Thursday, January 31, 2013

கமல் அரசியலுக்கு வந்தா நீங்க தாங்க மாட்டீங்க - பாரதிராஜா சவால் பேட்டி @ விகடன்

கடந்த வாரம்தான் மதுரையில் வைத்து அவருக்குப் பாராட்டு விழா நடத்தியிருந்தார்கள். ஆனால், அந்தப் பூரிப்பின் சுவடுகளே இல்லாமல் படீரென வெடிக்கத் துடிக்கும் கொதிகலன்போலக் காத்திருந்தார் பாரதிராஜா. கேள்விகளுக்குச் சுடுசுடு... கடுகடுவென அவர் கூறிய நேரடி பதில்கள் தணிக்கைக்குப் பிறகு இங்கே...


 '' 'விஸ்வரூபம்’ பட வெளியீடு தொடர்பாக கமலுக்கு...''


''வேண்டாம்யா... வேண்டாம்! ஆத்தாத்துப் போயிருக்கேன். நெஞ்சு கொதிக்குது. கமல் ஒரு மகா கலைஞன்யா. எங்கே அவனுக்காகக் குரல் கொடுத்தா, நம்மளுக்கு எதுவும் சிக்கல் வந்துருமோனு பயந்து நடுங்கி ஒதுங்கிக் கிடக்குது சினிமா உலகம். எங்கேயோ வடக்குல இருக்குற அமீர் கான் குரல் கொடுக்குறான்.


 ஏன்... அந்த உணர்வு இங்கே இருக்குற 'படைப்பாளி’களுக்கு வரலை? ஏன்யா... உங்க அத்தனை பேரோட உரிமைக்கும் சேர்த்துத்தானே ஒத்தை மனுஷனா கமல் கெடந்து போராடிக்கிட்டு இருக்கான். அறுபது வருஷத்துக்கு முன்னாடியே கடவுள் சிலையைப் பார்த்து 'இது கல்... பேசாது..!’னு கலைஞர் வசனத்தை 'பராசக்தி’யில் அனுமதிச்சு ரசிச்ச மண்ணுய்யா இது.



நான் எந்த அடையாளத்துக்குள்ளும் போக விரும்பலை. ஆனா,  கமல்ங்கிற கலைஞனுக்காக பாரதிராஜா என்கிற கலைஞன் குரல் கொடுக்கிறான். அவ்வளவுதான்!''


''ஆனால், 'கலைக்கு எல்லை இல்லை’ என்று சொல்லி சிறுபான்மையினர் உணர்வுகள் புண்பட அனுமதிக்க முடியுமா?''



''உண்மை என்னன்னு ஊர் உலகம் முழுசா புரிஞ்சுக்காமலே, 'புண்படுத்திட்டாங்க’னு சொல்றது நியாயமா? 'அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் க்ளைமாக்ஸில் பூணூலையும் சிலுவையையும் கார்த்திக், ராதா அறுத்து எறிவாங்க. அந்தக் காட்சி இந்து, கிறிஸ்துவர்களை எந்த வகையிலாவது புண்படுத்தியதா? 'வேதம் புதிது’ படத்தில் சத்யராஜ் கிட்ட ஒரு சின்னப் பையன், 'நான் கரையேறிட்டேன். 



நீங்க இன்னும் ஏறலையா?’னு கேட்பான். அந்தக் காட்சியைப் பார்த்துச் சம்பந்தப்பட்ட சாதியினர் புண்பட்டாங்களா?  ஒரே வார்த்தை - வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு களங்களில் வெவ்வேறு அர்த்தம் கொடுக்கும். அது எந்த இடத்தில், எந்தச் சூழலில் ஒலிக்குதுனு பார்க்கணும் இல்லையா?



சினிமா ஒரு அபூர்வ ஊடகம். அதில் படைப்பின் நேர்த்தியைப் பாராட்டுங்க. அதை விட்டுட்டு, 'இது நொள்ளை... அது நொட்டை’னு வம்படியா குத்தம் சொல்லாதீங்க.''  



''இது தொடர்பா கமல்ஹாசன்கிட்ட நீங்க எதுவும் பேசுனீங்களா? இந்த விவகாரத்தில் எதுவும் அரசியல் பின்னணி இருக்கா?''



''அவன்கிட்ட பேசலை. அவன் மனநிலை இப்போ எப்படி இருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. ஆனா, இந்த விஷயத்தை உன்னிப்பா கவனிக்கிறப்போ எனக்கு ஒண்ணு மட்டும் புரியுது. பாக்யராஜ் கட்சி ஆரம்பிச்சப்போ, டி.ராஜேந்தர் கட்சி ஆரம்பிச்சப்போ, விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்சப்போ எல்லாம் நான்தான் முதல் ஆளா அவங்களைத் திட்டித் தீர்த்திருக்கேன். இப்போ யோசிச்சுப் பார்த்தா, அவங்க மூணு பேரும் ஏதோ ஒரு விஷயத்தில் பலமா காயம்பட்டு, மனசு நொந்த பிறகே, அரசியலுக்கு வந்திருக்காங்க. இப்போ அந்த அரசியல் பாதையில் கமலையும் இறக்கிவிட்றாதீங்க.



கமல் மத்தவங்க மாதிரி இல்லை. எந்த விஷயத்தில் இறங்கினாலும் அதுக்கான முழுத் தகுதியையும் திறமையையும் வளர்த்துக்கிட்டுதான் இறங்குவான். அப்புறம் அவன் அரசியலை உங்க யாராலும் தாங்க முடியாது.''




''தி.மு.க. ஆட்சி நடைபெற்றபோது, இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடிய சினிமா கலைஞர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். ஆனால், இப்போது டெசோ மாநாடு, கண்டனத் தீர்மானம்னு அதே இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.க. போராடுதே?''



''நான் எல்லாருக்கும் பொதுவானவன். அந்த வகையில்தான் அப்போது ஆட்சியில் இருந்த அய்யாவைப் பார்த்தேன். இப்போ ஆட்சி செய்யும் அம்மாவையும் பார்க்கிறேன். கல்யாண வீட்டுக்குப் போனா சிரிக்கணும்... இழவு வீட்டுக்குப் போனா அழணும். அதுதான் இயற்கை நியதி. அதைத்தான் நான் செஞ்சுட்டு இருக்கேன்!''



விஸ்வரூபம்





நன்றி - விகடன்

1 comments:

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் said...

விஸ்வரூபம் படத்திற்கு தடைவிதித்தது,ஜெயலலிதாவின்,ஆட்சிக்கு, வீழ்ச்சிக்கு போடப்பட்ட விதையாகும்.விதி இப்படித்தான் வேலை செய்யும்.இதை யாராலும் தடுக்க முடியாது.எந்த நோக்கமாக இருந்தாலும், எந்த கருத்துகளாக இருந்தாலும் அதுவெல்லாம் வாய் ஜாலங்கள் சாதி,சமயம்,மதம் என்பது ஒழிவதற்கு இதுவும் ஒரு காரணம்.இவை எதோ ஒரு ரூபத்தில்,இயற்கை என்னும் அருட்பெரும் ஜோதியின் விளையாட்டு .எதுவும் நன்மைக்கே .ஒரு ஆட்சி கவிழ வேண்டுமானால் எதோ ஒரு காரண காரியம் தேவைப்படுகிறது.அவை இப்போது நடந்து கொண்டு உள்ளது.கமலதாசனுக்கு நல்ல நேரம்,ஜெயலலிதாவுக்கு கேட்ட நேரம் ஆரம்பம் ஆகிவிட்டது.பொறுத்து இருந்து பார்ப்போம். எல்லாம் இயற்கையின் விளையாட்டு.மக்களால் எதையும் சாதித்துவிட முடியாது.இயற்கையால் எதுவும் நடக்கும். வள்ளலார் சொல்லியது அனைத்தும் நடந்து கொண்டு உள்ளது.எங்கே கருணை உள்ளன அங்கே விளங்கிய அருட்பெரும் ஜோதி .மக்கள் மீது அன்பும் கருணையும் உள்ள இடத்தில் நன்மையே நடக்கும்.சாதி,சமயம்,மதம் என்ற விஷம் நாட்டில் இருக்கக் கூடாது,என்று நினைக்கிறார் கமல்.அதில் தவறு ஒன்றும் இல்லை. இயற்கை அவர் பக்கம் நிலைத்து நிற்கும் ,வெற்றி பெறுவார் கமல்.கமல் புகழ் உலகம் எங்கும் பரவ வேண்டும் என்பது இயற்கையின் விருப்பம்.அவை நடந்தே தீரும் .அன்புடன் ஆண்மநேயன்.கதிர்வேலு.