பாட்டாளி சொந்தங்களே - 5
தலையெழுத்தைப் படிக்கலாம் வாங்க!
மருத்துவர் ச. ராமதாஸ்
எந்த
நிலையிலும் கட்டுப்பாட்டுடன் இருக்க ஆசைப்படும் என்னைக் கட்டமைத்தது லயோலா கல்லூரியே! புகுமுக வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில், சிறப்பான படிப்போடு கூடவே ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் எனக்குக் கற்றுக் கொடுத்தது லயோலா.
கல்லூரி மணி அடித்த பிறகு ஒரு நிமிடம் தாமதமாகச் சென்றாலும் அபராதம் கட்டியாக வேண்டும்!
வாரம் ஒருமுறை என்று நினைக்கிறேன்... ‘பெட்ரம் ஹால்’ எனப்பட்ட ஓர் அரங்கத்தில் மாணவர்களுக்கு நீதிபோதனை (MORAL CLASS) வகுப்பு நடத்துவது வழக்கம். அந்த அரங்கை, ‘ஃபைன் ஹால்’ (FINE HALL) என்றுதான் மூத்த மாணவர்கள் வேடிக்கையாகக் குறிப்பிடுவார்கள்.
அதாவது, மாணவர்கள் கட்டிய அபராதத் தொகையைக் கொண்டு கட்டப்பட்ட அரங்கு என அதைக் கிண்டலோடு குறிப்பிடும் அளவில் கல்லூரியில் கட்டுப்பாடு கறாராகக் கடைப்பிடிக்கப் பட்டது.
வேடிக்கையும் கிண்டலும் ஒருபுறம் இருந்தாலும், நீதிபோதனை வகுப்புகள் மாணவர்களின் வாழ்க்கையைச் செம்மைப்படுத்த உதவின என்பதை மறுக்க முடியாது. அதுபோன்ற மாணவர்களின் வாழ்க்கையை நெறிப்படுத்தக் கூடிய நீதிபோதனை வகுப்புகளை இந்தக் காலத்துப் பள்ளி, கல்லூரிகளில் கட்டாயமாக நடத்தச் செய்யவேண்டும். முறையான வழிகாட்டுதல் தேவைப்படும் மாணவப்பருவத்தில் அது சரியாகக் கிடைப்பது மிக முக்கியமானதாகும்.
புகுமுக வகுப்பில் என்னுடன் படித்த மாணவர்களுள் ஓரிரண்டு பேர் தவிர மற்றவர்கள் அனைவருக்கும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.
புலவர் வகுப்பில் சேரவேண்டும் என்றுதான் நான் முதலில் ஆசைப்பட்டேன். அப்போது விடுதியில் தங்கியிருந்த எனக்கு, என் முதுநிலை மாணவரான மருத்துவர். சொக்கலிங்கம் என்பவர் ஆலோசனை வழங்கினார். என் மதிப்பெண்களைப் பார்த்துவிட்டு, மருத்துவப் படிப்பில் சேருமாறு அறிவுறுத்தினார்.
அதன்படியே மருத்துவக் கல்லூரியில் சேர விண்ணப்பித்துவிட்டு, நேர்முகத் தேர்வுக்காக நான் காத்திருந்தேன். அப்போது இராயபுரம் பகுதியில் மிகப் பிரபலமாக இருந்த இராசரெத்தின நாயக்கர் என்பவரைச் சந்திக்கும் படியும், அந்த ஆண்டுக்கான மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக் குழுவில் இடம் பெற்றிருந்த ஒருவர் அவருக்கு வேண்டியவர் எனவும் சொல்லக் கேட்டு... அவரைச் சந்தித்தேன்.
ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவருக்கு பரிந்துரைக் கடிதம் எழுதிக் கொடுத்தார் இராசரெத்தின நாயக்கர். கடிதத்தோடு நீதிபதியைப் பார்க்கச் சென்றேன்.
நான் பெற்றிருந்த மதிப்பெண்கள் அதிகமாக இருந்தபோதும், ‘உனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பது சிரமம்’ என அவர் சொல்லக் கேட்டபோது என் நம்பிக்கை மொத்தமாக தவிடு பொடியானது!
சில நிமிடங்கள் கழிந்த பின்னர் அவர், பக்கத்து அறையில் இருந்த தமது மகனைப் பார்த்துவிட்டுச் செல்லுமாறு கூறினார். இன்னொரு அதிர்ச்சி எனக்குக் காத்திருந்தது அந்த அடுத்த அறையில்!
ஐயாயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் எனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க உதவுவதாகச் சொன்னார் அவரது மகன். ‘அவ்வளவு பணம் இருந்தால் நான் மருத்துவப் படிப்பையே முடித்துவிடுவேன்’ என்று என் நிலையை எடுத்துச் சொல்லி விட்டு, அழாத குறையாக வெளியேறினேன்.
