Saturday, December 08, 2012

பாட்டாளி சொந்தங்களே! - மருத்துவர் ச. ராமதாஸ் - சுய சரிதை - பாகம் 2

பாட்டாளி சொந்தங்களே!

பிரம்படி தெரியும்... பாலர் அடி தெரியுமா?

மருத்துவர் . ராமதாஸ்

என்னுடைய தாத்தாக்கள் எங்கள் ஊரில் பிரதானமாக இருக்கின்ற ஏரிக்கரை அரச மரத்தின் கீழே உள்ள ஒரு மிகப்பெரிய மேடையில் அமர்ந்துகொண்டு ஊர்ப் பஞ்சாயத்து சொல்லுவது வழக்கம். அவர்கள் இருவரும் காவி வேட்டியே கட்டியிருந்ததாகவும், அந்த ஊரில் உள்ளவர்களுக்கு எழுத்தறிவித்ததாகவும், தம் பெற்றோரிடமே தான் படித்ததாகவும் என்னுடைய அப்பா அவருடைய அப்பாவைப் பற்றி அந்த இரட்டைச் சகோதரர்களைப் பற்றி நிறைய சொல்லக் கேட்டு நான் வாய் பிளந்து நிற்பேன். ‘வாத்தியார் குடும்பம்என்ற பெயர் எங்கள் குடும்பத்துக்கு அடையாளமாக இருந்தது. அந்த வகையில் என்னுடைய அப்பாவையும் ஊர் மக்கள்வாத்தியார்என்றும் என்னைவாத்தியார் பையன்என்றும் கூப்பிடத் தொடங்கினார்கள்.
எனக்கு நான்கு வயதிருக்கும். அந்த இளமைப் பருவத்தில் என்னுடைய தந்தையார் என்னை அழைத்துக் கொண்டு போய் எங்கள் ஊரிலிருந்தமொளவுக் கவுண்டர்என்ற ஆசிரியரின் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பாடம் படிக்கச் சேர்த்தார்.
விஜயதசமி அன்று பிள்ளைகளைக் கொண்டு வந்து பள்ளியில் சேர்க்கும்போது ஒவ்வொரு பெற்றோரும் மறக்காமல் ஒரு மந்திரத்தை ஆசிரியரிடம் சொல்லிவிட்டுப் போவார்கள். ‘படிக்கலன்னா கண்ணு ரெண்டையும் விட்டு விட்டு தோலை உரிங்கஎன்பதுதான் அது. உண்மையாகவே சிலருக்கு இது நடந்து விடும். ஒரு நாளாவது முதுகில் மஞ்சள் பத்து போடாமல் வருபவர்கள் இருக்க மாட்டார்கள்.
ஆசிரியரின் வீட்டுக்கு அண்மையிலுள்ள ஏரிக்கரையின் மரத்தடிக்குக் கீழே அமர்ந்து தரையில் மணலைப் பரப்பி அதில்ஆனா’, ‘ஆவன்னாஎன்று எழுதிப் பழகுவோம். மொளவுக் கவுண்டர் வீட்டின் இரண்டு பக்க திண்ணைகள்தான் எங்கள் பள்ளிக்கூடம். முப்பது பேர் என்னோடு படித்தார்கள். அந்தக் காலத்தில் திண்ணைகளில் பள்ளிக்கூடம் இருந்ததால் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தேன் என்று பலரும் சொல்வதுண்டு. , சொல்லி எழுதி பழகுவதற்கு முன்னால்அரி நமோத்து சிந்தம்என்று சொல்லியே தொடங்க வேண்டும்.
பள்ளிக்கு வந்ததும் இப்போது இறை வணக்கம் சொல்வதுபோல அந்தக் காலத்தில்நாங்கள் உரிய நேரத்தில் பள்ளிக்கு வந்து, அன்றைய பாடங்களை அன்றைய தினமே படித்துவிடுவோம்என்னும் பொருளமைந்த குரு வணக்கம் பாடலைப் பாடிய பிறகே வகுப்புத் தொடங்கும்.
காலையில் பள்ளிக்கூடம் போனதும் பாடுகின்ற பாட்டு
காலையில் எழுந்திருந்து
கால் கை சுத்தம் செய்து
கோலமாநீருபூசி
கொந்தமான்
கோழிகூவ
கூப்பிட வாறோமய்யா
குருவடி பாதம்
சரணம்! சரணம்!
பகலில் பாடுகின்ற பாட்டு!
பாலகர் எல்லாம் கூடி
பாடமும்
சொல்லிக்
கொண்டோம்
ஏனையா
இந்தக் கோபம்
எங்கள்
மேல் குற்றமில்லை
குருவடி பாதம்
சரணம்...சரணம்!
மாலையில் பின்வரும் இந்தப் பாட்டைப் பாடி விட்டுக் கலைவோம்
அந்திக்குப் போறோம்
நாங்கள்
அகத்தினில் (வீட்டில்)
விளையாடாமல்
சிந்தையாய்
திருவிளக்கு முன்னே
சுவடியும் அவிழ்த்துப்
பார்த்து
வந்ததும் வராததும்
(மூளையில் ஏறியதும் ஏறாததும்)
வகையுடன்
படித்துக்கட்டி
சிந்தையில்
தயவு செய்து
சீக்கிரம்
அனுப்புமய்யா
திருவடிபாதம்
சரணம் சரணம்.

பள்ளிக்கு உரிய நேரத்தில் வராமல் கால தாமதமாக வந்தால், முதலில் தாமதமாக வருபவர் கையில் ஒரு அடியும், இரண்டாவது வருபவர் கையில் இரண்டு அடியுமாக அடியின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும். இதற்குப்பாலர் அடிஎன்று பெயர். பிரம்படி கடுமையானதாக இருக்கும். அந்த அடிக்குப் பயந்து அதிகாலையில் கோழி கூவியதும் என்னுடைய தாயார் என்னை எழுப்பிப் பள்ளிக்கு அனுப்புவார்கள். நான் வாத்தியார் வீட்டுத் திண்ணையில் வந்து படுத்து விடுவேன்.
அப்போது சிலேட்டு கிடையாது; கரும் பலகை கிடையாது; நோட்டு புத்தகங்களும் கிடையாது. முதலில் மணலில் எழுதி எழுத்துகளை எழுத, படிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும். எங்கள் கிராமத்துக்கு அப்போது அச்சடித்த புத்தகங்கள் வராத நிலையில் ஓலைச்சுவடியில் இருந்துதான் எழுதுவதற்கும் படிப்பதற்கும் நாங்கள் கற்றுக் கொண்டோம். சுவடிகளில் இருந்து அரிச்சுவடி, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நன்னெறி, வரிக்காய் பாடம், திருப்புகழ், சதகங்கள் முதலானவற்றை முழுமையாகக் கற்றேன். எத்தனை விதமான சதகங்கள் உண்டோ அவ்வளவையும் அங்கே சொல்லித் தந்தார் ஆசிரியர். ஒரு சதகச் செய்யுள் இன்றும் எனக்கு அத்துபடி.
ஆஈன மழைபொழிய இல்லம் வீழ
(பசு கன்று போட)
அகத்தடியாள் மெய்நோவ வருத்திச்சாவ
மாஈரம் போகுதென்று
விதைகொண்டாட
வழியிலே கடன்காரன் மறித்துக்கொள்ள
கோவேந்தர் உழுதுண்ட கடனைக்
கேட்க
குருக்கள் வந்து தட்சணைக்கு குறுக்கே
நிற்க
பாவாணர் கவிபாடி பரிசு கேட்க
பாவிமகன் படுந்துயரம்
பார்க்கொணாதே
என்பது அச்சதகப்
பாடல்.
ஒரு மனிதனுக்குத் துன்பங்கள் அடுத்தடுத்து வரும் என்பதை அழகாகச் சொல்லுவது இந்தப் பாட்டு. இதுபோன்ற நல்ல கருத்துகளையும் நெறிகளையும் சொல்லுகின்ற எல்லாவிதமான சதகங்களையும் கற்றேன்.

பள்ளிக்குக் காலத் தாமதமாக வருபவர்களுக்கும் சரியாகப் படிக்காதவர்களும் வாத்தியாரிடமிருந்து கிடைப்பது பிரம்பு அடி. பிரம்பு என்பது வளையக் கூடியது. அடி முதுகில் விழுந்தால் தோலைப் பிய்த்துக்கொண்டு வரும். சரியாகப் படிக்காதவர்களுக்குத் தண்டனை பகல் 12 மணி வெயிலில் முட்டிப் போட்டு 1 மணி நேரம் படிக்க வேண்டும். அப்போது அந்த வளைந்த முதுகில் வாத்தியார் ஒரு கல்லையும் தூக்கி வைப்பார். ஒரு சமயம் எங்க வாத்தியார் மொளவு கவுண்டருடைய மனைவி முட்டிப் போட்டு படித்துக்கொண்டு முதுகிலே கல்லைத் தூக்கி வைத்திருக்கிற ஒரு பையனைப் பார்த்து, அவரது கணவரைத் திட்டிக்கொண்டே கல்லைத் தூக்கிக் கீழே போட்டுவிட்டு, ‘நீ படித்தது போதும், போய் மாடு மேயடாஎன்று சொன்னது இன்னும் எனக்கு ஞாபகம் வருகிறது. நான் ஒருநாள் வெயிலில் முட்டிப் போட்டதாக எனக்கு ஞாபகம் வருகிறது. ஆனால் கல்லைத் தூக்கி முதுகில் வைத்ததில்லை; பிரம்படி வாங்கியதில்லை.
நான் வெயிலில் முட்டி போட்டுப் படித்ததை என் தகப்பனாரிடம் யாரோ சொல்லி விட, அன்று மதியம் எனக்குச் சாப்பாடு போடக்கூடாது என்று என் தாய்க்குக் கட்டளையிட, அவருக்குத் தெரியாமல் எனக்குச் சாப்பாடு கொடுத்து அனுப்பினார்.
பிரம்பால் அடி வாங்குகிற பிள்ளைகள் சிலர் சேர்ந்து மூக்குச் சளியை பிரம்பின் கணுக்களில் தடவி கூரையில் இரவில் சொருகி விடுவார்கள். அப்போது மூக்குச் சளிக்குப் பஞ்சமில்லை. மறுநாள் அடித்தால் பிரம்பு ஒடிந்துவிடும். இதைத் தெரிந்துகொண்ட வாத்தியார் பிரம்பைப் பத்திரமாக வீட்டினுள் கொண்டு சென்று விடுவார்.
திருப்புகழ் படித்துவிட்டால் அப்போது பல்கலைக் கழகப் பட்டம் பெற்றது மாதிரியான படிப்பு அது. திருப்புகழை அப்படியே தலைகீழே கடகடவென்று வாசிக்க வேண்டும். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இதுதான் எம்.., பிஎச்.டி., பட்டம் எல்லாவற்றுக்கும் சமமான ஒரு படிப்பு. இவற்றையெல்லாம் முழுமையாகப் படித்தேன். இதற்குமேல் என் கிராமத்தில் படிப்பு இல்லை.
நான் திருப்புகழ் படிக்கும்போதுதான் திண்டிவனம் சென்று வந்த என் தந்தையார் அங்கிருந்து அச்சடிக்கப்பட்ட ஒரு திருப்புகழ் புத்தகத்தை வாங்கி வந்தார். அப்போதுதான் முதன்முதலாக நாங்கள் அச்சடிக்கப்பட்ட புத்தகத்தைப் பார்த்தோம்.
இவ்வாறு படித்துக் கொண்டிருந்தபோது எங்கள் ஊர் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த பாலசுந்தரம் எங்கள் ஊரில் பள்ளிக்கூடம் ஒன்றைத் தொடங்கினார். அவர் சிதம்பரம் வட்டத்திலுள்ள கீழ மூங்கிலடி என்ற கிராமத்திலிருந்த காந்திஜி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி முடித்து, அதோடு அங்கேயே கலப்புத் திருமணத்தையும் செய்து கொண்டு தம்முடைய சொந்த ஊரான கீழ்சிவிறிக்கு வந்து, தம்முடைய ஆதி திராவிடர் காலனியிலேயேகாந்திஜி ஆதாரப் பள்ளிஎன்ற ஒரு பள்ளியை ஆரம்பித்து நடத்தினார்.
அந்தப் பள்ளிக்கூடத்துக்கு காமராஜர் தலைமையிலான அமைச்சரவையில் காவல்துறை அமைச்சராக இருந்த கக்கன் போன்ற பெரிய தலைவர்கள் பலரும் வந்து அந்தப் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவியிருக்கிறார்கள்.
(அனுபவம் தொடரும்)
படங்கள்: ஸ்ரீஹரி



THANX- KALKI

0 comments: