Saturday, December 29, 2012

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே!’ - பாடல் உருவான விதம் - டி எம் எஸ் பேட்டி

,
மீட்டருக்கு மேட்டர் - 7

டேய் விசு... எனக்கொரு ஆசைடா!

எம்.எஸ்.விஸ்வநாதன்

ஒரு சினிமா பாடலாசிரியராக கண்ணதாசன் எந்த அளவுக்குச் சிறந்து விளங்கினாரோ, அதே அளவுக்கு அவர் ஆன்மிகத் துறையிலும் முத்திரை பதித்தார். தமிழ்மொழி உள்ளவரை கண்ணதாசன் எழுதியஅர்த்தமுள்ள இந்து மதம்அவரது பெயரை பறைசாற்றிக் கொண்டிருக்கும். அவர் எழுதிய பக்திப் பாடல்களில் மிகவும் சிறப்பாகச் சொல்ல வேண்டியது அவர் படைத்தகிருஷ்ண கானம்பாடல்கள். கவிஞரைக் கிருஷ்ணர் மீது பத்து பக்திப் பாடல்கள் எழுதவைத்து, அவற்றுக்கு நான் இசையமைக்க ஒரு கேசட் வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.


 கண்ணன் மீது அபாரமான பக்தியும், காதலும் கொண்டிருந்தவர் கண்ணதாசன் என்பதை நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. கண்ணதாசன் உணர்வுகளை அந்தக் கண்ணன்தான் ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்தான். அது அவருக்கு ஒரு புது உற்சாகத்தையும், சக்தியையும் அளித்தது.

பாடல் எழுதி, மெட்டுப் போடுவதற்கு நாள் குறிக்கப்பட்டது. அன்று காலை ஒன்பது மணியளவில் நாங்கள் இருவரும்கிருஷ்ணகானம்கேசட் வேலையை ஆரம்பித்தோம். ஒன்பது மணிக்கு ஆரம்பித்து, பிற்பகல் இரண்டு மணியளவில் நாலு பாடல்கள் ரெடியாகிவிட்டன. ‘விசு! கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு, மறுபடி ஆரம்பிக்கலாமா?’ என்று கேட்டார் கண்ணதாசன். சாப்பிட்டு விட்டு, கொஞ்சம் ஓய்வுக்குப் பின் மறுபடியும் நாங்கள் உட்கார்ந்தபோது மாலை ஐந்து மணி



 மடமடவென்று பாடல்களை எழுதித் தள்ளிக் கொண்டு இருந்தார். நான் அவற்றுக்கு மெட்டுப் போட்டுக் கொண்டே இருந்தேன். இரவு பத்து மணியான போது மீதி ஆறு பாட்டுகளும் தயார். ஆக, அன்று ஒரே நாளில் பத்து மணி நேரம் உட்கார்ந்து அவர் எழுதிக் கொடுத்த பத்துப் பாட்டுக்களுக்கும் நான் இசையமைத்துக் கொடுத்தேன். அப்படி ஒரு குறுகிய கால அவகாசத்தில் உருவாகி, அந்த அளவுக்குப் பிரபலமான பக்திப் பாட்டு கேசட் வேறு ஏதாவது இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. அதில் இடம்பெற்ற பத்துப் பாடல்களில் மிக மிகப் பிரபலமானது எது தெரியுமா? ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே!’
கிருஷ்ணகானம்கேசட்டில் கவிஞர் எழுதிக் கொடுத்த பாட்டுக்களுக்கு நான் போட்ட டியூன்களைப் பார்த்து வியந்து போய், என்னை அப்படிப் பாராட்டினார் கவிஞர். அந்தக் கேசட், கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்த ஒரு கேசட்டாக இருந்தது. ஒரு கட்டத்தில், இரவு படுத்தவுடன், அந்தக் கேசட்டை அவர் ஓடவிட்டுவிட்டு, அதைக் கேட்ட பிறகுதான் தூங்குவது என்பது அவருக்கு வழக்கமாகிப் போனது.
ஒருநாள் இரவு பதினொரு மணி இருக்கும். என் வீட்டில் போன் மணியடிக்க, ‘இந்த நேரத்தில் யாரிடமிருந்து போன்?’ என்று யோசித்துக்கொண்டே, போனை எடுத்தால் மறுமுனையில் கவிஞர். ‘என்ன கவிஞரே! இந்த நேரத்தில் போன் செய்யறீங்க?’ என்று கொஞ்சம் பதற்றத்தோடு கேட்டால், ‘டே! ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே!’ கேசட்டைக் கேட்டுக்கிட்டு இருக்கேன்! என்னமா மியூசிக் போட்டிருக்கே!’ என்று நெகிழ்ச்சியோடு பாராட்டினார்.  



இதுபோல, படுத்துக்கொண்டு, ‘கிருஷ்ண கானம்கேசட்டைக் கேட்டுவிட்டு, ராத்திரி என்றும் பார்க்காமல் எனக்கு போன் செய்து சிலாகித்துப் பேசிய நாட்கள் பல. கண்ணதாசன் மறைந்த பிறகும் கூட, சில நாட்களில் இரவில் வெகு நேரம் கழித்து என் வீட்டில் போன் மணி அடித்தால், நான் கண்ணதாசன் நினைவுகளில் மூழ்கிப் போய்விடுவேன். என் கண்களில் என்னையும் அறியாமல் கண்ணீர் உருண்டோடும்.

ஒருநாள்டே விசு! எனக்கு ஒரு ஆசைடா! நீ அதை நிறைவேத்தி வைப்பியா?’ என்று கேட்டு சஸ்பென்ஸ் வைத்தார் கவிஞர். ‘சொல்லுங்க கவிஞரே! நீங்க எது சொன்னாலும் அதை நான் தட்டாமல் நிறைவேத்தி வைக்கிறேன்! அதைவிட எனக்கு சந்தோஷமான விஷயம் வேறு என்ன இருக்கு?’ என்றேன். ஒரு குழந்தையைப் போல, ‘நீ எப்போ மேடையிலே கச்சேரி பண்ணினாலும், ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே!’ பாட்டை முதல் பாட்டாக பாடணும்என்றார்




 என் ஆருயிர் நண்பருக்கு அன்றைக்குக் கொடுத்த வாக்கை, நான் இன்றளவும் நிறைவேற்றி வைத்துக் கொண்டிருக்கிறேன். எனது மேடைக் கச்சேரிகளில் அந்தப் பாட்டைத் தான் முதல் பாட்டாக, இறைவணக்கமாகப் பாடி வருகிறேன். அப்படிப் பாடுகிறபோது, அவருக்கு அளிக்கும் ஒரு மரியாதையாக, ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே..! அந்தக் கண்ணதாசன் புகழ் பாடுங்களேன்!’ என்று பாடி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு முடிப்பேன்.


கவிஞர் என்னை எப்போதும் அன்போடும், உரிமையோடும் வாடா... போடா என்றுதான் கூப்பிடுவார். அதை நான் எப்போதுமே அவமரியாதையாக எடுத்துக் கொண்டதில்லை. ஆனால், பாட்டுகள் எழுதுகிறபோது, சற்று மரியாதை குறைவான வார்த்தைகளை கவிஞர் போட்டுவிட்டால், ‘இந்த வார்த்தை வேணாமே! இதற்கு பதிலாக ஒரு மரியாதையான ஒரு வார்த்தையைப் போட்டுவிடலாமே!’ என்று கேட்பேன்.




 சில சமயங்களில் என் பேச்சைக் கேட்டு வார்த்தைகளை மாற்றிக் கொடுத்திருக்கிறார். ஆனால், பல சமயங்களில் என் வேண்டுகோளை அவர் நிராகரித்துவிடுவார். ‘போனால் போகட்டும் போடா’, ‘சட்டி சுட்டதடா... கை விட்டதடா...’, ‘யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க...’ போன்ற பாட்டுக்களை எல்லாம் அவர் எழுதினபோது நான் இப்படிச் சொல்லி இருக்கிறேன். ஆனால், அவர்இதுதான் சரியா இருக்கு! இருந்து விட்டுப் போகட்டும்!’ என்று சொன்னதுண்டு. ஒரு தடவை, ‘டே விசு! நீ ரொம்ப சாது! விஜயவாடாங்கற பேரைக் கூட நீ விஜய வாங்கன்னு ரொம்ப மரியாதையாத்தான் சொல்லுவே!’ என்று என்னை அவர் கிண்டல் செய்ததும் உண்டு.

திருட்டு ரயில்!

விஸ்வநாதன் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு நாள் கழைக்கூத்தாடிக் குடும்பம் ஒன்று முகாமிட்டது. அவர்கள் பலவிதமான வாத்தியங்களை வாசித்து, கும்பல் திரட்டி, கயிற்றின் மேல் நடப்பது போன்ற சாகஸங்களைச் செய்து காட்டினார்கள். இசை ஆர்வம் கொண்ட விஸ்வநாதனுக்கு, அவர்கள் காட்டிய சர்க்கஸ் வேலைகளை விட, அவர்கள் வாசித்த இசைக் கருவிகள் மீதுதான் ஆர்வம் அதிகமாக இருந்தது. ‘நான் வாசிக்கிறேன்என்று சொல்லி அதை வாங்கி அபாரமாக வாசிக்க, அவர்கள் எல்லோரும் அசந்து போனார்கள்





 இதைப் பார்த்துவிட்டு, விஸ்வநாதனின் நண்பன் கருணாகரன், தானும் வாசிக்கிறேன் என்று சொல்லி, தாறுமாறாக அடிக்க, அந்த வாத்தியத்தில் இருந்த தோல் கிழிந்துவிட்டது. பழியை விஸ்வநாதன் மீது போட்டுவிட்டு, நண்பன் நழுவிவிட, கழைக்கூத்தாடிகளின் தலைவன் நேராக விஸ்வநாதனின் தாத்தாவிடம் வந்து, பேரனைப் பற்றி குற்றப் பத்திரிகை வாசித்தார். கண்டிப்பு மிகுந்த தாத்தா, விஸ்வநாதனின் அம்மாவிடம் சொல்ல, அவர் கடுமையாகக் கோபம் கொண்டு, கையில் கிடைத்த உலக்கையாலேயே மகனை பெண்டு நிமிர்த்தி விட்டார். ‘ஐயோ! அடிக்காதே! நான் அந்த வாத்தியத்தின் தோலைக் கிழிக்கவில்லை!’ என்ற விஸ்வநாதனின் வார்த்தைகள் அம்மாவின் காதில் ஏறவில்லை. செமத்தியான அடி! விஸ்வநாதனின் உடம்பும், மனசும் ரணமாகிவிட்டது.

அந்தக் கணமே விஸ்வநாதன், ‘இனி நமக்கு இந்த இடம் சரிப்பட்டுவராது; ஊரை விட்டு வேறு எங்கேயாவது ஓடிவிட வேண்டியதுதான்என்று தீர்மானித்தான். எங்கே போவது? நமக்கோ நடிக்க வருகிறது; டிராமாவில் நடித்ததை எல்லோரும் பாராட்டினார்கள். அப்போது ஒருத்தர் சொன்னஇந்தப் பையனுக்குத் திறமை இருக்கு; சினிமாவுக்குப் போனால், நன்றாகப் பிரகாசிப்பான்!’ என்ற வார்த்தைகள் அவன் காதில் ரீங்காரமிட்டன. திருப்பூரில் இருக்கும் மாமா வீட்டுக்குப் போய்விட்டால் என்ன




 அவர் மூலமாக, திருப்பூரில் இருந்த ஜூபிடர் நிறுவனத்தில் சேர்ந்து சினிமாவில் நடிக்க முயற்சித்தால் என்ன? என்ற எண்ணம் தோன்றியது. விஸ்வநாதன், திருப்பூருக்குத் திருட்டு ரயில் ஏறினான். எதிர்பார்த்த மாதிரியே மாமா தமக்குத் தெரிந்தவர்கள் மூலம் விஸ்வநாதனை ஜூபிடரில் அறிமுகம் செய்து வைத்தார். ஜூபிடர் முதலாளி சோமசுந்தரம் தமது காரிலேயே விஸ்வநாதனை சென்னைக்கு அழைத்துக் கொண்டு வந்தார். அப்போது ஜூபிடரில் பி.யு.சின்னப்பா, கண்ணாம்பா நடித்தகண்ணகிபடம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் படத்தில் விஸ்வநாதனுக்குஆஹா!’ என்ற ஒரே ஒரு வார்த்தை வசனம் பேசுகிற சிறிய வேடத்தில்தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது



thanx - kalki

1 comments:

R. Jagannathan said...

Where is TMS's interview? We know he sang the song, but the interview is by MSV.(Note that MSV has not mentioned TMS's name at all in this interview!) - R. J.