த்தார்.
ஆனால்,
'விஸ்வருபம்’ விஷயத்தில் ரஜினி ஏனோ கண்டுகொள்ளவில்லை. ரஜினி நினைத்து
இருந்தால், 'விஸ்வரூபம்’ படப் பிரச்னை முதலில் தலைதூக்கியபோதே தலையிட்டுத்
தீர்த்திருக்க முடியும். ரஜினி ஏனோ இன்றுவரை மௌனச் சாமியாராக இருக்கிறார்.
36 ஆண்டுகளாக சினிமா உலகில் நெருங்கிய நண்பராக இருக்கும் ரஜினி இதுவரை
'விஸ்வரூபம்’ குறித்து விசாரிக்காமல் இருப்பது கமலுக்கு மிகுந்த
வருத்தம்தான்'' என்று ஆதங்கக் குரல்கள் கேட்கின்றன.
''டி.டி.ஹெச்-சிலாவது ரிலீஸ் ஆகுமா?''
'விஸ்வரூபம்’ பிரச்னை முதலில் டி.டி.ஹெச். அறிவிப்பு மூலமாகத்தான்
தொடங்கியது. 'தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு
முன், டி.டி.ஹெச்சில் ஒளிபரப்பாகும்’ என்று கமல் அறிவித்ததும், 'அப்படி
என்றால் நாங்கள் தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டோம்’ என்று தியேட்டர்
அதிபர்கள் முரண்டு பிடித்தனர். ரிலீஸ் தேதியைத் தள்ளிவைத்த கமல்,
'டி.டி.ஹெச்-சில் ஒரு வாரம் கழித்து ஒளிபரப்பாகும்’ என அறிவித்து
பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பாலிவுட்டில் கிட்டத்தட்ட எல்லா டி.டி.ஹெச்-சுமே இந்த வகை வசதியை
வழங்குகின்றன. தமிழகத்தைப் போல தாங்கள் வாங்கும் புதுப் படங்களை பண்டிகை
நாட்களில் ஒளிபரப்பிக் கொள்ளலாம் என சேட்டிலைட் சேனல்காரர்கள் காத்திருக்க
மாட்டார்கள். எவ்வளவு விரைவில் ஒளிபரப்பி விளம்பரங்கள் மூலம் காசு
பார்க்கலாம் என்ற போட்டிதான் நடக்கும். இதைப் பார்த்த டி.டி.ஹெச்-காரர்கள்
படத்தை முதலில் ஒளிபரப்பும் உரிமையை வாங்கி, அதற்கென 'ஸ்பெஷல் வீடியோ ஆன்
டிமாண்ட்’ என்ற முறையை ஆரம்பித்தனர்.
இந்த முறையில் ரிலீஸாகி ஒரு
மாதத்துக்குள்ளாக ஒளிபரப்பும் படங்களுக்கு அதிகபட்சமாக 75 ரூபாய் வரை
வசூலிக்கப்படுகிறது. டி.டி.ஹெச்-சில் ஒளிபரப்பாகும் தினத்தில் 24 மணி
நேரத்துக்கு அந்தப் படம் தொடர்ந்து ஒளிபரப்பாகும். எந்த இடத்திலும் படத்தை
நிறுத்திவிட்டு, அடுத்தடுத்த முறை ஒளிபரப்பாகும்போது
பார்த்துக்கொள்ளலாம்.
உண்மையில் கமல் அறிமுகப்படுத்த முயன்ற, 'தியேட்டருக்கு முன்பே
டி.டி.ஹெச்’ திட்டம் இந்தியாவிலேயே முதல் முறையானது. தியேட்டருக்கு முன்பே
டி.டி.ஹெச். என்பதால் படத்தைப் பார்க்க டிமாண்ட் அதிகம் இருக்கும் என்பதை
கருத்தில்கொண்டு, அதற்கு தகுந்தாற்போல கோடிகளைக் கொடுத்துவிட்டு ரசிகர்கள்
தலையில் கைவைத்தது டி.டி.ஹெச். நிறுவனங்கள். தமிழில் 'விஸ்வரூப’த்தைப்
பார்க்க 1,000 ரூபாயும், பிற மொழிகளில் காண 500 ரூபாயும் கட்டணம்
நிர்ணயித்தன.
தியேட்டர் அதிபர்கள் பிரச்னை செய்ததை அடுத்து,
தியேட்டரில்தான் முதலில் ரிலீஸ், பின்னர் டி.டி.ஹெச். என்று கமல்
பின்வாங்கினார். இதனால், ரசிகர்கள் எண்ணிக்கை குறையும் வாய்ப்பு ஏற்பட்டது.
அதற்கு தகுந்தாற்போல கமலுக்கு டி.டி.ஹெச். கம்பெனிகள் அளிக்கும்
தொகையையும் குறைத்துக் கொண்டு, 300 ரூபாயாகக் கட்டணத்தை குறைத்தன.
'விஸ்வரூபம்’ டி.டி.ஹெச்-சிலாவது ரிலீஸ் ஆகுமா? அதிலும் சட்டச்சிக்கல் ஏற்படுமா என்பது இனிமேல்தான் தெரியும்!
''சென்சார் போர்டை சீர்த்திருத்த வேண்டும்!''
'விஸ்வரூபம்’ விவகாரம் பற்றி கவிஞர் மனுஷ்ய புத் திரனின் கருத்து என்ன?
''இஸ்லாத்துக்கு எதிரான கருத்தியலை உருவாக்குவது போல, தொடர்ந்து
திரைப்படங்கள் வருகின்றன. ஏற்கெனவே கடுமையான நெருக்கடிகளை முஸ்லிம்கள்
எதிர்கொண்டு வரும் நிலையில், இதுபோன்ற படங்கள் அவர்களை அன்னியப்படுத்தும்
நிலையை உண்டாக்கும் இந்த விவகாரங்களை அரசியல்வாதிகள் கையில்
எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு திரைப்படத்தையும் முன்கூட்டியே திரையிட்டு
காட்டவேண்டிய புதுக் கலாசாரம் உருவாகும்.
தீவிரவாதமும் இஸ்லாமும் ஒன்று எனத் தொடர்ந்து சித்திரிப்பதில்
சந்தேகமும் எழுகிறது. இதுமாதிரியான படங்களுக்கு அமெரிக்கா பணஉதவி
செய்கிறது. ரஷ்யாவுக்கு எதிராக முன்பு இதே மாதிரியான திரைப்படங்கள்
எடுக்கப்பட்ட நேரத்தில், அமெரிக்காவின் நிதியுதவி பின்னணியில் இருந்தது.
அதே போக்கு இப்போது இங்கு நடந்து வருவது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான
நிலையை ஏற்படுத்தி விடலாம்.
சென்சார் கமிட்டி அளவிலேயே இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியும்.
சென்சார் போர்டில் அரசியல் பின்புலத்தோடு இருப்பவர்களை
அப்புறப்படுத்திவிட்டு சிந்தனையாளர்களையும் பத்திரி கையாளர்களையும்
எழுத்தாளர்களையும் கொண்ட விசாலமான அமைப்பு உருவாக்க வேண்டும். இதில் அரசும்
அவர்களோடு இணைந்து செயல்பட்டால் பிரச்னையைத் தீர்க்கலாம்.''
ஜூ வி க்கு நன்றி
0 comments:
Post a Comment