Tuesday, January 01, 2013

ஒரு எலிய காதல் கதை - பாஸ்கர்சக்தி - சிறுகதை

ஒரு எலிய காதல் கதை

பாஸ்கர்சக்தி
ஓவியங்கள் : ஸ்யாம்
ம்ப்யூட்டர் வாங்கியபோது ராமச்சந்திரன் ஓர் அடுக்குமாடிக் குடியிருப் பின்  இரண்டாம் தளத்தில் தனியே வசித்து வந்தான். அடுக்குமாடிக் குடியிருப்பென்றால், மார்பிள் தரையும், லிஃப்ட்டும், கனவான்களும், கனவான்கள் பெற்ற கண்கவர் கன்னிகளும்கொண்ட அபார்ட்மென்ட் அல்ல. தண்ணீர் லாரிக்காக யுத்தம் செய்கிற வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு. ஒரே அறைதான். ஓரத்தில் பாத்ரூம், டாய்லெட். பாத்ரூமில் இருந்து வெளியே வந்ததும் பொங்கித் தின்ன ஏற்பட்ட சமையல் மேடை. ஒட்டியிருக்கும் சின்ன பால்கனி. அந்தவீட்டுக்கு வந்த கொஞ்ச காலத்தில் பார்த்து வந்த வேலை போய்விட, ராமச்சந்திரனுக்கு இது ராசி இல்லாத வீடு என்று பட்டது. ஆனால், இந்த வீட்டை விட்டால், நேரே மெரினா பீச்சில்தான் போய் பேப்பர் விரித்துப் படுக்க வேண்டும். ஆனால், இப்போது போலீஸ் நவீனமயமாகி, குதிரைக்குப் பதிலாக சின்னதாக ஒரு பேட்டரி வண்டியில் வந்து துரத்துவதாகக் கேள்விப்பட்டான். எனவே, வீட்டைக் காலி செய்யாமல் அடுத்த வேலையை யோசித்தான். சென்னைக்கு வேலை தேடி வந்து பாரிஸ் கார்னரில் ஒரு ஸ்டேஷனரி கடையிலும், பிறகு ஒரு ஆப்டிகல்ஸிலும் வேலை. கொஞ்ச காலம் கூரியர் சர்வீஸ். எதுவுமே அவனுக்கு நிலைக்கவில்லை. கடைசியாக, ஒரு ஜெராக்ஸ் கடையில் இன்சார்ஜாக இருந்து டி.டி.பி. பண்ணிக்கொண்டு இருந்தான். திடீரென்று ஒரு நாள் முதலாளி வேலையில் இருந்து தூக்கிவிட்டார். அவரது மனைவியின் தம்பி டிகிரி முடித்துவிட்டு ஊரில் இருந்து கிளம்பி சென்னை வந்துவிட்டானாம். மனைவியின் தம்பி என்கிற உறவு நம் சமூகத்தில் மோஸ்ட் பவர்ஃபுல் இல்லையா? எனவே, ராமச் சந்திரன் வெளியேற்றப்பட்டான்.
இது வரையிலும் பார்த்த வேலைகளின் வழியே கொஞ்சூண்டு சேமிப்பும் ஒரு பெண் சிநேகிதமும் எஞ்சியது. ஜெராக்ஸ் கடையில் உடன் வேலை பார்த்த ஐஸ்வர்யா. அவ்வப்போது போன் பண்ணுவாள். இரவில் இவன் அறையில் தனியே இருக்கையில் பெரும்பாலும் அவள் போன் வரும். இவன் கிளர்ச்சி பொங்கி வழிய அவளோடு பேசுவான்.
''எதுக்குப்பா அங்கிருந்து வந்த பிறகும் எனக்கு போன் பண்றே? என்னை அவ்வளவு பிடிக்குமா?' என்றெல்லாம் அவளிடம் வாயைப் பிடுங்கப் பார்ப்பான். அவளோ, ''அந்த சினிமா பாத்தியா? இந்த சினிமா பாத்தியா? அன்னிக்கு பஸ்ல என்னாச்சு தெரியுமா?'' என்று உறைப்பு புளிப்பு இல்லாத விஷயங்களையே பேசுவாள். இவன் ஒரு புள்ளியையே எப்போதும் குறிவைத்து சுற்றிச் சுற்றி அதை நோக்கியே பேச, அவளோ மைய விலக்கு விசையாக இவனை வெளியே நகர்த்துவாள். பெரும்பாலும் கடைசியாக ஒரு விஷயத்தில்தான் முடிப்பாள். ''ராம், எனக்கு டாப்அப் பண்ணிவிடேன்.'' இவனுக்கு புஸ்ஸென்று காற்று இறங்கும். சமயங்களில், ''அது வந்து... காசு கொஞ்சம் டைட்டா இருக்கு'' என்று இழுப்பான். ''ஜஸ்ட் ஹண்ட்ரட் ருபீஸுக்காவது பண்ணிவிடேம்ப்பா. உன்கிட்ட அப்பப்ப பேசறதுதான்டா எனக்கு ஹேப்பியா இருக்கு'' என்று அவள் சொன்னதும், இவன் அப்படியே சட்டையை உதறி நூறு ரூபாயை அலமாரியில் இருந்து பொறுக்கிக்கொண்டு போய் டாப்அப் பண்ணிவிட்டு வருவது வழக்கமாயிருந்தது. ஒரு நாள் ஏதோ ஒரு எரிச்சலில், ''எப்பவும் மிஸ்டு கால்தானே குடுக்கிறே? அப்புறம் எதுக்கு 'டாப் அப்... டாப் அப்’னு டார்ச்சர் பண்றே?'' என்று சொல்லிவிட்டான். மறுமுனையில் குமுறிக் குமுறி அழுகை. ''அவ்ளோதானாடா நீ? இவ்ளோ சீப்பா பேசறே? எவ்ளோ கேவலமா என்னை நினைச்சிட்டே? இவ்ளோ நாளா பழகியும் என்னைப் புரிஞ்சிக்கிட்டது அவ்ளோதானா? டாப்அப் பண்ணிவிடறதுக்குத்தான் உன்கிட்ட பேசறேனா? அவ்ளோ சீப்பா நெனைச்சுட்டேல்ல?'' என்று அவள் அழ... இவனுக்கு, 'ஆமா, அப்படித்தான் தோணுது’ என்று வாய் வரைக்கும் வந்துவிட்டது. மறுமுனை ''சொல்லுடா, ஐஸ்வர்யா அவ்ளோ சீப்பானவளா?'' என்று அழுகையினூடே கேட்க, ''சேச்சே, என்ன ஐஸு நீ? உன்னை நான் அப்படி நினைப்பேனா? நீ எவ்ளோ நல்லவ'' என்று ஆரம்பித்தவன், கிண்டல் என்று அவள் நினைத்துவிடும் அபாயம் உணர்ந்து நாக்கைக் கடித்துக்கொண்டு, ''எவ்வளவு நல்லவ' என்று பதில் சொன்னான். கடைசியில், அன்று நூறுக்குப் பதில் இருநூறு ரூபாய்க்கு டாப்அப் பண்ணிவிட்டான். உடனே போன்.
''எப்பவும் ஹண்ட்ரடுக்குத்தானே பண்ணுவே? இன்னிக்கு என்ன டூ ஹண்ட்ரட்?''
''அது... சும்மா... கையில காசு இருந்துச்சு'' என்றான், கடைசி ரூபாய் வரை சுரண்டி எடுத்த வேதனையை மறைத்துக்கொண்டு.
''இதப் பாரு. நான் டாப்அப் பண்றதுக்காக உன்கிட்ட பேசலை. அதை ஃபர்ஸ்ட் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கோ!'  
இவன், ''புரியுது ஐஸு!''
அவள், ''என்ன புரியுது?'
''டாப்அப் பண்ணணும்... அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கணும். அதான?''
''ம்...'
''இப்ப என்ன டிரெஸ் போட்டிருக்கே?''
''ஏன் கேக்குற?''
''சும்மாதான்...'' சற்று மௌனம். பின் அவள் கேட்டாள். ''அதிருக்கட்டும். அடுத்து என்ன செய்றதா இருக்கே?''
இவன் யோசித்தான். ''வேற ஏதாவது வேலை தேடணும்!''
''ஏம்ப்பா வேலை தேடணும்? உனக்குத்தான் டி.டி.பி. நல்லாத் தெரியும்ல? சொந்தமா நீயே ஒரு கம்ப்யூட்டர் வாங்கி வீட்ல இருந்தே ஆர்டர் எடுத்து டி.டி.பி. பண்ணு!''
இவன் யோசித்தான். ''சரியா வருமா?''
''வரும் ராம். என்னதான் அடுத்தவன்கிட்ட உழைச்சாலும் பெரிசாக் கிடைக்காது. மனசுவெச்சு நீ உழைச்சா பெரிய ஆளாயிடலாம். உன்னால முடியும். உன் மேல உனக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ எனக்கு இருக்கு!''
ராமச்சந்திரனுக்கு விக்கிரமன் படங்களும், அந்தக் கதாநாயகிகளும் ஞாபகத்துக்கு வந்து 'லாலாலா’ சத்தங்கள் உச்சந்தலையில் மலர்ந்தன. அந்த நொடியே முடிவெடுத்தான்.
அடுத்த நாள் காலையிலேயே பக்கத்து பிளாக்கில் சதுரமாகக் கறுப்புப் பையும், காதில் ப்ளூடூத்தும், ஹெல்மெட்டுமாக பைக்கில் தினமும் போய்வரும் கம்ப்யூட்டர் நபரான செல்வத்தைப் பிடித்தான். ''இந்த மாதிரி எனக்கு ஒரு கம்ப்யூட்டர் வேணும்'' என்று சொல்ல... அவன் ''இருபதாயிரம் ரூபாய் இருந்தால் செட் பண்ணிக் கொடுத்துடுறேன். கம்ப்யூட்டரில் பிரச்னை ஏதும் வந்தால், நானே சர்வீஸ் பண்ணித் தந்துடுவேன்'' என்றான். ராமச்சந்திரனுக்கு வாழ்வில் நம்பிக்கையும் உற்சாகமும் பீறிட்டது.  வெள்ளிக்கிழமையாகப் பார்த்து செல்வத்துடன் ரிச்சி ஸ்ட்ரீட்டுக்குப் போய் மானிட்டர், மதர்போர்டு, ஃபாதர் போர்டு, கீ போர்டு, பிரின்ட்டர், மவுஸ் என்று பல அயிட்டங்களை வாங்கிக்கொண்டு வந்து பக்காவாக அனைத்தையும் மாட்டினார்கள். ''கம்ப்யூட்டர் பாதுகாப்பா இருக்கணும்'' என்று ராமச்சந்திரன் தொணதொணக்க, ''பயப்படாதீங்க பாஸ்... யு.பி.எஸ். இருக்கு. எர்த் வொயரும் போட்டுரலாம்!’ என்று சொன்ன செல்வம், மாடியில் இருந்து ஒரு கம்பியைப் பால்கனி வழியே தரைக்கு இறக்கி, ஒரு குழாயில் பொருத்தி அங்கே கரியும் உப்பும் போட்டு அதில் பொதித்து, ''இனி மேல் உன் கம்ப்யூட்டர் நீடுழி வாழும்'' என்று உறுதியளித்தான். அவனே கம்ப்யூட்டரில் முதல் வேலையாக, ''உடனடி டி.டி.பி. செய்து தர அணுகவும்'' என்று செல்போன் நம்பரும் விலாசமும் டைப் பண்ணி பிரின்ட்டரில் ஒரு நூறு பிட்டுகள் பிரின்ட் எடுத்துத் தந்தான். அந்த ஏரியா பூராவும் ஒட்டி விட்டால் ஆர்டர்கள் வரத் துவங்கிவிடும். ஆசுவாசமும் நம்பிக்கையுமாக ராமச்சந்திரன் முகமலர்ச்சியுடன் செல்வத்திடம் ''எவ்வளவு பாஸ்?' என்று கேட்டு பணத்தைக் கொடுக்க, வாங்கிக்கொண்டு கிளம்பும் முன் செல்வம் சாதாரணமாகக் கேட்டான். ''எலி கிலி ஒண்ணும் இல்லையே?''
''இல்லை. ஏன் பாஸ்?''
''எலி இருந்தா கம்ப்யூட்டருக்குச் சிக்கல் பாஸ். எலி வராமப் பாத்துக்கங்க!'' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான். நாளது தேதி வரை அந்த அறையில் குட்டி முதலை போல் அலையும் ஓரிரு பல்லிகளைத் தவிர்த்து, எலி என்பது இல்லவே இல்லை என்பதால்,ராமச் சந்திரன் பெரிதாக அலட் டிக்கொள்ளவில்லை. அன்று இரவு இவன் கம்ப்யூட்டர் வாங்கிவிட்ட மகிழ்ச்சியில் மென்மையாகக் குடித்துவிட்டு கால் நீட்டிப் படுத்தவாறு டி.வி-யின் சேனல்களை மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டு இருந்தான். போன் ஒரு மைக்ரோ நொடி ஒலித்து கட் ஆனது. ஐஸ்வர்யாதான். இப்படி மின்னல் துண்டுபோல் மிஸ்டு கால் கொடுக்க அவளால்தான் முடியும் என்று வியந்தபடி அழைத்தான்.
''என்னாச்சு... கம்ப்யூட்டர் வாங்கிட்டியா?''
''வாங்கிட்டேன் ஐஸு. ரொம்பப் பெருமையா இருக்கு. சந்தோஷமா இருக்கு. இனி, அடுத்தடுத்து ஒவ்வொண்ணா வாங்க வேண்டியதுதான். கார் வாங்கின உடனே கல்யாணம்!''- சரக்கு இவனது தன்னம்பிக்கையை அதிகப்படுத்தி இருந்தது.
''என்னது... கார் வாங்கினப்புறம் கல்யாணமா?''
''உனக்கு அவசரம்னா, கல்யாணத்துக்கு அப்புறம் கார் வாங்கிக்கிரலாம் ஐஸு!'' என்று இவன் குழற... அவள் குரலில் ஒரு கறார் தன்மை வந்தது.
''என்ன... குடிச்சிருக்கியா?'
''ம்... இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா? அதான். எக்ஸ்கியூஸ்மீ? ஓ.கே.?''
''ஓ! எவ்ளோ ஆச்சு?''
''ம்... ஒரு குவார்ட்டர் ஆச்சு. அதான் லிமிட்.''
''லூஸு! கம்ப்யூட்டர் எவ்ளோ ஆச்சு?'
இவன் கையை விரித்து நக்கலாக, ''ம்... இவ்ளோ!'' என்றான். மறுமுனையில் அவள் கடுப்பாவதை உணராமல், ''ஏன்? எதுக்கெடுத்தாலும் அவ்ளோ, இவ்ளோனு அலட்டறே? 'எவ்வளவு?’னு கேக்க மாட்டியா? பெரிய ஸ்டைலாக்கும் இது?''
மறுமுனையில் ஓரிரு நொடிகள் மௌனம். பிறகு, ''குடிச்சுட்டா என்னையே நக்கல் பண்ணுவியா நீ?'
''ஏன் ஐஸு... உன்னை நக்கல் பண்ற உரிமை எனக்கு இல்லையா?'
''ப்ச்! இதப் பாரு ராம்... நீ லைஃப்ல முன்னேறணும்னா, முதல்ல உன்னை கன்ட்ரோல் பண்ணக் கத்துக்கோ. கம்ப்யூட்டர் வாங்கினதுக்கே குடிக்க ஆரம்பிச்சேன்னா, நாளைக்கு நிறைய சம்பாரிக்க ஆரம்பிச்சிட்டா தினம் தினம் குடிப்பே... இல்ல?''
''ஐயோ! அப்படி எல்லாம் இல்லை ஐஸு... நீ சொன்னா நான் என்ன வேணா செய்வேன். குடிக்காதேடா லூஸுன்னு சொல்லு... குடிக்க மாட்டேன்!''
''இதப் பார்... நீ உழைக்கணும். சம்பாதிக்கணும். முதல்ல சொந்தக் கால்ல நிக்கணும். அவ்ளோதான். மத்ததெல்லாம் அப்புறம் யோசிக்கலாம். ஓ.கே-வா?''
''சரி... சரி... போனை வைக்கிற துக்கு முன்னாடி ஒரே ஒரு கேள்வி. 'யெஸ் ஆர் நோ’னு பதில் சொல்லு. என்னை உனக்குப் பிடிச்சிருக் கில்ல?''
''பிடிக்காத ஆள்கிட்ட எவளா வது நைட்ல போன் பண்ணிப் பேசுவாளா?''
இவன் உற்சாகம் பீறிட, ''சந்தடிசாக்குல பொய் சொல்ற பாத்தியா? நீ என்ன போன் பண்ணியாப் பேசற? மிஸ்டு கால் குடுத்துதானே பேசறே?'' என்று சிரிக்க...
அவள், ''நீ குடிச்சிட்டா ரொம்பத்தான்டா என்னை நக்கல் பண்ற. வைடா போனை. பன்னி!'' என்று செல்லமாகத் திட்டியபடி போனை வைத்தாள்.
இவன் மகிழ்ச்சியுடன் கண்களை மூடினான். கனவில் இவன் சென்னையின் மிகப் பெரிய இளம் தொழிலதிபராக ஆகி விட்டான். இவன் வீட்டில் ஃபோர்ஸ் பண்ணி அமைச்சர் மகளை நிச்சயம் செய்துவிட்டார்கள். கடைசி நேரத்தில் இவன் மண மேடையில் இருந்து ஓடி வந்து, ரிசப்ஷனில் செக்யூரிட்டிகளால் தடுத்து நிறுத்தப் பட்டு இருக்கும் ஐஸ்வர்யாவை மேடைக்குக் கூட்டிச் சென்று, ''இவதான் என் மனைவி. இன்னிக்கு நான் இந்த இடத்துல நிக்கிறேன்னா, அதுக்குக் காரணம் இவதான்!'' என்று உரக்கக் கத்தியபோது இருமல் வந்து படுக்கையில் இருந்து எழுந்து தண்ணீர் குடித்தான். கனவை எண்ணிப் புன்னகைத்தபடி படுக்கையில் சரிந்தவன் காதில் அந்தச் சத்தம் கேட்டது. 'கர்ரட்... கர்ரட்’ என்று எதுவோ எதையோ சுரண்டும் சத்தம். இவன் எழுந்து விளக்கைப் போட்டு சுற்றுமுற்றும் பார்த்தான். சத்தம் இல்லை. ஏதோ பிரமை என்று மீண்டும் விளக்கை அணைத்துப் படுக்கையில் சரிந்தால், சில விநாடிகள் கழித்து மீண்டும் 'கர்ரட்... கர்ரட்...’ என்று அதே சத்தம். லேசான பதற்றத் துடன், எழாமல் சத்தம் வரும் இடத்தை அவதா னித்தான். தலைக்கு மேலே இருக்கும் சிறிய கான்கிரீட் பரணில் இருந்துதான் வந்தது. எழுந்து விளக்கைப் போட்டான். அந்தப் பரணில் கம்ப் யூட்டர் உபகரணங்கள் இருந்த காலி அட்டைப் பெட்டிகளைப் போட்டு இருந்தான். அங்கே நிமிர்ந்து பார்த்தபோது அவன் மயிர் கூச்செறிந்தது. எலி!
அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் சைஸில் கரேலென்று தன் குறுகுறுத்த விழிகளால் இவனைப் பார்த்தபடி இருந்தது. அடக் கடவுளே! இத்தனை நாள் இல்லாமல் சரியாக கம்ப்யூட்டர் வாங்கிய தினத்தன்று எப்படி இந்த எலி இங்கு வந்தது? இவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஒரு சிறிய அறைக்குள் சற்றுப் பெரிய சைஸ் எலியுடன் ஒத்தைக்கொத்தை நிற்கும் சூழ்நிலை வாழ்வில் முதன்முதலாக வாய்க்கும்போது உங்களுக்கு வேர்க்கும். படபடப்பாக வரும். இரவு நீங்கள் குடித்திருக்கும்பட்சத்தில் உங்கள் வாய் நிச்சயமாக உலர்ந்துபோகும். ராமச்சந்திரன் உதடுகளை ஈரப்படுத்த முயன்றான். நாக்கை ஓர் உலர்ந்த காகிதம்போல் உணர்ந்தான். கேனைச் சரித்து தண்ணீர் பிடித்து மடக் மடக் என்று குடித்துவிட்டு எலியைப் பார்த்தான். அது அந்த அட்டைப் பெட்டிகளுக்குள் போவதும் வருவதுமாக இருந்தது. இவன் புதிதாக வாங்கிய கம்ப்யூட்டரைப் பார்த்தான். ஏதாவது வொயரைக் கடித்துவிட்டதென்றால் பொழைப்பு போயிருமே என்று பயம் கவ்வ... சுற்றிலும் தேடினான். துடைப்பம் சற்று நீளமாக இருக்க, ஸ்டூலில் ஏறி துடைப்பத்தால் தட்டினான். எலி அங்கிருந்து இவன் மீது தாவ சரிந்து விழுந்தான். தடுமாறி எழுந்தால், அது சமையல் மேடையில் இருந்தது. பாய்ந்தான். அங்கிருந்து கம்ப்யூட்டர் மேஜை மீது அது தாவ... இவனுக்குச் சுர்ரென்று வயிறு இழுக்க, ''ஏய்..!'' என்று அதை நோக்கிப் பாய... அது இவன் காலடியில் குதித்து பால்கனிக்குச் சென்றது. இவன் பின்னாலேயே போய்த் தேடினான். காணவில்லை. சிறிய பால்கனி என்பதால் கதவு இடுக்கெல்லாம் தேடினான். இல்லை. பெருமூச்சு வாங்கியபடி வந்து மறுபடி தண்ணீர் குடித்தான். ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு ஃபுட்பால் ஆடிய மாதிரி அங்கும் இங்கும் தாவியதில் மூச்சிரைத்து தூக்கம் சுத்தமாகப் போய்விட்டது. விளக்கை அணைத்தால், எலி பிறாண்டும் சத்தம் கேட்குமோ என்ற தயக்கத்திலேயே வெகு நேரம் அமர்ந்திருந்து ஒரு வழியாக அவன் தூங்கும்போது அதிகாலை ஆகிவிட்டது.
அடுத்த நாள் காலையில் எழுந்ததும் பரணை எட்டிப் பார்த்தான். எலி இல்லை. நிம்மதியாக இருந்தது. தெருமுனைக் கடையில் இட்லி பார்சல் வாங்கி வந்து சாப்பிட்டுவிட்டு அந்தப் பகுதி முழுவதும் போய் இவனது 'டி.டி.பி. செய்து தரப்படும்’ பிட்டு களை ஒட்டினான். நாலைந்து பழைய வாடிக்கையாளர்களுக்கு போன் செய்தான். அதில் ஒருவர் உடனே ஆர்டர் தர... ஓடிப் போய் வாங்கி வந்து மதியமே வேலையை ஆரம்பித்துவிட்டான். வேலை முடிய இரவு ஆகிவிட்டது. மனசு நிறைவாக இருந்தது. முதல் நாளே ஒரு ஆர்டர். நாளைக்கு கையில் காசு வந்துவிடும். மாதத்துக்கு இருபது ஆர்டர் கிடைத்தாலே வண்டியை ஓட்டிவிடலாம். அதற்கு மேலே கிடைத்தால் 'ஆஹா!’ என்று மனது குதித்தபோதுதான் ஞாபகம் வந்தது. காலையில் இருந்து மிஸ்டு கால் எதுவுமே வரவில்லை. இவன் போனை எடுத்து ஐஸ்வர்யாவுக்குப் போட்டான். பிஸியாக இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து மறுபடி போட்டான். பிஸி. சரி... மிஸ்டு கால் பார்த்துக் கூப்பிடுவாள் என்று பார்த்தான். இரவு பதினோரு மணியாகியும் அழைப்பே இல்லை. இவனுக்கு வித்தியாசமாக இருந்தது. இத்தனை மாதங்களில் இப்படி நடந்ததே இல்லை. குழப் பத்துடன் அவளுக்கு டயல் செய்தான். வெகு நேரம் அடித்து நின்றது. இவனுக்கு லேசான பதற்றம் ஏற்பட்டது. உடம்பு கிடம்பு சரியில்லையோ என்று தோன்ற கால் மணி நேரம் கழித்து மறுபடி கால் செய்தான். ரிங் போய்க்கொண்டு இருந்தது. போனைக் காதில் வைத்தபடி குழப்பத்துடன் அங்கும் இங்கும் பார்வையை அலையவிட்டவன் கண்ணில் பட்டது எலி... அதே எலி!
வாட்டர் கேனின் பின்புறம் அமர்ந்து வாலை வெளியே விட்டிருந்தது. இவன் மயிர்க்கூச்செறிந்த அதே கணம், மறுமுனையில் போனை ஐஸ்வர்யா எடுத்துவிட்டாள்.
''என்ன... இந்நேரம் போன் பண்றே?''- அவள் குரல் பதற்றமாகக் கிசுகிசுத்தது.
''அது வந்து எலி...'
''என்ன உளர்றே? என்ன எலி?''
''அது இங்க ஒரு எலி... அதிருக்கட்டும் என்னாச்சு உனக்கு? ஏன் கால் பண்ணலை?'
''வேலையா இருந்தேன். நீ ஏன் தேவை இல்லாம கால் பண்றே இந்நேரம்?''
இவனுக்குச் சுருக்கென்றது. ''என்ன ஐஸு? எத்தனை நாள் நைட்டு இதே நேரம் நாம பேசிஇருக்கோம்? நேத்துகூட...''
''உளறாதே ராம். அப்பல்லாம் நான் மிஸ்டுகால் கொடுப்பேன். இன்னிக்குத்தான் நான் குடுக்கலைல்ல? பின்ன எதுக்குக் கூப்பிட்டே?''
இவனுக்குள் சட்டென்று ஒரு சங்கடம் பரவி யது. ''என்ன ஐஸு... ஒரு மாதிரியாப் பேசற? நானா உனக்கு போன் பண்ணக் கூடாதா?''
''ஐயோ! வீட்ல கெஸ்ட் இருக்காங்க. ஓ.கே? போனை வை!''
இவன் ஏதோ சொல்ல வருவதற்குள் லைன் கட் ஆகிவிட்டது. இவன் வருத்தத்துடன் பாயில் சரிந்து அமர்ந்தான். இவன் கண் முன்னாலேயே அந்த எலி விடு விடு என்று குறுக்காக ஓடி டேபிளின் மீது தாவி பரணுக்குப் போனது. இவன் கொலை வெறியுடன் எழுந்தான். ஓரமாக இருந்த செருப்பை எடுத்துப் பரணில் வீசினான். அது அங்கு இருந்து தரையில் தாவி சமையல் மேடைக்கு ஓட... இவன் தண்ணீர் பாட்டிலை வீசினான். தரை எங்கும் தண்ணீர் கொட்ட... அது பால்கனிக்கு ஓடியது. சிக்கினால் அதை மிதித்தே கொல்லும் வெறியுடன் இவன் ஓட, அதைக் காணவில்லை. பால்கனி முழுக்கப் பரபரப்புடன் தேடினான். அங்கு இருந்த பழைய பக்கெட், கால் மிதி எல்லாவற்றையும் தூக்கிப் பார்த்தான். காணோம் சனியனை.
உள்ளே வந்து படுத்தவனுக்கு இன்றைய நாளின் உற்சாகம் பறிபோனதுபோல் தோன்றியது. புரண்டு புரண்டு படுத்தான். எப்போதோ சோர்ந்து தூங்கிப்போனான்.
அடுத்த இரண்டு மூன்று நாட்களும்கூட இதே போலவே நடந்தது. சில ஆர்டர்கள் கிடைத்தன. உற்சாகமாக வேலை பார்த்தான். இரவானால் அந்த எலி எங்கிருந்தோ வந்தது. விரட்டியதும் ஓடிப்போனது. ஐஸ்வர்யா போன் பேசவில்லை. இவனுக்கு அது மிகப் பெரிய மன வேதனையைத் தர... அவளை பழைய ஜெராக்ஸ் கடைக்குத் தேடிப் போனான். அவள் அங்கு இல்லை. கடையில் யாரோ ஒரு சிறுவன் இருந்தான். இவன் வாசலில் நின்று போன் பண்ணினான். அவள் எடுத்ததும் இவன் கடைக்கு வந்திருக்கும் விவரம் சொல்ல, அவள் குரலில் ஒரு பதற்றம் தெரிந்தது. ''கடைக்கு எல்லாம் ஏன் தேடி வர்ற ராம்? ஓனர் தப்பா நினைப்பாரு.''
''கடையில யாரும் இல்லை... ஒரு சின்னப் பையன்தான் இருக்கான்!''
''ஐயோ... சொன்னாப் புரியாதா உனக்கு? நான் இன்னிக்கு லீவு ராம். நீ கடையில நிக்காதே. ஓனருக்கு டவுட் வந்தா பிராப்ளம்...'
''சரி... போயிர்றேன். ஆனா, நீ ஏன் எனக்கு போன் பண்ணவே மாட்டேங்கிறே?''
''அதான் சொன்னேனே, வீட்ல கெஸ்ட் வந்திருக்காங்க!''
''என்ன சொல்றே நீ? வீட்ல கெஸ்ட் வர்றதுக்கும் எனக்கு நீ போன் பண்றதுக்கும் என்ன இருக்கு?''
''ப்ச்... உனக்கு அதெல்லாம் புரியாது. ப்ளீஸ்... நான் ஒண்ணு சொல்றேன். கேப்பியா?''
''சொல்லு.''
''நானா போன் பண்ணாம எனக்கு கால் பண்ண வேணாம். நானே கால் பண்றேன். என்ன?''
இவன் மனமெங்கும் ஒரு தகிக்கும் உணர்வு பரவியது. ''உனக்கு என்னாச்சு ஐஸு? எதையோ என்கிட்ட இருந்து மறைக்கிறே! ப்ளீஸ்... கெஞ்சிக் கேட்டுக்கிறேன். என்ன பிரச்னைனு சொல்லு?''
''ப்ச்... சொன்னாப் புரியாதா ராம்? எல்லாத்தையும் நான் விளக்கமா சொல்லிட்டே இருக்கணும்னு ஏன் எதிர்பார்க்கிறே? தயவுசெஞ்சு நான் கால் பண்ணாப் பேசு. நீயா பண்ணாதே... அவ்ளோதான். ஓ.கே?'
இவன் அடுத்துப் பேசும் முன் லைன் கட் ஆகிவிட்டது. மறுபடி முயற்சித்தான். அவள் போனை எடுக்கவில்லை. இவனது வேதனை கோபமாகவும் எரிச்சலாகவும் மாறியது. இனி, அவ கால் பண்ணாலும் எடுக்கக் கூடாது. 'அவ்ளோ பெரிய இவளா’ அவ என்று தோன்றியது.
இரண்டு மூன்று நாட்கள் அந்த மனநிலை நீடித்தது. ஆனால், மனதின் பிறிதொரு மூலை 'ஐஸு... ஐஸு’ என்று துடிக்க, அவளுக்கு போன் செய்தான். இந்த நம்பர் உபயோகத்தில் இல்லை என்று வந்தது. நம்பரை மாற்றிவிட்டாள் என்று தோன்ற... உடைந்துபோனான். விடு விடு என்று ஜெராக்ஸ் கடைக்குப் போனான். கடை பூட்டி இருந்தது. என்ன செய்வது என்று தோன்றாமல் அங்கே இங்கே அலைந்தான். வடபழனி கோயில் அருகே கிளி ஜோசியம் பார்த்தான். வனவாசம் போன ராமர் படம் வந்தது. நீங்க உங்க துணையைப் பிரிஞ்சிருப்பீங்க என்று அந்த ஜோசியன் சொல்ல... இவன் விரக்தி யாக எழுந்துவந்தான். அருகில் இருந்த பார்க்கில் குழப்பத்துடன் வெறுமையாக உட்கார்ந்து இருந்தபோது கம்ப்யூட்டர் செல்வம் எதிர்ப் பட்டான்.
''என்ன பாஸ் கம்ப்யூட்டர் எல்லாம் ஓ.கே-வா?''
''கம்ப்யூட்டர் ஓ.கே... ஆனா, தினமும் ராத்திரி ஒரு எலி வருது!''
செல்வம் வியப்பாகப் பார்த்தான். ''தினமும் ராத்திரி எலி வருதா? அப்பாயின்ட்மென்ட் கொடுத்துவெச்ச மாதிரி சொல்றீங்க பாஸ்?''
''சத்தியமா... பகல் எல்லாம் தட்டுப்படறது இல்லை. நைட்டு மட்டும் வந்திருது. விரட்டினா போயிருது. போற சனியன் மறுபடி நைட்டு வந்துருது. ஒரு ஆச்சர்யம் என்னன்னா... கம்ப்யூட்டர் என்னைக்கு வாங்கினோமோ, அன்னைல இருந்துதான் அந்த எலி வருது!'' என்று இவன் தனது உறக்கமற்ற, இரக்கமற்ற இரவுகளை விவரிக்க... செல்வம் இவனையே கவலையுடன் பார்த்தவன், ''அது சரி பாஸ்... ஆனா, ஒரு எலிப் பிரச்னைக்கா உங்க முகத்துல இவ்வளவு சோகம்?''
ராம் வருத்தமாக, ''ப்ச்... அது வேற ஒரு பிராப்ளம்!''
''என்ன லவ்வா?''
''ம்... ஆமா, தினமும் பேசிக்கிட்டு இருந்தவ. இப்பப் பேசறதே இல்லை!''
''நாட் ரீச்சபிளா?''
''ம்ஹூம்... நம்பர் டஸ் நாட் எக்ஸிஸ்ட்!''
''ம்... மேட்டர் முழுசாத் தெரியாம நான் எதுவும் சொல்லக் கூடாது. ஆனா, ஒண்ணு மட்டும் சொல்றேன் பாஸ். கம்ப்யூட்டர், ஃபேஸ் புக், சாட்டிங், மொபைல் எல்லாம் வந்த பிறகு லவ்வுக்கெல்லாம் அர்த்தமே கிடையாது. அதைப் புரிஞ்சுக்கோங்க!''
''பேசறதைப் பாத்தா, நீங்களும் நம்பர் மாத்தற ஆளு போலிருக்கு!''
''ம்ஹூம்... நான் நம்பரை எல்லாம் மாத்த மாட்டேன். மெம்பரை மாத்திருவேன்!'' என்று சிரித்தான்.
ராமச்சந்திரன் புன்னகைக்க... அவன், ''சரி வாங்க உங்க வீட்டுக்குப் போகலாம். சிஸ்டத்துல புதுசா ரெண்டு சாஃப்ட்வேர் போட்டுவிடறேன்'' என்க... இருவரும் அறைக்கு வந்தனர். வந்தவன் சிஸ்டத்தை ஆன் பண்ணி ஏதோ செய்துகொண்டு இருக்கையில் ராமச்சந்திரனின் போன் ஒலித்தது. புது நம்பர். எடுத்தான். ஐஸ்வர்யாவின் குரல் ஒலிக்க... பால்கனிக்கு வந்து பேசினான்.
''ராம், நான்தான் ஐஸ்வர்யா!''
''சொல்லு...''
''ஒரு மேட்டர் சொல்லுவேன். அதை நீ சரியாப் புரிஞ்சுக்கணும். தேவையில்லாம அப்செட் ஆகக் கூடாது. ப்ளீஸ்...''
இவனுக்கு அதற்குள் எல்லாம் புரிந்தது போல் தோன்ற, ''சொல்லு... என்ன மேட்டர்?''
''எனக்கு ஃபிக்ஸ் ஆயிருச்சு... அதாவது... மேரேஜ்!''
''நினைச்சேன்... யாரு?''
''நம்ம ஓனரோட மச்சினன்தான்!''
ராமச்சந்திரனுக்கு உடலெல்லாம் எரிந்தது. ''ஓனரின் மச்சானா?''
''பாவி! வந்ததும் என் வேலைக்கு ஆப்பு வெச்சான். இப்ப உன்னையும் கரெக்ட் பண்ணிட்டானா? காசு இருக்குதுன்னதும் நீயும் இளிச்சுட்டேஇல்ல..?'
''ப்ச், அப்படி இல்லை ராம். நீ கம்ப்யூட்டர் வாங்கினேல்ல? அன்னிக்குதான் அவன் புரபோஸ் பண்ணான். நான் ஃபர்ஸ்ட் ஓ.கே. சொல்லலை. ஆனா, அவன் ஓனர் மூலமா எங்க வீட்ல பேசிட்டான். நாங்க ஒரே கம்யூனிட்டி வேற. நல்ல இடம்னு வீட்லயும் ஓ.கே. சொல்லிட்டாங்க. அந்த ஜெராக்ஸ் கடையை அவன் பேருக்கு மாத்தியாச்சு!''
''அப்படியா! ரெண்டு பேரும் மாத்தி மாத்தி ஜெராக்ஸ் எடுக்கலாம். நல்ல வசதி இல்ல?''
''நக்கல் பண்ணாதே ராம். எனக்கு எவ்ளோ குழப்பமா இருந்துச்சு தெரியுமா?''
''நானாடி நக்கல் பண்றேன்? நீ பண்ணதுதான்டி பெரிய நக்கல். அது சரி, நீயும் லைஃப்ல செட்டில் ஆகணுமில்ல? என்ன பண்ணுவ? நான் என்னிக்கு டி.டி.பி. பண்ணி சம்பாரிச்சு, பெரிய ஆளாகி கார் வாங்கி...'
''நீ நிச்சயம் பெரிய ஆளா வருவே ராம். எனக்கு நம்பிக்கை இருக்கு!''
இவன் பேசாமல் இருந்தான். வயிற்றுக்குள் ஏதோ கொதிப்பது போல் இருந்தது.
''இந்த டெசிஷன் எடுக்க நான் அவ்ளோ வேதனைப்பட்டேன். இப்பவும் எனக்கு உன் மேல எவ்ளோ அக்கறை இருக்கு தெரியுமா? அவர்கிட்டகூட உன்னைப் பத்தி அவ்ளோ நல்ல விதமா சொன்னேன்!''
''ம்... நீ எவ்ளோ நல்லவனு தெரிஞ்சுருச்சு. ஆனா, நான் அவ்ளோ நல்லவன் இல்லை. அதனால இனிமே எனக்கு போன் பண்ணாத... என்ன?''
அவள் ஏதோ சொல்ல வர... இவன் இணைப்பைத் துண்டித்தான். உள்ளிருந்த செல்வம் பால்கனிக்கு வந்தான்.
''பாஸ்... மேட்டர் என்னன்னு புரிஞ்சுபோச்சு!''
''என்ன?'
''அந்த எலி கம்ப்யூட்டர் வாங்கின அன்னையிலிருந்துதானே வருது?''
''ஆமா!''
''இத பாருங்க!'' என்று அவன் எர்த் கம்பியைக் காண்பித்தான்.
''கம்ப்யூட்டர் ஃபிக்ஸ் பண்ண அன்னிக்கு நான் கீழே வரைக்கும் கட்டினது. இது வழியாதான் அது தினமும் மேல ஏறி வருதுனு நினைக்கிறேன்!''
''கரெக்ட். விரட்டும்போது பால்கனிக்கு வந்து காணாமப் போயிரும்!''
''ஓ.கே... ஓ.கே. இதை கட் பண்ணிட்டா பிராப்ளம் சால்வ்டு. எர்த் வயர் இல்லாட்டி பெரிசா ஒண்ணும் ஆயிடாது!''
செல்வம் அந்தக் கம்பியை வெட்டிச் சுருட்டி எடுத்தான்.
''இனி எலி வராது பாஸ்!''
''தேங்க்ஸ்!''
''சீரியஸா போன்ல யாரையோ கடிச்சீங்க? உங்க ஆள்தானா?''
''ம்... மெம்பரை மாத்திட்டா!''
''நான் சொல்லல? விட்டுத்தள்ளுங்க பாஸ். தொழிலைக் கவனிங்க... நான் வர்றேன்!''
அவன் போய்விட்டான். அதன் பின் இரவுகளில் எலியும் வருவதில்லை. போனும் வருவது இல்லை. தூக்கமும் வருவதுஇல்லை.
ஓரிரு மாதங்களுக்குப் பின், ஒரு நாள் இரவு ராமச்சந்திரனின் போன் ஒலித்தது. புது நம்பர்.
''ஹலோ!''
''ராம், நான் ஐஸ்வர்யா பேசறேன். நல்லவேளை நீ நம்பரை மாத்தலை!''
இவன் குழப்பத்துடன் என்ன விஷயம் என்று கேட்டான்.
''மேரேஜ் நடக்கலை. பிரேக் ஆயிருச்சு. அவங்க ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்றாங்கப்பா. எங்க வசதிக்கு அந்த அளவுக்குச் செய்ய முடியாதுனு அம்மா சொல்லிட்டாங்க. அதுக்கு அவங்க அவ்ளோ திமிரா பேசறாங்க தெரியுமா? எவ்ளோ பணம் இருந்து என்ன செய்ய ராம்? குணம் வேணும்ல? அந்த ராஸ்கல் அவ்ளோ சீப்பா இருக்கான். அவனோட கம்ப்பேர் பண்ணும்போது நீ எவ்ளோ தங்கமானவன் ராம்?''
காதில் வந்து விழும் வார்த்தைகளில் குழம்பியவாறு பால்கனியிலிருந்து கீழே பார்த்தான் ராம். ஒரு எலி பைப் லைனின் வழியே ஏற முயன்றுகொண்டிருந்தது!


நன்றி - விக்டன் 

3 comments:

ராகவ் said...

Thanks for sharing this, after many tweeted and facebooked abt this short story, I searched but could not buy Vikatan.. but read it now :)

Kathiravan Rathinavel said...

இதுக்குதான் சி.பி வேணுங்கறது, நமக்கு என்ன தேவையோ, எதை தேடிட்டு இருக்கமோ அதை சரியா போட்டு பின்றார்

kavitha said...

nice one...thanks for sharing!