Thursday, December 06, 2012

விகடன் விமர்சனக் குழு - நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நீர்ப்பறவை

ன்ன ஆச்சு?  படத்துக்குப் போனோம்... ஒரு டூயட் கூட இல்லை... ஹீரோயின் கிட்டத்தட்ட இல்லை... ஹீரோதான் வில்லன். நாலு பிட் வசனத்தைத்தான் படம் முழுக்கத் திரும்பத் திரும்பப் பேசுறாங்க. ஆனா, படம் முழுக்கக் குலுங்கிக் குலுங்கிச் சிரிச்சுட்டே இருந்தோமே... இது எப்படி?'' - 'நடுவுல கொஞ்சம்  பக்கத்த காணோம்’ படம் பார்த்து வெளியே வந்து நீண்ட நேரத்துக்குப் பிறகும் நமது 'மெடுலா ஆப்லங்கேட்டா’வில் அலைமோதிய சிந்தனை இதுதான். பாஸ்... பட்டையைக் கிளப்பிட்டீங்க.



நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடும்போது விஜய் சேதுபதிக்குத் தலையில் அடிபட்டு, கடந்த ஒரு வருட நினைவுகள் மறந்துவிடுகின்றன. அந்த மறதிப் பட்டியலில் அடுத்த இரண்டே நாட்களில் மணம் முடிக்க இருக்கும் காதலியும் இருந்தால்... நண்பர்களின் பி.பி. எப்படி எகிறும்? அதைச் சிந்தாமல் சிதறாமல் நமக்கும் அப்படியே கடத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பாலாஜி தரணீதரன். 'ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ்’ ஐடியாவில் இத்தனை ஜோக்கும் த்ரில்லும் புதைத்து அசர அடித்திருக்கிறது 'என்.கே.பி.கே.’ கூட்டணி!



'மறதி’ நாயகனாக விஜய் சேதுபதி. 'என்னாச்சி?’, 'ப்பா... பேய் மாதிரி இருக்காடா!’, 'யாருக்குடா கல்யாணம்?’, 'நீ சொன்னா இந்த பில்டிங் மாடில இருந்துகூடக் குதிப்பேன்டா!’ என அதே வசனம், அதே ரியாக்ஷன்தான் படம் முழுக்க. ஆனால், சின்னச் சின்ன சேட்டைகள் மூலம் கலக்குகிறார் விஜய்.



விஜய் சேதுபதியின் நண்பர்களாக அறிமுகமாகி இருக்கும் ராஜ்குமார், விக்னேஷ், பகவதி பெருமாள் ஆகிய மூவரும் அட்டகாசம்.


'காதல்ங்கிறது ஆழ்மனசுல அடிச்ச ஆணி மாதிரி. மெடுலா ஆப்லங்கேட்டால அடிபட்டாலும் மறக்காது!’ என்று அள்ளிவிட்டு பக்ஸ் வாங்கும் பல்பு, 'அவன்தான் மாப்பிள்ளை பேரை மறந்துடுறான்ல. இந்தத் தடவை பக்ஸ் பேரைச் சொல்லு!’ என்று கோத்து விடும் சரஸ்... நண்பர்களின் ஒவ்வொரு ஸ்டாப் ப்ளாக்குமே செம காமெடி மேளா!



தெரு கிரிக்கெட்டுக்கு ஐ.பி.எல். பாணி ஷாட்கள், நண்பர்களின் குளோசப் டென்ஷன் என நிலவரத்தின் கலவரத்தைப் பார்வையாளர்களுக்கு அப்படியே கடத்துகிறது பிரேம்குமாரின் ஒளிப்பதிவு. (நிஜத்தில் இவரேதான் அந்த மெமரி லாஸ் ஹீரோ!)


படம் முழுக்க ரிப்பீட் அடிக்கும் வசனங்களுக்கு, சோகம், டென்ஷன், நெகிழ்ச்சி, வருத்தம் என்று டோன் மாற்றியதில் டிஸ்டிங் ஷன் அடிக்கிறது சித்தார்த் விபினின் பின்னணி இசை. நிஜ சம்பவத்தில் தொடர்புஉடைய சிலரைப் படத்திலும் அப்படியே உலவவிட்டு இருப்பது... அடடே! 



முன்-பின் பாதிகளில் அலுப்புத் தட்டும் சில காட்சிகளில் பலமாகக் கத்திரி வைத்துஇருந்தால், இன்னும் தீப்பிடித்து ஓடியிருக்கும் இந்த காமெடி எக்ஸ்பிரஸ்.




'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ - படிக்க சுவாரஸ்யமான காமெடி நாவல்!



லங்கைப் பேரினவாத அரசின் கடற்படைத் துப்பாக்கிகளுக்குப் பலியாகி, வெறுமனே செய்தியாக மட்டுமே கடந்துபோன பல நூற்றுக் கணக்கான மீனவர்களில் ஒரு பறவை, இந்த 'நீர்ப்பறவை’!



 குடிநோய் என்னும் கொடுமை, சிறுபான்மை யினரின் மனத்துயர், மதநல்லிணக்கம், மீனவர் கள் வாழ்வியலில் தோய்ந்த சடங்குகள், விதிகள், 'இந்திய’ மீனவர் என்று குறிப்பிடப்படாத தமிழக மீனவர்கள் மீது ஏவிவிடப்படும் படுகொலைகள் எனப் பல மதிப்பீடுகளை ஒரே படத்தில் பேச முயன்றதற்காக இயக்குநர் சீனுராமசாமிக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்.



ஈழத்தில் இருந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்த சிறுவன் விஷ்ணு, தமிழக மீனவத் தம்பதிக்குத் தத்துப்பிள்ளை ஆகிறான். குடிநோய்க்கு அடிமையாகிப் பிச்சை கேட்டும் ஏமாற்றியும் காசு வாங்கிக் குடித்துத் திரியும் 'நீர்’ப்பறவையாக இருப்பவனை நெஞ்சுரம் கொண்ட மீனவனாக மாற்றுகிறது சுனைனாவின் காதல். ஆனால், அவன் வாழ்க்கை யின் மகிழ்ச்சி நீரோட்டத்தைச் சில தோட்டாக்களால் இலங்கைக் கடற்படை இல்லாமல் ஆக்கிவிடுகிற இனத் துயரம்தான் 'நீர்ப்பறவை’யின் சிறகுகள் உதிர்ந்த கதை.



ஓர் அசல் குடிகாரனாக மாறி சலம்பித் திரியும் கடற்புரத்து இளைஞனுக்கான முகவெட்டும் உருவமும் அட்டகாசமாகப் பொருந்துகிறது விஷ்ணுவுக்கு. சரக்கு மயக்கத்தில் சலம்புவதும் காதல் மயக்கத்தில் கிறங்குவதுமாக அசத்துகிறார். கிறிஸ்துவப் பழக்கங்களில் ஊறிப்போனவராக ஜெபிப்பது ஆகட்டும், குடிகார விஷ்ணுவைக் கண்டு 'சாத்தானே... அப்பாலே போ’ என்று விலகுவது ஆகட்டும்... எஸ்தராகவே மாறியிருக்கிறார் சுனைனா. வயதான எஸ்தராக வரும் நந்திதா தாஸ், ''விஷ்ணு இறந்ததை ஏன் அரசாங்கத்திடம் சொல்லவில்லை?'' என்று நீதிபதி கேட்கும்போது, ''சொன்னா மட்டும் என்ன பண்ணு வீங்க?'' என்று எழுப்புகிற கேள்வி, ஜீரணிக்க முடியாத நிதர்சனம்.



விஷ்ணுவின் அப்பா லூர்துசாமியாக வரும் 'பூ’ ராமு மகனைத் திருக்கைவால் கொண்டு வெளுப்பது, அதே மகன் திருந்தியதும் சமுத்திரக்கனியிடம் படகு செய்யச் சொல்லிச் சிபாரிசுக்காக நிற்பது, படகில் தன் பெயரைப் பார்த்துக் கண்ணீர்விடுவது என ஒரு பாசக்கார மீனவரின் பாத்திரத்தில் உப்பு நீராக நிறைகிறார்.




'நீங்க பெரிய கூட்டம் போட்டா, அது போராட்டம். ஆனா, நாங்க நாலு பேர் கூடினா, அதுக்குப் பேர் தீவிரவாதமா?’, 


'மீனவனுக்கு ஒரு முப்பது தொகுதி இருந்தா, அவன் குரலும் ஓங்கி ஒலிக்கும்யா’ 


என்று ஆங்காங்கே அரசியல் பேசுகிறார் சமுத்திரக்கனி. சாராயம் விற்கும் வடிவுக்கரசி, பங்குத் தந்தை அழகம்பெருமாள், 'உப்பளம்’ இமான் ஆகியோர் படத்தின் நல் மன மாந்தர்கள்.  



'மீனுக்கு சிறு மீனுக்கு’, 'பற பற பற பறவை ஒன்று’, 'தேவன் மகளே’ என்று வைரமுத்துவின் வரிகளை ஈர இசையுடன் இதயக் கரை சேர்க்கிறது ரகுநந்தனின் இசை. நெய்தல் நிலத்தை, கடலின் நிறங்களை, உயிர்களின் ரணங்களைப் பதிவு செய்திருக்கிறது பாலசுப்ரமணியெம்மின் ஒளிப் பதிவு.
படத்தின் முற்பாதியை நெடுக ஆக்கிரமிக்கும் குடிக் காட்சிகளின் சில சிறகுகளைத் தயக்கமின்றி வெட்டியிருந்தால் இன்னமும் அழகாக இருந்திருக்கும் பறவை.



இயற்கைச் சீற்றங்கள் உலகின் எல்லா மீனவர்களும் சந்திக்கும் பிரச்னை. ஆனால், இலங்கைக் கடற் படையின் தாக்குதல் நம் மீனவர்கள் மட்டுமே சந்திக்கும் பிரச்னை என்பதை அழுத்தமாகச் சொன்னதில்தான் உயரே உயரே பறக்கிறது 'நீர்ப் பறவை’!


thanx - vikatan


0 comments: