கடல் பற்றி நூறுக்குமேல் மின்னஞ்சல்கள். எவற்றுக்கும் தனித்தனியாக பதில்போட விரும்பவில்லை. முடியவும் முடியாது. பயணத்தில் இருக்கிறேன். ஆகவே இந்தப்பதிவு
1. கடலின் கதை பழைய கதை அல்ல. அது சினிமாவுக்காக எழுதப்பட்டது. சிறிய நாவல் வடிவில்.அதன்பின் அதில் சிறிய பகுதி எடுத்துத் திரைக்கதையாக ஆக்கப்பட்டது. எல்லாக் கதைமாந்தர்களுக்கும் நீண்ட கதை நாவலில் உண்டு.படம் வெளிவந்தபின் நாவல் வெளிவரும்.
2. கடல் இப்போதைய வடிவில் ஒரு பரபரப்பான, பிரம்மாண்டமான, உணர்ச்சிகரமான வணிகப்படம்தான். அதற்குள் வாழ்க்கைக்கு மிக நெருக்கமான பல தருணங்கள் உள்ளன. ஆன்மீகமானவை, கவித்துவமானவை– அதுதான் வேறுபாடு
3. கடல் காதல்கதை அல்ல. காதல் அதில் முக்கியமான இடம் வகிக்கிறது. காதல் என்பதை விட ஆணின் ஆன்மா பெண்ணைக் கண்டுகொள்ளும் தருணம் என்று சொல்லலாம், அவ்வளவுதான்
4. கீச்சான் என்பது பாடலில் வருகிறது. நான் எழுதியது அல்ல.மதன் கார்க்கியின் சொல்லாட்சி அது. ஆனால் கீச்சான் என்ற சொல்லாட்சி மிக அற்புதமானது.கீச்சான் என்றால் புலி போலக் கோடுகள் கொண்ட சிறிய மீன். டைகர்ஃபிஷ் என்று சொல்வார்கள் கடலில் உள்ள சிறு மீன், ஆனால் அது புலிதான்.
இனிமேல் கடல் பற்றிய விவாதங்கள் ஏதும் இந்த தளத்தில் இருக்காது. நான் எழுதும் படங்கள் சம்பந்தமான விவாதங்களுக்காக இந்த தளத்தைக் கையாள விரும்பவில்லை. ஏனென்றால் அதற்கு மட்டுமே இங்கே வரும் வாசகர்கள் வந்துவிடுகிறார்கள்.
மேலும் தமிழகமே பேசப்போகும் ஒரு பெரிய படத்தைப்பற்றி இங்கும் பேச ஆரம்பித்தால் வேறு எதற்குமே இங்கே இடமிருக்காது. இந்த இணையதளம் இலக்கியம் தத்துவம் ஆன்மீகம் ஆகியவற்றையே பேசுபொருளாகக் கொண்டது.
நன்றி
ஜெ
அன்புள்ள ஜெ,
கடல் நீங்கள் எழுதிய படம் என்று இப்போதுதான் அறிந்தேன். கடல்பற்றி எந்தச்செய்தியுமே இல்லாமல் இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அமைந்த நெஞ்சுக்குள்ளே என்ற பாட்டு மட்டும்தான் இதுவரை வெளிவந்துள்ளது. நான் சமீபத்தில் கேட்ட அற்புதமான பாடல் அது
மணிரத்னம் என் ஆதர்ச இயக்குநர். அவருடன் நீங்கள் இணைந்து செயல்படவேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அது இப்போது சாத்தியமானதில் மகிழ்ச்சி. படம் சிறப்பாக அமைந்திருக்கும் என நினைக்கிறேன்
சியாமளா பாலகிருஷ்ணன்
அன்புள்ள சியாமளா,
மணிரத்னத்துக்கும் எனக்குமான உறவு ஆரம்பிப்பது 2006 ல். ’நான் கடவுள்’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது. நான் திரையுலகுக்கு வந்ததே 2005 இல்தான். கஸ்தூரிமான் வெளியாகியிருந்தது. எங்களூர்க்காரரும் நண்பருமான இயக்குநர், நடிகர் அழகம்பெருமாள் மணிரத்னத்தின் இணை இயக்குநர். மணிரத்னம் எழுதி வைத்திருக்கும் ஒரு கதையை விரிவாக்கம் செய்ய முடியுமா என்று என்னைக் கேட்டார். அந்த அழைப்பை நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால் அப்போது ஒரு கதையை எப்படி சினிமாவாக ஆக்குவதென எனக்கு தெரிந்திருக்கவில்லை என்பதே உண்மை.
அந்தப் படம் தொடர்பாகவே நான் மணிரத்னத்தைச் சந்தித்தேன். கொஞ்சம் தயக்கத்துடன். ஆனால் முதல் சில நிமிடங்களிலேயே அந்தத் தயக்கம் இல்லாமலானது. அவரிடம் மிக உற்சாகமாக இலக்கியம் பற்றி பேசமுடிந்தது. அவரை நவீனத்தமிழிலக்கியத்திற்குள் ஆழமாகக் கொண்டுவரவும் என்னால் முடிந்தது. பொதுவாகத் தனிமைவிரும்பியும் அதிகமாக வாசிக்கக்கூடியவருமான அவரால் சரசரவென தமிழிலக்கியத்தின் முன்னோடிகள் பலரை வாசித்து முடிக்கமுடிந்தது. அவரிடம் அசோகமித்திரன் மிக ஆழமான பாதிப்பை உருவாக்கினார்.
ஒரு நண்பராக நான் அவரிடம் இலக்கியம் பற்றிப் பேசியதே அதிகம். ஒரு கட்டத்தில் இதனால் நான் கற்றுக்கொள்ளவேண்டியவற்றை இழக்கிறேன் என உணர்ந்து அதன்பின்னரே சினிமா பற்றி பேச ஆரம்பித்தேன். அவை எல்லாமே என்னைப்பொறுத்தவரை முக்கியமான தருணங்கள். என்னுடைய வட்டத்தின் பெரும்பாலான நண்பர்களை மணிரத்னத்துக்கு அறிமுகம் செய்தேன். அவர்களெல்லாம் இன்று மணிரத்னத்தின் நண்பர்களே.
நாங்கள் பேசிய முதல்படம் நடக்கவில்லை. சினிமாவில் கதைக்கருக்கள் எளிதாகக் காலாவதியாகிக்கொண்டே இருக்கும் என்பதே காரணம். அதன்பின் அவர் குரு படம் எடுக்கப்போனார். அதன்பின் இன்னொரு படம் பேசினோம், அதுவும் நடக்கவில்லை. அதன்பின் அவர் ராவணன் எடுத்தார். அதன்பின்னர் மீண்டும் தொடர்பு கொண்டு பொன்னியின் செல்வன் செய்யலாம் என்றார். திரைக்கதை முழுமையாக எழுதப்பட்டபின் படம் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகுதான் கடல்.
நான் தமிழின் முக்கியமான இயக்குநர்களிடம் பணியாற்றியிருக்கிறேன். நான் முழுக்க முழுக்க கவனித்த படமாக்கல்முறை என்றால் பாலாவுடையதுதான். அதன்பின் வசந்தபாலன். அதன்பின் படப்பிடிப்புகளில் நான் தெரிந்துகொள்ள ஏதுமில்லை என்று பட்டது. வெயில்வேறு தாங்கமுடியவில்லை. ஆகவே நான் படப்பிடிப்புத்தளங்களுக்குச் செல்வதேயில்லை. இருந்தாலும் ஒழிமுறி படத்தில் ஆரம்பம் முதல் இருந்தேன். அந்தப்படம் பாலா படமாக்கும் முறைக்கு நேர் தலைகீழ். மிகமிகமிகச் சிக்கனமான படமாக்கல்முறை கொண்டது.
கடல் படத்தைப் பொறுத்தவரை நான் அதன் படப்பிடிப்பைக் கவனிக்கவில்லை. திரைக்கதை வடிவம் படமாக்கலில் எப்படி மாறுகிறது எனக் காண ஆர்வமாக இருந்தேன். நல்ல திரைக்கதையில் இருந்து நல்ல சினிமா ஒரு தாவு தாவி தன்னை அடைகிறது. இலைநுனியில் இருந்து ஆடி ஒரு கணத்தில் தாவிப் பறக்கும் பூச்சியைப்பிடிக்கும் தவளைபோல இயக்குநர் திரைக்கதையில் இருந்து பறந்தெழுந்து சினிமாவைப் பிடித்துக்கொள்ளவேண்டும் என்று படுகிறது.
சினிமா அப்படிக் காற்றில்தாவிச் செல்வதைப் பார்ப்பது ஒரு பெரிய அனுபவம். எப்படி இந்த மாற்றம் நிகழ்கிறதென இதுவரை என்னால் அறிய முடியவில்லை. இப்போது அதுவே என்னைக் கவர்ந்திழுக்கும் வசீகரம். அவ்வகையில் கடல் ஒரு பெரிய அனுபவம்
ஜெ
நன்றி - ரைட்டர் ஜெயமோகன் , லிங்க் கொடுத்த karthik @karthik09937397
1 comments:
அருமையான எழுத்தாக்கம்.
Post a Comment