பாட்டாளி சொந்தங்களே!
அமாவாசைச் சோறு!
மருத்துவர் ச. ராமதாஸ்
காந்திஜி ஆதரவுப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே படித்து வந்தனர். தீண்டாமைக் கொடுமை உச்சத்தில் இருந்த எங்கள் கிராமத்தில் நான் அந்தப் பள்ளியில் சென்று படிக்க வேண்டும் என்று அடம் பிடித்தேன். அந்த அளவுக்கு என்னுள் கல்வித்தாகம். ஒரு வழியாய் என்னுடைய தந்தையாரின் சம்மதம் கிடைத்தது. அதேநேரத்தில் ஊராரின் எதிர்ப்பையும் சம்பாதிக்க வேண்டியிருந்தது.
நான் ஆதிதிராவிடர் காலனியில் இருந்த பள்ளிக்குச் சென்று படித்துவிட்டு வருவேன். மாற்றுச் சமுதாயத்தைச் சேர்ந்த நான் ஒருவன் மட்டும்தான் அந்த ஊரில் ஆதிதிராவிடர் காலனியில் படித்தேன். பள்ளிக் கூடத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும் தினமும் என்னை என் அம்மா வீட்டுக்கு வெளியே நிற்க வைத்து டிராயர் சட்டையையெல்லாம் கழற்றச் சொல்வார். பிறகு மாடு தண்ணீர் குடிக்கும் தொட்டியிலிருந்து தண்ணீரை எடுத்து என் தலையில் தெளித்து விடுவார். அவ்வாறு செய்வதால் தீட்டு போய்விட்டது என்பது அந்தக் கால நம்பிக்கை. அதன்பிறகுதான் வீட்டின் உள்ளே செல்ல அனுமதிப்பார். அந்தப் பள்ளியில் சேர்ந்த பிறகு கணக்குப் பாடத்தைக் கற்றுக்கொண்டேன். வேறு எதுவும் புதிதாகத் தமிழோ ஆங்கிலமோ கற்றுக்கொள்ளும் படியாக அங்கு இல்லை.
அந்தப் பள்ளியில் படிக்கும் எல்லோரும் கட்டாயம் இராட்டையில் நூல் நூற்க கற்றுக் கொள்ள வேண்டும். நானும் நூல் நூற்க கற்றுக் கொண்டேன். பாலசுந்தரம் அவர்களை மாணவர்கள் ‘அண்ணா’ என்றும், அவருடைய துணைவியார் கமலாபாயை ‘அக்கா’ என்றும் அழைப்பார்கள். அவருடைய முயற்சியால் இன்று அந்தப் பள்ளிக்கூடம் அரசு உதவி பெறும் மேனிலைப் பள்ளியாக வளர்ந்திருக்கிறது. அவருடைய நேர்மையினாலும், கல்விப் பணியினாலும் அவரை ஊர் மக்கள் ஏற்றுக்கொண்டு ஊரின் திண்ணையில் உட்கார வைத்து மரியாதை கொடுக்கும் அளவுக்கும், ஊர்ப் பிள்ளைகள் அந்தப் பள்ளியில் படிக்கும் அளவுக்கும், அவருடைய முயற்சியால் அந்தக் கிராமத்தில் நிலவி வந்த தீண்டாமைக் கொடுமை ஒழிந்தது.
இதற்கிடையில் நான் வேறொரு பள்ளியில் சேர்ந்து படித்தது தொடர்பான ஒரு மறக்க இயலாத அனுபவமும் உண்டு. நான் பாலசுந்தரம் அண்ணா பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் என் தாய்வழி உறவினர் ஒருவர் தங்கள் ஊரான ஒருங்கிணைந்த செங்கற்பட்டு மாவட்டம் (தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டம்) மதுராந்தகம் வட்டம் எலப்பாக்கம் என்ற கிராமத்தில் அரசினர் பள்ளி ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அப்பள்ளியில் எட்டாம் வகுப்புவரை உள்ளதாகவும் கூறி அப்பள்ளியில் படிப்பதற்காக என்னை அங்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்தார்.
எங்கள் ஊருக்கும் எலப்பாக்கத்துக்கும் இடையேயான தூரம் ஏறத்தாழ
50 கி.மீ. அப்பொழுது பேருந்து வசதி கிடையாது. ஒரு மாவட்டத்துக்கு ஒன்று அல்லது இரண்டு பேருந்து மட்டுமே ஓடிக் கொண்டிருந்த காலம் அது. மக்களின் நீண்டதூரப் பயணம் முழுமையும் ரயில் வண்டி மூலந்தான் நடைபெறும். இல்லையென்றால் மாட்டுவண்டி பயணந்தான். என்னை என் பெற்றோர்கள் மாட்டு வண்டியில் எலப்பாக்கத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.
நான்காம் வகுப்பில் அந்த ஊரிலுள்ள பள்ளியில் சேர்ந்தேன். அந்த வீட்டின் மருமகள் எனக்கு அண்ணி முறை. இந்தச் சிறுவன் மீது மிகுந்த பாசமும் கொண்டிருந்தார்.
எங்கள் இருவருக்கும் தினந்தோறும் ஒரு வேலை உண்டு. எலப்பாக்கத்திலிருந்து
3 கி.மீ. தூரத்தில் உள்ள கல்லியங்குணம் என்னும் கிராமத்தில் மாடுகள் மேயும் பொது இடம் ஒன்று உண்டு. அங்கு நாங்கள் சென்று மாடுகள் போடும் சாணத்தைக் கூடையில் பொறுக்கித் தலையில் சுமந்து கொண்டு வருவோம். சாணம் பொறுக்குவதிலும் போட்டி நிறைய உண்டு. எந்த மாடு சாணம் போடுகிறதோ, அதைப் பார்த்துக் கொண்டே இருந்து ‘கிடேரி போடுகிறது’, ‘சேங்கனு போடுகிறது’ என்பது போன்று அடையாளப்படுத்தி யார் முதலில் சொல்லுகிறாரோ அவர்தான் அந்தச் சாணத்தைப் பொறுக்குவதற்கு உரிமை உடையவர்.
தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வரும்போது, தலை வலிக்கிறது என்று அண்ணியிடம் சொல்வேன். கீழே இறக்கி ஒரு 5 நிமிடம் ஓய்வுக்குப் பின் மீண்டும் தூக்கிக் கொண்டு செல்வோம். அவ்வாறு நாள்தோறும் சாணியைப் பொறுக்கிக் கொண்டு தலையில் சுமந்து வந்து குப்பையில் கொட்டியபிறகு அவர்கள் போடும் பழைய சோற்றையோ, கூழையோ குடித்துவிட்டுப் பள்ளிக்கூடத்துக்கு அவசர அவசரமாக ஓடியது இன்றும் எனக்கு பசுமையாக ஞாபகத்தில் இருக்கிறது. இதனால் பல நேரங்களில் பள்ளிக்குச் செல்லுவதில் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் வகுப்பாசிரியரிடம் பலமுறை தண்டனையும் பெற்றிருக்கிறேன்.
விடுமுறையில் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது என் தாயாரிடம் நான்பட்ட துன்பங்களை எல்லாம் சொல்லி அழுதேன். உடனே அவர், ‘இனி நீ அங்குப் படிக்கப் போக வேண்டாம்,’ எனக் கூறி நிறுத்தி விட்டார்.
என்னுடைய தந்தையார் வைணவர். காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு, நாமம் போட்டுக்கொண்டு பூசை செய்யாமல் பச்சைத் தண்ணீர்கூட குடிக்க மாட்டார். நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள அனைத்துப் பாடல்களும் இவருக்கு அத்துப்படி. எந்த ஆழ்வார் பாடலைக் கேட்டாலும் மனப்பாடமாக ஒப்பிப்பார். அவர் இறக்கும்போது அவருக்கு வயது 96. அவர், தமது இறுதிக்காலம் வரை பல் டாக்டரிடம் சென்றதில்லை; கண் டாக்டரிடம் சென்றதில்லை; நோயில் படுத்து எனக்கு ஞாபகமில்லை. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அவருக்கு வந்ததில்லை.
என்னுடைய இளமைக் காலத்தில் எங்கள் வீட்டை வறுமை வாட்டி எடுத்தது. அப்பொழுது எங்களுக்கென்று மூன்று ஏக்கர் நஞ்சையும் இரண்டு ஏக்கர் புஞ்சையும் இருந்தது. அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் நாங்கள் மூன்று வேளை பசியாறி வந்தோம். ஆயினும் அது தொடர்ந்து நீடிக்கவில்லை.
அப்பொழுது தொடர்ந்து ஏழு ஆண்டுகள் மழை பெய்யாமல் பூமியெல்லாம் வெடித்து மக்கள் பஞ்சம் பசிக்கு ஆளாகி வந்தார்கள். அந்தப் பஞ்சம் எங்கள் குடும் பத்தையும் விட்டு வைக்கவில்லை. வறுமை எப்படி இருக்கும் என்பதை அந்தச் சிறுவயதிலேயே அந்தப் பஞ்ச காலம் எனக்கு உணர்த்தியது.
அந்த ஏழு வருடப் பஞ்ச காலத்தில் ஏரிகள், கிணறுகளில் தண்ணீர் கிடையாது. புஞ்சை தானியங்களை ஓரளவு விளைவிக்கும் வகையில்தான் மழை பெய்தது. கேழ்வரகு, கம்பு, சோளம், வரகு, தினை இவைதான் விளைந்தன. பெரும்பாலும் இவைதான் அப்பொழுதெல்லாம் அனைவருக்கும் உணவாகப் பயன்பட்டன. இரவில் வரகு அரிசி சோறும் பகலில் கூழுந்தான் எங்களுக்கு உணவு.
மாதா மாதம் அமாவாசை அன்று மட்டும் எங்களுக்கு நெல் அரிசி சோறு கிடைக்கும். அதனாலே அமாவாசை எப்பொழுது வரும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டே இருப்போம். இன்னொரு விசேஷமும் அமாவாசைக்கு உண்டு. நாங்கள் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படிக்கும்பொழுது மாதம் ஒருமுறை அமாவாசை அன்றுதான் எங்களுக்கு விடுமுறை. அந்த மகிழ்ச்சியோடு அமாவாசை சோறும் கிடைக்கும் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. எங்கள் ஊரிலே இதனாலே ஒரு பழமொழியும் உண்டு. ‘அன்றாடம் கிடைக்குமா அமாவாசை சோறு’ என்பதுதான் அந்தப் பழமொழி.
ஏழாண்டு பஞ்ச காலத்தில் எங்கெங்கு நிலங்களில் காட்டுக் கீரைகள் கிடைத்ததோ அதையெல்லாம் பறித்து வந்து மக்கள் உண்ணத் தொடங்கினார்கள். நாங்களும் எல்லாவிதமான கீரைகளையும் சாப்பிட்டு இருக்கிறோம். அந்தக் கீரைகளின் பெயரெல்லாம் மறந்துவிட்டன; அந்தக் கீரைகளும் இப்பொழுது மறைந்துவிட்டன. கேழ்வரகு கூழ் கிடைக்காத நேரத்தில் புண்ணாக்கையும் கீரையையும் கலந்து ஒருவேளை உணவைச் சாப்பிட்டுவிட்டு நாங்கள் பல நாட்கள் பட்டினி இருந்திருக்கிறோம்.
இந்தப் பஞ்ச காலத்தில் என்னுடைய தாயார் எங்கள் ஊருக்குப் பக்கத்தில் ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பேராவூருக்கு, அந்த ஊரிலுள்ள நைனார் எனப்படும் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் புஞ்சை நிலங்களில் களை வெட்டுவதற்குச் செல்லும் ஆட்களோடு சேர்ந்து செல்வார்கள். நானும் வருகிறேன் என்று சொல்லி அவர் பின்னால் செல்வேன்.
களை வெட்டுமிடத்தில் ஒவ்வொருவருக்கும் கோடு போட்டு ஒவ்வொரு மெனை பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கும். எனக்கு ஒதுக்கப்பட்ட மெனையை என்னால் வெட்ட முடியாமல் துவண்டு விடும்போது தம் மெனையோடு என் மெனையையும் சேர்த்து என் தாயார் வெட்டுவார். நான் ஒப்புக்காக வெட்டுவேன்.
இவ்வாறு வறுமையின் பிடியில் சிக்கிக்கொண்டிருந்த என் இளமைக் காலத்தில் நான் என்னுடைய வகுப்புத் தோழர்களோடு கோலி விளையாடுவது, பந்து அடிப்பது, கிணற்றில் நீச்சல் அடிப்பது, தண்ணீரில் ஒருவரை ஒருவர் நீந்திப் பிடிக்கும் ஓரி விளையாட்டு விளையாடுவது முதலான விளையாட்டுகளில் பங்கேற்ற காலம்
- அந்த வாழ்க்கை இன்றும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது.
இன்றும் என் கிராமத்தைச் சார்ந்த என்னோடு பந்து விளையாடிய, நீச்சலடித்த, கோலி விளையாடிய என்னுடைய நண்பர்களைச் சந்திக்கும்போது எங்களுடைய இளமைக்கால அனுபவங்களை நான் பேசாமல் இருப்பதில்லை. பழைய நினைவுகளை நாங்கள் பகிர்ந்து கொள்ளும்போது எங்களுக்கு நேரம் போவதே தெரியாது.
(அனுபவம் தொடரும்)
படங்கள் : ஸ்ரீஹரி
நன்றி - கல்கி
0 comments:
Post a Comment