ஏன் இந்தச் சந்திப்பு?
ருக்மணி ஜெயராமன்
ஸ்ரீஜா தம் இருக்கையிலிருந்தபடி ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். வெவ்வேறு காரணங்களுக்காக இந்த பஸ்ஸில் பயணம் செய்யும் எல்லோரும் நாளை காலை வரை ஒன்றாக இருப்போம். விடிந்ததும் எல்லோரும் பிரிந்து, வெவ்வேறு பாதையில் சென்று விடுவோம். நம்மில் பலர் இனி ஒருவரை ஒருவர் சந்திக்கவே மாட்டோம். அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் எதற்காக ஒருவரை ஒருவர் சந்திக்கிறோம்?
‘பிறகு ஏன் ஒருவருக்கொருவர் சம்பந்தமே இல்லாதது போல் வெவ்வேறு பாதையில் பிரிகிறோம்?’ என்ற கேள்வி ஏனோ புதிதாய் அவள் புத்தியில் தோன்றி அதுவே மீண்டும் மீண்டும் ரிப்ளே ஆனது.
‘எக்ஸ்க்யூஸ் மீ!’- என்ற குரலால் தன்னை மறந்து மூழ்கியிருந்த ஸ்ரீஜாவைத் தட்டி எழுப்பிய இளைஞனுக்கு சுமார் 25 வயது இருக்கலாம். சிவப்பாக, நல்ல உயரமாக இருந்த அவனுக்கு கறுப்பு ஃப்ரேம் போட்ட கண்ணாடி மிகவும் பொருத்தமாக இருந்தது. விலை உயர்ந்த ப்ராண்டட் ஷர்ட், பான்ட்டுடன் நின்ற அவனிடம் பண வாசனை தெரிந்தது.
நிமிர்ந்து பார்த்த ஸ்ரீஜாவிடம் அவன், மேடம் நீங்கள் என்னுடைய சீட்டீல் உட்கார்ந்திருக்கிறீர்கள்!" நீட்டிய அவன் கையில் விசிறி போன்று டிக்கெட் ஆடியது. உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் நாம் சீட்டை மாற்றிக் கொள்ளலாமே! வெளியில் பார்த்துக் கொண்டு வருவது எனக்கு மிகவும் பிடித்த விஷயம்," சிரித்துக் கொண்டே சொன்னாள் ஸ்ரீஜா.
தோளைக் குலுக்கிக் கொண்டே ‘ஓகே’ சொன்ன அவன், இந்த இருட்டில் வெளியில் என்ன பார்க்க முடியும்?" மறுபடி தோளைக் குலுக்கியபடி அவளது பக்கத்து சீட்டில் அமர்ந்தான்.
ஸ்ரீஜா திரும்பி ஜன்னல் வழியே வெளியில் பார்க்கத் தொடங்கினாள். சற்று நேரத்தில் முழுதும் நிரம்பிய அந்தஸ்துடன் உயிர் பெற்றெழுந்த பஸ் உறுமிக் கொண்டு நகரத் தயாரானது. சில்லறை வெளிச்சங்கள் பின்தங்கி மறைய, மரங்கள் உடன் ஓடிவர, உயர்ந்த கட்டடங்களில் வண்ண நியான் விளக்குகள், சிக்னல் வெளிச்சங்கள், ஃப்ளை ஓவர்கள், விதவிதமான கார்கள், பயமுறுத்தும் லாரிகள்...பிறகு இருட்டு... தொடர்ந்து திடீரென முளைக்கும் சிறுசிறு குடிசைகள், மங்கலான வெளிச்சங்கள்!- எல்லாவற்றையும் தாண்டி பஸ் ஓடிக் கொண்டிருந்தது.
பெங்களூர் போகிறீர்களா?"
திரும்பி அவனைப் பார்த்து, ஆமாம்" என்று சொல்லித் தலையாட்டினாள்.
நானும் பெங்களூர் தான் போகிறேன்"- இது அவன்.
தொடர்ந்து அவனுடன் பேசவேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் என்ன பேசுவது என்று புரியவில்லை.
நீங்கள் சென்னையில் இருக்கிறீர்களா?" - அவள் கேட்டாள்.
இல்லை... ஒரு பர்சனல் வேலை நிமித்தம் சென்னை வந்திருக்கிறேன்...நீங்க?"
நான் சென்னையிலே தி.நகரிலே தான் கல்யாணம் ஆனதிலிருந்து கடந்த பத்து வருஷங்களாக இருக்கேன். எங்க அம்மா பெங்களூரில் இருக்காங்க. குடும்பத்திலே ஒரு விசேஷம். அதற்காக எல்லோரும் கோலார் போகிறோம்."
உங்களுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா? அதுவும் 10 வருடங்கள் முன்பா?" அவன் முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது ஆச்சர்யம்.
ஆமாம். எனக்கு 8 வயதில் ஒரு பெண்ணும் 5 வயதில் ஒரு பையனும் இருக்கிறார்கள்."
நம்பவே முடியவில்லை. பார்ப்பதற்கு மிக இளமையாக இருக்கிறீர்கள்! உங்களுக்கு வயது ஆனதே தெரியவில்லை."
உண்மை என்னவென்றால் எனக்கு வயதே ஆகவில்லை. கல்யாணத்தின் போது என் வயது என்ன தெரியுமா? 19. இப்போது 28."
என் வயது 26" கேட்காமலே சொல்லிட்டு மெலிதாகச் சிரித்தான்.
பேச்சின் போக்கைத் திருப்ப நினைத்த அவள், நீங்கள் பெங்களூரில் என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டாள். தன் வயது பற்றிய பேச்சை அவள் தவிர்ப்பாள். ஏனெனில் அது அவளை உணர்ச்சிவசப்பட வைக்கும் ஒரு விஷயம். அப்பா இறந்த உடன் தன் பொறுப்புக்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி முடித்துவிட வேண்டும் என்ற தீர்மானத்துடன் ஸ்ரீஜாவின் அம்மா, அவள் கல்யாணத்தை 19 வயது கூட நிரம்பாத நிலையில் முடித்து விட்டாள். அந்தச் சமயத்தில் ஸ்ரீஜாவின் கண்களில் தான் விதவிதமான எத்தனை கனவுகள்! மேலே படிக்க வேண்டும்; நிறைய இடங்களைப் பார்க்க வேண்டும்; உலகைச் சுற்றிவர வேண்டும். எல்லாம் முடிந்த பிறகு தன் கனவில் வரும் கெட்டிக்காரக் கதாநாயகனின் அன்புப் பிடியில் தன்னை மறக்க வேண்டும்.
ஆனால் அவளுக்கு அம்மா கல்யாணம் செய்து அந்தக் கூட்டுக் குடும்பத்தில் தள்ளி விட்ட வினாடியே அவள் கண்களில் ஒளிர்ந்த ஒவ்வொரு கனவும் நீர்க்குமிழியாக மாறி வெடித்துச் சிதறுவது அவளுக்கு நன்றாகவே தெரிந்தது. அவள் புகுந்த வீட்டு விதிப்படி கடந்த 10 வருடங்களாய் பாத்திரம் தேய்த்து, துணி துவைத்து, சமைத்து, சோறு போட்டு, பிள்ளைகளைச் சுமந்து,பெற்றுக் கொடுத்து விட்டு ம்ம்ம்...
அவள் கணவன் வினோத் நல்லவன் தான். வெறும் நல்லவன், அவ்வளவு தான். தன் கடமைகளைச் செய்வான். பொறுப்புக்களை நிறைவேற்றுவான். ஆபீஸ் பார்ட்டிகளுக்கு அழைத்துப் போவான்... அத்துடன் சரி.
அவள் எதிர்பார்த்து ஏங்கிய அன்பை அவனால் கொடுக்க முடியாது. அவனால் அவளுக்கு நண்பன் ஆக முடியாது. அவனிடம் எந்த விஷயத்தையும் மனம் திறந்து பேச முடியாது. பொறுமையுடன் கேட்க மாட்டான். உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளவே மாட்டான். மனத்தைப் பாரமாக அழுத்தும் இக்குறைகளை அவள் யாரிடம் பகிர்ந்து கொள்ள முடியும்? ஸ்ரீஜாவின் நிலையைப் புரிந்துகொண்டு, அவளுக்கு ஆதரவாக 2 வார்த்தைகள் சொல்லக்கூடிய நண்பர்களும் யாரும் கிடையாது.
குடும்பத்து பிஸினஸ்தான் நான் செய்வதும்... அது ஒரு சிறுதொழில் ஃபாக்டரி." சற்றுமுன் ஸ்ரீஜா கேட்ட கேள்விக்கு அவன் பதில் கூறினான்.
உங்கள் படிப்புப் பின்னணி என்ன?"
என்னிடம் பெயருக்கு ஒரு இஞ்சினீயரிங் டிகிரி இருக்கிறது. நான் படித்த படிப்பு எதுவாக இருந்தாலும், டாக்டருக்குப் படித்து, இந்தியாவிலே முதல் மதிப்பெண்ணுடன் பாஸ் பண்ணியிருந்தால் கூட, அந்த சர்டிபி கேட்களைத் தள்ளி வைத்து விட்டு, அப்பா என்னை ஃபாக்டரியில் தான் உட்கார்த்தியிருப்பார்," சிரித்துக் கொண்டே அவன் கூறிய போதிலும் அதில் ஒரு சிறு சோகம் எட்டிப் பார்த்தது.
எனக்கு நன்றாகவே புரிகிறது," என்று கூறிய அவள் தொடர்ந்தாள், பெற்றோர் தங்களுடைய எதிர்பார்ப்புச் சுமைகளை நம்மேல் ஏற்றி, நம்மை அவர்களது நிழலாக்கப் பார்க்கிறார்கள். குழந்தையின் விருப்பம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமே காட்டாமல் உனக்கு எது நல்லது என்பது எனக்குத் தெரியும் என்று சொல்லி வாய்ப் பூட்டு போட்டு விடுகிறார்கள் . It is never child
directed... always parent driven!"
நீங்களும் அப்படித் தான் நினைக்கிறீர்களா?" அவள் பக்கமாக முழுதும் திரும்பிய அவன் கேட்டான்.
நினைப்பது என்ன? அனுபவப் பட்டிருக்கிறேனே. உங்களுக்கு என்ன தோன்றுகிறது? 19வது வயதிலேயே படிப்பை நிறுத்திவிட்டு, கல்யாணம் பண்ணிக் கொள்ள ஆசைப்பட்டிருப்பேன் என்று தோன்றுகிறதா? அதுவும் என்னை விடப் பன்னிரெண்டு வயது மூத்தவரை?" அடக்கி வைத்துள்ள உணர்ச்சிகள் அவளையும் மீறி வெளிவருவது அவளுக்குத் தெரிந்தது.
அவன் பேசாமல் வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ‘நம் மனத்தின் ஆழத்தில் தேங்கியிருக்கும் சோகங்களும், அடக்கிவைத்துள்ள இருள் சூழ்ந்த ரகசியங்களும் எப்போது வெளிப்படுகின்றன? இதுவரை நாம் பார்த்திராத (அவருக்கும் நம்மைத் தெரியாத), பின்னால் சந்திக்கவும் வாய்ப்பில்லாத ஒருவரிடம்தான் நாம் மனம் விட்டுப் பகிர்ந்து கொள்வோம்!’- எங்கோ படித்தது ஸ்ரீஜாவுக்கு நினைவுக்கு வந்தது.
நானும் பல இக்கட்டான சூழ்நிலைகளைக் கடந்து வந்தவன் தான்," அவன் கூறினான்.
சொல்லுங்க," என்றாள் அவள்.
டிகிரி வாங்கிய பிறகு எனக்கு எம்.பி.ஏ படிக்கவேண்டும் என்ற ஆசை. யு.எஸ். போக ஒரு வாய்ப்பும் அப்போது கிடைத்தது. என் நிலைமையில் யார் இருந்திருந்தாலும் பயன்படுத்திக் கொண்டு, பிரகாசமான எதிர்காலத்துக்கு ஓர் அஸ்திவாரம் அமைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் என் அப்பா எந்த வாய்ப்பையும் எனக்கு அளிக்கவில்லை. கிடைத்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள விடவில்லை.
நான் எங்கும் போகாமல் ஃபாக்டரியில் உட்கார்ந்து, சம்பளப் பணத்தை எண்ணி எண்ணித் தொழிலாளர்களுக்குக் கொடுப்பதைப் பார்ப்பதில் தான் அவர் பெருமை... வறட்டு கௌரவம்!"
அவன் தொடர்ந்தான். இது மட்டுமல்ல..இன்னும் இருக்கிறது" சற்று நேரம் வெட்ட வெளியையே பார்த்துக் கொண்டிருந்த அவன் அவளை இப்போது நேராகப் பார்த்தான். நானும் என்னுடன் இஞ்சினீயரிங்க் பண்ணிய ஒரு பெண்ணும் நான்கு வருடங்களாக ஒருவரை ஒருவர் விரும்புகிறோம். அவள் இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது. அவளில்லாத வாழ்க்கையை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இதெல்லாம் தெரிந்தும் என் பெற்றோர் எனக்கு வேறு ஒரு இடத்தில் கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்கிறார்கள். எனக்கு எதில் விருப்பம் என்பதைவிட அவர்களது அந்தஸ்தும் ப்ரெஸ்டிஜும் தான் அவர்களுக்கு முக்கியமாக இருக்கிறது. நான் அவர் சொல்லும் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளாவிட்டால் தற்கொலை பண்ணிக் கொள்வேன் என்று அப்பா பயமுறுத்துகிறார்."
நீங்களும் அவரைப் போலவே ‘ப்ளாக் மெயில்’ செய்ய வேண்டியது தானே!
என் காதலியை விட்டு விட்டு வேறு ஒருத்திக்குத் தாலி கட்டு என்று நீங்கள் வற்புறுத்தினால் என் பிணத்தைத் தான் நீங்கள் பார்க்க வேண்டியிருக்கும் என்று பயமுறுத்த வேண்டியது தானே!"
அவரைப் பொறுத்தமட்டில் நான் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு அவர் அந்தஸ்துக்கு ஊறு விளைவிப்பதைவிட சாவதே வரவேற்கத்தக்கது."
அவள் பெருமூச்சு விட்டாள்.
பலமுறை பலவழிகளில் அவரை சமாதானம் செய்ய அணுகினேன். சாம, தான, பேத, தண்டம் - எதற்குமே அவர் அசைந்து கொடுக்கவில்லை. கடைசியில் என்ன சொன்னார் தெரியுமா? எங்களுக்காக அவளைத் திருமணம் செய்து கொள்... பிறகு உன் இஷ்டப்படி இரு. எனக்கு ஆட்சேபணை எதுவுமில்லை... இதற்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்குப் புரிகிறதா?"
அவளுக்குப் புரிந்தது. ஆனால் அவர் எப்படி அதுபோல் சொல்லலாம்?
பொறுப்புள்ள ஒரு அப்பா இப்படிச் சொல்வாரா, சொல்லத்தான் முடியுமா? இவர் உண்மையில் அப்பாதானா?" அதிர்ச்சியிலிருந்த ஸ்ரீஜா, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்கள் முடிவு என்ன?"- கேட்டாள்.
நானும் அதைத்தான் செய்யப் போகிறேன். அப்பா காட்டும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வேன். பிறகு என் காதலியிடம் சேர்ந்து விடுவேன். நான் செய்வது தவறான செயல்; இந்தப் பெண்ணுக்கு துரோகம் செய்கிறேன் என்று புரிகிறது. எனக்கு வேறு வழி எதுவுமே இல்லை. அப்பா என்னால் சாகக் கூடாது. காதலி இல்லாமல் என்னால் வாழமுடியாது. இந்த நிலையில் எனக்குத் தெரியும் ஒரே வழி இதுதான்."
ஸ்ரீஜா அதிர்ச்சியில் உறைந்துபோய் பேசாமல் உட்கார்ந்திருந்தாள்.
சாய்ந்த நிலையில் யோசித்துக் கொண்டிருந்த ஸ்ரீஜா சற்று நேரத்தில் தூங்கி விட்டாள்.
ஐந்து பேரும் அந்தக் காரில் நெருக்கிக் கொண்டு உட்காரவேண்டி இருந்ததற்குக் காரணம் அவர்களில் பலர் ஓவர் சைசில் இருந்தார்கள். ஸ்ரீஜா பின் சீட்டில் அவளது தாய்க்கு அருகில். அவளை ஒட்டி அவளது தங்கை; தங்கையின் 3 வயது நிரம்பிய பையன். முன் சீட்டில் டிரைவர் பக்கத்தில் அவள் தங்கையின் கணவர் உட்கார்ந்திருந்தார். நீளமும் அகலமுமாக இருந்த அவருக்கு ஒரு சீட் போதவில்லை. அவரது கால் அடிக்கடி டிரைவர் காலில் உராய்ந்து, டிரைவர் கியர் போட சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். பெங்களூரிலிருந்து காரில் கோலாருக்கு ஒருமணி நேரப் பயணம்.
காரிலிருந்து இறங்கிய ஸ்ரீஜாவை பவித்ரா சித்தி, கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றாள். பவித்ரா ஸ்ரீஜாவின் சித்தி.... வலது பக்க அறையிலிருந்து ஒரே சிரிப்பு சத்தம்.
சித்தி பெண் ரம்யாவின் கல்யாணத்துக்கு இன்னும் முழுதாக 10 நாட்கள் இருந்தன. ஆனால் இன்றே சிரிப்பும், கேலியுமாக வீட்டில் கல்யாணக் களை கட்டிவிட்டது. எல்லோரும் எதிர்பார்ப்புகளுடன் சந்தோஷமாகப் பேசிக் கொண்டும் அவ்வப்போது அறுவை ஜோக் அடித்து ரசித்துக் கொண்டும் இருந்தனர்.
அந்த அறைக் கதவைத் திறந்த சித்தி, ரம்யா! யார் வந்திருக்கா, பார்!" என்றாள். அறையின் நடுவிலிருந்த ஸ்டூலில் ஆளுயரக் கண்ணாடி முன்பு அமர்ந்திருந்த ரம்யா, ஆரஞ்சும் ரோசும் கலந்த அந்தப் புடைவையில் ஒரு தேவதை போலிருந்தாள். என்ன அபார அழகு; மனத்தைச் சுண்டி இழுக்கும் தெய்விக அழகு-ஸ்ரீஜாவால் அவளிலிருந்து கண்களை எடுக்கவே முடியவில்லை.
இந்தப் புடைவையும் இந்த ஹேர் ஸ்டைல் உனக்கு நல்ல பொருத்தமா இருக்கு. கல்யாணத்தன்னைக்கும் இதே போல வாரிக்கோ" என்றாள் ஸ்ரீஜா.
அப்போது அங்கு நுழைந்த பவித்ரா, ரம்மி கண்ணா நீ ரொம்ப ஜோராய் இருக்கே! என் கண்ணே பட்டுடும் போல இருக்கு!" சொல்லிக் கொண்டே தன் கண்ணிலிருந்த மையை ஒரு விரலால் லேசாகத் தொட்டு, ரம்யாவின் காதின் பின்புறம் வைத்தாள்.
‘கடவுளே இந்தக் குழந்தை இன்று போல் என்றும் சந்தோஷமாக இருக்கும்படியான வாழ்க்கையைக் கொடு’- மனமாற வேண்டினாள் ஸ்ரீஜா.
மாப்பிள்ளை எங்கே? நீ மட்டும் பார்த்தால் போதுமா? எங்களுக்குக் காட்டமாட்டாயா?" சிரித்துக் கொண்டே கேட்டாள் ஸ்ரீஜா.
இதோ கொண்டு வரேன் ஸ்ரீஜா." அலமாரியைத் திறந்து அதிலிருந்த போட்டோவை ரம்யா எடுத்த உடன், சைலன்ஸ்! மிஸ்டர் ரம்யா வந்துட்டார் இனிமே யாரும் பேசக் கூடாது!" என்று ஒரு கீச்சுக் குரல். தொடர்ந்து ஷ்...ஷ் என்ற சைகையுடன் உதட்டில் விரலை வைத்துக் கொண்டு... சைலன்ஸ்... மறுபடி கேலி, சிரிப்பு. ரம்யா நீட்டிய போட்டோவை ஆர்வத்துடன் முகம் நிறைய சிரிப்பாக வாங்கிக் கொண்டாள் ஸ்ரீஜா.
பார்த்தாள்... பார்த்த அந்த வினாடியே அவள் சிரிப்பு உறைந்தது. ஒருமுறை அல்ல கண்களைக் கசக்கிக் கொண்டு பலமுறை பார்த்தாள். அந்த போட்டோவில் அதே பையன். 3 நாட்களுக்கு முன்பு பஸ்ஸில் சந்தித்த அவனே தான்! ஸ்ரீஜாவின் மனத்தில் சந்திப்புகளுக்கான பிரிவுகளுக்கான பல கேள்விகளுக்கு விடை கிடைத்தாற்போல அவளுக்குத் தோன்றியது.
0 comments:
Post a Comment