Monday, January 21, 2013

கலைஞர் கம்யூனிஸ்ட் ??!! - தமிழருவி மணியன் விமர்சனம்

கலைஞர் எந்த வகையில் கம்யூனிஸ்ட்?

ண்மையான ஒரு கம்யூனிஸ்ட்டாக உலகில் வலம் வருவது ஓர் அரிய தவத்துக்கு ஒப்பானது. அடையாள அட்டைகள் வைத்திருப்பவர் எல்லாம் கம்யூனிஸ்ட் ஆகிவிடுவது இல்லை. மக்கள் நலனுக்காக வாழ்வை முற்றாக அர்ப்பணித்து, எள் மூக்கின் முனை அளவும் சுயநலமின்றி, தனிச்சொத்துடைமை துறந்து, எளிமை சார்ந்த வாழ்க்கையை மேற்கொண்டு, வர்க்க பேதமற்ற சுரண்டலற்ற சமுதாயத்தைச் சமைப்​பதற்குப் போர்க் குணத்துடன் புரட்சிக்கான களம் அமைப்பவரே ஓர் உண்மையான கம்யூனிஸ்ட்டாக உருப்பெற முடியும்.



 இன்று, கம்யூனிஸ்ட் கட்சிகளிலேயே கலப்படம் நிகழ்ந்து விட்டது. நல்லகண்ணு, சங்கரய்யா போன்ற ஒரு சிலர் மட்டுமே தமிழகத்தில் மார்க்சியத்தின் எச்சமாக நம் முன் நடமாடுகின்றனர். இத்தகைய சூழலில்தான், 'நானும் ஒரு கம்யூனிஸ்ட்’ என்கிறார் கலைஞர் கருணாநிதி. 


கவியரசர் ஷெல்லியின் படைப்பான 'புரோமித்​தியஸ்’ போன்று எவ்வளவு கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டாலும், சமரசமே இல்லாமல் தீரத்துடன் தியாக வாழ்வை விரும்பி ஏற்பவரே மார்க்ஸின் பாதையில் மாற்றமின்றிப் பயணிக்க முடியும். சமரசங்களையே தன்னு​டைய அரசியல் வாழ்வின் அணிகலன்களாகப் பூண்டு அழகு பார்க்கும் கலைஞர், எந்த விதத்தில் கம்யூனிஸ்ட்டாக முடியும் என்பது புரிந்துகொள்ள முடியாத ஒரு புதிராக இருக்கிறது. தான் எதை வாய் மலர்ந்தாலும், அதைப் பரிசீலனைக்கு உட்படுத்தாமல் மக்கள் 


சமுதாயம் வணங்கி ஏற்று வழிபட வேண்டும் என்று கலைஞர் எதிர்பார்ப்பது கருத்துலகத்தின் தர்மத்துக்கு ஒருபோதும் தகாது.


'நான் சிறுவயதில் இருந்தே கம்யூனிஸக் கொள்கைகளில் ஈர்க்கப்​பட்டவன். நான் கம்யூனிஸ்ட் கொள்கைகளால் ஈர்க்கப்​பட்டவனா, இல்லையா என்பதைக் கம்யூனிஸ்ட் தோழர்களே நன்றாக அறிவார்கள்’ என்று முரசொலித்து முழங்கி​யிருக்கிறார் கலைஞர்.



 'ஏழை மக்களுக்குத் தொடர்ந்து தொண்டாற்றி வருகிறேன். எனக்கு இருக்கும் ஒரே சொத்தான வீட்டையும் மக்களுக்காக எழுதிக் கொடுத்து விட்டேன். கழக நிகழ்ச்சிகளில் வழங்கப்பட்ட பொருட்களை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத்துக்கு அளித்து விட்டேன். பாளை யங்​கோட்டையில் தனிமைச் சிறையில் வாடி னேன். ஆடம்பர வாழ்க்கை என்னிடம் இல்லை. 75 திரைப்படங்களுக்குக் கதை வசனம் எழுதிய பிறகும், 'தெரு வீட்டில் (street house) வசித்து வருகிறேன். 



என் மகனுக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பே 'ஸ்டாலின்’ என்று பெய​ரிட்டேன். மக்சிம் கார்க்கியின் 'தாய்’ நாவலைக் கவிதையில் காவியமாக்கினேன். இவ்வளவு செய்த நான் கம்யூனிஸ்ட் இல்லையா?’ என்று கலைஞர் உருக்கமாகக் கேட்கிறார். இந்தக் காரியங்களால் ஒருவர் கம்யூனிஸ்ட் ஆக முடியாது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
'பாவமன்னிப்பு’ திரைப்படத்தில் வஞ்சக நெஞ்சம்கொண்ட பாத்திரத்தை ஏற்று நடித்த 'நடிகவேள்’ எம்.ஆர்.ராதா தன் ஊழியரிடம், 'நேற்று எறும்புப் புற்றுக்கு அரிசி போட்டேன். சென்ற வாரம் அரச மரத்​துக்கும் வேப்ப மரத்துக்கும் திருமணம் செய்து வைத்தேன். என்னை வள்ளல் என்று எவனும் பாராட் டவில்லையே’ என்று மனம் புழுங்குவார்.



 நம் கலைஞர் தன்னை யாரும் கம்யூனிஸ்ட்டாக ஏற்க மறுப்பவர்களின் மீது விமர்சனக் கணைகளை வேகமாக வீசும்போது, தவிர்க்க முடியாமல் 'பாவ மன்னிப்பு’ எம்.ஆர்.ராதா நம் மனக்கண்ணில் தரிசனம் தருகிறார்.



காணும் உலகம் வேறு; கண்டறியப்படும் உலகம் வேறு. காணும் உலகில் யாரும் எளிதில் கம்யூனிஸ்ட் ஆகிவிட முடியும். ஆனால், கண்டறியப்​படும் உலகில் அதற்கான சாத்தியம் எளிதில்லை என்பதுதான் சத்தியம். நீச்சல் கற்பதற்கு நீந்து வதுபோல் கற்பனை செய்வது போதாது. சுதந்திரம் பெறுவதற்குச் சுதந்திரமாக இருப்பதுபோன்று பாவனை செய்வது போதாது. கம்யூனிஸ்ட் ஆவதற்கு சொத்து​டைமையின் மீது நாட்டமில்லாதவராக நடிப்பது மட்டும் போதவே போதாது. 'பிளேட்டோவை நான் மதிக்கிறேன். ஆனால், உண்மையை அவரைவிட அதிகமாக நான் மதிக்கிறேன்’ என்பதுதான் அறிவுலக சுதர்மம். 



பழுத்த அரசியல்வாதி கலைஞரை நாம் மதிக்கிறோம். அதற்காக, உண்மையை மதிக்காமல் புறம்தள்ளக்கூடுமா? எந்த வகையில் கலைஞரை ஒரு கம்யூனிஸ்ட்டாக ஏற்க முடியும்?


'சமுதாயத்தில் பத்தில் ஒன்பது பங்கு மக்களுக்குத் தனிச் சொத்து இல்லாமல் பறிக்கப்பட்டு விட்டது. ஒரு சிலரிடம் தனிச் சொத்து குவிந்து இருப்பதற்குக் காரணமே, இந்தப் பத்தில் ஒன்பது பங்கு மக்களிட​மிருந்து அது பறிக்கப்பட்டதுதான். அதனால்தான், சொத்து வடிவத்தை ஒழிக்க விரும்புகிறோம்’ என்று கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸும் ஏங்கல்ஸும் பிரகடனம் செய்திருப்பதை நம் கலைஞர் வாசித்தது இல்லையா?


 பொருள் சார்ந்த சமூக அமைப்பில் அனைத்து உடைமைகளும், வளங்களும் வர்க்கங்கள் அற்ற சமுதாயத்தின் அங் கங்களான அனைத்து மக்களுக்கும் பொதுவானவை. தனிச் சொத்துடைமைக்கு அங்கு இடம் இல்லை என்பதுதானே கம்யூனிஸத்தின் உயிர். இந்த இலட்சியம் நோக்கி நம் கலைஞரும், கழகத் தள பதிகளும் இதுவரை ஓர் அடியாவது அழுத்தமாக எடுத்து வைத்தது உண்டா?


''ஐந்து முறை முதலமைச்சராக இருந்த எனக்கு ஒரேயரு 'தெரு வீடு’ தவிர வேறெந்த வீடும் இல்லை. அதையும் மக்களுக்குத் தானமாக எழுதிவைத்து விட்டேன்'' என்று கலைஞர் வழங்கி​யிருக்கும் வாக்குமூலத்தில் உண்மை சிலுவையில் அறையப்பட்டு விட்டதை அறியாத தமிழர் யாராவது உண்டா? 



ஆலமரத்தின் விழுதுகள் போன்று பரவிப் படர்ந்திருக்கும் கலைஞரின் குடும்ப உறவுகளின் சொத்துப் பட்டியலை விரிவாக எழுத முயன்றால், விரல்கள் வலிக்குமே. அவ்வளவு சொத்தும் அறம் சார்ந்த வழிகளிலா வந்து சேர்ந்தது? கலைஞரைப் போல் 90 வயதைத் தொட்டவர்கள், 70 ஆண்டுகளுக்கு மேல் பொது வாழ்வை வேள்வியாக நடத்தியவர்கள், ஆயிரம் இன்னல்களைத் தலைமறைவு வாழ்க்கையில் சந்தித்தவர்கள், மாநில முதல்வராக இருந்தவர்கள். செப்புக் காசும் தமக்கென்று சேர்க்காமல் இறுதி வரை வாழ்ந்து செத்தவர்கள், 'தெரு வீடு’கூட இல்லாதவர்கள் இருவரைப் பற்றி இன்றைய இளைய தலைமுறை அறிவதன் மூலம் 'கலைஞர் ஒரு கம்யூனிஸ்ட்டா?’ என்ற கேள்விக்கு எளிதில் விடை காணக்கூடும்.



மகாத்மா காந்தி காண விரும்பிய பொது வாழ்க்கைப் பேரேட்டில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய புனிதப் பெயர்கள் இரண்டு 1. நிருபன் சக்ரபர்த்தி 2. ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட். இருவருமே காந்தியால் கவரப்பட்டு, தேச விடுதலைப் போரில் தியாகம் புரிந்து, மார்க்ஸியப் பொருளாதாரத்தில் மனம் ஒன்றிக் கலந்து கம்யூனிஸ்ட்களாக மாறியவர்கள்; தாங்கள் பிறந்த மண்ணில் தவ வாழ்க்கை நடத்தி, மார்க்ஸியத்திடம் மக்களைத் திருப்பி, கம்யூனிஸ ஆட்சியை அரங்கேற்றிய பெருமைக்கு உரியவர்கள்; அகத்திலும் புறத்திலும் பொய்யின் நிழல் படாமலும், ஊழலின் மாசு படியாமலும் நம்மால் நம்ப முடி யாதபடி வாழ்ந்து மறைந்தவர்கள்.



நிருபன் சக்ரபர்த்தி, தன் கல்லூரிப் படிப்பைத் துறந்து, காந்தியின் சட்ட மறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டவர், கற்றறிந்த நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த போதும், ஏழைகளின் தோழனாய் தன் னைச் செதுக்கிக்கொண்டவர்; சணல் ஆலைத் தொழிலாளியாய், கூலியாளாய், ரிக்ஷா இழுப்​பவராய், மலைவாழ் மக்களின் ஆசிரியராய், கல் கத்தாவின் புகழ் பூத்த இதழான 'அமிர்தபஜார்’ பத்திரிகையாளராய் பல்துறை அனுபவங்களை அடைந்தவர். 1978 முதல் 1988 வரை கம்யூனிஸ்ட் முதல்வராக 10 ஆண்டுகள் திரிபுரா மாநிலத்தில் பணியாற்றிய நிருபன் ஓர் அதிசய மனிதர். முதல் வராகப் பொறுப்பேற்றதும் ஒரு தகரப் பெட்டியுடன் அரசு வீட்டில் அடியெடுத்து வைத்தவர், 10 ஆண்டுகள் முதல்வராக ஆட்சி நடத்தி முடித்த பிறகு, அதே தகரப் பெட்டியுடன் ஒரு ரிக்ஷாவில் அமர்ந்து சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு வந்து சேர்ந்தார் நிருபன். அவருடைய தகரப் பெட்டியில் சில ஆடைகளும் சிந்தனைக்கு விருந்தளிக்கும் புத்தகங்களும் மட்டும்தான் இருந்தன. 



'தெரு வீடு’கூட இல்லாத துறவி நிருபன் ஏழ்மையும் எளி மையும் அழகு தரும் அணிகலன்களாய்ப் பூண்டு ஓர் உன்னதமான மார்க்ஸியராய் வாழ்ந்தார்.
இரண்டாவது முறை தொடர்ந்து நிருபன் திரிபுரா முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது வாழ்த்த வந்தவர்களிடம் தன் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார். 'இன்னமும் 60 சதவிகித மக்களுக்குச் சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு மின்சாரம் சென்று சேரவில்லை. ஆயிரக்கணக்கான மக்களுக்கு இன்றுவரை ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைக் கவில்லை.


 இவற்றுக்காக என் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டியவன். எனக்கு வாழ்த்தும் பாராட்டும் பெறும் தகுதி இல்லை’ என்றவர் நிருபன். ஆனால், நம் கலைஞர் புகழுரைக்கும் விளம்பரத்துக்கும் வரவேற்பு வாழ்த்தொலிக்கும் ஏங்கி நிற்கும் இயல்பு கொண்டவர். 'என்னிடம் பற்றும் அன்பும் கொண்ட தோழர்கள் எனக்கு விழா எடுக்கிறார்கள். அதுகண்டு வக்கற்றோர் வயிற்றெரிச்சல் படுவதா?’ என்று பொங்கும் கலை ஞர் எப்படி ஒரு கம்யூனிஸ்ட்டாக முடியும்?


'எங்களில் எவரும் வெகுஜனப் புகழைத் தூசியளவுகூட மதித்ததில்லை. பல நாடுகளில் இருந்து எண்ணற்ற பாராட்டுகள் எனக்கு வந்ததுண்டு. நான் தனிநபர் வழிபாட்டை வெறுத்த காரணத்தால், அந்தப் பாராட்டுகளில் ஒன்றைக்கூட விளம்பரமாகப் பயன்படுவதற்கு நான் அனுமதித்தது இல்லை’ என்று, மார்க்ஸ் தனது எழுத்தில் பதிவுசெய்திருப்பதை நிருபன் அறிந்து​ வைத்திருந்தார். ஆனால், கலைஞர் அதை அறிந்திருக்க நியாயமில்லை. காரணம், அவர் எந்த வகையிலும் கம்யூனிஸ்ட் இல்லை.



இந்தியாவில் முதல் காங்கிரஸ் அல்லாத அரசை அமைத்த, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்​பட்ட முதல் கம்யூனிஸ்ட் ஆட்சியை நிர்வகித்த அரிய வரலாற்று மனிதர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட். தன்னுடைய சிந்தனையாலும் செயல்திறனாலும் கேரள மக்களின் சமூக வாழ்வியலை மடைமாற்றம் செய்த மகாபுருஷர். இளமையில் காந்தியோடு இணைந்து, காங்கிரஸில் கலந்து, சோஷலிஸ்ட்டாக மலர்ந்து, இறுதிநாள் வரை மார்க்ஸியராக மணம் பரப்பியவர் ஈ.எம்.எஸ். ஒரு கம்யூனிஸ்ட்டாக நீண்ட நாள் தலைமறைவு வாழ்க்கை நடத்தி 1947-ல் வெளிப்பட்ட நம்பூதிரிபாட் தன் குடும்பத்தின் திரண்ட சொத்துக்களை விற்று அதைக் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குக் காணிக்கையாக்கினார். பிரிட்டிஷ் அரசால் தடைசெய்யப்பட்ட 'தேசாபிமானி’ வார இதழ், அந்தப் பணத்தில்தான் நாளிதழ் ஆனது. 




அந்த இதழின் ஆசிரியராகப் பொறுப் பேற்ற நம்பூதிரிபாட் தன்னுடைய 89-வது வயதில் மரணத்தைத் தழுவிய நாளில்கூட மதச்சார்பின்மையின் அவசியம் குறித்து அந்த இதழுக்காக உதவியாளர் துணையுடன் கட்டுரை வடித்தார். ஏராளமாக எழுதிக் குவித்த அவர் தன் எழுத்தின் மூலம் கிடைத்த பணத்தையும் இயக்கத்துக்கே அர்ப்பணித்தார். தான் பிறந்த மண்ணை 26 ஆண்டுகள் திரும்பிப் பார்க்க நேரமின்றி ஏழைக்கும் பாழைக்கும் ஓயாமல் உழைத்த அந்த மனிதர், தள்ளாத வயதிலும் தன் ஆடையைத் தன் கையால் துவைத்து அணிந்தவர். தோழர் நல்லகண்ணு இன்றும் தன் துணியைத் தானே துவைப்பவர். அவர்கள் உண்மையான கம்யூ னிஸ்ட்கள். நம் கலைஞரோ கழகத் தளபதிகளின் கறை படிந்த அரசியல் பயணத்தில் தலைமை ஏற்று வழி நடத்துபவர். மாணிக்கங்களையும் கூழாங்கற்களையும் ஒரே கூடையில் அடுக்குவது அழகாகுமா?



சர்க்காரியா கமிஷனைச் சந்தித்தவர், கழகத் தைக் குடும்பச் சொத்தாகக் கூறுபோட்டவர், அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டவர்களை அர வணைத்து அவர்களுக்கு விமான நிலையத்தில் வீர வரவேற்பு வழங்கியவர், அடுத்தவர் நிலங்களை ஆக்கிரமித்தவர்களைத் தானைத் தளபதிகளாகத் தழுவிக்கொண்டவர், ஈழத் தமிழர் அழிந்தபோதும் பதவியைப் பாதுகாக்க பாராமுகமாய் இருந்தவர், கழக முன்னணியினர் குபேரர்களாகப் பவனி வருவதைப் பார்த்து மகிழ்பவர், ஊழல் மலிந்த மத்திய அரசை விழுந்துவிடாமல் தாங்கிப் பிடிப் பவர், சில்லறை வணிகத்தில் அந்நிய வர்த்தக முதலைகளுக்கு இந்தியச் சந்தையின் வாசலைத் திறந்து வைக்க ஆதரவுக் கரம் நீட்டியவர், ஏழைப் பங்காளர் காமராஜரை வீழ்த்துவதற்கு ரப்பர் தோட்ட முதலாளி மத்தியாசை நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் ஆதரித்துக் கடு மையாகக் களப்பணி ஆற்றியவர், 'நானும் ஒரு கம்யூனிஸ்ட்’ என்கிறார். கேழ்வரகில் நெய் என்றால் கேட்பவர்க்கா புத்தியில்லை?



நம்பூதிரிபாட் ஒரு முறை சொன்னார்: 'நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக ஒரு தனி மனிதன் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொள்ளும் தருணத்தில் தலைவனாக உயர்ந்து விடுகிறான். தன் சுகங்களுக்காகவும் தேவைகளுக்காகவும், கொள்கையில், லட்சியத்தில் சமரசம் கொள்ளும் தருணத்தில் தலைவன் என்ற தகுதியை இழந்து விடுகிறான்.



ஓ... அதுதான் எவ்வளவு ஆழ்ந்த அர்த்தமுள்ள பொதுவாழ்க்கைப் பிரகடனம்!





readers views



1. Dr.Mrs.MeenakshiPrabhakar18 Hours ago

 
கம்யூனிசம் என்பது உலகளாவிய பொதுவுடமையேயன்றி, எனக்கு எதுவும் வேண்டாமென சொல்லும் நிலையல்ல.அன்றைய கால கட்டத்தில் மக்களுக்கு நம்பிக்கையேற்படுத்த தனக்கு எதுவும் வேண்டாமென சொன்னார்களே தவிர, எள் முனையளவும் சுயனலமில்லாத உயிரினம் எங்கும் கிடையாது.அங்கு தலைவர் உண்டு.இருப்பது எல்லோருக்கும் பகிரப்படவேண்டும் என வலியுறுத்தும் பொறுப்பு உண்டு.னான் பகிர்ந்து தருகிறேன், அல்லது பகிர்வதற்கான கொள்கை வகுத்து தருகிறேன், எனக்கு எதுவும் வேண்டாம் என்பது உளவியல் ரீதியாக தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் வினோத செயல்தளம்.பிறர் வாழப்பொறுக்காத மனனிலை, கம்யூனிசம் என அறியப்படுவது தவறு.விதிகள் சுட்டி என்ன விதி மீறல் நடந்திருக்கிறது, என்ன சமூக நலம் குறையாக இருக்கிறது, அதற்கான காரணம் களையப்பட வேண்டும் என சொல்லலாமே தவிர, இல்லாதவனை உயர்த்த முயலாது, நிரந்தர உதாரணமாக்கி , உயர்பவனை தேக்க முடியாது.

கம்யூனிசத்தினற்கு தன்னிலை க்றித்த கலைஞரின் கருத்துக்கள் வேண்டுமானால் ஏற்க முடியாதவையாக இருக்கலாம்.ஆனால் கம்யூனிஸ்ட் சிந்தனை ஒவ்வொரு மனிதருக்கு இயல்பு.கலைஞருக்கும் கூட.பராசக்தி பட வசனங்கள் தெளிவாக அவரது சமூக நீதியின் பால்பட்ட அக்கறையை குறிப்பவை.

பரம்பரைக்கு நிதி சேர்த்ததும், சர்வாதிகாரம் எப்ற்றதும் நடப்பு அரசியல் தந்த துணிவு.எம்.ஜி.ஆரும், ஜயலலிதாவும் தந்த பாதை.சசிகலா காட்டிய வழி.மக்களின் விழிப்புணர்வு இல்லாத சினிமா மோகம்.

தனி மனிதர்களாக இவர்கள் அனைவரும் நல்லவர்களே.விதி தன்னியல்பானது.குழு நிலையிலேயே கண்காணிப்பு அவசியமாகிறது.வாழுதல் அவரவர் உரிமையெனில், பொறுப்பும் அவருடையதாகவே மாறிப்போகும்.சாடல்கள் இல்லாத உலகம் சாதனை படைக்கும்.

நம்பூதிரிபாட் சோஷலிச தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்.சோஷலிசம் தலைவர் இல்லாத குழு நிலைப்பாடு.ஆலோசனைகளின் ஒருங்கினைத்த கொலள்கை வரைவு பொது பயனுக்கு எடுத்துக் கொள்வது. நம்பூதிரி பாடின் தலைவர் குறித்த கருத்து சோஷலிச கொள்கையில்லை.அந்த கால கட்டத்தில் நடப்பு நிலையில் குறித்த நம்பூதிரிபாட் என்பவரின் தனி மனித கருத்து.

விமரிசனங்கள் இடையூறு செய்பவை.எனக்கென எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை என காந்தியும் கூற முடியாது என்பதே நிதரிசனம்.ஒரு விரல் விமரிசனமாக நீண்டால் மூன்று விரல் விமரிசனமாக நம்மை நோக்கி நீளும்.ஒரு விரல் ஆலோசனையாக நீண்டால் மூன்று விரமல் நம்மை நோக்கி ஆலோசனையாக நீளும்.னம்மை உயர்த்தும்.பிறரையும் உயர்த்தும்.

கட்சிகள் மக்கள் நல இயக்கங்களாக மாற வேண்டிய கட்டாய சூழல் இன்று.கட்சி நிதியாவும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய கட்டாயமும் இன்று.எப்படி ஊழல் வந்ததோ அப்படியே அதிர்வுகள் இன்றி செல்லும் தளம் எங்கும் விதி நிறுவுதல்.மனிதம் என்பது பண்பு.மனித பண்புல்ள விலங்குகளும் உண்டு.விலங்கு குணமுல்ல மனிதர்களும் உண்டென்றாலும் இவை சூழல் தரும் கற்றல் மட்டுமே .இயல்பு இல்லை.எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்னில் பிறக்கையிலே, பின் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே என்றொரு பாடல் உண்டு.அன்னை என்பதும் சமூகமே.

சூழல் ஒரு மனிதரை மாணிக்கமாகவும், கூழாங்கல்லாகவும் மாற்றுகிறது என்பதை மறுக்க முடியுமா?.கூழாங்கள்ளும் மாணிக்கமாக மாறும் சூழல் உண்டு.தக்க அங்கீகாரம் கிடைக்காவிட்டால், மாணிக்கமும் கூழாங்கல்லாக மாறும் நிலை உண்டு.பயன் படவே இயற்கையின் படைப்பு..கூடையில் அடுக்குவதற்கோ?

தக்க விதத்தில், அந்தந்த நிலைப்பாட்டில், அவரவர் திறன் படி , சட்ட மன்றம் எனும் உலோகத்தில் பதித்தால், ஜனனாயகம் எனும் அழகிய ஆபரணம் உருவாகக்கூடும்.
2. Balasubramanian19 Hours ago
நம் ஊர்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்......'சிலருக்கு, கல்யாண வீடுகளில் மணமகனாக இருக்க வேண்டும். சாவு வீடுகளில் பிணமாக இருக்க வேண்டும் '. திரு கருணாநிதி அந்த ரகம். எங்கு சென்றாலும், அர்த்தம் இருந்தாலும், இல்லா விட்டாலும், தன்னை முன்னிலை படுத்திக் கொள்ள வேண்டும்.
3. கம்யூனிஸ்ட் அல்லாத இரு கம்யூனிஸ்ட் உண்டு தமிழகத்தில்....

1. கர்மவீரர் காமராஜர்
2. மாண்புமிகு கக்கன்
4. திருச்சிக்காரன்2 Days ago
விமர்சனம் யார் வேண்டுமானாலும் பண்ணலாம்.

என்னை விமர்சித்தே
தன்னை வளர்த்துக்கொண்டவன்
தம்பி தமிழருவி மணியன்
என்று கலைஞர் சொல்லவேண்டும் என்று நினைக்கிறாரோ...
5. RADHAKRISHNAN2 Days ago
 
சர்க்காரியா கமிஷனைச் சந்தித்தவர், கழகத் தைக் குடும்பச் சொத்தாகக் கூறுபோட்டவர், அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டவர்களை அர வணைத்து அவர்களுக்கு விமான நிலையத்தில் வீர வரவேற்பு வழங்கியவர், அடுத்தவர் நிலங்களை ஆக்கிரமித்தவர்களைத் தானைத் தளபதிகளாகத் தழுவிக்கொண்டவர், ஈழத் தமிழர் அழிந்தபோதும் பதவியைப் பாதுகாக்க பாராமுகமாய் இருந்தவர், கழக முன்னணியினர் குபேரர்களாகப் பவனி வருவதைப் பார்த்து மகிழ்பவர், ஊழல் மலிந்த மத்திய அரசை விழுந்துவிடாமல் தாங்கிப் பிடிப் பவர், சில்லறை வணிகத்தில் அந்நிய வர்த்தக முதலைகளுக்கு இந்தியச் சந்தையின் வாசலைத் திறந்து வைக்க ஆதரவுக் கரம் நீட்டியவர், ஏழைப் பங்காளர் காமராஜரை வீழ்த்துவதற்கு ரப்பர் தோட்ட முதலாளி மத்தியாசை நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் ஆதரித்துக் கடு மையாகக் களப்பணி ஆற்றியவர், 'நானும் ஒரு கம்யூனிஸ்ட்’ என்கிறார். .... யாராவது பதில் சொல்லுங்களேன்....
6. அறந்தை அபுதாகிர்2 Days ago
 
அலை கற்றையில் "அடித்து பிடித்து" அனைவருக்கும் அலை பேசி பேசும் வாய்ப்பை அளித்த நாங்கள் கம்யூனிஸ்ட் இல்லையா?

பெரும் செல்வந்தர்கள் மட்டும் கண்டு களித்த காபரா ஆட்டங்களை "மானாட மயிலாட " மூலம் பாமரனின் வீட்டுக்கே கொண்டு வந்த நாங்கள் கம்யூனிஸ்ட் இல்லையா?

இந்த காட்சிகளையெல்லாம் தவற விடக்கூடாது என்பதற்க்காக வண்ணத்தொலை காட்சி பெட்டியை இலவசமாக அளித்தோமே நாங்கள் கம்யூனிஸ்ட் இல்லையா?

இது போன்ற நல்ல செயல்களை பாராட்டி யார் விழா எடுத்தாலும் , எவ்வளவு பணி இருந்தாலும் அவர்கள் மனம் கோணக்கூடாது என்பதற்க்காக விழாவிற்க்கு சென்று அவர்களை மனம் குளிர வைத்த நாங்கள் கம்யூனிஸ்ட் இல்லையா?

இதையெல்லாம் கண்டு கொள்ளாத தமிழருவி மனியன் அவர்களை வண்மையாக கண்டிக்கிறோம்...
7. கம்யூனிஸ்ட்களை பற்றி பேசும் போது நாம் சமீபத்திய திரு.ஹர்கிஷன்சிங் சுர்ஜீத் அவர்களையும் நினைவில் கொள்ள வேண்டும்.பஞ்சாபில் பெரும் நில சுவாந்தார் குடும்பத்தில் பிறந்து 100 வருடங்கள் வாழ்ந்து தன் பங்காக கிட்டிய குடும்ப சொத்த்தை (கிட்டதட்ட 200 ஏக்கர்கள்) கட்சிக்காக தானம் செய்து கடைசி வரை எளிமையாக வாழ்ந்த ஒரு கம்யூனிஸ்ட் அவர்
thanx - ju vi 

0 comments: