Saturday, December 08, 2012

காமெடி எக்ஸ்பிரஸ் - 2 - லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் - கலக்கல் காமெடித்தொடர்

காமெடி எக்ஸ்பிரஸ் - 2

கூப்பிடுறா ஃபெப்சிய... ஒட்றா ஸ்ட்ரைக் நோட்டீஸ!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

அதென்னவோ தெரியவில்லை, இந்தியாவிலிருந்து வரும் எல்லா போன் கால்களுமே, அண்ணே, இப்ப அங்க மணி என்னங்ணே?" என்றுதான் ஆரம்பிக்கும். பழக்கமான கடுப்ஸ்தான் என்றாலும் நான் உண்மையைச் சொல்வேன்.
அப்படித்தான் என் சென்னை சினிமா தயாரிப்பாள நண்பரும் இந்த வாரம் போன் செய்தார்.
இப்ப மணி மத்தியானம் மூணுங்ணா"
நண்பர் உனாபானாவில் திளைத்திருந் திருப்பார் போலும். குரல் சற்றே குழறியது. அதெப்படிங்? வயக்கமா 121/2 மணி நேரம் வித்தியாசம் வரும், இன்னிக்கு எப்படிங் 13 1/2 மணி நேரங்? நான் இஸ்டெடியாக்கும். என்னிய டெஸ்டிங் பண்றியளா?"
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் கடைசியில் வரும் Daylight Saving Time என்ற அமெரிக்க அபத்த நேரக்கொள்கை பற்றிய சிறுகுறிப்பு வரைந்தேன்.
அதெப்படிங் இவனுங்களா நேரத்த மாத்திப்பானுங்?"
எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. சொன்னாலும் புரியப் போவதில்லை.
சரிங்க, இப்ப எங்க இருக்கீங்க?"
சரியான நேர குசலோபரிக்குப் பிறகு என் சரியான GPS லொகேஷன் கேட்கப்படுவதும் ஒன்றும் புதிதல்ல.
சாண்டா மோனிகாவுல அமெரிக்கன் ஃபிலிம் மார்க்கெட்."
இன்னாது? இந்த நேரத்துல காய்கறி மார்க்கெட்டுலயா?"
இல்லீங்க பிரதர், இது வேற மாதிரி மார்க்கெட்."
AFM 2012 பற்றியும் பலபல புத்தம்புது ஹாலிவுட் படங்கள் இங்கே கூறு கட்டி விற்கப்படுவது பற்றியும் ஓர் அவசர சிறு குறிப்பு வரைய நேர்ந்தது.
உலகமெங்கிருந்தும் சற்றேறக்குறைய 10,000+ சினிமா சம்பந்தப்பட்டவர்கள் = தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், ஏஜென்ட்கள், அடுத்த ரஜினிக்கள், நேற்றைய கமல்கள், இடைத்தரகர்கள், இன்ன பிறர் லாஸ்ஏஞ்சல்சில் ஒவ்வொரு நவம்பரிலும் இங்கே கூடி ஒருவாரத்துக்கும் மேலாகக் கும்மியடிப்பது பற்றியும், பழைய, புதிய சினிமா படங்கள் வாங்குவது, விற்பது பற்றியும், புதுப்புது பட கான்ட்ராக்ட்கள் போடுவது பற்றியும் நண்பருக்கு அவசர அவசரமாக விளக்கினேன்.
வழக்கமான வியாபாரம் தவிர, சினிமா பற்றிய பலபல டெக்னாலஜி மீட்டிங்குகள், புத்தம்புது உத்திகள், வியாபார நுணுக்கங்கள், எப்படி எந்தப் படத்தை எங்கே விளம்பரம் செய்வது? மார்க்கெட்டிங் எதற்கு, எங்கே, எப்படி? VoD என்றாலென்ன? புத்தம்புது ப்ரீமியர் ஷோக்கள் - எல்லாமே AFMல் உண்டு!
உனாபான தயாரிப்பாள நண்பர் உற்சாகமாகவே எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார்.
வழக்கமாக புதுப்பட ஐடியாவை சுட்டுக் காசாக்குபவர், இந்த முறை மார்க்கெட்டையே சுட்டுவிட முடிவு செய்து விட்டார்.
பெரதர், வையுங்க போனை, நான் நாளைக்கே கூப்பிடறேன் எங்க மீட்டிங்கை!"
தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தில் மீட்டிங் ஆரம்பித்ததாம்.
என் தயாரிப்பாள நண்பரின் குரல் சற்றே ஓங்கி ஒலித்திருக்கவேண்டும்.
நாமல்லாம் என்னயா பிசினஸ் பண்றம்? படம் போணி ஆவுலியா, பணத்தைத் திருப்பிக்கொடுங்றான், கேட்டாக்க ரஜினி ஃபார்முலாங்றான். படம் ஓடிருச்சா, துண்டைக் காணும், துணியைக் காணும்னு ஆளே ஓடிர்றான். நாமளும் மாறணும், இந்த நாட்டையும் மாத்தணும், உலக நாயகன் ஏற்கனியே ஹாலிவுட் போயிட்டாராம்யா. நாம எப்ப ஹாலிவுட் ரேஞ்சுக்குப் போவுறது?"
முதல் குழப்பம் பெயர் வைப்பதில் ஆரம்பித்ததாம்.
ஏன்யாஇந்தியன் ஃபிலிம் மார்க்கெட்னு பேரு வெச்சா எவன்யா வருவான்? ஏதோ ஆர்ட் ஃபிலிம், பூட்ட கேசு, கோவாவுல மார்னிங் ஷோன்னு நெனச்சிருவான். ‘கோலிவுட் ஃபிலிம் மார்க்கெட்னு நாமளும் பேரு வைக்கணும்."
அனைவரும் ஒப்புக்கொண்டு கை தட்ட, அய்யகோ!
அப்ஜெக்ஷன் ஃப்ரம் பாம்பே அலையஸ் மும்பைவாலாஸ்!

அண்ணே, ‘பாலிவுட்தான் இந்தியன் ஃபில்ம் மார்க்கெட்னு பாம்பேயிலிருந்து கான் - கான் கோஷ்டிங்க மார் தட்றாங்கண்ணே. நம்ம முருகதாஸ்கூட ஆமான்றாரு. விஜயோட டுபாக்கி அங்ஙனயும் ரிலீஸ் ஆவுதாமில்ல."
அப்ப நம்ம கோலிவுட்டுன்றது ஒண்ணுமே இல்லியா? கஜினியெல்லாம் இங்கேயிருந்துதான்யா ஹிந்திக்குப் போச்சி. அதெல்லாம் ஒரிஜினலா ஹாலிவுட்லேருந்து வந்திருக்கலாம், அதெல்லாம் வேற விஷயம்."
பிரச்னை பெரிதாகவேண்டாமா?
கூப்பிடுறா ஃபெப்சிய!
ஒட்றா ஸ்ட்ரைக் நோட்டீஸ!
பெரிய அளவில் குடுமிப்பிடி ஆரம்பம்!
ஓஹோ, தெலுங்கு இல்லாட்டி ஏதுங்கண்ணா கோலிவுட்டு? அனுஷ்கா, தமன்னா, சுமன்காரு, சிரஞ்சீவிகாரு, நாகார்ஜுனாகாரு, கிருஷ்ணாகாரு, பவன்கல் யாண்காரு, அல்லு அர்ஜுன்காரு, ராம்சரண் தேஜாகாரு" தெலுங்கு சினிமாவின் காரு சவுண்டு ஓங்கியே ஒலித்ததாம்.
சரி, ஒரு மாதிரியாக, காவேரியையும் கிருஷ்ணாவையும் இணைத்துவிடலாம் என்று சிலர் நினைத்தபோது,
, எண்டே மலையாளம் மறந்து போயி? மல்லுவுட்டை நீங்கள் ஓரவஞ்சம் செஞ்சுபோயி? லாலேட்டணும் மம்முட்டியும் இல்லாம ஜினிமா மட்டும் எப்படியாம்? செம்மீன் ஷீலா, ப்ரேம் நஸீர் காலங்ஙே..." மல்லுவுட் மட்டும் மல்லுக் கட்டாமல் சும்மா இருக்குமா?
காலணாவுக்கு பிசினஸ் ஆகாவிட்டாலும் கன்னட சினிமா மட்டும் சும்மா இருக்குமா? அல்லது வட்டல் நாகராஜ் சும்மா இருக்க விடுவாரா?
தமிழ்நாடு பஸ்ஸை அடிச்சு நொறுக்கு மாடி!
தகராறென்று வந்துவிட்டால் தமிழ் உணர்வாளர்கள் அதிலிருந்து தள்ளியா இருக்கமுடியும்? கூப்பிடாமலே கும்மியடிக்க கூட்டம் சேர்ந்துவிடுமே!
சமரசம் செய்வதற்கென்றே அவதரித்த மூத்த தயாரிப்பாளர், இயக்குனர் கோஷ்டியினர் அவசர பேண்ட் எட்ஜோலியில் இறங்குகின்றனர்.
பாலிவுட் ஃபிலிம் மார்கெட் காய் நாம் நஹி ஹோகா, கோலிவுட் வேண்டவே வேண்டாம், டோலிவுட்? நெவர், மல்லு வுட்? ஏண்டா நீ ப்ராந்தோ?
அடிதடி, வேட்டி கிழிப்பு, அவரவர் பரம்பரையினர், மூதாதையர் பெயர் கூவலுக்குப் பிறகு...
பாகோடோமல்லுவுட் ஃபிலிம் மார்க்கெட்" என்று பெயர் வைத்துவிடலாமா என்று சமரச ஃபார்முலா பரிசீலனைக்கு வந்தவுடன் பாதிப் பேருக்கு வாந்தியே வந்துவிட்டதாம்.
மீதிப் பேர் பரவால்லப்பா, எதுனா வெச்சு ஆள வீட்டுக்குப் போக விடுங்கப்பா, பல்லு தேச்சே மூணு நாளாச்சு" என்று ஆதரித்தார்களாம்.
இன்னாது ஃபிலிம் என்பது வெள்ளையன் சொல், மார்க்கெட் என்பதும் ஆங்கிலச் சொல், இவற்றை ஒப்புக்கொள்ளவே முடியாது. வேண்டுமானால்பாகோடோ மல்லுவுட் நிழல்திரை கூத்துச்சலன அங்காடிஎன்று பெயரை மாற்றுங்கள். இல்லா விட்டால் நாங்கள் குளிக்கவே குளிக்காவிட்டாலும் எங்கள் தொண்டர்களை உடனே தீக்குளிக்கச் சொல்வோம்" என்று மறுபடியும் பற்றி எரிய ஆரம்பித்ததால்,
இந்தியன் ஃபிலிம் மார்க்கெட் மீட்டிங் பர்மனென்ட்லி கேன்சல்ட்!
(எக்ஸ்பிரஸ் வரும்...)


நன்றி - கல்கி 

0 comments: