Thursday, January 03, 2013

கட்சிக்காக உழைச்ச யாரையும் மதிக்க மாட்டேங்கிறீங்க...? ஏன்? மு க ஸ்டாலின் பேட்டி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitf1lIIvaUKl-mWbHf1H3J4FY1l-jH92OjOUdf-tY0XrY3wHrYD3nSQnnsIEuUyPsfprOdBd5wgMY1f7vhx6XRmBS_t7U2UIYVWbfu2vj-Y9QGbCp-FWBFDu-ax0Y7aVLUYz67jkmDyJKH/s1600/2.jpg 

விகடன் மேடை - ஸ்டாலின்


சென்னை: தனக்கு பின்னர் தமது மகன் மு.க. ஸ்டாலின் தனது சமூக பணியை  தலைமை ஏற்று வழிநடத்திச் செல்வார் என்று அதன் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

திமுகவில் மு.க. ஸ்டாலின் மற்றும் மு.க. அழகிரி கோஷ்டிகளுக்கு இடையேயான மோதலால், தனக்குப் பின்னர் கட்சியை தலைமையேற்று நடத்தப்போவது யார் என்பதை அறிவிப்பது பிரச்னைக்கு வழிவகுக்கும் என்பதால், அதுகுறித்து கருணாநிதி வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்து வந்தார்.

இருப்பினும் கட்சியில் ஸ்டாலினுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது.



இந்நிலையில் தனக்குப் பின்னால் தமது மகன் மு.க. ஸ்டாலின் திமுகவுக்கு தலைமை ஏற்று கட்சியை வழிநடத்திச் செல்வார் என்று கருணாநிதி இன்று வெளிப்படையாகவே அறிவித்தார்.

அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,வேலூர் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் சாமுவேல் செல்லப்பாண்டியன் தலைமையில் 2 ஆயிரம் பேர், திமுகவில் இன்று இணைந்தனர்.

அவர்களை வரவேற்று பேசிய கருணாநிதி,"நீங்கள் இங்கு வருவதற்கு காரணமாக இருந்த உங்கள் முன்னாள் தலைவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மராட்டிய மாநிலத்தில் அம்பேத்கார் பல்கலைக் கழகம் கொண்டு வருவதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால் 12 ஆண்டுகள் ஆகியும் அதனை கொண்டு வர முடியவில்லை.எனது மூத்த மகன் மு.க. அழகிரி மனைவி காந்தி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்.அந்த பெண்ணை எனது மருமகளாக மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டேன்.

எனது மனைவியும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.அனைவரும் ஒரே சாதி என்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சாதி மறுப்பு திருமணத்தை நடத்தி வைக்கிறேன்.அம்பேத்கருக்கு மணி மண்டபம் என் ஆட்சியில் கட்டப்பட்டது. சென்னையில் உள்ள சட்டப் பல்கலைக் கழகத்துக்கும் அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டது. அம்பேத்கரை திராவிட முன்னேற்ற கழகமே போற்றி வருகிறது.

இந்த சமுதாயம் மேன்மைக்காக எழுச்சிக்காக நான் என் ஆயுள் உள்ளவரை பாடுபடுவேன். அதன் பிறகு என்றால் இங்கு அமர்ந்து இருக்கிற தம்பி ஸ்டாலினை மறந்து விடாதீர்கள்.  தமிழ் இனம், திராவிட இனம், மொழி இனத்தை காக்க தங்களை அர்ப்பணித்து இந்த இயக்கத்தில் இணைந்து இருக்கிறீர்கள்.நல்வாழ்வுக்கு இட்டுச் செல்லும் நம் இனத்தை மேன்மைபடுத்தி செல்வோம்.முன்னேறி செல்வழிவகை காண்போம்" என்றார்.
கருணாநிதியின் இந்த பேச்சு அவருக்கு பின் ஸ்டாலினே திமுகவுக்கு தலைமை ஏற்பார் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் கருணாநிதியின் இந்த அறிவிப்பு திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வி.சரவணன், திருச்சி.


 '' 'கொள்கை... கொள்கை’ என்று பேசுகிறீர்களே... உங்கள்   கட்சிக்கு என்னதான் கொள்கை?''



''தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு, தமிழ்க் கலை, தமிழ்ப் பண்பாடு ஆகியவை பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும், வேறு எதன் பெயராலும் தமிழினம் பிரிக்கப்படவோ, சுரண்டப்படவோ கூடாது. சுயமரியாதையும் பகுத்தறிவும் மிகுந்த சமத்துவ சமதர்ம சமுதாயம்
அமைக்கப்பட வேண்டும்.


தாழ்த்தப்பட்டும் பிற்படுத்தப்பட்டும் கிடக்கும் மக்களின் வாழ்வு வளம்பெறச் செய்ய வேண்டும்.


இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழ்நாடு யாருடைய மேலாதிக்கமும் இன்றிச் செழித்திட, மாநிலத்தில் சுயாட்சி... மத்தியில் கூட்டாட்சி எனும் தத்துவம் வளம் பெறவும் வேண்டும். இந்த லட்சியங்களை அடையப் பாடுபடுவதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை!''


டி.கே.லட்சுமணன், சிந்தாதிரிப்பேட்டை.


''காலம் கடந்து நடந்த டெசோ மாநாட்டால் என்ன பயன்?''


''எது காலம் கடந்த செயல்? லட்சக்கணக்கான மக்கள் இன்னும் தங்களது எதிர்காலம் என்ன என்று தெரியாமல் கிளிநொச்சியிலும், முள்ளிவாய்க்காலிலும், வன்னியிலும் அவஸ்தைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்களே... அவர்களது ஏக்கங்களை உலகத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்வது எங்களது கடமை அல்லவா?



இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களது கோரிக்கை. அந்தக் கோரிக்கையை இந்தியாவை ஆளும் பிரதமர் மன்மோகன் சிங் கவனத்துக்குக் கொண்டுசென்று, இந்தியாவின் நிலைப்பாட்டை ஈழத் தமிழருக்கு ஆதரவாக மாற்றியவர் கலைஞர் என்பதை நினைவில்கொள்ளுங்கள். 


ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக்காகவும் நல்வாழ்வுக்காகவும் கழகம் மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகளில் ஒன்றுதான் டெசோ மாநாடு. டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை உலக நாடுகளும் உலக அமைப்புகளும் தற்போதுதான் புரிந்துகொள்ளத் தொடங்கி இருக்கின்றன. டெசோ மாநாடு காலம் கடந்ததல்ல; காலத்தின் கட்டாயத் தேவை.''



பி.மாதவன், வேதாரண்யம்.


''கருணாநிதி தனது மகனைத் தலைவராக நியமனம் செய்யவிருக்கும் கட்சியை, ஜனநாயக இயக்கம் என்று எப்படிச் சொல்ல முடியும்?''



''கிளைக் கழகம், வட்டக் கழகம் முதல் மாவட்டக் கழகம் வரை உண்மையான உறுப்பினர் சேர்க்கையும் நியாயமான நிர்வாகிகள் தேர்வும் நடக்கும் ஒரே இயக்கம் தி.மு.க. இங்கு யாரையும் வானத்தில் இருந்து கொண்டுவந்து தலைவராக்க முடியாது.


'கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல’ என்று தலைவர் கலைஞர் அவர்கள் பல முறை சொல்லி இருக்கிறார். கழகத்தில் எல்லாமே ஜனநாயக முறைப்படியே நடக்கும்.''


சி.தமிழ்வாணன், திருநெல்வேலி.



''2016-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் என்கிறேன் நான்... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?''



''2016-ல் தி.மு.க-தான் ஆட்சிக்கு வரும் என்ற உங்களது நம்பிக்கைக்கு முதலில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். அப்போதும் தலைவர் கலைஞர் அவர்களே முதல்வர்.


எனது சுற்றுப்பயணங்களின்போது பொதுமக்களிடம் புதிய பேரார்வத்தைப் பார்க்க முடிகிறது. தற்போதைய ஆட்சி மீதான கோபமும் கொந்தளிப்பும் அவர்களின் முகங்களில் பிரதிபலிப்பதைக் காண முடிகிறது. தி.மு.க-வுக்கான ஆதரவு அனுதினமும் வளர்ந்துவருகிறது!''



இரட்டை ஓடை பஞ்சவண்ண மகன்,கருப்பம்புலம்.


''பேராசிரியர் அன்பழகனை எப்படிப் பார்க்கிறீர்கள். அவர் உங்களை எப்படி வழிநடத்துகிறார்?''



''நான் அவரை என்னுடைய பெரிய தந்தையாராகவே பார்க்கிறேன். என்னுடைய அரசியல் பங்கேற்பைப் பலரும் விமர்சித்த காலத்தில், வெளிப்படையாகவே மனப்பூர்வமாக வரவேற்றவர் பேராசிரியர் அவர்கள். தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி, வழிநடத்திவருகிறார்!''



உ.பாண்டி., மதுரை-2.


''உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வர ஆசைப்பட்டால் சம்மதிப்பீர்களா?''


''அரசியலுக்கு வர வேண்டும் என்றோ, வரக் கூடாது என்றோ சொல்லும் அளவுக்கு இதில் என் விருப்பம் முக்கியமானது அல்ல. தனது எதிர்காலத்தைத் தானே தீர்மானிக்கும் அளவுக்கு பக்குவப்பட்டவர்தான் உதயநிதி!''



எஸ்.கதிரவன், சென்னை-10.


''சமீபத்தில் பார்த்த திரைப்படம்?'' 


''சீனுராமசாமி இயக்கத்தில் வெளிவந்துள்ள 'நீர்ப்பறவை’. கடலில் மிதக்கும் மீனவர்களின் வாழ்க்கைப் படகு, கண்ணீரிலும் எப்படித் தத்தளிக்கிறது என்பதைத் தத்ரூபமாகச் சொல்லும் படம். அந்தப் படம் கலங்கவைக்கும் கண்ணீர்ப் பறவையாகவும் இருந்தது!''



எம்.மேக்னா, நா.முத்தையாபுரம்.


''திருமதி துர்கா ஸ்டாலின்..?''



''வள்ளுவர் கூறும் மனைமாட்சிக்கு உதாரணமானவர் என் வாழ்க்கைத் துணை நலன்.


டி.ராகுல், தாமரைக்குளம்.


''ரஜினியோடு உங்களது நட்புபற்றிப் பகிர்ந்துகொள்ள முடியுமா?''


''சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுடனான நட்பு 'அகநக நட்பதாகும்’. அது ஆழமான அன்பையும் பாசத்தையும் அடிப்படையாகக் கொண்டது. நான் நடத்திவந்த 'இளைய சூரியன்’ என்ற இதழின் முதல் வாரமே அவரைத்தான் நேரில் பேட்டி கண்டேன். அந்த அளவுக்கு முக்கிய மனிதர்!''



எஸ்.சிவசங்கர், திருச்சி-3.


 '' 'கட்சிக்காக உழைச்ச யாரையும் மதிக்க மாட்டேங்கிறீங்க... புதுசா வந்தவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீங்க...’ என்று கட்சிக்காரர்களே புலம்புகிறார்களே..?''



''தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், ஆட்சி அமைந்தால் அமைச்சர்களாகப் பொறுப்பேற்பவர்கள் அனைவரும் கட்சிக்காக உழைத்தவர்கள்தான். நகரக் கழகச் செயலாளர்களாகவும், ஒன்றியக் கழகச் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்புக்கு வருபவர்கள் எல்லோருமே கட்சிக்காக இரவு - பகல் பாராமல் பணியாற்றியவர்கள்தான். கழகத்தில் யாரும் வானத்தில் இருந்து குதித்து வந்து வாய்ப்பைத் தட்டிக்கொண்டு போய்விட முடியாது.




கட்சிக்காக உழைத்தவர்களைக் கண்ணெனப் போற்றிக் காக்கும் கட்சி தி.மு.க. என்பதை உண்மை உணர்ந்தவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வர்!''


ச.கருணாகரன், காரைக்குடி.


''ஆயிரம் பஞ்சாயத்துகள் இருந்தாலும், அ.தி.மு.க-வில் யாரும் அமைச்சர் ஆகலாம். புதியவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும். ஆனால், தி.மு.க-வில் பழைய ஆட்களே அமைச்சர்களாக இருப்பார்கள். அவ்வளவு சீக்கிரத்தில் புதியவர்களுக்குத் தேர்தலில் நிற்க சீட் கிடைத்துவிடாது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''



''புதியவர்களாகப் பார்த்து அவர்களுக்கு மட்டுமே சீட் கொடுத்தால், 'ஏற்கெனவே கட்சிக்காக உழைத்தவர்களுக்கு என்ன மரியாதை?’ என்று நீங்களே கேட்பீர்கள். முந்தைய கேள்வியில் இன்னொரு நண்பர் கேட்கவும் செய்துள்ளார்.



