Thursday, December 13, 2012

என்னை யார் தாக்கினாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கனும் - வைரமுத்து நக்கல் பேட்டி

விகடன் மேடை

வாசகர் கேள்விகள்... கவிப்பேரரசு வைரமுத்து பதில்கள்!
படம்: ரவிவர்மன்
ஜி.தியாகு, திருத்துறைப்பூண்டி.


''எம்.ஜி.ஆரோடு உங்களுக்கு நெருக்கம் இருந்ததா?'' 



''1984 ஒரு 'முகூர்த்த’ மாதத்தின் அதிகாலை 4.30 மணி.


பாரதிராஜாவின் புதுமனை புகுவிழா.


கட்டிய பட்டு வேட்டியோடு கட்டிய பசுமாட்டை அவர் வீட்டுக்குள் இழுத்துச்செல்லும் போது, பாதுகாப்பு வாகனங்களால் பரபரப்பானது தெரு.
யாரும் எதிர்பார்க்கவில்லை.


தன் துணைவியார் வி.என்.ஜானகியோடு வெள்ளைத் தங்கமாய் வீட்டுக்குள் நுழைகிறார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.


பதற்றத்தில் புது வீடு படபடக்கிறது. குடும்ப உறுப்பினர்கள், வேலைக்காரர்கள் தவிர யாரும் இல்லை வீட்டில்.


கூடத்தில் முதலமைச்சரை அமர்த்திவிட்டு, பசுமாட்டை இழுத்துக்கொண்டு பால் கொண்டுவர ஓடுகிறார்கள் பாரதிராஜா தம்பதி. என் காதுக்குள் சொல்லிவிட்டுப் போகிறார் பாரதிராஜா:


'எம்.ஜி.ஆருக்குக் கம்பெனி கொடுங்கள்.’

அப்போது எம்.ஜி.ஆருக்கு என்னை யாரென்றே தெரியாது. என் பெயர் வைரமுத்து என்று சொல்லிக்கொள்ளவும் தயக்கமெனக்கு. சோபாவில் அவர் பக்கத்தில் உட்கார்ந்தேன்; ஜானகி அம்மையார் தனி நாற்காலியில்.


என் காதலுக்குரிய கதாநாயகனை அன்றுதான் அணுக்கத்தில் பார்க்கிறேன்.
இந்த ரோஜா விரல்களா வாள் சுழற்றியவை? மந்திரி குமாரியின் வீரமோகனை - குலேபகாவலியின் தாசனை - மகாதேவியின் வல்லபனை - மதுரை வீரனின் வீரனை - சக்கரவர்த்தித் திருமகளின் உதய சூரியனை - நாடோடி மன்னனின் வீராங்கனை, மார்த்தாண்டனை - ஆயிரத்தில் ஒருவனின் மணிமாறனை அவருக்குள் தேடித் தேடி ரசித்ததில் ஏழு நிமிடங்கள் கழிந்துபோயின.


என்னோடு அவரும் பேசவில்லை;


அவரோடு நானும் பேசவில்லை. அதற்குள் பால் வந்துவிட்டது; எழுந்துகொண்டேன்.

பிறகு, சில விருது மேடைகளிலும், ஒரு படத் தொடக்க விழாவிலும், ஒரு படக் காட்சியிலும் அவரைச் சந்தித்தேன்.

இவ்வளவுதான் எம்.ஜி.ஆருக்கும் எனக்குமான அணுக்கம்!''


பா.செல்வி, கள்ளக்குறிச்சி.


 ''அடிப்படைத் தமிழறிவைக் குழந்தைகளுக்கு எப்படி ஊட்டுவது?'' 


''எண்களோடு எண்ணங்களை இணைத்துக் கற்றுக்கொடுங்கள்; அப்படியே நெஞ்சில் ஒட்டும்.


ஒன்று: வானம் - ஒன்று.
இரண்டு: ஆண், பெண் - சாதி இரண்டு.


மூன்று: இயல், இசை, நாடகம்- தமிழ் மூன்று.


நான்கு: வடக்கிலிருந்து வருவது வாடை, தெற்கிலிருந்து வீசுவது தென்றல், கிழக்கிலிருந்து தீண்டுவது கொண்டல், மேற்கிலிருந்து வாட்டுவது கோடை-தமிழன் காற்றுக்கு வைத்த பெயர் நான்கு.


ஐந்து: எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி-இலக்கணங்கள் ஐந்து.


ஆறு: இனிப்பு, கைப்பு, புளிப்பு, உறைப்பு, உவர்ப்பு, துவர்ப்பு-சுவைகள் ஆறு.


ஏழு: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்-தமிழ்ப் பண்கள் ஏழு.


எட்டு: நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், உவகை, வெகுளி-மெய்ப்பாடுகள் எட்டு.


ஒன்பது: கண்ணிரண்டு, காதிரண்டு, நாசி இரண்டு, வாய் ஒன்று, முன்னொன்று, பின்னொன்று-உடலின் வாசல்கள் ஒன்பது.


இப்படி எண்களுக்குப் பக்கத்தில் எண்ணங்களைப் பொருத்தித் தமிழியம் கற்றுக்கொடுக்க முடியுமா என்று கருதிப்பாருங்கள் தமிழாசிரியப் பெருமக்களே!''


பாரதி செழியன், சென்னை.


''கோபத்தைக் குறைக்க என்ன வழி?'' 


''சக மனிதன் செய்யும் தவறுதான் நமக்குக் கோபத்தை மூட்டுகிறது. தவறுகளை நகைச்சுவையாக் கிக்கொள்வதைப் போல் கோபத்தைக் குறைக்க நல்ல வழி இல்லை.


வேலைக்காரரை அழைத்து, 'தபால் தலையை ஒட்டிக்கொண்டு வா’ என்றார் ராஜாஜி. பிரிட்டிஷ் மன்னர் தலையிட்ட தபால் தலையைத் தலைகீழாக ஒட்டிக்கொண்டு வந்தார் வேலைக்காரர்.


நீங்களும் நானுமென்றால் கோபத்தைக் கொட்டி இருப்போம்.


ராஜாஜி சொன்னார்:


'பரவாயில்லையே! நாங்களெல்லாம் செய்ய முடியாத காரியத்த நீ செஞ்சுட்டியே, பிரிட்டிஷ் ராஜாவையே கவுத்துட்டியே.’


ராஜாஜியால் அது முடிந்தது; கேள்வி கேட்ட உங்களால் கூட முடியும்; பதில் சொன்ன என்னால் அது முடியுமா தெரியவில்லை!''


தாமரைக்கண்ணன், திருப்பூர்.


 ''இந்தியாவின் பொருளாதாரம்பற்றிச் சொல்லுங்களேன்?'' 


''ஒரு துறையில் ஒருவன் சற்றே புகழோடிருந்தால் அவனுக்கு எல்லாம் தெரியும் என்ற மூடநம்பிக்கையின் முட்டைக்குள் நீங்கள் வசிக்கிறீர்கள். பொருளாதாரம்பற்றிப் பேசும் அறிவுடையவன் அல்லன் நான். என்ன தான் இந்தியாவின் நிதியமைச்சர் என் நண்பராக இருந்தாலும், அவரிடம் இதுபற்றி நான் அறிய முயன்றதில்லை. ஆனாலும், பொருளாதாரத்தில் இந்தியா வளர்கிறதா தேய்கிறதா என்று அறிந்துகொள்ளும் அளவுகோல் ஒன்றை அறிவேன்.



எந்த நாடு தன் வங்கியில் வைக்கும் வைப்புத்தொகைக்கு அதிக வட்டி தருகிறதோ... அந்த நாடு பொருளாதாரத்தில் சரிந்திருக்கிறது என்று பொருள்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தங்கள் வைப்பு நிதிக்கு இப்போது தந்து வரும் வட்டி விகிதம் 8.5 விழுக்காடு. மூத்த குடிமக்கள் வைப்புத்தொகைக்கு 9 விழுக்காடு.


ஆனால், ஜப்பானில் வைப்புத் தொகைக்கு வட்டி கிடையாது. மாறாக, உங்கள் பணத்தைப் பாதுகாத்துவைப்பதற்காக உங்க ளிடமே வைப்பு நிதிக்குக் காப்புத்தொகை வசூலிக்கும் ஜப்பானிய வங்கி.


இந்தியாவில் 8.5 விழுக்காடு வட்டி கொடுத்து வாங்கப்படும் வைப்பு நிதி, 10 முதல் 13 விழுக்காடு வட்டிக்குத் தொழிற் கடனாக வழங்கப்படுகிறது. அந்த வட்டிப் பணம் உற்பத்திப் பொருளின் தலையில் விழுகிறது. உற்பத்திப்பொருள் வாடிக்கையாளன் தலையில் விழுகிறது. எனவே, பழைய பொருளுக்குப் புதிய விலைகளைத் தந்துகொண்டேயிருக்கின்றான் - பாவம் இடுப்பொடிந்த ஏழை இந்தியன்.


இப்படித்தான் பணம் வீங்குகிறது; அதை ஒவ்வோர் இந்தியத் தலையும் தாங்குகிறது!''


ம.இராஜ்குமார், வில்லூர்.


 ''உங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ சில பேர் தாக்குகிறார்களே... நீங்கள் திருப்பியடிக்க வேண்டாமா?'' 


''தேவையில்லை.

நீங்கள் ரசிக்க முடியாத ஓர் உண்மையைச் சொல்லுகிறேன்.


நீங்களும் நானும் சமூக மனிதர்கள் பலரும் நித்தம் நித்தம் கொஞ்ச நேரம் பைத்தியக்காரர்களாய் மாறியே தீருகிறோம்.


பெருங்கோபம் - பெருஞ்சிரிப்பு - காமம் - கர்வம் - போதை - புகழ் என்ற உணர்வுகளுக்கு ஆட்படும்போதெல்லாம் பைத்தியத்தின் உச்சத்தை ஒவ்வொருவரும் தொட்டே தீருகிறோம்.


தொட்டுவிட்ட உச்சத்தை விட்டுவிட்டு இருந்த இடத்திற்கே திரும்ப வந்தால், அது இயல்புநிலை. அங்கேயே நின்றுவிட்டால், அது திரிபுநிலை. இதை சைகோசிஸ் [Psychosis] என்கிறார்கள் மனவியல் நிபுணர்கள்.


கர்வத்தின் உச்சத்தைத் தொட்ட சில பேர் இறங்கி வராமல் அதே இடத்தில் நின்றே என்னை ஏசுகிறார்கள். அது குறைபாடுதானே தவிரக் குற்றமன்று. குற்றம் தண்டிக்கப்பட வேண்டியது; குறைபாடு நிவர்த்திக்கப்பட வேண்டியது. அவர்களுக்கு நான் பதில் தருவதை விட, சிகிச்சை தருவதே சிறந்தது!''




இரா.கரியப்பா, சூலூர்


''சிலையாவதுதான் ஒரு மனிதனின் உச்சகட்டப் புகழா?'' 



''அப்படிச் சொல்ல முடியாது. மனிதர்களைப் போலவே சிலைகளுக்கும் ஆயுள் உண்டு. அரசு - அரசியல் - சாதி - மதம் -  நிறுவனம் ஆகியவற்றால் பராமரிக்கப்படும் சிலைகள், அந்த ஐந்தும் விழுகிறபோது தாமும் விழுந்துவிடுகின்றன.



சாலைகளில் நிற்கின்ற சிலைகளின் ஆயுள், சாலையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. அறிஞர் அண்ணாவால் திறந்துவைக்கப்பட்டுச் சாலைகளின் சந்திப்பில் நின்ற கலைவாணர் சிலை, மேம்பாலம் கட்டும்போது இடம் பெயர்க்கப்பட்டு ஓரச்சாலையில் ஒதுங்கிவிட்டது.


சென்னையின் தென் வாசலில் கம்பீரமாக நின்ற ஜவஹர்லால் நேருவின் சிலை கத்திப்பாரா மேம்பாலத்திற்குப் பிறகு, உயரம் குறைந்து ஒடுங்கிவிட்டது.


மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு பெயர்கள் மறக்கப்பட்ட பல சிலைகள் வெறும் பொம்மைகளாகிவிடுகின்றன.


உருவம்தான் புகழின் உச்சம் என்பது ஒரு கற்பனை. உருவ வழிபாட்டிற்கே இடம் தராத இஸ்லாத்தில், நபிகள் நாயகத்தின் பெருமை இன்னும் குறையவே இல்லையே.


எனவே, மனிதர்கள் நிலைபெறுவது உருவங்களால் அல்ல - செயல்களால் மற்றும் சித்தாந்தங்களால்!''


தரும.சரவணன். தஞ்சாவூர்.


''இங்கிதம் என்றால் என்ன?'' 


''நான் பெரிதும் மதிக்கும் பெரும் பாடகி ஒருவர் எங்கள் வீட்டுக்கு வருகை தந்தார். தெரிந்தோ தெரியாமலோ காலணிகளைக் கழற்றாமல் வீட்டுக்குள் நுழைய எத்தனித்தார். அதை எப்படி உணர்த்துவது? 'அம்மா! உங்கள் பாதங்கள் என் வீட்டில் பட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!’ என்றேன். பதறிப்போய்க் காலணிகளைக் கழற்றிவிட்டு வந்தார்.


புண்படுத்தாமல் பண்படுத்துவது இங்கிதம்!''



- இன்னும் பேசுவோம்... 



பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி அமைவது விஷப்பரீட்சை - வைரமுத்து பேட்டி
diSki - part 1 - http://www.adrasaka.com/2012/11/blog-post_15.html



நான் ஓர் எழுத்து வியாபாரி - வைரமுத்து பேட்டி @ விகடன்
part 2  http://www.adrasaka.com/2012/11/blog-post_2188.html


இலங்கை யில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்? - வைரமுத்து பேட்டி

 http://www.adrasaka.com/2012/12/blog-post_4667.html

 

4

தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?'' - வைரமுத்து சாட்டையடி பேட்டி

http://www.adrasaka.com/2012/12/blog-post_9476.html

 

0 comments: