.ஆர்.கிருஷ்ணய்யர்... இந்தியாவின் மிக மூத்த,
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி. நீதி, அரசியல், எழுத்து, சமூகம் என
அனைத்துத் தளங்களிலும் தடம் பதித்த ஆளுமை. கடந்த மாதம் 98-வது பிறந்த
நாளைக் கொண்டாடிய கிருஷ்ணய்யரை எர்ணாகுளத்தில் உள்ள அவரது 'சத்கமய’
இல்லத்தில் சந்தித்தேன்.
''வயதாகிவிட்டதாக உணர்கிறேன். கேட்கும் திறனை வெகுவாக இழந்துவிட்டேன்.
முன்புபோல எழுத முடியவில்லை. நினைவுகளை மீட்டு எடுப்பதில் பெரும் யுத்தமே
நடக்கிறது. நான் எதிர்பார்த்த முதுமை எனக்கு வாய்க்கவில்லை. அந்த வகையில்
நான் துரதிர்ஷ்டசாலி!'' என்றபடி, எதிரே பிரமாண்டமாக ஃப்ரேம் செய்யப்பட்டு
இருக்கும் தன் மனைவியின் புகைப்படத்தைப் பார்க்கிறார். தினமும் தன்
மனைவியின் புகைப்படத்தோடு அரை மணி நேரத்துக்கும் குறையாமல் கிருஷ்ணய்யர்
பேசு வதாக அவரது உதவியாளர்கள் தெரிவித்தனர்.
''நீங்கள் அமைச்சராக
இருந்த மார்க்சிஸ்ட் கட்சி இப்போது பகிரங்க கொலை மிரட்டல்களுக்கும் அரசியல்
கொலைகளுக்கும் களம் அமைக்கிறதே... கம்யூனிஸ்ட்டுகள் எதை நோக்கிப்
பயணிக்கிறார்கள்?''
''என் தோழர்கள் கெட்டுப்போய்விட்டார்கள். நம்பூதிரிபாட் போன்ற தோழர்கள்
வாழ்ந்த மண்ணிலா இப்படி ரத்தக் கறை படிய வேண்டும்? எளிமை, தியாகம்,
நேர்மை, நாணயம் எல்லாம் எங்கே போயின? கொலை... அடிதடி... ரத்தம்...
மிரட்டல்!
இன்றைய கம்யூனிஸ்ட்டுகள் பலரின் நடத்தை மிகவும் மோசமாக இருக்கிறது.
மிகவும் வருத்தமாக இருக்கிறது. மார்க்ஸ் இருந்தால் நொந்துகொள்வார்.
ஆனாலும், சிலர் அத்திப்பூ மாதிரி ஆங்காங்கே பூத்துக்கொண்டுதான்
இருக்கிறார்கள்!''
''சாமான்ய மக்களுக்காக
உருவாக்கப்பட்ட சட்டமும் நீதிமன்றமும் இந்தியா குடியரசாகி 62 ஆண்டுகள் ஆன
பிறகும் தொடர்பு எல்லைக்கு அப்பாலேயே இருக்கின்றனவே?''
''மருத்துவமனைகளையும் கல்வி நிலையங்களையும் பார்த்துப் பயந்த மக்கள்,
இன்றைக்கு நீதிமன்றங்களையும் பார்த்துப் பயப்படுகிறார்கள். சின்ன வழக்கு
தொடுப்பதில் தொடங்கி, வக்கீல் கட்டணம், தீர்ப்புக்கான காலம் என நினைத்தாலே
மலைக்கவைக்கின்றன நீதிமன்ற நடவடிக்கை கள். அதுவும் உச்ச நீதிமன்றம்
நாட்டின் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்களுக்கு எட்டாக் கனியாகவே
இருக்கிறது. இந்த நிலையை முற்றிலும் மாற்ற வேண்டும்!''
''மும்பைத்
தாக்குதல் தொடர்பான வழக்கில் இன்னமும் பல சந்தேகங்கள் இருப்பதாகச்
சொல்கிறார்கள். ஆனால், அதற்குள் ரகசியமாக அஜ்மல் கசாப் தூக்கிலிட்டப்பட்டு
இருக்கிறார். இதுபற்றி உங்கள் கருத்து?''
''காந்தி சொன்னதுபோல உயிரைப் பறிக்கும் உரிமை மனிதனுக்கு இல்லை என்பதில்
உறுதியாக இருக்கிறேன். இந்தக் கேள்விக்கு விரிவான பதிலை நானே விரைவில்
எழுதவிருக்கிறேன். நிச்சயம் என் பதிலுக்கு ஆதரவுக் குரலும் விமர்சன அலையும்
பெருகும்!''
''ராஜீவ் கொலை வழக்கில்
சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய
மூவரும் தங்கள் தரப்பு நியாயத்தை விளக்கி... இந்தியாவின் முக்கிய அரசியல்
தலைவர்களுக்கும் பல நீதிபதிகளுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் விரிவான
கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் கருணை மனுக்களுக்கு
எந்தப் பதிலும் இல்லையே மத்திய அரசிடம் இருந்து?''
''எனக்கும் பல முறை கடிதம் எழுதி இருக்கிறார் கள். அவர்கள் தரப்பில்
இருந்து வந்து என்னைச் சந்தித்து இருக்கிறார்கள். நானும் பல சமயங்களில்
அவர்களுக்கு வழிகாட்டி இருக்கிறேன். ராஜீவ் காந்தியின் மனைவியே, 'இவர்களைத்
தண்டிப்பதால் என் கணவர் திரும்பவும் வர மாட்டார்’ என்று தெளிவாகச்
சொல்லிவிட்டார்.
இதை அடிப்படையாக வைத்து உங்கள் வாதங்களை அடுக்குங்கள்
என்றேன். அவர்கள் மூவரும்
நீண்ட காலம் சிறையில் இருந்துவிட்டார்கள். இனியும் அவர்களைத் தண்டிப்பது
சரியல்ல. தூக்குத் தண்டனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக
இருக்கிறேன். தூக்குத் தண்டனையை ஒழிக்காமல் செத்துப்போனால், நான்
தோற்றுப்போனவனாக உணர்வேன். அஹிம்சையைப் போதித்த காந்தியின் தேசத்தில்
இப்படி ஓர் அவல நிலை நீடிப்பது வருத்தமாக இருக்கிறது. இது காந்திக்கு
இழைக்கப்படும் மாபெரும் அவமானம்!''
''ஓர் அரசியல்வாதி என்ற
முறையில் சொல்லுங்கள்... உங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர் யார்?
இப்போது இருப்பவர்களில் யாரை நேர்மையானவர் என்று நினைக் கிறீர்கள்?''
''ஜவஹர்லால் நேரு. அவருக்குப் பிறகு வேறு யாரும் என் கண்ணுக்குத்
தெரியவில்லை. இதனைச் சொல்வதற்கு எனக்கு வருத்தமாக இருக்கிறது!''
readers views
1. அன்பு4 Days ago
"காந்தி சொன்னதுபோல உயிரைப் பறிக்கும் உரிமை
மனிதனுக்கு இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்."------------>
கசாப்புக்கு மட்டும் 160 அப்பாவிகளை கொல்லும் உரிமை எப்படி வந்தது? அவன்
மனித ஜன்மம் இல்லை என்பதால் தூக்கிலிட்டது சரியானது. வாலி வதைப்படலத்தில்
ஒரு மிருகத்தை எப்படி வேண்டுமானாலும் கொல்லலாம் என்று நீதி தர்மத்தை
ராமர் தெளிவாக எடுத்துச் சொன்னார்.
2. இவரது பெயரிலேயே இரட்டை நிலை மனப்பான்மை பளீரென முகத்தில் அறைகிறது.
பெயரிலேயே கிருஷ்ண ஐயர் என்ற அடையாளத்தை வைத்துக்கொண்டு எப்படி சமத்துவத்தை
மார்க்ஸிய தத்துவங்களை இவரால் கட்சிக்குள்ளேயும், பொது மக்களுக்கும் பரப்ப
இயலும். சென்ற தலைமுறையை சார்ந்த மனிதர்களை பார்க்கும்போதே வெளிப்படுவது
இவர்கள் என்னவோ கலாச்சார ஒழுக்கசீலர்கள போலவும் வளர்ந்து வரும் இளைய
தலைமுறை என்னவோ தறிகெட்டு அலையும் தறுதலைகள் போலவும் இவர்கள்
காட்டிக்கொள்ளும் பாவ்லா.
பிடித்த தலைவர் என்று நேருவை சொன்னதாலேயே இவர் மேல் எந்த ஒரு உயர்ந்த அபிமானமும் ஏற்படவில்லை. -Kalpana
பிடித்த தலைவர் என்று நேருவை சொன்னதாலேயே இவர் மேல் எந்த ஒரு உயர்ந்த அபிமானமும் ஏற்படவில்லை. -Kalpana
3. BALA.S7 Days ago
என்ன செய்தால் நீதித்துறையை மக்கள்
தயக்கமின்றி அணுகுவார்கள், அதன் மூலம் லஞ்சம் கொடுக்க மறுக்கும் சூழ்நிலை
உருவாகும் என இது போன்றவர்கள் எழுதலாம். பழங்கதை பேசி பயனில்லை. காந்தி கால
இந்தியாவில் தூக்கை ஒழிக்கலாம், சோனியாகாந்தி காலத்தில் அது இயலாது
என்பதைவிட இன்னும் பல மடங்கு அதிகமாக வேண்டும்.
thanx - vikatan
0 comments:
Post a Comment