தி.மு.க-வில் சட்டமன்ற, நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியலை ஒரு முறை நீங்கள் வாங்கிப் பாருங்கள். தலைவர் கலைஞர் அவர்கள் நுட்பமான ஒரு பங்கீட்டை அதில் பாங்குடன் செய்திருப்பார். கட்சிக்காக உழைத்தவர்கள், கட்சியின் மூத்த முன்னோடிகள், குறிப்பிட்ட தொகுதியில் மக்கள் மத்தியில் செல்வாக்கானவர் கள், இளைஞர்கள், பட்டதாரிகள், பெண்கள், சிறுபான்மையினர் எனப் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையிலும் வேட்பாளர்களை கலைஞர் தேர்வு செய்திருப்பார்.  


லாட்டரிச் சீட்டு குலுக்கலில் பரிசு விழுந்ததைப் போல, அமைச்சர் பதவிகளும் தேர்தலில் நிற்பதற்கான வாய்ப்புகளும் சில கட்சிகளில் வழங்கப்படுகின்றன. தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை அடிப்படையாகக்கொண்ட அவற்றை இலக்கணமாகவோ முன்மாதிரியாகவோ எடுத்துக்கொள்ள முடியாது!''



பி.முத்தையா, சாத்தூர்.


''தந்தை கலைஞர், தலைவர் கலைஞர்... எப்படிப் பார்க்கிறீர்கள்?''


தந்தை கலைஞர் - பாசத் திருவுருவம்.  தலைவர் கலைஞர்-கண்டிப்பானவர், கறாரானவர்!''


வசந்தா காந்த், தோப்புத்துறை.


''இவ்வளவு பெரிய இடத்தில் இருந்தும் தங்களுக்கு என்று ஓர் ஆசை இருக்குமே அது என்ன?''


''எதைப் பற்றியும் எண்ணிக்கொண்டு சாய்ந்திருக்காமல், எந்தவித இடையூறும் இன்றி எல்லாவற்றையும் மறந்து குடும்பத்தாரோடு அளவளாவிக்கொண்டு இருக்க வேண்டும் என்ற ஆசைதான்!''



எஸ்.பவதாரிணி சீனிவாசன், ஆலத்தம்பாடி.


''நீங்கள் சென்னை மாநகர மேயராக இருந்தபோது, தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தார். அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?''



''சென்னை மக்களுக்கு எந்த நலத் திட்டங்களையும் வெற்றிகரமாகச் செய்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக ஜெயலலிதா இருந்தார். முடிந்த வரை எங்களைச் செயல்படவிடாமல் தடுத்தார். தன்னுடைய சர்வாதிகாரச் சிந்தனைக்கு ஏற்ப ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து, என்னைப் பதவி நீக்கம் செய்யத் துடித்தார். சென்னை மாநகர மக்களுக்கு நான் சேவை செய்வதில் ஜெயலலிதா ஏற்படுத்திய தடைகளைத் தாண்ட வேண்டும் என்ற வேகத்துடனேயே அப்போதைய எனது ஒவ்வொரு நாளும் கழிந்தது!''



ஆர்.விஜயராஜன், தூத்துக்குடி.


''செயல் தலைவர் ஆகப்போகிறீர்களாமே?''


''நான் எப்போதுமே செயல்படுபவன்தான்!''


அடுத்த வாரம்...


''சாதி பற்றிப் பேசியே ஆட்சிக்கு வந்துவிடலாம் என்ற எண்ணத்தில், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும் ராமதாஸ், மீண்டும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வந்தால், சேர்த்துக்கொள்வீர்களா?''


''கடந்த ஆட்சியின்போது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அரசியலிலும் சினிமாவிலும் ஆதிக்கம் செலுத்தியது உண்மைதானே?''




''கலைஞரின் மகனாக இல்லாமல் இருந்தால், நீங்கள் அரசியலுக்குள் நுழைந்திருப்பீர் களா?''


- இன்னும் பேசுவோம்...


thanx - vikatan 


டிஸ்கி - அழகிரி உங்களுக்குப்போட்டியா ? ஸ்டாலின் பேட்டி ( பாகம் 1)

http://www.adrasaka.com/2012/12/blog-post_27.html

திராவிடக் கட்சிகள் தமிழகத்தைக் குட்டிச்சுவராக்கிவிட்டனவா? 2016-ன் தமிழக சி .எம் .மு. க .ஸ்டாலின் பேட்டி பாகம் 3 -

http://www.adrasaka.com/2013/01/2016.html

 

0 comments: