Wednesday, December 26, 2012

என் உயிர்த்தோழி ஆண்டாள்! -வசந்தி ஸ்டான்லி

மனம் மயக்கும் மார்கழிக் குறுந்தொடர்

என் உயிர்த்தோழி ஆண்டாள்!

வசந்தி ஸ்டான்லி

நீங்கள் என்னவாக இருக்க வேண்டுமென்று விரும்பி அந்தக் காட்சியை உங்களுடைய மனத்தில் வடிவப்படுத்தி அதைத் தொடர்ந்து போதுமான காலம் இறுகப் பற்றியிருந்தால், அந்தக் காட்சிக்குரிய வகையில் நீங்கள் எதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தீர்களோ அதே காட்சியை விரைவில் அடைவீர்கள் என்று மனவியல் தத்துவம் கூறுகிறது."
- வில்லியம் ஜேம்ஸ்
ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு, முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழிமுதல்வன் உருவம் போல் மெய் கறுத்து..."
ஹோம் தியேட்டரிலிருந்து கசிந்து வந்த திருப்பாவை ஏற்கெனவே பனியால் நனைந்திருந்த மார்கழி காலைப் பொழுதை மேலும் நனைத்தது இசையால்! எப்போதும் போல் பாடல் அப்படியே என்னை மெல்லத் தூக்கிச் சென்றது ஸ்ரீவில்லிபுத்தூருக்கு! என் பள்ளிப் பருவத்துக்கு...
இதோ தேர் அருகே ஆண்டாள் கோவில், நேர் எதிரில் பெரிய மேடை போட்டு பத்மா சுப்பிரமணியம் டான்ஸ்... இதேஆழிமழைக் கண்ணாதிருப்பாவைக்கு அவர் அபிநயம் பிடித்து ஆட ஆட... கடலுக்குள் புகுந்து நீரை வாரி வருணன் மேகமாய், மழையாய்ப் பொழிவதை அவர் அபிநயிக்க, அடடா! எத்தனை அழகு அந்தப் பெரிய கண்கள்! மேடையிலேயே மழை கொட்டுவது போல ஓர் உணர்வு; மேடையின் மூன்று புறமும் உட்கார்ந்து பார்த்த வில்லிபுத்தூர்! மக்களுக்கு, ஆடிப் பூரத் திருவிழாவுக்கு பத்மா வந்து ஆடியதே பெரிய விஷயம்!

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர" இதோ அடுத்த பாடல்! கண்ணன் ஓரிடத்தில் பிறந்ததையும், ஓரிடத்தில் வளர்ந்ததையும் அபிநயத்திலேயே மொத்த கதையையும் விளக்கி பத்மா சுப்பிரமணியம் ஆட கூட்டம் மெய்மறந்து உட்கார்ந்திருந்தது.
மார்கழி வந்தாலே பலரைப் போல எனக்கும் முதல் நினைவு திருப்பாவைதான்! மார்கழிக் குளிர், திருப்பாவை, அதை எழுதிய ஆண்டாள், தைலக் காப்பு, ராப்பத்து பகல்பத்து உற்சவம்! பிரியாவிடை- துளசிமணக்கும் கோவில் தீர்த்தம்! கூடவே நெய்வழியும் பொங்கல் பிரசாதம்! மார்கழிக் குளிரில் தரையில் விரியும் வண்ணக் கோலங்களென அழகாய் விரிகிறது என் கண்முன்னே காட்சிகள்!
எழுத்தாளர் சுஜாதாவுக்கும், வாலி சாருக்கும் ஸ்ரீரங்கம் போல, கலைஞர் அவர்களுக்கு திருவாரூர் போல எல்லோருக்கும் சொந்த ஊர் என்றாலே சுகமான நினைவுகள்தானே! எனக்கும் அவ்வளவு தானா? Nostalgic என்பதையும் மீறி ஒரு கூட்டுப் புழு வண்ணத்துப் பூச்சியான அழகான கதையும் அதில் இருக்கிறதே!
அது என் கதை மட்டும் இல்லை, என் தோழி ஆண்டாளின் கதையும்தான்! பிரெண்ட் ஆண்டாளா? கூடப் படித்தவளா? வாழ்நாள் முழுதும், என் கூட இருந்து என்னைப் படிப்பிக்கிறவள், ஸ்ரீ ஆண்டாள். எங்கள் ஊர் தெய்வம் என்று சொல்லப்படும் கோதைநாச்சியாரேதான்! கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர்" என்று எங்கள் ஊருக்குப் பெயர் வாங்கித் தந்த சாட்சாத் ஸ்ரீ ஆண்டாள்தான் என் தோழி!
ஆண்டாளோடு எனக்கு எப்போ அறிமுகம்? கோவில்ல பார்த்துக் கும்பிடற ஆண்டாளாக இல்லை. என் கூடவே இருக்கும் தோழியாய் ஆண்டாளை எப்போ தெரியும் எனக்கு?
எட்டாம் வகுப்பு படிச்சிட்டிருந்தேன் அப்போ. ‘தீராத விளையாட்டுப் பிள்ளைபாரதியார் பாட்டுக்கு என்னைக் கண்ணனாக வைத்து 15 நாள் பிராக்டீஸ் ஓடிக்கிட்டு இருந்த நேரம்! திடீரென்று ஒரு நாள் டீச்சர் வந்து என்னை இனிமேல் பிராக்டீஸுக்கு வரவேண்டாம் என்று சொல்ல ஒரே கோபம். அழுகை எனக்கு! என் கிளாஸ்மேட் சித்ராவை என் இடத்தில் போட்டுத் தொடர்ந்தது பயிற்சி! காரணம் கேட்டால், நான் கறுப்பாம்! 13 வயது! புரிந்தும் புரியாத மனது. காயப்பட்டுப் போனது! கண்ணன் வேஷத்துக்குத் தேர்ந்தெடுத்த அந்தச் சித்ராவுக்கு உடம்பு பூரா நீலத்தைப் பூசிமேக வண்ணன்ஆக்கி அந்த டீச்சர் ஆடவைத்ததுதான் வேடிக்கை!
நீங்க வந்து ஸ்கூல்ல கேளுங்கப்பா!" என்று அப்பாவிடம் ஒரே அடம்செய்ய, போனா போகுது சின்ன ஸ்கூல் ஃபங்ஷன் தானே. நீ பெரிய அளவுல வருவேம்மா!" என்ற அப்பாவின் சமாதானம் எடுபட வில்லை.

நானாவா கறுப்பா பிறந்தேன்; அந்த டீச்சரே கறுப்பு தானே, ஏன் கறுப்பா இருந்தா டான்ஸ் ஆடக் கூடாதா?" கேள்வியால் நான் துளைக்க, யாரும்மா சொன்னது நீ கறுப்புன்னு... நீ புது நிறம்டா செல்லம்! ராமர் கறுப்புதான். கிருஷ்ணன் கறுப்புதான்... நம்ம ஊர் ஆண்டாள் நாச்சியாருக்கு ரொம்பப் பிடித்தது கண்ணன்தானே! ‘கண்ணன் எனும் கரும் தெய்வம்!’ என்று பாடறா அவனை!"
நிஜமாப்பா?" இது என்னை சமாதானப்படுத்த அப்பா விடும் ரீல் என்று கூட நினைத்தேன்!
ஆமாம் பெண்ணே, கறுப்புக் கண்ணன்தான் தன்னைக் கல்யாணம் பண்ணணும்னு வேண்டி விரும்பி விரதம் இருந்து கல்யாணம் செஞ்சுகிட்டா! அவளுக்கு கறுப்புக் கண்ணனையும் புடிக்கும், உன்னையும் ரொம்பப் பிடிக்கும் பார், அவளுக்கு!" அதுதான், அந்த நிகழ்ச்சிதான் ஆரம்பம்! ஆண்டாளுக்கு கறுப்பு பிடிக்குமா? ஊரே கொண்டாடும், கும்பிடும் ஆண்டாளுக்கு என்னையும் பிடிக்குமா? அப்பா சொன்னால் சரியாகத்தான் இருக்கும். அன்றிலிருந்து ஆண்டாளை எனக்கும் ரொம்பப் பிடித்து விட்டது! மேலும் மேலும் தெரிந்து கொள்ள வேணும் அவளைப் பற்றி என்று ஆசை வந்துவிட்டது! அப்படித்தான் ஆரம்பித்தது எங்கள் ஃபிரெண்ட்ஷிப்!
ஆண்டாளின் கதையை யார் சொன்னாலும் கேட்பது, அதுகுறித்து நூலகத்தில் படிப்பது, கோயில் திருவிழாவில் யார் பேசினாலும் உட்கார்ந்து கொள்வது... அமெரிக்கா வரை சென்று தமிழில் பக்தியைப் பரப்பும் வேளுக்குடி கிருஷ்ணாவாகயிருந்தாலும் சரி, நம்ம உள்ளூர் அக்ரஹாரத்து வேணுமாமா கதாகாலட்சேபமாக இருந்தாலும் சரி, ஆண்டாளின் கதை என்று சொன்னால், அவள் தமிழைப் பற்றிப் பேசினால், இன்று வரை அலுப்பதே இல்லை எனக்கு! கேட்கக் கேட்க ஆச்சர்யம்! படிக்கப் படிக்க பரவசம்! தேவதையா, தெய்வமா என்றால் எல்லாவற்றுக்கும் மேலே என் தோழி. என் உயிர்த் தோழி என்றுதான் சொல்வேன்!
ஆண்டாள் வெறும் கோவில் சிலை என்றால் இன்றைக்கும் தேனினும் இனிய தமிழ் வாசம் வீசும் அவள் எழுத்து இருக்கிறதே, ‘கோதை ஆண்டாள், தமிழை ஆண்டாள்என்ற சிறப்பு இருக்கிறதே! திருப்பாவை முப்பதும் தித்திக்கிறதே!
வாரணமாயிரம் சூழவலம் வந்துநாராயணன் அவள் கைத்தலம் பற்றிய கனவு இருக்கிறதே! நாச்சியார் திருமொழியாக அவள் அள்ளித் தந்த தமிழ்ப் பாசுரங்கள் இருக்கின்றனவே!
ஆண்டாளோடு என்னுடைய நட்பு அவள் தமிழ் எழுதியதால் மட்டும்தானா? அல்லது அதற்கும் மேலே ஓர் நேர்மறை சிந்தனையாளர், எப்படி தம் வாழ்க்கையை, தாம் நினைத்தபடி அமைத்துக் கொண்டு, நினைத்த வெற்றியை அடைய முடியும் என்ற வாழ்க்கை ரகசியத்தை எனக்குச் சொல்லிக் கொடுத்ததாலா?
(நட்பு தொடரும்)

நன்றி - கல்கி , புலவர் தருமி 

0 comments: