Thursday, December 20, 2012

விகடன் விமர்சனம் - கும்கி ,நீஎபொவ

விமர்சனம் : கும்கி

விகடன் விமர்சனக் குழு
 
 
யானை மேல் செய்யும் காதல் சவாரியே 'கும்கி’!


 'காட்டு யானையை அடக்கும் கும்கி யானைக்குப் பதில் ஒரு கோயில் யானையை அனுப்பிவிட்டால் என்னாகும்?’ என்ற சுவாரஸ்ய ஒன் லைனில், ஆதி காடு, 200 வருடக் கட்டுப்பாடு, ஒரு வனக் காதல், காட்டு யானையின் மூர்க்கம், பழகிய யானையின் பாசம் என பிரியமும் பிளிறலும் புதைத்து அசத்தியிருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.


அறிமுகத்திலேயே அசத்தலாக ஃபர்ஸ்ட் க்ளாஸ் தாண்டுகிறார்


ஹீரோ விக்ரம் பிரபு. யானையை அடக்கும் பாகனாக செம ஃபிட். ஊறுகாய் திருடிய யானையிடம், 'உனக்கு எதுல குறைவெச்சேன்? எங்கேடா படிச்ச இந்தத் திருட்டுப் பழக்கத்த?’ என்று கோபம் காட்டுவதா கட்டும், 'அவளப் பார்த்ததுல இருந்து மனசுக்குள்ளே என்னென்னவோ பண்ணுதுடா’ என்று காதலில் உருகுவதாகட்டும்... ஆல் இஸ் வெல்.

படத்தின் செகண்ட் ஹீரோ யானை மாணிக்கம் தான். விக்ரம் பிரபுவுக்குப் பின்னே நாய்க்குட்டி போல் ஓடுவதும், தன் மேல் ஏறச் சொல்லி காலைத் தூக்கிப் பிளிறுவதும், அம்மாஞ்சி யானையாக கும்கி பயிற்சியில் திணறுவதும்... 'மாணிக்கமாகவே வாழ்ந்திருக்கிறது’ அந்த யானை.
வன தேவதையாக லட்சுமி மேனன். அத்தனை பெரிய விழிகளில் பயம், பிரமிப்பு, காதல், சோகம் என எல்லாமே ரம்மியம்!


சலம்பல் பாதி புலம்பல் மீதி என அப்ளாஸ் அள்ளுகிறார் தம்பி ராமையா. தன்னைப் பெரிய வீரன் என்று நினைத்துக் கொண்டாடும் கிராமவாசிகளிடம் மைண்ட் வாய்ஸில் மண்டிபோட்டு உருள்வது என மனிதருக்கு செம ஸ்பேஸ். ''உனக்கு எல்லாம் ஃபர்ஸ்ட் நைட் ஆரம்பிக்கிறப்ப பக்கவாதம் வந்துடும்டா'' என வசனங்களில் அதிரடித்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் இவரது மைண்ட் வாய்ஸ் ஓவர் டோஸ்! 'உண்டியல்’ அஸ்வின், கிராமத் தலைவர் ஜோமல்லூரி என்று ஒவ்வொருவரும் நிறைவான கேரக்டர்கள்.  


இசை, ஒளிப்பதிவு இரண்டும் கும்கியின் கம்பீரத் தந்தங்கள். கொம்பன் வரும் காட்சிகளில் பின்னணி இசையில் பதைபதைப்பூட்டும் இமானின் இசை, பாடல்களில் சொக்கவைக்கிறது. புற்களுக்கு இடை யில் பயணிக்கும்போதும், ஹோவெனக் கொட்டும் அருவியின் தலை மேல் ஏறி இறங்கிச் சுற்றிச் சுழன்று பரவசப்படுத்தும்போதும் மயக்குகிறது சுகுமாரின் ஒளிப்பதிவு. யுகபாரதியின் பாடல் வரிகள் கதைக்கு அழுத்தம் சேர்க்கின்றன.


கொம்பனும் மாணிக்கமும் சந்தித்துவிட்டால் படம் முடிந்துவிடும் என்பதாலேயே, இறுதிக் காட்சி வரை யானைத் தும்பிக்கையைவிட நீள மாக நீள்கிறது படம். ஊருக்குள் ஹீரோ வந்த பிறகு, நகர மாட்டேன் என அடம்பிடிக்கிறது கதை. ஆதி காடு என்றொரு மலைக் கிராமமும் அவர்களின் வாழ்வியலும் எப்படி இருந்திருக்க வேண்டும்... அது மிஸ்ஸிங். பரணில் உட்கார்ந்து எந்நேரமும் மலைக் கிராமத்தையே விக்ரம் பிரபு பார்த்துக் கொண்டு இருப்பது முதலில் ஜோராக இருந்தாலும், போகப் போக செம பேஜார். படத்தின் உயிர்நாடிக் காட்சியே கொம்பனும் மாணிக்கமும் மோதிக் கொள்ளும் சண்டைதான். ஆனால், அதன் கிராஃபிக்ஸ்... ப்ச்!  


இருந்தாலும், திரையில் யானையைப் பார்த்ததுமே குழந்தையாகிவிடுகிற மனசு, எல்லாவற்றையும் மறக்கடித்துவிட... கம்பீர நடை போடுகிறான் கும்கி!

விமர்சனம் : நீதானே என் பொன்வசந்தம்

விகடன் விமர்சனக் குழு


 விண்ணைத் தாண்டி வருவாயா’ காதலில் பள்ளிப் பருவத்தையும் முன்னாள் காதலனின் திருமணத்துக்கு முந்தைய இரவையும் சேர்த்தால்... 'நீதானே என் பொன்வசந்தம்’.


 குழந்தைப் பருவத்தில் ஜீவா, சமந்தா இடையே கன்றுக்குட்டிக் காதல். ஈகோ மோதல். பிரிகிறார்கள். கல்லூரிப் பருவத்தில் மீண்டும் சந்திக்கும்போது, விட்ட இடத்தில் இருந்து காதல். இப்போதும் ஈகோ மோதல். பிரிகிறார்கள். திருமணத்துக்கு முந்தைய பருவத்தில் சந்திக்கிறார்கள். காதலே இல்லாமல்


ஈகோ மோதல் மட்டுமே. பிரிகிறார்கள். முந்தைய இரண்டு தருணங்களிலும் ஜீவாவே சமந்தாவைச் சமாதானப்படுத்தியிருக்க, இப்போது சமந்தா சமாதானத்துக்கு வருகிறார். ஆனால், அப்போது ஜீவாவுக்குத் திருமணம் நிச்சயமாகி ரிசப்ஷனும் முடிந்திருக்கிறது. என்ன நடந்தது என்பது க்ளைமாக்ஸ்.


இன்ஜினீயரிங் கல்லூரி மாணவன், வசதியான வீட்டுப் பெண், காலேஜ் கல்ச்சுரல்ஸ், காபி ஷாப், ஈகோ, பிரிவு, காதலியைத் தேடிச் செல்லும் காதலன், கூடவே கௌதமின் கரகர குரல்... 'கௌதம் பட க்ளிஷே’க்கள் ஒன்றுகூட மிஸ் ஆகவில்லை. ஆனால், பழையன நிறையப் புகுந்ததில், புதியன எதுவும் இல்லாமல் போய்விட்டதே!


பிரிந்த காதலர்கள் காதலனின் திருமணத்துக்கு முந்தைய இரவில் சந்திக்கும் அத்தியாயத்தில் மட்டும் செம சிக்சர் அடிக்கிற கௌதம், மற்ற ஏரியாக்களில் சிங்கிள் ரன்தான் எடுக்கிறார்.


தன் காதலைத் தானே முறித்துக்கொண்டு பிறகு சமாதானம் தேடி அலையும் கொஞ்சம் நெகட்டிவ் பாத்திரத்தில்... ஜீவா! பள்ளி, கல்லூரிக் கட்டங்களில் க்யூட்டாகக் கவர்கிறார். இறுக்கம் இல்லாத திரைக்கதையிலும் நம்மை ஈர்த்துப் பிடிப்பது சமந்தாவின் குழந்தை முகமும் குறும்புக் கண் களும்தான். சாய்ந்து சாய்ந்து பார்த்து கன்னக் கதுப்புகளில் வெட்கம் புதைத்துப் புன்னகைக்கும்போது... ஸோ ஸ்வீட் சமந்தா!  


'சுடிதாருக்குச் சாயம் போனாத்தானே உங்களுக்கு பேன்ட், ஷர்ட்லாம் கண்ணுக்குத் தெரியும்!’, 'சில்-அவுட் மச்சான்’ - மாறி மாறி வரும் ஊடல் கூடல் வசனங்களுக்கு மத்தியில், சந்தானத்தின் ஒன் லைன் பஞ்ச்கள்தான் சின்ன ஆறுதல்.


ஸ்டேட்டஸ் வித்தியாசம் கருதி சமந்தாவிடம் இருந்து வம்படியாக விலகுவது ஜீவாதான். ஆனால், கடைசியில் ஏதோ சமந்தாதான் ஜீவாவை ஏமாற்றியதுபோல அவரைக் குறுகுறுக்க வைப்பது என்ன நியாயம்?


'நீ ஏற்காடு போனதில்லையா... செம இடம். நான் இந்த சம்மருக்குப் போறேன். ஆமா நீ எங்கே போற?’ 'ஆஸ்திரேலியா!’, 'எல்லா குட்டிக் குட்டி பாக்ஸையும் டிக் அடிச்சிட்டு, கடைசியா என் பாக்ஸுக்கு வந்தியா?’, 'உன் கல்யாணத்துக்கு மூணு மணி நேரத்துக்கு முன்னாடி இதைச் சொன்னேன்னு ஞாபகம் வெச்சுக்கோ’ என்பதுபோன்ற சில இடங்களில் மட்டுமே கௌதம் டச்.


ஃபீலிங் படத்தை செம ஜாலியாக எடுத்திருப்பார்கள்போல. 'வி.டி.வி.’ சிம்புவை சந்தானம் கலாய்க்கிறார். 'டேட்ஸ் இல்லை. அநேகமா நான் இல்லாமதான் அடுத்தடுத்த சீன்லாம் நடக்கும்’ என்று டயலாக் பேசுகிறார். என்ன சார் நடக்குது அங்கே!  


படத்தின் ஹீரோ, பலம்... இரண்டும் இளையராஜாதான். காதலர்கள் இணையும்போது வரும் காதல் கீதமாகட்டும், பிரியும்போது வரும் சோக கீதமாகட்டும்... ராஜா, ஏன் ராஜா என்பதை நிரூபிக்கிறார்.  


காதலர்கள் அடிக்கடி பிரியக் காரணமே 'ஸாரி’ என்ற வார்த்தையை அவர்கள் சொல்லத் தயங்கும் ஈகோதான். ஆனால், நாங்கள் சொல்கிறோம்.. ஸாரி கௌதம்!


நன்றி - விக்டன் 

1 comments: