Saturday, December 08, 2012

சென்னையில் ஃபார்முலா 1 கார் ரேஸ்

சென்னையில் ஃபார்முலா-1?



ஐபிஎல், ஃபார்முலா-1 என இந்தியாவில் கிளாமர் கலந்த விளையாட்டுகள் அரங்கேறும் சீஸன் இது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக டெல்லியில் நடந்து முடிந்திருக்கிறது ஃபார்முலா-1 கார் ரேஸ். உலகின் உச்சபட்ச பணக்கார விளையாட்டுப் போட்டி இந்த கார் ரேஸ்தான். பல லட்சம் கோடிகள் புரளும் இது வெறும் விளையாட்டு மட்டும் அல்ல, மிகப் பெரிய பிசினஸ்! 



டெல்லி அருகே நொய்டாவில் 2,000 கோடி ரூபாய் செலவில் 875 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ளது, இந்தியாவின் ஃபார்முலா-1 ரேஸ் டிராக். பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உருவாகி இருக்கும் இந்த ரேஸ் டிராக்கில், இந்த ஆண்டு ரேஸைக் காணக் குவிந்தவர்களின் எண்ணிக்கை 62,000. 1,000 ரூபாயில் இருந்து துவங்கி முக்கிய விருந்தினர்கள் பகுதியில் அமர, லட்சம் ரூபாய் வரை டிக்கெட் விலை போனது.



பெரும்பாலும் ஆண்களின் விளையாட்டு என்று சொல்லப்படும் ஃபார்முலா-1 ரேஸை இயக்குவதில், முக்கியப் பங்கு பெண்களுக்கும் இருக்கிறது. ஒவ்வொரு அணியிலும் குறைந்தது முப்பது பெண்கள் இருக்கிறார்கள். 


சாபர் எனும் ஃபார்முலா-1 அணியின் தலைவர் மோனிஷா கேட்டல்பார்ன் பெண்தான். செய்தித் தொடர்பாளர், மெக்கானிக்கல் இன்ஜினீயர், சாஃப்ட்வேர் இன்ஜினீயர் என ஒவ்வொரு அணிக்குள்ளும் பல பெண்கள் முக்கிய வேலைகளைச் செய்கிறார்கள். ஒரு ரேஸ் முடிந்ததும், அடுத்த வாரம் இன்னொரு நாட்டில் ரேஸ் நடக்கும். இதனால், ரேஸ் நடந்துகொண்டு இருக்கும்போதே, வீரர்களின் உடைகள் ஆரம்பித்து பலவற்றையும் பேக் செய்து விமானத்துக்கு அனுப்பும் பணிகள் ஆரம்பித்துவிடும். இதை எந்தத் தவறும், பிரச்னையும் இல்லாமல் ஃபார்முலா-1 கார்களின் வேகத்துக்கு இணையாகச் செய்து முடிப்பது முழுக்க முழுக்க பெண்களின் பொறுப்பு. 
 
 
 
சியர் லீடர்ஸ் போல, ஃபார்முலா-1 ரேஸ் டிராக்கில் 'பிட் பேப்ஸ்’ என்று அழைக்கப்படும் பிகினி தேவதைகள் உலா வருவார்கள். விஜய் மல்லையாவின் ஃபோர்ஸ் இந்தியா அணியில் இந்த பிட் அழகிகளுக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது. இந்த முறை மல்லையாவே பஞ்சத்தில் இருந்தாலும், பிட் அழகிகளுக்கு குறைவைக்கவில்லை. பிகினியில் நான்கு பேர், புடவையில் நான்கு பேர் என ரேஸ் டிராக்கை சூடேற்றியது மல்லையாவின் அணி. ரெட்புல் அணியில் சியர் லீடர்ஸ் இல்லை. அதற்குப் பதில் வீரர்களின் பாதுகாப்புக்கு இரண்டு சிக்ஸ் பேக் பெண்களை நிறுத்தி வைத்திருந்தது.


மணிக்கு 300 கி.மீ வேகத்தில் பறக்கும் கார்களையும், ரேஸ் வீரர்களையும்விட ஃபார்முலா-1 ரேஸில் வெற்றிக்கு மிக முக்கியமானவர்கள் 'பிட் க்ரூ’ என்று சொல்லப்படும் மெக்கானிக்குகளும், ட்யூனர்களும்தான். ரேஸ் நடந்துகொண்டு இருக்கும்போது ஒவ்வொரு ரேஸ் வீரரும் டயர் மாற்ற, ஸ்டீயரிங் மாற்ற, உடைந்த பாகங்களை மாற்ற என பல்வேறு காரணங்களுக்காக தங்களது பிட் ஸ்டாப் (மெக்கானிக் அறை)க்குத் திரும்புவார்கள். இந்த இடத்தில் எவ்வளவு வேகமாக வேலை முடிந்து, மீண்டும் ரேஸ் டிராக்கில் களம் இறங்கும் வீரரே வெற்றி பெற முடியும். வெறும் மூன்றே விநாடிகளில் நான்கு டயர்களையும் மாற்றுவது, ஸ்டீயரிங்கை மாற்றுவது என எல்லா வேலைகளும் இங்கே கண் சிமிட்டும் நேரத்தில் பிட் க்ரூ செய்து முடிக்கும். இந்திய ரேஸில், முன்னாள் சாம்பியன் லூயிஸ் ஹாமில்ட்டனின் கார் ஸ்டீயரிங் இரண்டே விநாடிகளில் மாற்றப்பட்டு, அவர் தொடர்ந்து ரேஸை ஓட்டியது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
இந்திய ரேஸைக் காண ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தனது இரண்டு மகன்களுடன் வந்திருந்தார். முதலமைச்சர் என்கிற எந்த பந்தாவும் இல்லாமல், அதுவும் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சர் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் மகன்களோடு ஜாலியாக ரேஸ் டிராக்கைச் சுற்றி வந்துகொண்டு இருந்தார். உமர் அப்துல்லாவின் கார்/பைக் ரேஸ் நண்பரான ராகுல்காந்தி, டெல்லியில் அமைச்சரவை மாற்றம் நடைபெற்றதால், ஃபார்முலா-1 பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.



ஃபார்முலா-1 ரேஸில் பங்கேற்றுவரும் ஒரே இந்தியர் நரேன் கார்த்திகேயன் மட்டுமே. நரேனைத் தவிர ரேஸ் வீரர்கள் யாரும் இல்லை என்றாலும், தொழில்நுட்ப ஏரியாக்களில் இந்தியர்களின் பங்கு அதிகம். தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றவரும், இந்திய ரேஸில் வென்றவருமான செபாஸ்ட்டியன் வெட்டலின் முதன்மை மெக்கானிக்குகளில் ஒருவரான பால் சிரா இந்தியர்தான். கேட்டர்ஹாம் அணியின் தலைமை இன்ஜினியர் யாஷ் பத்தாரே, மைக்கேல் ஷூமேக்கரின் பிஸியோதெரப்பிஸ்ட் பல்பீர் சிங் என இந்தியர்களின் பங்கு ஃபார்முலா-1 ரேஸில் அதிகம்.



மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஓரங்கட்டப்படுவார் என்கிற பரபரப்புக்கு இடையே, ஃபார்முலா-1 ரேஸைக் காண காதலி கீத்தா பஸ்ராவுடன் வந்திருந்தார் ஹர்பஜன் சிங். கணவர் ஷோயிப் மாலிக்குடன் வந்திருந்த சானியா மிர்சா, மீடியாக்களிடம் பேச்சுக் கொடுக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். சோனாக்ஷி சின்ஹா, அஜய் தேவ்கன் ஆகிய இருவரும் ரேஸ் டிராக்கில் அட்டென்டன்ஸ் போட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.



இந்தியாவில் கைது செய்யப்பட்டு இருக்கும் இத்தாலியின் கப்பல் காவலர்களுக்கு ஆதரவாக, இத்தாலியின் கப்பல் படை கொடியுடன் ஃபெராரி களம் இறங்கியது. இந்திய வெளியுறவுத் துறை இதற்கு வெளிப்படையாகவே கண்டனம் தெரிவித்தாலும், கப்பல் கொடிக்கும் இந்தியாவில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றது ஃபெராரி.



2,000 கோடிக்கும் மேல் கார் ரேஸ் மூலம் சம்பாதித்த, ஏழு முறை உலக சாம்பியன் ஆன மைக்கேல் ஷூமேக்கர், இந்த ஆண்டுடன் கார் ரேஸில் இருந்து ஓய்வு பெறுவதால், டெல்லியில் ஷூமேக்கரைக் காண கூட்டம் மொய்த்தது. ரேஸ் ஆரம்பித்த சில விநாடிகளிலேயே மைக்கேல் ஷூமேக்கரின் கார் மற்றொரு காரோடு உரச... ஷூமேக்கரின் டயர் கிழிந்தது. கடைசி வரிசைக்குத் தள்ளப்பட்டார் ஷூமேக்கர். இருப்பினும், ரேஸ் முடிந்ததும் அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்க, போட்டோகிராஃப் எடுக்க கூட்டம் அள்ளியது. சிரித்த முகத்துடன் ரசிகர்களுக்குக் கை குலுக்கினார் ஷூமேக்கர்.



கடந்த ஆண்டு சச்சின் டெண்டுல்கர் கொடியசைத்து ரேஸை முடித்துவைக்க... இந்த ஆண்டு கொடி அசைக்கும் பெருமையைப் பெற்றவர், லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ககன் நரங்.



ஃபார்முலா-1 ரேஸை நடத்தும் பெர்னி எக்கோலஸ்ட்டன், ''இந்தியாவில் இன்னொரு நகரத்திலும் ரேஸை நடத்தலாம். அந்த இடம் மும்பையாக இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்'' என்றார்.



சென்னையில்தான் பல ஆண்டுகளாக ரேஸ் டிராக் இருக்கிறது என்றாலும், ஐபிஎல் போட்டிகளுக்கே விழி பிதுங்கும் சென்னை... பார்முலா-1 ரேஸைத் தாங்குமா?


நன்றி - விகடன்

0 comments: