Thursday, December 20, 2012

தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?'' - வைரமுத்து சாட்டையடி பேட்டி

http://timesofindia.indiatimes.com/photo/14210217.cms 

விகடன் மேடை - வைரமுத்து

மீரா முகம்மது, தோப்புத்துறை.


''தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?''


''உங்கள் கேள்வி என் மனதுக்குள் சின்னதொரு தீக்குச்சி கிழித்தது; சிந்திக்கவைத்தது. நல்ல பதிலுக்குக் கொஞ்சம் உழைக்க வேண்டி இருந்தது.
நானறிந்த புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டு மக்கள்தொகை 7 கோடியே 21 லட்சம் மற்றும் சொச்சம். இந்த 7 கோடிக்குச் சற்றொப்ப மக்கள்தொகை கொண்ட வளர்ந்த நாடுகளில் வரவு விகடன் மேடை - வைரமுத்து

செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு இந்திய மதிப்பில் எவ்வளவு என்று ஆராய்ந்தேன்.
6.8 கோடி மக்கள்தொகை கொண்ட இத்தாலி அரசு ஆண்டுக்கு 60 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுகிறது.


6.53 கோடி மக்கள்தொகை கொண்ட பிரான்ஸ் 83 லட்சத்து 64 ஆயிரம் கோடி செலவிடுகிறது.

6.2 கோடி மக்கள்தொகை கொண்ட பிரிட்டன் 64 லட்சத்து 73 ஆயிரம் கோடி செலவிடுகிறது.


6.18 கோடி மக்கள்தொகை கொண்ட ஜெர்மனி 86 லட்சத்து 53 ஆயிரம் கோடி செலவிடுகிறது.

ஆனால், 7.2 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டுக்கு அதிகபட்சமாக 98 ஆயிரத்து 213.85 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்யப்படுகிறது.


அவையெல்லாம் நாடுகள், நம்முடையது மாநிலம் என்றபோதிலும் மக்கள்தொகையில் சற்றொப்ப நிகர் என்பதனால், இந்த ஒப்பீடு தவிர்க்க முடியாததாகிறது.


எவ்வளவு செலவழிக்கிறோம் என்பதை விடவும் எவ்வளவு சென்று சேர்கிறது என்பதும் கருதத்தக்கது. இன்னும் நாம் பாதைகளை முழுக்கக் கட்டமைக்க வேண்டும்; பயணம் நெடுந்தூரம்!''


சி.வந்தனா, குமுளி.


''அண்மையில் நீங்கள் படித்ததில் அதிரச் செய்தது?''


''அது ஒரு துணுக்கு.

ஒரு குடும்பமே தற்கொலைக்குத் தயாரா கிறது. வாழ்வில்தான் தோற்றுப்போனோம். தற்கொலையிலும் தோற்றுவிடக் கூடாது என்று முடிவெடுக்கும் தந்தை, சாவுக்கான வழிகளைத் தேர்ந்தெடுக்கிறார்.


தூக்கில் தொங்கலாம்; ஒருவேளை கயிறு அறுந்துவிட்டால்..? விஷம் அருந்தலாம்; ஒருவேளை அது கலப்படமாயிருந்தால்..? கிணற்றில் குதிக் கலாம்; ஒருவேளை நீர்மட்டம் குறைவாயிருந் தால்..? தீயிட்டுக்கொள்ளலாம்; பாதியில் அணைந்துபோனால்..?


தகப்பன் குழம்பிக்கொண்டிருக்கும்போது, கடைசிக் குழந்தை ஒரு கேள்வி கேட்கிறது:

''அப்பா! சாவதற்கே இத்தனை வழிகள் இருக்கும்போது, பிழைப்பதற்கு ஒரு வழி இல்லையா?''


உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி அது!''


எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்.


''சென்னை வாழ்க்கையில் உங்களால் மறக்க முடியாத சம்பவங்கள்?''


''நான் காதலித்த மனிதர்களின் கடைசித் தருணங்கள்.


ஒரு குழந்தை நிலாவைப் பார்த்துக் கை நீட்டுவதுபோல, என் பள்ளி நாட்களில் இருந்து யாரையெல்லாம் பார்க்கத் துடித்துப் பரவசப் பட்டேனோ, அந்த மகா கலைஞர்களின் இறுதி அஞ்சலியை இறுதி வரை இருந்து செலுத்திய நிகழ்வுகள்தாம் மறக்க முடியாத சம்பவங்கள்.


கண்ணம்மாப் பேட்டை.


எரிமேடையில் கிடத்தப்பட்ட உடல் எருக் களால் மூடப்படுகிறது. கொள்ளியிட்ட பிறகு, எல்லோரும் போய்விட்டார்கள். தங்க உடல் தின்னத் தாவுகிறது தீ. நானும் நண்பன் அறிவுமதியும் மட்டும் இடுகாட்டில் எஞ்சி நிற்கிறோம். நான் ஓடிப்போய் சிதையில் விழுந்து எருவைத் தள்ளி மீண்டும் முகம் பார்க்க முனைகிறேன். கை பிடித்து இழுத்த நண்பனோடு எரியும் வரை இருந்து கண்ணீரோடு விடைபெறுகிறேன். அது என் காதல் கவிஞன் கண்ணதாசனுக்கு நான் செலுத்திய அஞ்சலி.


மெரினா கடற்கரை.


தங்கத்தைப் பூட்டிக்கொண்டு குழிக்குள் இறங்கு கிறது சந்தனப் பேழை. அரசியல், கலை உலக மனிதர் கள் சுற்றி நிற்கிறார்கள். ஓரத்தில் கவலை கட்டிய கண்களோடு நின்ற என்னை, 'வைரமுத்து வா; நீயும் மண்ணுத் தள்ளு’ என்று கை நீட்டி அழைக்கிறார் அந்நாள் அமைச்சர் க.ராசாராம். குனிந்து புறங்கையில் மணல் தள்ளுகிறேன். சந்தனப் பேழை மேல் சரசரவென்று சரிகிறது மணல். நினைத்துக்கூடப் பார்க்கவில்லை எம்.ஜி.ஆருக்கு நான் மண் தள்ளுவேனென்று.


பெசன்ட் நகர் மயானம்.


மின் மயான மேடையருகே பிரபு - சத்யராஜ் - நான் மூவர் மட்டும். பட்டு வேட்டியில் சுற்றப்பட்டிருக்கிறது புவியாண்ட கலைஞனின் பூத உடல். விசைப்பலகையில் தூக்கிவைக்கிறோம். கடைசியாக முகம் பார்த்துக் கண் மூடிக்கொள்கிறோம். செத்தும் சாகாத ஒரு ஜீவசரித்திரத்தை அடுப்புக்குள் விசிறியடிக்கிறது விசைப்பலகை. நடிகர் திலகம் சிவாஜியின் கடைசிக் கணங்களில் கனத்த மனத்தோடு நான்.


அந்த மூன்று மகா கலைஞர்களுக்கும் பிள்ளைக்கடன் செய்தது எனக்கு வரமா? வலியா?


நினைக்கும்போது எல்லாம் வலித்து வலித்து அடங்குகிறது இற்றுப்போன இருதயம்!''


ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதூர்.


''இலக்கியத்தில் நகைச்சுவை உண்டா?''


''உண்டு. ஒன்று சொல்கிறேன்.


சங்க இலக்கியத்துக்கு எழுத்தெண்ணி உரையெழுதியவர் அவ்வை துரைசாமிப் பிள்ளை. 'உரைவேந்தர்’ என்று ஓங்கு புகழ் பெற்றவர். ஒரே இடத்தில் உட் கார்ந்து எழுதி எழுதி அவருக்கு மூல நோய் கண்டுவிட்டது. அந்தத் துயரத்தை அவர் மைந்தர் அவ்வை நடராசன் எனக்கு நயமாகச் சொன்னார்:


'என்ன பண்றது கவிஞர்? 'உரை’ எழுதியே எங்க அப்பாவுக்கு 'மூலம்’ வந்துட்டது’.


நினைக்கும்போது எல்லாம் என்னைக் குலுக்கும் நகைச்சுவை இது!''


கி.ராமகிருஷ்ணன், சென்னை-24 


''உண்மையில் யார் உயர்ந்த மனிதன்?''


''ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மூன்று மனிதர்கள் இருக்கிறார்கள்.

சமூக மனிதன்; குடும்ப மனிதன்; தனி மனிதன்.

இதில் சமூக மனிதன் என்பவன் மகா நடிகன்; நடித்து வெல்பவன்.

குடும்ப மனிதன் என்பவன் பாதி நடிகன்; நடித்துத் தோற்கிறவன்.

தனி மனிதன் என்பவன்தான் மெய்ம் மனிதன். ஒப்பனை இல்லாமல் அவன் அவனாகவே இருப்பவன்.

மூன்று பேருக்கும் மதிப்பெண் இட்டுப் பார்க்க வேண்டும். சமூக மனிதனையும் குடும்ப மனிதனையும்விட ஒரு மதிப்பெண் அதிகம் பெறுகிற தனி மனிதன் எவனோ அவனே உயர்ந்த மனிதன்!''


ரஜினி முருகன், வேலூர்.



''உங்களை மன்றாடிக் கேட்கிறேன்... 'கோச்சடையான்’ பாடல்களில் சில வரிகளாவது சொல்லுங்களேன்?''


''உங்கள் கேள்வியை ரஜினியின் செவி களுக்குக் கொண்டுசென்று அவர் சம்மதத்தோடு வெளியிடுகிறேன்.


ஊடகத்தில் வெளியிடப்படும் 'கோச்சடை யானின்’ முதல் பாடல் இதுதான்.
சிறை பிடிக்கப்பட்டிருக்கிறார் தளபதி இளைய ரஜினி. அழுது பாடுகிறாள் அவர் காதலியான இளவரசி தீபிகா படுகோனே. சரித்திரக் கதை ஆதலால், சங்கத் தமிழில் நடக்கிறது பாட்டு:



தீபிகா:  செந்தீ விழுந்த
செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின்
முட்டையாய்...
இதயம்                                                       
உடலில் இருந்து விழுந்து
உருண்டு புரண்டு போகுதே
 நல்ல மரத்தின் நறுங்கிளை யிழிந்து 
வெள்ளச் சுழியில் விழுந்து மலராய்...
 இதயம் 
கரைகள் மறந்து
திசைகள் தொலைந்து அலைந்து போகுதே
 சிறுகோட்டுப் பெரும்பழம்   
தூங்கி யாங்கு 
என் உயிரோ சிறிதே 
காதலோ பெரிதே



 ரஜினி: பூப்பது மறந்தன கொடிகள் 
புன்னகை மறந்தது மின்னல்
காய்ப்பது மறந்தது காடு
காவியம் மறந்தது ஏடு
யானோ நின்னை மறக்கிலேன்
செந்தமிழ் பிரியும் சங்கம்
செங்கடல் பிரியும் அலைகள்
ஒலியைப் பிரியும் காற்று 
உளியைப் பிரியும் சிற்பம்
யானோ நின்னைப் பிரிகிலேன்
 வாய் மொட்டுடைந்தால் பூவாசம்
வாசத்துக்கேது சிறைவாசம்?
அப்பப்பா!



இசையோடு கேட்கையில் உயிர் உருகி ஓடுகிறது தரையில்!''



ச.அ.அலெக்சாண்டர், வரதராஜன்பேட்டை.


''திரையுலகில் நீங்கள் சந்திக்க விரும்பும் நபர் யார்?''



''தேடிக்கொண்டேயிருக்கிறேன் - 'சின்ன சின்ன’ ஆசை பாடிய மின்மினியை!
சூரியனைப் பனிக்கட்டியாக்கிய பாட்டுக்காரி; இந்தியாவைச் சுழற்றியடித்த பாட்டுக்குச் சொந்தக்காரி.


என்ன ஆனார்? எங்கிருக்கிறார்? இதுவரைக் கும் தகவல் இல்லை.


'அன்புள்ள மின்மினி!


உன் தங்கக் குரலால்தான் என் தமிழ் கேட்டது உலகம். உனக்கு நான் ஒன்றுமே செய்யவில்லை. என் இனிய அன்பளிப்பாக என் சேமிப்பில் இருந்து ஒரு லட்ச ரூபாய் உனக்கு ஒதுக்கிவைத்திருக்கிறேன். குடும்பத்தோடு வந்து பெற்றுக்கொண்டு என்னைப் பெருமைப்படுத்து சகோதரி!''


நிறைவு செய்கிறேன்;

நன்றி.






டிஸ்கி -1.இலங்கை யில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்? - வைரமுத்து பேட்டிhttp://www.adrasaka.com/2012/12/blog-post_4667.html


2. நான் ஓர் எழுத்து வியாபாரி - வைரமுத்து பேட்டி @ விகடன்

part 2  http://www.adrasaka.com/2012/11/blog-post_2188.html3. 

3. என்னை யார் தாக்கினாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கனும் - வைரமுத்து நக்கல் பேட்டி http://www.adrasaka.com/2012/12/blog-post_13.html

 

4 பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி அமைவது விஷப்பரீட்சை - வைரமுத்து பேட்டி  


http://www.adrasaka.com/2012/11/blog-post_15.html

 


0 comments: