பாட்டாளி சொந்தங்களே
கைக்கடிகார(ம்) கனவு கண்டேன்!
மருத்துவர் ச. ராமதாஸ்
எலப்பாக்கத்தில் இருந்து எங்கள் ஊருக்கு வந்த நான், பெரியண்ணா ஆசிரியர் பாலசுந்தரம், சென்னை இராயபுரம் கண்ணப்ப நாயனார் கழகப் பள்ளியின் தலைமையாசிரியர் பெரியசாமிக்குக் கொடுத்த சிபாரிசு கடிதத்துடன் சென்னைக்கு வந்தேன். தலைமையாசிரியரைச் சந்தித்துக் கடிதத்தைக் கொடுத்ததும் தம் பள்ளியில் ஆறாம் வகுப்பில் அவர் என்னைச் சேர்த்துக் கொண்டார்.
அப்போது சென்னையில் இருந்த என் அக்காள் சுப்புலெட்சுமி வீட்டில் தங்கிப் படித்தேன். அக்கா கணவர், என்னுடைய மாமா துறைமுகத் தொழிலாளி. நான் சென்னையில் பள்ளியில் சேரும்போது ‘சோறு மட்டும்தான் போடுவோம்’ என்று அவர் நிபந்தனை விதித்தார். பள்ளிக் கட்டணம், துணி, புத்தகம்... முதலியன வாங்கித் தர முடியாது என்ற நிபந்தனை. ஆறாம் வகுப்பு முதல் 11-ஆம் வகுப்பு வரை ஒரே செட் உடைதான். அதைத்தான் தினமும் துவைத்துப் போட்டுக்கொள்ள வேண்டும். அந்த ஆடை கிழிந்தால்தான் வேறு ஆடை.
இராயபுரம் கல்மண்டபம் (Grace Garden) பகுதியில் என்னுடைய அக்கா தங்கியிருந்த வீடு ஏறத்தாழ 15 வீடுகளைக் கொண்ட கட்டடத்தில் ஒரு வீடு. அதில் ஒரு படுக்கை அறை, அதற்குள்ளே சமைக்க இடம் இருக்கும். இதில்தான் நான், அக்கா, மாமன், மாமன் தம்பி ஆகிய நால்வரும் தங்க வேண்டும். நடுநாயகமாக ஒரு வீட்டில் அதன் உரிமையாளர் இருந்தார்.
நான் அங்கிருந்த காலத்தில் என்னுடைய மாமாவின் துணிகள், என் துணிகள் ஆகியனவற்றைத் துவைத்து விட்டுத்தான் பள்ளிக்கூடம் போவேன். தவிர மாமாவின் தம்பி இராயபுரம் துறைமுகத்தில் பணியாற்ற கிராமத்திலிருந்து வந்து சேர்ந்தார். அவருடைய துணிகளையும் துவைக்க வேண்டும். அவருடைய சாப்பாட்டையும் அவர் வேலை செய்யும் இடத்துக்கு எடுத்துச் செல்வேன். அதற்காக அவரிடமிருந்து எந்தச் சன்மானமும் பெற்றதில்லை. அவர் சம்பாதித்ததால் அவர் வீட்டில் செல்லப்பிள்ளை.
நான் பள்ளியில் படிக்கும்போது பிற்பட்ட வகுப்பினர் என்ற காரணத்தினால் எனக்கு அரைச் சம்பள சலுகை அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. தொடக்கத்திலேயே சோறு மட்டும்தான் போடுவோம் என்று மாமா கூறிவிட்ட காரணத்தினால் மீதமுள்ள அரைச் சம்பளத்தைக் கட்டுவதற்கு, மாலையில் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்ததும், பக்கத்து வீடுகளில் இருந்த 1,2,3 ஆம் வகுப்பு பயிலும் பிள்ளைகளுக்கு ஆசிரியராக மாறி ‘டியூஷன்’ வகுப்பு எடுத்ததன் மூலம் கிடைத்த வருவாயைப் பயன் படுத்திக் கொண்டேன். சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் இராயபுரத்திலுள்ள ராபின்சன் பூங்காவுக்குச் சென்று பாடங்களைப் படித்து விடுவேன்.
6-ஆம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை கண்ணப்ப நாயனார் கழகப் பள்ளியில் படித்தேன். அது இருக்கும் இடம் முழுக்க முழுக்கத் தாழ்த்தப்பட்ட மக்களே வசிக்கும் மீனாட்சியம்மன்பேட்டை. அது அரசு உதவி பெறும் பள்ளி.
8ஆம் வகுப்புக்கு அப்போது இ.எஸ்.எல்.சி. என்ற பொதுத்தேர்வு நடத்தப்படும். அந்தப் பொதுத்தேர்வில் நான்தான் மிக அதிக மதிப்பெண்களைப் பெற்றேன். அந்தப் பொதுத்தேர்வு இருந்தவரை அந்தப் பள்ளியில் மிக அதிகமான மதிப்பெண்கள் பெற்ற மாணவனும் நான்தான்.
8-ஆம் வகுப்பை முடித்தபிறகு சென்னை மண்ணடி தம்புசெட்டித் தெருவிலுள்ள முத்தியாலுபேட்டை உயர் நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பில் சேர்ந்தேன். 9,10,11ஆம் வகுப்புகளில் மூன்று ஆண்டுகள் அங்கு பயின்று அங்கும் மிக நன்றாகப் படித்தேன். அங்கும் புத்தகம் வாங்க முடியாத நிலையில் என்னுடைய தமிழ் ஆசிரியர்கள் புலவர் மாரிமுத்து, புலவர் சீனிவாசன் ஆகியோர் பள்ளி நிர்வாகம் பாடம் நடத்துவதற்கென்று அவர்களுக்குக் கொடுத்த ‘டேபிள் காப்பி’யை என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லுவார்கள். நான் நன்றாகப் படித்து வந்ததே காரணம்.
காலையில் என்னுடைய அக்கா கொடுக்கும் பழைய சோற்றைத் தின்றுவிட்டு இராயபுரத்திலிருந்து தம்பு செட்டித் தெருவிலுள்ள பள்ளிக்கு நாள்தோறும்
6 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று மாலையில் திரும்பி விடுவேன். அதன்பிறகு மாலையில் அக்கா மாமாவுக்குக் கொடுக்கும் சாப்பாட்டை இராயபுரம் கல் மண்டபம் பகுதியிலிருந்து 6 கி.மீ தொலைவிலுள்ள துறைமுகத்துக்கு 7 மணிக்குக் கிளம்பிச் சென்று கொடுத்துவிட்டுத் திரும்பி வருவதற்கு இரவு 12 மணி ஆகும். இப்படி 5 ஆண்டுகள் நடந்தே தினமும் தன்னந்தனியாக 6 கிலோ மீட்டர் நடந்து, எனது, மாமா, அவரது தம்பி இருவருக்கும் சாப்பாடு எடுத்துச் செல்வேன்.
சென்னை இராயபுரம் கண்ணப்ப நாயனார் பள்ளியில் நான் படிக்கும்போது என்னுடன் பயின்ற தோழர்களும், பாலகிருஷ்ணன், பன்னீர்செல்வம், துரைக்கண்ணு ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களுள் பன்னீர்செல்வம் என்னோடு முத்தியாலுபேட்டை உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். அவர் தமக்குக் கொண்டுவரும் மதியச் சாப்பாட்டை எனக்குக் கொடுப்பார். அவர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். உயர் நிலைப் பள்ளியின் கடைசி ஆண்டில் நாங்கள் படிக்கும்போது அவர் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை எனக்குப் பரிசாக வழங்கி அவரே என் கையில் கட்டினார்.
மற்றவர்களைப் போல் நானும் கடிகாரம் கட்டியதில் அன்றைய தினம் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த ஆண்டு நான் கல்வி உதவித்தொகை பெற்று, அதை என் மாமாவிடம் கொடுக்கும்போது, ‘இந்த ஆண்டாவது எனக்கு ஒரு கைக்கடிகாரம் வாங்கிக் கொடுங்கள்’ என்று கேட்டுப் பார்த்தேன். ஆயினும் அந்தக் குறையைப் பன்னீர்செல்வம் நிறைவேற்றினார். அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளிலும் கிடைத்த உதவித்தொகையை மாமாவே கையெழுத்திட்டு வாங்கிக் கொண்டார். இப்படிப்பட்ட சூழலில்தான் என் தோழர் மூலம் பரிசாக நான் பெற்ற கைக்கடிகாரம் என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.
மற்றொரு தோழர் பாலு என்று அழைக்கப்படும் பாலகிருஷ்ணன். அந்த இராயபுரம் பகுதி மீனாட்சியம்மன் பேட்டையில் சொந்த வீட்டில் அன்று தொடங்கி இன்றும் வசித்து வருகிறார். இன்றும் எங்களுடைய நட்பு தொடர்கிறது.
அப்போது வருடம் 1958. பள்ளி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த சமயத்தில் என் படிப்புக்கு ஒரு சோதனை வந்தது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு இரண்டு மாதமே இருந்த நிலையில், மாமாவுக்கு திடீரென பெரியம்மை கண்டுவிட்டது. சென்னை - தண்டையார்ப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்திருந்தோம். அப்போது அதற்கு காலரா ஆஸ்பத்திரி என்று பெயர். மாமாவின் உடலில் ஒரு இடம் பாக்கியில்லாமல் அம்மை கண்டிருந்தது. மருத்துவமனைக் கூடத்தில் மாமாவையும் சேர்த்து சுமார் நூறு பேர். அனைவரும் அம்மை நோய் கண்டவர்கள். தரையில்தான் படுக்க வைக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து மாமாவின் உடல்நிலை கவலைக்கிடமானது. ஒரு கட்டத்தில் நினைவிழந்து பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் கைவிரித்திருந்தனர். பெரியம்மை நோயின் கடுமை அது.
வைசூரி நோய் என்றும் அப்போதெல்லாம் சொல்வார்கள். பெரியம்மை வைரஸ் கிருமி, மனிதனை மட்டும் தாக்கும் ஒரு கடுமையான தொற்று நோய். பெரியம்மை உலகின் எல்லா நாடுகளில் இருந்தும் அறவே ஒழிக்க வேண்டும் என உலகச் சுகாதார அமைப்பு 1966ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. அதன் பிறகே இந்நோய் ஒழிப்புக் குறித்த செயல்பாடுகளில் வேகம் சேர்ந்தது. இன்னொரு முக்கியமான செய்தி. பெரியம்மை ஒழிப்பில் முக்கியமான ஒரு திருப்பத்தை மருத்துவ உலகத்தில் நிகழ்த்தியவர், நம் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஏ.ராமச் சந்திர ராவ்.
மருத்துவமனையிலேயே தங்கி, இரவும் பகலும் மாமாவுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தேன். அப்போதெல்லாம் மருத்துவமனை வளாகத்துக்குள் இருக்கும் மரத்தடிகளில் சில மணி நேரம் மட்டுமே எனக்குத் தூக்கம். மற்ற நேரங்களில் ஒரு தாதியைவிடவும் அதிகமாகவே பணிவிடைகள் செய்தேன்.
அத்தனை நோயாளிகளுக்கும் சேர்த்து ஒன்றிரண்டு செவிலியர்களே இருந்தனர். ஆத்திரம் - அவசரம் என்று தொண்டை கிழியக் கூப்பிட்டாலும் உதவிக்கு வரமாட்டார்கள். அதனால் மலம், சிறுநீர் கழித்தாலும் நான்தான் அதைச் சுத்தம் செய்ய வேண்டும்.
சுமார் நாற்பத்தைந்து நாட்கள் மருத்துவமனையிலேயே தவம் கிடந்தேன். வீட்டுக்குப் போகாமல் மாமாவைக் கவனித்து வந்தேன்.
நரகம் என்று ஒன்று இருந்தால் அது எப்படி இருக்கும் - நரக வேதனை என்று சொல்வார்களே அது எந்த அளவுக்கு இருக்கும் என்பதை அந்த மருத்துவமனைக் கூடத்தில்தான் கண்கூடாகப் பார்த்தேன். அங்கே இருந்த நோயாளிகளின் நிலையும் அவர்கள் அனுபவித்த வேதனைகளும் இப்போதும் என் நினைவில் பதைபதைப்போடு இருக்கிறது. என் அக்காவின் மாங்கல்யம் நிலைக்கவும் என் படிப்பு தொடரவும் மாமா நிச்சயம் உயிர் பிழைத்தே ஆக வேண்டும். கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டேன்.
ஒருவழியாக மாமாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. பாம்புக்குத் தோல் உரிவது போல உரிந்து, உடல் முழுக்க புதுத்தோல் தோன்றியது. ‘உங்க மாமா பிழைத்துக் கொண்டார்’ என்று மருத்துவர்கள் சொன்னதைக் கேட்டு மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. அச்செய்தியை அக்காவிடம் சொல்ல ஓடினேன். சரியாகச் சாப்பிடாமல் எந்நேரமும் அழுது புலம்பிக் கொண்டிருந்த அக்காவுக்கு அந்த வார்த்தைகள் மிகப்பெரிய ஆறுதலாக இருந்தன.
ஆனால்... என் படிப்பு?
பொதுத் தேர்வுக்கு இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில், பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் எனக்கு இருந்த நற்பெயரால் என்னைத் தேர்வு எழுத அனுமதிப்பதாகச் சொல்லி, உற்சாகப்படுத்தினார்கள். ஏறக்குறைய இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் இருந்தாலும் மருந்துக்குக் கூடப் பாடப் புத்தகங்களைத் தொட நேரம் வாய்க்கவில்லை எனக்கு!
இவ்வாறாகப் பள்ளிப்படிப்பை முடித்த நான் சென்னை லயோலா கல்லூரியில் புதுமுக வகுப்பில் (PUC) சேர்ந்தேன். மேலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும், பள்ளி இறுதித் தேர்வில் நான் வாங்கிய மதிப்பெண்களும் லயோலா கல்லூரியில் சேருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தன. எனது பள்ளி ஆசிரியர் பெரியசாமி கொடுத்த ஆலோசனையின் பேரில் நான் செயல்பட்டதால் சேத்துப்பட்டுப் பகுதியில் இருந்த எம்.சி.இராசா இலவசத் தங்கும் விடுதியில் சேருவதற்கு இடம் கிடைத்தது. அக்காலத்தில் இந்த விடுதி தமிழக அரசின் சென்னையிலிருந்த ஒரே இலவசத் தங்கும் விடுதி.
புதுமுக வகுப்பில் படிக்கும்போது சேத்துப்பட்டு விடுதியிலிருந்து நுங்கம்பாக்கத்தில் இருக்கும் லயோலா கல்லூரிக்கு ரயில்வே பாதை ஓரம் தினமும்
3 கி.மீ. தூரம் நடந்தே சென்று வருவேன்.
புதுமுக வகுப்பை முடித்ததும் புலவர் வகுப்பில் சேர வேண்டுமென்று நான் ஆசைப்பட்டேன். அப்போது அந்த விடுதியில் தங்கியிருந்த என்னுடைய சீனியர் சொக்கலிங்கம் என் மதிப்பெண்களைப் பார்த்துவிட்டு, மருத்துவப் படிப்பில் சேர் என்று ஆலோசனை கூறி ஒரு விண்ணப்பப் படிவமும் வாங்கி வந்து கொடுத்தார். அந்த விண்ணப்பம் என் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்துக்கான விதை!
படங்கள்: ஸ்ரீஹரி
(அனுபவம் தொடரும்)
1 comments:
மருத்துவர் அய்யா அவர்கள் அன்று பட்ட கஷ்டங்கள்தான் இன்று பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தர உந்து சக்தியாக இருந்தது என்பதில் ஐயமில்லை வாழ்க ஐயா நலமுடன் பல்லாண்டு.
Post a Comment