மறுநாள் நேர்முகத்தேர்வு. கவலையோடுதான் சென்றேன். தேர்வுக்குழுவில் அந்த நீதிபதி இடம்பெறவில்லை! அவர் கையூட்டு வாங்குவது முதலமைச்சர் காமராசர் அவர்களின் கவனத்துக்குச் சென்றதன் தொடர்ச்சியாக, அன்றைய தினத்துக்கு முதல் நாள் இரவே தேர்வுக் குழுவில் இருந்து அவர் நீக்கப்பட்டிருந்தார்.
எனக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. ஒருவேளை... அந்த நீதிபதி தேர்வுக் குழுவில் இருந்திருந்தால் எனக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்காமலேயே போயிருக்கலாம். கையூட்டைக் கண்டித்த காமராசரின் உடனடி நடவடிக்கையினால்தான் நான் மருத்துவரானேன் என்றும் சொல்லலாம்.
1958
ஆம் வருடம் சென்னை மருத்துவக் கல்லூரியில், ‘ப்ரி மெடிகல் கோர்ஸ்’ (PRE MEDICAL COURSE) எனப்படும் மருத்துவப் படிப்பில் சேர்ந்தேன். கல்லூரிக் கட்டணத்தையும் விடுதிக் கட்டணத்தையும் செலுத்துவதற்காக, எங்களுக்கிருந்த நிலத்தை அடமானம் வைத்துப் பணம் கொடுத்தார் என் தகப்பனார்.
அடுத்த வருடமே மருத்துவப் பட்டப் படிப்பான எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டுக்குள் நுழைந்தேன். ‘ரெட் ஃபோர்ட்’ (RED FORT) என மாணவர்களால் குறிப்பிடப்பட்ட உடற்கூறியல் அரங்குக்குள் (அனாடமி தியேட்டர்) நான் நுழைந்த முதல் நாள் இப்போதும் அப்படியே என் மனக்கண்களில் இருக்கிறது!
ஒரு
பெரிய கூடத்தில்... மேசைக்கு ஒன்றாகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்த இருபதுக்கும் மேற்பட்ட பிணங்கள், கை கூப்பாமல் எங்களை வரவேற்றன. அத்தனையும் உறவினர்கள் யாரும் முன்வந்து உரிமை கோரியிராத ஆதரவற்றோர் பிணங்கள். போதாக்குறைக்கு அரங்கில் ஆங்காங்கே தொங்கவிடப்பட்டிருந்த முழு உருவ மனித எலும்புக்கூடுகளும் காற்றில் அசைந்தபடியே வரவேற்றன!
பிணம் அழுகாமல் இருப்பதற்காக ஃபார்மலின் (FORMALIN) என்ற திரவத்தை ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தியிருப்பார்கள்.
‘கன்னிங்காம்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் கூறிடல்
(DISSECTION) முறையை ஒரு மாணவர் வரி வரியாகப் படிக்க, இன்னொருவர் அதை வெட்டிக் கூறிடல் செய்ய வேண்டும். தலையையும் கழுத்தையும் இரண்டு மாணவர்கள், கால்களையும் கைகளையும் இரண்டு பேர், மார்பையும் வயிற்றையும் இரண்டு பேர்... என பாகம் பிரித்துக் கொண்டு கூறிட வேண்டும். இப்படி ஒவ்வொரு பாகமாகப் பிரித்து ஆராய்ந்து பின்னர் நரம்பு, ரத்தக்குழாய், தசைகள், கடைசியில் எலும்புகள் என்ற வகையில் மாறிமாறி ஒன்றரை ஆண்டுகள் பிணத்தை அறுத்து ஆராய்ச்சி செய்து உடற்கூறியல் பாடத்தைப் பயில வேண்டும் அங்கே.
எனக்கும் என் சக தோழருக்கும் முதலில் கிடைத்தது தலையும் கழுத்தும். ஆறு மாதத்தில் அதைக் கூறிடல் செய்து முடிக்க வேண்டும்.
அப்போதும் சரி, இப்போதும் சரி... தலைவிதி என்று சொல்லிக் கொண்டு உழைப்பைப் புறம் தள்ளுவதில் எனக்கு எப்போதுமே உடன்பாடு கிடையாது. ஆனால், மண்டை ஓட்டை எதிரே வைத்துக் கொண்டு, ‘தலையெழுத்து என்று சொல்வார்களே... இந்த மண்டை ஓட்டுக்குச் சொந்தக்காரரின் தலையெழுத்து என்னவாக இருக்கும்? எங்கே பிறந்து, எப்படி வளர்ந்து, என்னென்ன துயரங்களை அனுபவித்து, எவ்வாறு இறந்து, உடலை வாங்க யாருமே முன்வராத நிலையில் இங்கே நம் கைகளால் வெட்டுப்படுகிறாரோ?’ என நாங்கள் பேசிக்கொள்வோம். ‘தலையெழுத்தைப் படிக்கலாம் வாங்க’ என்று பேசிக்கொண்டேதான் கபாலத்தைப் பிளக்க ஆரம்பிப்போம்.
மனிதனின் மண்டை ஓட்டு எலும்பு என்பது ஆறுவிதமான வெவ்வேறு எலும்புகளின் கலவையால் உருவாகும் உறுதியான ஒன்றாகும். இரண்டு கை விரல்களையும் கோத்து வைத்துப் பார்க்கும்போது தெரியும் இணைப்புக் கோடுகளினைப்போல கபால எலும்புகள் பின்னிப் பிணைந்திருப்பது ஏதோ ஒரு புரியாத மொழியில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களைப் போன்றே தோன்றும்.
‘அட, இதுதான்ப்பா இவரது தலையெழுத்து’ என வேடிக்கையாகப் பேசியபடியே சுத்தி, உளி கொண்டு மண்டை ஓட்டைத் தனியே பிளந்தெடுப்போம். அதனைத் தனியாக எடுத்து வைத்துவிட்டு, மூளையின் மேல் பாகத்தையும், அடுத்தடுத்த பாகங்களையும் படிக்க வேண்டும்.
மனித உடலின் அத்தனை எலும்புகளையும் எண்ணியெடுத்து ஒரு மூட்டையாகக் கட்டி ஒவ்வொரு மாணவனிடமும் கொடுப்பார்கள். அதனை விடுதிக்கே தூக்கிக் கொண்டு போய் விடுவோம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒவ்வொரு எலும்பாக எடுத்து, பொறுமையோடு ஆய்ந்து பயில வேண்டும். ஒன்றரை ஆண்டுகாலம் முழுவதும் அந்த எலும்புக்குவியல் எங்களோடு அறை வாசம் செய்யும்! மேசையில், கட்டிலில், தரையில்... இப்படி அறையின் எல்லா இடங்களிலும் எலும்புகள் கிடக்கும்!
ஆரம்ப நாட்களில் கல்லூரியில் இருந்து விடுதிக்குச் சென்றால் பிணங்களும் உடன் வருவது போலவே நினைக்கத் தோன்றும். சாப்பிடுவதற்கு முன் எத்தனை முறை சோப்புப் போட்டுக் கையைக் கழுவினாலும், பிண வாசனையும் மருந்து வாசனையும் மறையாது! அதனால் சாப்பிடவே பிடிக்காது... பல நாட்கள் அரை வயிற்றோடும் குறை வயிற்றோடும் படுத்திருக்கிறேன். பின்னர் ஒரு கட்டத்தில் அந்த வாசனை பற்றிய நினைவே எழாமல் அது பழகிப் போனது!
நான்
படித்த புகழ்பெற்ற சென்னை மருத்துவக் கல்லூரியைப் பற்றியும் சில வார்த்தைகள் சொல்லியாக வேண்டும்.
கிழக்கிந்தியக் கம்பெனி ஆங்கிலேயர்கள் ஆட்சிசெய்தபோது 1664-ல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஒரு மருத்துவ மனையைத் தொடங்கினார்கள். 1772ல் இப்போது உள்ள பொது மருத்துவமனை இருக்குமிடத்துக்கு அது மாற்றப்பட்டது.
1835ல் ஒரு மருத்துவப் பள்ளி தொடங்கப்பட்டு 1852ல் முதல் பட்டயப்படிப்பு சான்றிதழ் கொடுக்கப்பட்டது.(Diploma).
1857-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டு ஒரு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டது. M.M.C. தொடங்கி 155 ஆண்டுகள் ஆகின்றன.
நான் சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்த காலத்தில் எங்களுக்கு மருத்துவப் பேராசிரியர்களாக இருந்த புகழ்பெற்ற டாக்டர்கள் டாக்டர்.ரத்தினவேல் சுப்ரமணியம், நீரிழிவு நோய்க்கு அடித்தளம் அமைத்த டாக்டர் சாம்.ஜி.பி.மோசஸ், மூளை, நரம்பியல் துறையில் அறுவைச் சிகிச்சை முறையை அந்தப் பொது மருத்துவமனையில் அமைத்து அதற்கான ஒரு துறையை அமைத்து அடித்தளமிட்ட புகழ்பெற்ற மூளை, நரம்பு, அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் பி.ராமமூர்த்தி, தோல் வியாதி நிபுணர் டாக்டர் தம்பையா, 96 வயதில் சமீபத்தில் மறைந்த அ.ஃ.முதலியாரின் பிள்ளை அ.வேணு கோபால் முதலியார். இவர் சிறுநீரகத் துறையை உருவாக்கியவர். மார்பு, இதய அறுவைச் சிகிச்சை முறையைக் கொண்டு வந்த டாக்டர் சதாசிவம். இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் மனநல மருத்துவத் துறை பேராசிரியர் டாக்டர் சாரதாமேனன் டாக்டர்
M.S. இராமகிருஷ்ணன், டாக்டர் A.S.இராமகிருஷ்ணன் போன்ற புகழ்பெற்ற மருத்துவர்கள்.
(அனுபவம் தொடரும்)
நன்றி - கல்கி
1 comments:
OVVORU MANUSANUKKULAVUM EVVALAVO ERUKKU . EVARUKKULAVUM ATHUPPOLA NANRI
Post a Comment